Friday, November 28, 2008

மும்பை பயங்கரம் - புகைப்படங்கள்























Thanks : Arasi Arul(for Mail) & M.Rishan Shareef (for Photos)
Source : M.RISHAN SHAREEF COLLECTION OF ARTICLES.

Thursday, November 27, 2008

இந்திய பிரதமரே!

இந்திய பிரதமரே!

வணக்கம். இந்திய மக்கள் ஆகிய நாங்கள் நலமாக இல்லை. எங்களின் தலைவராகிய நீங்களாவது நலமாக உள்ளீர்களா? நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு எப்படி நலமாக இருக்க முடியும் என்று கேட்குறீர்களா.. அதுவும் சரி தான். இன்னும் சில நாட்களுக்கு உங்களை நாட்டில் உள்ள பிரதான எதிர்கட்சி முதல் கடைசி குடிமகன் வரை கேள்விகளாலும், விமர்சனங்களாலும் துளைத்து எடுக்க போகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்ற கவலையே உங்களை வாட்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நானும் என் பங்கிற்கு இரண்டு பைசாகளை கொடுத்து விட்டு போகிறேன்.

இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு தடவையும் குண்டிவெடிப்பிற்கு பிறகு உரை தயாரிப்பதற்கு பதில் அனைத்திற்கும் பொருந்துகின்ற மாதிரி ஓரு உரையை உங்கள் துறையினரிடம் சொல்லி தயாரித்து வைத்து கொள்ளுங்கள். தேதி, இடம், வெடித்த குண்டