Showing posts with label நட்சத்திரம். Show all posts
Showing posts with label நட்சத்திரம். Show all posts

Tuesday, November 07, 2006

நட்சத்திர வாரம்!

என்னடா இவன் போன வாரம் தானே தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தான், இப்ப என்ன நட்சத்திரம் வாரம் தலைப்பு போட்டு பதிவு போடுறானே தானே யோசிக்கிறீங்க. அது ஒன்னும் இல்லங்க. போன வாரம் அதாவது நட்சத்திர வாரத்தில் போட்ட பதிவுகளை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று எழுந்த எண்ணத்திலும், நன்றி கூவும் பொருட்டும் இந்த பதிவு.

பல நாட்களுக்கு முன்பே நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதை நமக்கு தெரிவித்து இருந்தாலும் வழக்கம் போல கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் என்ற சோம்பேறித்தனத்தால் ஒரு பதிவு கூட எழுதி வைக்க வில்லை. எல்லா பதிவுகளுமே வழக்கம் போல சூட சூட டைப் பண்ணி போட்டது தான். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தமிழ்மணத்திற்கும் என்னை நட்சத்திரமாக தேர்ந்து எடுத்த மதி கந்தசாமிக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

1.
மெய்யாலுமா - வழக்கம் போல ஜல்லியடித்த பதிவு. நட்சத்திர அறிமுக பதிவு அது. வராத பெருந்தலைகள் எல்லாம் வந்து நம்மளை வாழ்த்திட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு சில நபர்கள் இதுக்கு மட்டும் தான் வந்தாங்க. அதுவும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.

2.
உள்கட்டமைப்பு - தானியங்கி(அல்லது ப்ரீபேய்டு) மின்சாரத்தை பற்றிய பதிவு. பல நாள் பாத்தது தான் என்றாலும் அன்று தீடிரென்று இதை பதிவாக போடலாம், அதே சமயத்தில் இதை நம் நாட்டில் எந்த மாதிரி செயல்படுத்தலாம் என்று யோசித்து போட்டப்பட்ட பதிவு அது. பின்னூட்டங்களில் நல்ல கருத்து பரிமாற்றம் இருந்ததாக நம்ம குமரன் சொன்னது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.இருந்தாலும் இந்த பதிவின் முதல் வரியில் இருந்த ஒரு வரி சிலரை உறுத்தியதாக சொன்னார்கள். ஒருவர் சற்றே மேல் போய் கேப்டன் பட டயலாக் மாதிரி இருக்குனு சொல்லிட்டார். அந்த வரிகள் போடுவதற்கு காரணமாக இருந்தது பதிவு இது. இந்த பதிவை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் அதை குறித்து பதிவு போடலாம் என்று இருந்தேன். பிறகு இது போல பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல், என்ன பிரச்சனை என்றே தெரியாமல் மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுவது இங்கு ஒன்றும் புதுசு இல்லை என்று விட்டு விட்டேன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படங்களை வைத்து இன்றைய நிலை, அங்கு இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரியாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக பல பின்னூட்டங்கள், அதிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை கண்ட பிறகு இந்த வரிகள் என் பதிவில் சேர்க்கப்பட்டது.

3.
சினிமா விமர்சனம் - நாம் பார்த்து கஷ்டப்பட்ட படங்களை பற்றிய பதிவு அது. என்னடா எப்ப பாத்தாலும் 4 படங்களுக்கு சேர்த்து விமர்சனம் எழுதுகிறேன் என்று தம்பி வருத்தப்பட்டார். மதுமிதா போடவில்லை என்று வெட்டி வருத்தப்பட்டார். இந்த பதிவு ரொம்பவே சுமார் என்று நம் நண்பர்கள் சொன்னாங்க. அது உண்மை தான் போல.... இந்த பதிவு போட்ட போது தமிழ்மணத்தில் வெளியீட முடியவில்லை.

4.
வண்ணக் கோலங்கள் - பல நாள் நான் எடுத்து புகைப்படங்களை பதிவாக போட வேண்டும் என்று எண்ணியதை தொடர்ந்து போட்ட பதிவு. பல நல்ல விமர்சனங்களை உள்வாங்கி கொண்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு பலர் வந்து இருந்தனர். இந்த துறையை பற்றி நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னால் பிடிக்க முடியாத மின்னலை நம்ம கைப்புள்ள போட்டு அசத்தி விட்டார்.

5.
அறுசுவை - சரி நாமலும் ஒரு சமையல் பதிவு போடுவோமே என்று போட்ட பதிவு. நல்ல ரெஸ்பான்ஸ். அறுசுவையை பார்த்து நம்ம வெட்டி கேசரி செய்து சாப்பிட்டு இருக்கார். நல்லா இருந்தது என்று அவரு பக்கத்து வீட்டுக்காரங்களே சொன்னாங்களாம். ஆனா பாருங்க அவரு ஒரு சோதனை முயற்சியாக தான் அவங்களுக்கு முதலில் கொடுத்தார் என்று உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இது போல தம்பி கூட முயற்சி பண்ண போவதாக கேள்வி, பாக்கலாம். இதனால் நம் சமையல் குறிப்பு தொடர்ந்து வரும்.

6,
கண்ணி வெடி - 1 - தொடராக ஆரம்பித்தது. தொடர முடியாமல் போய் விட்டது. நான் நட்சத்திரமாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பதிவு என்று எண்ணுகிறேன். அதனால் தான் இதை ஒரு மீள்ப்பதிவாக போட்டேன். தொடர்ந்து எழுத உள்ளேன். இந்த பதிவு போட்ட தினத்தில் இருந்து பிளாக்கர் சொதப்ப தொடங்கி விட்டது. பின்னூட்டங்கள் போட முடியவில்லை என்று பல மெயில்கள். என்ன பிரச்சனை என்று பார்க்க கூட முடியாதப்படி வேலைப் பளு வேற.

7.
திருநாகை அழகியார் - ஆன்மிகம் இல்லாமல் நட்சத்திர வாரமா என்று எண்ணி போட்ட பதிவு இது. குறிப்பாக குமரன், எஸ்.கே, ஜி.ரா, தி.ரா.ச, கீதா போன்ற ஆன்மிக செம்மல்களை குறி வைத்து போட்ட பதிவு இது. குமரன் மற்றும் கீதா தான் உள்ளேன் ஐயா போட்டார்கள். மற்றவர்களுக்கு என்ன வேலையோ? தொடர்ந்து இது போல பதிவுகளும் அவ்வபோது தொடரும். குமரனுக்காவே பாசுரங்கள் போடப்படும். நம்ம ரவி ஒரு பாசுரம் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றி. இந்த பதிவும் பிளாக்கர் சொதப்பி விட்டது. பதிவு போட்டு அது காணாமல் போய் மீண்டும் பதிவாக போடும்ப்படி ஆனது.

8.
திருநாகை பெருமாள் கோவில் படங்கள் - இந்த நாளில் வேற ஒரு பதிவு போடலாம் என்று இருந்த நான் திரு. குமார் அவர்கள் அனுப்பிய படங்களை பார்த்த பிறகு அதையே ஒரு பதிவாக போடலாம் என்று போட்ட பதிவு. எம் பெருமான் படமும், அக்கோவிலின் பிற படங்களை போட்டு இருந்தேன். இந்த பதிவு போட உதவியாக இருந்த குமார் மற்றும் பாபுவுக்கும் என் நன்றி.

போன வாரத்தில் என்னால் முடிந்த அளவு நன்றாக செய்த திருப்தி உள்ளது. மொத்ததில் எனக்கு நம்ம ராமநாதன் சொன்ன மாதிரி, நல்ல அவியலாகப்பட்டது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

இது போக எனக்கு வழக்கம் போல பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அதிலும் சிலர் ரொம்பவே பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். நான் நட்சத்திரம் ஆனதற்கு என்னை விட அதிகம் மகிழ்ந்த சங்கப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், கூகிள் டாக்ல மெசெஜ் போட்டு கலக்கி அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இது போக என்னை தனியாக மெயிலில் அழைத்து வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

கடைசியாக நம்ம ராயல் ராம். இவரு தான் நம்மை தாரை தப்பட்டையுடன் வரவேற்றார். நன்றி சொல்லி ஒரு பதிவு போட சொன்னதும் அவரு தான். அவருக்கு என் அன்பு கலந்த பண்பு கலந்த மரியாதை கலந்த இன்னும் என்ன என்ன கலக்கனுமோ எல்லாத்தையும் கலந்த நன்றிகள். ராயல் இது போதும்ல... ரொம்ப கூவுனா நல்லா இருக்காது.

Sunday, November 05, 2006

திருநாகை பெருமாள் கோவில் படங்கள்

நாகையில் ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் கோவிலை பற்றி போன பதிவில் பாத்தோம். இப்பதிவில் அக்கோவிலின் புகைப்படங்கள் சிலவற்றை காணலாம். படங்கள் எடுத்த திரு. பாபு அவர்களுக்கும் அந்த படத்தை எனக்கு கொடுத்து உதவிய திரு. குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எம்பெருமான்

திருமாது புவிமாதோடு திருநாகை அழகர்

ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவில் வாயில்

வாயில் பக்கவாட்டு படம்

சொர்க்க வாசல் வழி

ராமர் பாதம்

துவார பாலகர்

Saturday, November 04, 2006

திருநாகை அழகியார்

நாகையை சுற்றி அனைத்து மதத்தையும் சார்ந்த பல கோவில்கள் உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோவில்கள் - வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், செளந்தரராஜப் பெருமாள், எட்டுக்குடி முருகன், திருநள்ளாறு சனீஸ்வரன் போன்ற பல கோவில்களை சொல்லாம். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு கோவிகளை பற்றியும் இங்கு தர முயற்சிக்கின்றேன். முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவிலை பற்றி காண்போம்.

சிறு குறிப்பு

மூலவர் : ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ செளந்தரவல்லி
உத்ஸ்வர் : நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன்
அமர்ந்தநிலை, பச்சைவண்ணன், பவழவண்ணன்
பூஜை : ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
விமானம் : பத்ரகோடி விமானம்
புஷ்கரணி : சாரபுஷ்கரணி செளந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்

நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும், பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம்.


திவ்யதேசங்கள் நூற்றெட்டு ஆகும். இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள். இந்த நாற்பதில் நாகை வட்டத்தில் அமைந்த உள்ளவை இரண்டு. ஒன்று நாகப்பட்டினத்திலும் மற்றது திருக்கண்ணங்குடியில் உள்ளது. இத்திருகோவில் நாகை புகைவண்டி நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு பஸ்நிறுத்தமும் உள்ளது.

கோவிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறம் உயர்ந்த மதில்களும் உள்ளன. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், நாற்புறமும் தேர் ஒடும் பெரிய வீதிகளும் பொருந்தியுள்ளன.

மேற்கூறிய இடம் தான் எங்களில் எவர்கீரின் ஸ்பாட். இந்த நாலு தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருப்போம். கோவிலுக்கு எதிரில் இருக்கும் ராஜா டீ கடையும் நம்ம ஸ்பாட்டில் ஒன்று. நம்ம சக பதிவர் "வடவூர் குமார்" மடவிளாகம் என்று தன் பதிவிற்கு பெயர் வைத்ததும் இந்த கோவிலின் மடவிளாகத்தை குறிக்கும் பொருட்டு தான் என்று எண்ணுகின்றேன். என்ன குமார் அண்ணன் சரி தானே? இது போக இந்த பகுதியில் இருந்து வந்து இருக்கும் மற்ற சக பதிவர்கள் நாம் அனைவரும் அறிந்த "கிழக்கு பதிப்பகம்" பத்ரி மற்றும் நண்பர் "அறுசுவை" பாபு. கோவிலை சுற்றியுள்ள தெருகளில் தான் நாங்க சிறு வயதில் கிரிக்கெட், கிட்டிபுல், பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். தெருவில் இருக்கும் அனைவரின் சாபத்தையும் வாங்குவோம். ஹும் அது எல்லாம் ஒரு காலம். இன்றும் அங்கு நின்று சேட்டைகள் செய்தாலும் அந்த அறியா வயதில் செய்த சேட்டைகளே தனி தான். சரி சரி மீண்டும் கோவிலுக்கு போவோம்....

இக்கோவிலை சுற்றி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீ தேசிகர் கோவில், அனுமன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சர்ச் மதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோவிலும் உள்ளன.

கி.பி. 8 நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் எம்பெருமானை கண்டு வழிபட நாகை வந்தார், நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காம நோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார்.

இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்க பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக முவகைக் கோலங்களில் கோவில் கொண்டுள்ளார். நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாயந்தது. திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப்படைப்பாகும். இது போன்ற பல சிற்பங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு அத்தோடு விடுகின்றேன். அடுத்த கட்டுரையில் இக்கோயிலில் நடைப்பெறும் பூஜைகள், விழாக்கள், கோவில் உள் இருக்கும் சன்னதிகளை பற்றி எழுதுகிறேன்.

எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க.....

Friday, November 03, 2006

கண்ணி வெடி - 1

கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான்.

முதலில் இதை ராணுவத்தில் தான் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலக போரின் போது தான் இது பெரும் அளவில் பயன்படுத்த பட்டது. அதன் பிறகு வியட்னாம் போர், கொரியன் போர், முதல் வளைகுடா போன்ற போர்க்களின் வாயிலாக உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் இது பரவி விட்டது. இன்று இந்த வெடிகள் பல நாட்டில் தயாரிக்கபடுகின்றது, இந்தியாவையும் சேர்த்து...

இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம். சரியாக விபரங்கள் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் தன் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக ஒரு போதும் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தில்லை என தெரிவித்து உள்ளது.

எதற்காக இந்த வகையான வெடிக்குண்டுகள் உருவாகப்பட்டது என்று பார்க்கும் போது, எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், இரவு நேரங்களில் எதிரிகள் தீடிரென்று தாக்குவதை தடுக்கவும், எதிரிகளின் வாகனங்களை அழிப்பதற்க்கும், பாதைகளை, நீர் ஆகாரங்களை துண்டிப்பதற்க்காகவும் தான் உருவாக்கபட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளிகளை செயல் இழக்க செய்யவும், அந்த தருமணத்தில் தாங்கள் சுகாரித்து கொள்வதற்கும். இந்த வகை குண்டுகளை தொடுவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதுன் மூலமும், காந்த சக்தியின் மூலமும், ரிமோட் கொண்டு இயக்குவது மூலமும், டிரிப் வயர் மூலமும் வெடிக்க செய்யலாம்.

கண்ணி வெடிகளை ஒரு சிறந்த(முழுமையான) போர் வீரன் என்று சொல்வது உண்டு.

"The landmine is eternally prepared to take victims. It is the perfect solider."

- Nobel prize winner Mr. Jody Williams.


ஆனால் ஒரு இடத்தில் போர் நிறைவு பெற்றால் பெரும்பாலான போர் வீரர்கள் திரும்பி விடுவது உண்டு. ஆனால் இந்த கடமை வீரன்(கண்ணி வெடிகள்) தன் கடமையை 50 வருடங்கள் ஆனாலும் தவறாது செய்வதற்கு காத்து கொண்டு இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

கண்ணி வெடிகளில் இரு வகை உண்டு. ஆண்டி டேங்க் வெடிகள்(Anti-Tank Mines) மற்றும் ஆண்டி பர்ச்சனல் வெடிகள்(Anti-Personnel Mines). இவற்றை குறித்து விரிவாக பின்வரும் தொடர்களில் காணுவோம். ஆண்டி டேங்க் வெடிகள் தான் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் உபயோகபடுத்தபட்டது. ஆனால் எதிராளிகள் இதை சுலபமாக கண்டுபிடித்து அகற்றிய காரணத்தால், இந்த ஆண்டி பர்ச்சனல் வகை வெடிகள் தயாரிக்கப்பட்டது. இந்த வெடிகள் முதலில் ராணுவ(போர்) வீரர்க்களை மட்டும் தான் குறி வைத்து வைக்கப்பட்டது. பின்னர் சிவிலியன் என்று அழைக்கப்படும் பொது மக்களையும், அவர்களின் நிலங்களையும் நோக்கி திரும்பி விட்டது. அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

----------------------------------------------------------------------------------
பொதுவான தகவல்கள்:
*தற்பொழுது உலகம் முழுவதும் 100 மில்லியன் கண்ணி வெடிகள் உள்ளன.

*1975 ஆண்டில் இருந்து 2005 வரை 1 மில்லியன் மக்கள் இந்த கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.( இறந்தவர்களையும் சேர்த்து)

*இந்த கண்ணி வெடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஆப்கானிஸ்தான்(உபயம் - சோவியத் யூனியன்), ஈராக்(உபயம் - பெரியண்ணன் அமெரிக்கா), கம்போடியா,அங்கோலா, புருண்டி, கொழும்பியா, நேபாளம்,ஸ்ரீலங்கா, சூடான்.........

*இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.

*மேற் சொன்ன நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவில் 35 % சகவீதத்துக்கு மேற்பட்ட நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து உள்ளது. *ஈராக் நிலவரம் கிட்டதட்ட அது போல் தான் உள்ளது.

*ஸ்ரீ லங்காவில் இன்னும் போர் நடந்து கொண்டு இருப்பதால் எந்த அளவுக்கு கண்ணி வெடிகள் உள்ளது என்பது இன்னும் ஒரு கேள்வி குறி தான்.

*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.
----------------------------------------------------------------------------------

- சோகம் தொடரும்...
பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணிய காரணத்தால், இதை மீண்டும் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இதை ஒரு மீள் பதிவாக வெளியிடுகிறேன்.
ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்கு 1000 டாலர் மிகவும் அதிகம் என்று பலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அதற்கு விளக்கம் பின் வரும் தொடர்களில் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

Wednesday, November 01, 2006

வண்ணக் கோலங்கள்

நமக்கு இந்த கலைத் தாகம் கொஞ்சம் உண்டுங்க. அதிலும் இந்த போட்டோகிராப்பி (சரியா படிக்கவும், ஸ்டெபி கிராப் இல்ல)மேல் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதை முறையாக கற்று கொண்டதும் கிடையாது. அதற்கு முயற்சி செய்ததும் கிடையாது. நான் போட்டோவிற்கு நிற்பதை விடவும் எடுக்க தான் அதிகம் ஆசைப்படுவேன். எந்த டப்பா கேமராவா இருந்தாலும் அதை கையில் வைத்து இருந்தால் நம்மளை ஒரு பெரிய ரேஞ்சல திங்க் பண்ணி பாத்துப்பேன். கல்லூரி முடிந்த சென்னையில் குப்பை கொட்டிக் கொண்டு இருந்த போது இந்த மேட்டரை எல்லாம் மறந்து ஒழுங்கா பொழப்ப பாத்துக்கிட்டு இருந்தேன். போன வருடம் ஹைத்தி போய் சோனி சைபர் சாட் 7.2 கேமரா வாங்கினவுடன் மறுபடியும் கிறுக்கு புத்தி வந்துடுச்சு. அந்த பொட்டிய வச்சு நம்ம திறமைய(???) என்னமா காட்டி இருக்கேனு கீழே இருக்கும் புகைப்படங்களை பாருங்க. சிலது நிக்கான் பொட்டியில் புடிச்சது.

எனக்கு பெரும்பாலும் மனிதர்களை எடுப்பதை விட வானம் நித்தம் நித்தம் காட்டும் வண்ணக் கோலங்களை எடுப்பதில் தான் ஆனந்தம் அதிகம். பாருங்க எப்படி இருக்குனு, பாத்துட்டு அப்படியே ஒரு வார்த்தையும் சொல்லிட்டு போங்க. ஏன் கேட்குறேனா.... இந்த பேசிக் மாடல் கேமராவ விட்டு அடுத்த லெவலான இண்டர்மிடியட் கேமரா (நிக்கானில்) வாங்கலாம் என்று இருக்கேன். உன் லட்சணம் இதுலே தெரியுதுனு சொல்லிட்டிங்க வைங்க, அந்த கேமரா பொட்டி வாங்கும் எண்ணத்தை கொஞ்சம் நிறுத்தி வைப்பவன்ல, அதுக்கு தான்.

இடைக்குறிப்பு : அனைத்து புகைப்படங்களையும், அந்த அந்த புகைப்படத்தின் மேல் க்ளிக் பண்ணினால் தனி ஜன்னலில் பெரிதுப்படுத்தி பார்க்கலாம்.

அந்திமாலை பொழுது, சூரியன் விடை பெறும் நேரம். இடம் : ஹைத்தி, தங்கி இருந்த ஹோட்டல் பால்கனியில் இருந்து புடிச்சது. பொட்டி - நிக்கான்.

சூரியன் தன் கடமையை செய்ய வெளி வந்த காலை பொழுது. இடம் : ஹைத்தி, உணவகத்தில் ரொட்டிக்காக(பிரட்) காத்து இருந்த நேரத்தில் புடித்தது. பொட்டி - சோனி

நான் என் கடமையை செய்ய ஹெலிகாப்டரில் போன மதிய பொழுது. இடம் : ஹைத்தி, வானில் இருந்து பிராக்கு பார்த்துக் கொண்டே புடிச்சது. பொட்டி - நிக்கான்

மீண்டும் ஒரு மயக்கும் மாலை பொழுது. இடம் : ஹைத்தி, அறையின் சன்னல் வழியாக ஜும் பண்ணி புடிச்சது. பொட்டி - நிக்கான்

வார விடுமுறையை அனுபவிக்க சென்ற பகல் பொழுது. இடம் : ஹைத்தி, தனித்து அமர்ந்து லபாடி பீச்ல புடிச்சது. பொட்டி - நிக்கான்

வண்ணக்கோலங்கள் காட்டிய மாலை பொழுது. இடம் : ஹைத்தி, மாடியில் உலாத்தி கொண்டு இருக்கும் போது சட்னு பாத்து பட்னு புடிச்சது. பொட்டி - நிக்கான்

உலக அதிசயத்தை அண்ணாந்து பார்த்த மாலை பொழுது. இடம் : பாரீஸ், டாக்சியில் இருந்து அவரத்தில் புடிச்சது. பொட்டி - சோனி

இந்தியன் மாபியா துள்ளி விளையாண்ட மாலை பொழுது. இடம் : பாரீஸ், ஈஃபில் டவரை பாத்துட்டு திரும்பும் போது நம்ம பசங்க ஆடிய ஆட்டத்தை புடிச்சது. பொட்டி - சோனி


கனவு புகைப்படமான மின்னலை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சித்த இருள் கவ்விய இரவு பொழுது. இடம் : சூடான், மின்னல் அடிக்கடி மின்னுவதை முழுமையாக பிடிக்க முடியாமல் ஆறுதலுக்கு புடிச்சது. பொட்டி - சோனி

மணல் புயலை புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒடிய மாலை பொழுது. இடம் : சூடான், மணல் புயலை பிடிக்க ஒடிய நம்மை மழை துரத்த தொடங்கிய போது புடிச்சது. பொட்டி - சோனி

Tuesday, October 31, 2006

சினிமா விமர்சனங்கள்

கடந்த இரண்டு மூன்று வாரத்தில் மட்டும் பல திரைப்படங்கள் பாத்தேன். சும்மா ஒரு நாளில் மூன்று நான்கு திரைப்படங்கள் என்ற கணக்கில். அதில் நான் பார்த்த சில தமிழ் படங்களுக்கும் மட்டும் விமர்சனம் எழுதலாம் என்று தான் இந்த பதிவு.

வேட்டையாடு விளையாடு :

ஏற்கனவே நம் மக்கள் இந்த படத்தை பிரித்து மேய்ந்தால், இதை பற்றி பேசவே பயமா இருக்கு. அதனால் நான் கப்சிப். இருந்தாலும் ஒரு சின்ன மேட்டரு அத மட்டும் சொல்லிக்குறேனுங்கோ. யோவ் படம் எடுக்கும், டைரக்ட் பண்ணும் புண்ணியாவன்களே முகர்ஜி போன்ற ஒரு அழகான கவிதையை எல்லாம் ஒரு பாட்டோட காலி பண்ணுவதை நிறுத்துங்கய்யா ப்ளிஸ். வலிக்குது ரொம்பவே வலிக்குது......



நாளை :

ரிச்சர்ட், நட்ராஜ், மதுமிதா, நாசர் மற்றும் பலர் நடித்து உள்ளார்கள். கதை ரொம்பவே சிம்பள் தாங்க. ஜஸ்டின்(ரிச்சர்ட்), நட்டு(நட்ராஜ்) இருவரும் சிறு வயதில் இருந்து நண்பர்கள். அவர்கள் அந்த ஊரின் தாதாவான நாயரிடம்(நாசர்) வளர்கின்றார்கள். நாசருக்காக எதையும் செய்கின்றார்கள். நாசரை இன்னொரு தாதாவின் (தணிகை - காதல் தண்டபாணி) தம்பி(பாலா சிங்) தவறாக பேசி விடுவதால் அந்த தம்பியை பாட்டிலால் குத்தி கொன்று விடுகின்றார்கள். இது கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் அவர்கள் இந்த கொலையை பற்றி ரொம்ப கேஸ்வலாக போனில் பேசுவதை வைத்து அவர்கள் கேரக்டரை புரிந்துக் கொள்ள முடிகின்றது. தணிகை இதுக்கு காரணமான ஜஸ்டின், நட்டுவை நாசரிடம் காவு கேட்கிறார். அந்த சமயத்தில் ஜஸ்டின் தம்பி நாயரிடம் இருந்து பிரிந்து அம்மாவிடம் வளரும் மகளை விரும்புகிறார். அந்த திருமணத்தை ஜஸ்டின், நட்டு நடத்தி வைப்பதால் அவர்கள் மேல் கோபம் கொண்டு நாசர் அவர்கள் இருவரையும் தணிகைக்காக காவு கொடுக்க முடிவு செய்து விடுகிறார். அந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஜஸ்டின் போலீஸிடம் சிக்கி சிறைக்கு சென்று விடுகின்றார். நட்டுக்கு துப்பாக்கி குண்டு காலில் பாய்ந்து ஒரு கால் ஊனம் ஆகி விடுகின்றது.

மூன்று ஆண்டுகள் சிறையில் கழித்து வெளியே வரும் ஜஸ்டின் நட்டுவுடன் சேர்ந்து மீண்டும் அடியாள் தொழிலுக்கு போகாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். இதுக்கு நடுவில் ஜஸ்டினுக்கு மதுமிதா மேல் காதல். இவர் ஜெயிலில் இருந்து வெளியே வரும் வரை இவருக்காக காத்து இருக்கின்றார். இந்த சமயத்தில் ஒரு போலீஸ் கமிஷனர்(போஸ்) எண்டரி குடுக்குறார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு கட்டுவேன் அப்படினு அடிக்கடி டயலாக் பேசுகிறார். தணிகை ஆட்களுக்கு ஜஸ்டின் தம்பியுடன் மணல் கடத்தும் விசயத்தில் தகராறு வருகின்றது. இடையில் தாதா வாழ்வில் தனிமை ஏற்பட்டு நாசர் போய் சேர்ந்து விடுகின்றார். போலீஸ் கமிஷனரின் வார்த்தையை கேட்டு தணிகையின் ஆள் ஆதி ஜஸ்டினுக்கு குறி வைத்து குறி தவறாமல் மதுமிதாவை சுட்டு விடுகின்றார். உடனே கோவம் கொண்டு எழும் ஜஸ்டினும், நட்டுவும் எல்லாரையும் கொன்று தாங்களும் இறந்து போகின்றார்கள். படம் அம்புட்டு தான்.

தாதா கதை தான் என்றாலும் இந்த படம் கொஞ்சம் வித்தியாசமாக தான் உள்ளது. நல்ல திரைக்கதையமைப்பு. ஆரம்பத்தில் இருந்து சலிப்பு ஏற்படாத வண்ணம் படத்தை எடுத்து சென்று உள்ளார்கள். காமெடி டிராக் என்று தனித்து இல்லாமல் படத்தின் வசனத்தோடு இழைந்து வரும் மாதிரி உள்ளது நல்ல விசயம். எதை பற்றியும் கவலைப்படாத நண்பர்களாக ரிச்சடும், நட்ராஜ்ம் அருமையாக நடித்து உள்ளார்கள். சென்னை செந்தமிழ் தான் படம் முழுவதும். அதிலும் நட்டுவின் வசனங்கள் அருமை. லோக்கால சொல்லனும் என்றால் நல்லா கலாய்ச்சி இருக்காரு. இவர்கள் இளவரசுயிடம் ஐடியா கேட்கும் இடம், பொண்ணு பாக்க சொல்லி மாமா என்று சொல்லுவதும், தண்ணி அடிச்சு அலும்பு பண்ணுவதுமாக ரகளை பண்ணி உள்ளார்கள். இதில் நட்டு அடிக்கடி ஜஸ்டினிடன் "நீ சொன்னா சரி தான் மச்சி" போன்ற வசனங்கள் காட்சிக்கு இயல்பாக பொருந்தி வருகின்றது.

ரிச்சட்டு இப்ப தான் உருப்படியாக ஒரு படம் பண்ணி இருக்கார். நட்ராஜ் அறிமுகம் என்று சொல்கின்றார்கள். ஆனால் ரொம்பவே இயல்பான நடிப்பு. நல்ல எதிர்காலம் உள்ளது. நாசர் நாயராக வழக்கம் போல வாழ்ந்து உள்ளார். மற்ற அனைவருமே சரியாக அவர் அவர் கதாபாத்திரங்களில் பொருந்தி உள்ளார்கள். ஆதி என்று நாசரிடம் அடியாளாக இருக்கும் நபர் நல்ல ஒரு சகுனி நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். மதுமிதாவ பத்தி என்ன சொல்லுறது. அம்மணி பாக்க நல்லாவே இருக்காங்க. பவுடர மட்டும் கொஞ்சம் கம்மி பண்ணி அடிக்கலாம்.

கார்த்தி ராஜா இசை, மற்ற தாதா படங்களை போல் காது வலிக்கும் பிண்ணனி இசை இல்லாமல் இருப்பது ரொம்பவே நல்ல விசயம். இரண்டு, மூன்று பாடல்கள் கேட்கும்படி உள்ளது. அறிமுக இயக்குனர் உதயபானு, அவர் மேல் ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளார். மொத்ததில் இந்த படம் ஒரு தடவையாச்சும் பார்க்கலாம்.


தூத்துக்குடி :

இதுவும் ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தான். தயாரிப்பாளர், டைரக்டர், ஹீரோ எல்லாம் ஒருவரே போல, ஹரி குமார். அதான் இம்புட்டு தைரியமா படம் எடுத்து இருக்கார் போல. ஒண்டுவதுக்கு கூட இடம் இல்லாத மஹா ஒரு அடாவடி போலீஸை அடித்து சிறைக்கு செல்கிறார். அங்கு அந்த ஏரியாவிலே பெரிய தாதாவான லிங்கம்(ரஹ்மான்) த்துடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை கொல்ல முயற்சி செய்கிறார். வெளிய வரும் லிங்கம் இவரையும் வெளியில் எடுத்து தன் ஆட்களை வைத்து கத்தியால் குத்துகிறார். உடனே ஹீரோ லிங்கத்தை பார்த்து பொட்டை என்று சொல்லி தைரியம் இருந்தால் என் உயிரை காப்பாற்றி என்னுடன் ஒண்டிக்கு வா என்று சவால் விடுகின்றார். ரஹ்மானும் உயிரை காப்பாற்றுகிறார். அதில் மனம் மாறி மஹா அவரிடமே அடியாளாக சேர்ந்து விடுகின்றார். பின் லிங்கம் அவ்வப்போது போலீஸ்க்கு தன் ஆட்களில் இருந்து ஒருவனை காவு குடுப்பது தவறு என்று அவருக்கு புரிய வைக்கிறார். நம்பிக்கை துரோகம் செய்யும் எஸ்.பி.யை நடு ரோடில் வைத்து வெட்டுகிறார். போலீஸ் கோபம் கொண்டு மஹாவை காவு கேட்கிறார்கள். லிங்கம் மறுத்து விட்டு தானே செல்கிறார். போலீஸார் மீண்டும் ஒரு சதி பண்ணி எல்லாரையும் கொல்கின்றார்கள்.

இந்த படத்தில் குறிபிட்ட சொல்ல வேண்டிய விசயம் ஒன்னு, படம் முழுவதும் அனைத்து கதாபாத்திரங்களும் தூத்துக்குடி லோக்கல் தமிழ் (நெல்லை தமிழ்) தான் பேசுகின்றார்கள். கேட்க நல்லா தான் இருக்கு. ஹீரோ ஹரி முகத்தில் எந்த ரியாக்சனும் காட்டாமல் நடித்து உள்ளார். தாதா லிங்கமாக ரஹ்மான் நடித்து உள்ளார். அவருக்கு அந்த பாத்திரம் கனச்சிதமாக பொருந்தி உள்ளது. அவரின் வசன உச்சரிப்பும் நல்லா இருக்கு. ஹீரோயினாக கார்த்திகா என்ற ஒரு புது முகம். தாவணி எல்லாம் போட்டு வந்து நம் மனம் கவர்கிறார். அம்புட்டு தான். அவர் படித்து ஆசிரியையாக வேலை பார்த்தாலும் ஒரு ரவடி தனக்கு செய்யும் உதவியை கண்டும், ஒரு முத்தத்துக்கும் அவரை மணக்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி கடைசியில் உயிரையும் விடுகிறார்.

மற்றபடி குறிப்பிட்ட சொல்ல வேண்டும் என்றால் மஹாவின் நண்பராக வரும் ஒருவர் நடிப்பை சொல்லாம். வக்கீலாக வரும் நடிகரும் ஒகே. அவ்வளவு தான். இசை பிரவின் மணி - கருவா பையா என்ற பாட்டு ஹிட்னு சொன்னாங்க. சில தடவை கேட்டுப்பாத்தால் தான் தெரியும். உங்களுக்கு சிடியோ டிக்கட்டோ கிடைத்தால் வேற வேலை ஏதும் இல்லா விட்டால் இந்த படத்தை பாக்க யோசிக்கலாம்.

ஆச்சார்யா :

இதுவும் அடுத்து ஒரு தாதா கூட்டத்தை பற்றிய படம் தாங்க. பிராமண குடும்பத்தில் பிறந்த விக்னேஷ் சிறு வயதிலே பெற்றோர்களை இழந்து சமூகத்தால் வஞ்சிக்கபட்டு ஒன்றும் இல்லாமல் பிழைப்பு தேடி சென்னை வருகின்றார். இரவு பஸ் ஸ்டாப்பில் தன் பையை தவற விட்டதுடன் இல்லாமல் போலீஸாரால் சந்தேக கேஸில் அரஸ்ட் செய்யப்படுகின்றார். இவரை வெளியே போக சொல்லும் போது ஒண்ட இடம் இல்லாத காரணத்தால் போலீஸ் நிலையத்திலே சின்ன சின்ன வேலைகள் செய்துக் கொண்டு இருக்கிறார். ஒரு சமயத்தில் ஒரு கேஸிற்கு ஆள் ஏதும் கிடைக்காத காரணத்தால் எஸ்.ஐ.க்காக யதுநந்தன் - சாமி(விக்னேஷ்) சிறைக்கு செல்கிறார். அங்கு தன் பையை திருடிய கொக்கி (கஞ்சா கருப்பின்) பேச்சை கேட்டு சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு நார்த் மெட்ராஸ் மார்கெட் ஏரியா தாதாவான மாயாக்காவிடம் (வடிவுக்கரசி) போய் சேருகிறார். அனைத்து ஏரியாவுக்கும் பொது தாதாவாக தேவர் (நாசர்).

ஒரு தியேட்டர் விற்கும் பிரச்சனையில் இன்னொரு தாதாவுக்கும், மாயாக்காவுக்கும் சண்டை வருகிறது. தேவர் தீர்த்து வைக்கும் முன்பே பிரச்சனை முற்றி விடுகிறது. அந்த தாதாவால் மாயாக்கா கொல்லப்படுகின்றார். இதனால் வெகுண்ட சாமி அந்த தாதாவை கொல்கிறார். இதை தொடர்ந்து அது மிக பெரிய கேங் வாராக மாறுகின்றது. போலீஸ் கமிஷ்னராக(சரண்ராஜ்) வருபவர் தேவரிடம் சென்று நீங்கள் ஒதுங்கி கொள்ளுங்கள், நாங்கள் மற்றவர்களை பிடித்தோ கொன்றோ விடுகின்றோம் என்று சொல்ல தேவரும் ஒத்துக் கொள்கின்றார். இதனால் ஆத்திரம் அடையும் சாமி மற்றும் பிற தாதாக்கள் அப்ரூவராக மாறி தேவரை சிறையில் அடைக்க முயற்சி செய்கின்றார்கள். அதில் சாமி வெற்றியும் பெறுகின்றார். இதுக்கு நடுவில் சாமி ஒரு பொண்ணை காதலிக்கிறார். அந்த பொண்ணுக்கு போலீஸ் வேலை வாங்கி தருகிறார். இந்த படத்திலும் அந்த பொண்ணை கடைசியில் போட்டு தள்ளி விடுகின்றார்கள். யோவ்... உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே கிடையாது. அது ஏன்னய்யா ஒரு பொண்ணை இப்படி அநியாயமா எல்லா படத்தில் கொலை செய்து விடுகின்றீர்கள். இதுக்கு ஒரு முடிவு கட்டுங்கய்யா.

இந்த படத்தில் ஒரே ஆறுதல் கஞ்சா கருப்பின் காமெடி. நாசரை இந்த படத்தில் வீண் அடித்து உள்ளார்கள். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் பெயர்கள் எல்லாம் வித்தியாசமாக உள்ளது. ஒரு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி படத்தை சும்மா சப்னு முடித்து உள்ளார்கள். மற்றப்படி சொல்ல ஒன்றும் இல்லை. இயக்குனர், பாலாவிடம் பயின்றவர் என்று சொன்னார்கள். பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம். இசை ஸ்ரீகாந்த் தேவா... சொன்னா தான் தெரியுது. இந்த படத்தை காலத்தின் கட்டாயத்தால் காண நேர்ந்தால் என் பரிதாப நிலையை நீங்களே புரிஞ்சுப்பீங்க.

Monday, October 30, 2006

உள்கட்டமைப்பு!

இந்தியா ஒரு வல்லரசாக வேண்டும் என்ற கலாமின் கனவு எனக்கும் உண்டு. இந்த கனவுக்காக என்னை யாரும் செருப்பால் அடிப்பதாக இருந்தாலும் நான் வாங்கி கொள்ள தயார். இப்பொழுது இருக்கும் மக்கள் தொகையாலும், இளைஞர் படையாலும் அதற்கான சாத்தியம் நிறையவே உள்ளது என்பது என் எண்ணம். சரி இப்ப நாம வல்லரசு ஆவதை விட்டு விடுவோம். இன்றைய தேதிக்கு நம் நாட்டில் உடனடியாக செய்ய வேண்டிய விசயங்களில் ஒன்று, நாட்டின் உட்கட்டமைப்பு(Infrastructure). இந்த உட்கட்டமைப்பு என்பதில் குடிநீர், சாலைகள், பாலங்கள், மின்சார வசதி, தொலைத் தொடர்பு வசதி, போக்குவரத்து வசதி போன்ற பலவற்றைகளை சொல்லாம்.

நான் பார்த்த வளர்ந்த நாடுகளை விட்டு விடலாம். தற்சமயம் நான் இருக்கும் சூடானில் தலைநகரம் மட்டும் தான் வாழ்வதற்கு தகுந்த நகரம் என்று சொல்லாம். மற்ற நகரங்கள் எல்லாம் சராசரிக்கும் கீழ் தான். அடிப்படை வசதிகள் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு மோசம். (பல மாநிலத்தின் தலைநகரங்கள்) அப்படிபட்ட சூடானிலே அடிக்கடி தடைப்படும் மின்சார சேவையை முழுவதும் தானியங்கி படுத்தி உள்ளார்கள். இதை ஏன் நம் நாட்டில் இன்னும் செயல் படுத்தவில்லை(எனக்கு தெரிந்த வரை) என்ற ஆச்சரியம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த சேவையை இங்கு எப்படி செயல்படுத்துகின்றார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.


ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்தில் படத்தில் உள்ளது போன்ற ஒரு
கருவியை பொருத்தி உள்ளார்கள். அதன் அவுட் புட் வீட்டிற்குள் வரும் மெயினில் இணைத்து உள்ளார்கள். அந்த கருவிக்கு ஒரு எண் நிர்ணயித்து ஒரு அட்டை வழங்கி உள்ளார்கள். நமக்கு எப்பொழுது மின்சாரம் தேவை உள்ளதோ அப்பொழுது மின்சார அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்பு எண் சொல்லி நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை யூனிட் அளவுகளில் நாம் வாங்கி கொள்ளலாம்.


அதற்கு ஒரு சின்ன ரசீது கொடுகின்றார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை வீட்டில் இருக்கும் கருவியில் அதில் இருக்கும் பட்டன்களை கொண்டு உள் செலுத்தினால், அது எந்த அளவுக்கு நாம் மின்சார யூனிட் வாங்கி இருந்தோமோ அதை திரையில் காட்டும். பின் அதில் இருந்து மின்சாரம் நம் பயன்பாட்டை பொருத்து குறைந்து கொண்டே வரும். மின்சார யூனிட்கள் முற்றிலும் முடிந்த பிறகு நாம் மறுபடியும் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டியது தான்.


இதற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வாடகையாக
பெற்றுக் கொள்கின்றார்கள். பழைய பாக்கி ஏதும் இருந்தால் அதையும் குறிப்பிட்ட மாத இடைவேளையில் சரியான அளவில் பங்கீட்டு செய்து வசூலித்து விடுகின்றார்கள். இங்கு குறிப்பிட்ட சொல்ல வேண்டிய இன்னொரு விசயம், முதல் 100 யூனிட்கள் வரை ஒரு விகிதம். மேற்கொண்டு போகும் யூனிட்களுக்கு இன்னொரு விதிகம் என்றும் வகைப்படுத்தி உள்ளார்கள்.


இதை நம் தமிழகத்தில் அமல் படுத்தினால் ஏற்படும் சில சாதகங்கள் :

* மாதம் மாதம் மின்சார பணம் கட்ட வேண்டிய தேதிக்குள் கட்ட வேண்டும் என்ற நிலை இருக்காது
* உங்களுக்கு தேவைப்பட்ட அளவு மின்சாரத்தை முன்கூட்டி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
* மின்சார பாக்கி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
* மீட்டர் கணக்கு எடுக்க வேண்டும் என்ற நிலை கிடையாது
* இலவச மின்சாரம் குடுப்பது என்றாலும் மாதத்திற்கு இவ்வளவு என குறிப்பிட்ட யூனிட்களை கொடுக்கலாம்.
* திருட்டு மின்சாரத்தை பெரும் அளவு குறைக்கலாம்.

இதை எப்படி அமல்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மின்சார மீட்டர் அனைத்தையும் மாற்றுவது என்பது உடனடியாக நடக்கும் காரியாம என்றால கண்டிப்பாக இல்லை தான். இதை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம். புதிதாக வீடு கட்ட பெறும் ஒரு ஏரியா, ஒரு பெரிய அலுவலக வளாகம் அல்லது ஒரு கிராமத்தையோ நகரத்தையோ தேர்ந்து எடுத்து அங்கு பரிசோதனை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கருவிகளை யாரு செய்வது என்பது எல்லாம் நம் நாட்டில் தற்சமயம் ஒரு பொருட்டே கிடையாது. இது மாதிரி வேண்டும் என்றால் நாம் கேட்ட விலையை விட குறைந்த விலைக்கு செய்து கொடுக்கும் திறமையும், ஆட் பலமும் நம் நாட்டில் உள்ளது.


இந்த திட்டத்தில் எந்த குறையும் கிடையாதா, இதை தவறாக பயன்படுத்த முடியாது என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கும், அதை சரி செய்ய வேண்டும். நானே அந்த கருவிக்கு முன்னால் வரும் வயரை கட் பண்ணி செக் பண்ணனும் என்று இருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதும் என் எண்ணம். நானே இப்படினா, காளை மாட்டிலும் பால் கறக்கும் ஆட்கள் நம்ம ஆட்கள். ஒரு பொருளை உருவாக்க சிந்திக்கும் மக்களை விட அதை எப்படி மிஸ்யூஸ் பண்ணலாம் என்று கிரிமினல் மூளையுடன் யோசிக்கும் மக்கள் தான் அதிகம். அவர்களையும் கணக்கில் கொண்டு இந்த கருவிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இதை கிட்டதட்ட ஒரு ப்ரி பேய்டு செல் போன் போன்று கொண்டு வரலாம்.

ஒவ்வொரு கருவிகளுக்கும் ஒரு யூனிக் நம்பர் அசைன் பண்ணலாம், ஏரியா, ஊர் வைத்து அவைகளை பிரிக்கலாம் அல்லது மின்சார நிலையத்தை வைத்தும் பிரிக்கலாம். இதை செய்தாலே பாதி வேலை முடிந்தது. காசு இருக்கும் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்து விட்டால் நோ சர்வீஸ். மின்சார ப்ரி பேய்டு அட்டைகளை பல இடங்களில் கிடைக்கும் படி செய்யலாம். நாம் செல்போனை கடையில் கொடுத்து ரீ சார்ஜ் செய்வது போல் இதை செய்வது சற்று கடினம். கார்டு வாங்கி வந்து நம்மாளக செய்யவது சற்று சுலபம். அந்த ரீ சார்ஜ் கார்டில் எவ்வளவு சார்ஜ் பிடித்தம் செய்ய வேண்டுமோ அதை பிடித்தம் செய்து பாக்கி காசுக்கு யூனிட் கொடுக்கலாம்.


செல்போனில் எப்படி மாதம் மாதம் ஒரு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாக குறைந்து விடுமோ அது போல மாத வாடகையை தானாக குறையும் படி செய்து விடலாம். இந்த வகை அட்டைகளை எல்லா இடங்களிலும் கிடைக்கும் படி செய்யலாம். முன்பு மீட்டர் கணக்கு எடுக்க வந்த நபர்களை இந்த அட்டைகளை குடுத்து பணம் வாங்கி வர வைக்கலாம்.

இவ்வளவு தாங்க எனக்கு தோன்றியது. தீடிரென்று தோணியது, அப்படியே எழுதியாச்சு. இன்னும் சற்று வர்கார்ந்து யோசித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமான வழி புலப்படலாம். ஆனால் இது போன்ற சேவைகள் நம் நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தொடங்க பெறுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுங்க.

நட்சத்திரம் - மெய்யாலுமா?

வணக்கம், வணக்கம்.

என்னங்க சொல்லுறீங்க !!!!!!!

நானா மெய்யாலுமா? யம்மா இருக்காதும்மா. நீங்க வேற யாரையோ நினைச்சு என்கிட்ட பேசிக்கிட்டு இருக்கீங்க போல.

ஆமாம் நான் தான் சிவா

அப்ப நான் தானா?

இல்லங்க இங்கன ஏகப்பட்ட சிவாகள் இருக்காங்க, அட்ரஸ் மாத்தி வந்து இருக்க போறீங்க,

நாகை சிவா தானா !

ஆங் புரிஞ்சி போச்சுங்க இப்ப, சின்ன பையன் தானேனு விளையாடுறீங்களா?

இல்லையா......

நான் எப்படிங்க அங்க எல்லாம், சே... சே... இருக்காது. நான் சும்மா கொசுவையும், சிட்டுக்குருவியையும் வச்சு பொழப்ப ஒட்டிக்கிட்டு இருக்கேன். நமக்கு எல்லாம் அந்த குடுப்பினை கிடைக்காது. வேணுமுனா யாருக்காச்சும் வால் நட்சத்திரமாக இருக்கலாம்.

இல்லையா, உண்மையாக தான் சொல்லுறீங்களா.....

நம்பலாமா?

நம்பி தான் ஆகனுமா, ஆகா இந்த நேரம் பார்த்து பக்கத்தில் எவனும் இல்லையே, இருந்தா அவன கிள்ளி பார்த்து கனவா இல்ல நனவா கன்பார்ம் பண்ணிடலாம். யோவ் ஜார்ஜ், புடின், பிளேயர் எங்கய்யா போனீங்க நீங்க எல்லாம்......

அவங்களை எல்லாம் கூப்பிட வேண்டாமா.... ஏன்

நனவு தானா....

இது என்னடா தமிழ்மணத்திற்கு வந்த சோதனை !!!

இதை தான் குப்பையும் ஒரு நாள் கோபுரத்தில் ஏறும் என்பார்களோ?

சரி ஏதோ காற்று கொஞ்சம் பலமா அடிச்சி கோபுரத்தில் ஏறியாச்சு, அடுத்த காற்று அடிப்பதற்கு முன்பு என்ன என்ன உளறனமோ அதை எல்லாத்தையும் உளறிட்டு போயிறேன். அந்த உளறலை கேட்டு விட்டு ரொம்ப கோவப்படாம பார்த்து பக்குவமா வேப்பிலை அடிங்க. அதை விட்டு மாட்டுனாடா அனமாத்தா ஒரு ஆளுனு நினைச்சு எல்லாரும் சேர்ந்து கும்மி அடிச்சுட்டு போயிடாதீங்க. அப்புறம் எங்க தல கைப்பூ வ கூட்டி வந்து நியாயம் கேட்பேன் சொல்லிட்டேன்.

உலகத்தில் இருக்கும் எல்லா சாமிகளையும் வேண்டிக்கிட்டு இந்த வார முழுவதும் உங்களை தொல்லை பண்ணப் போகின்றேன்.

வந்து வாழ்த்திட்டு போங்க புண்ணியவான்களே....... எதுக்குனு கேட்குறீங்களா.... நட்சத்திரமாக தேர்ந்து எடுத்ததுக்கும் அதுவே 50 வது பதிவாக அமைந்தற்க்கும் தான்.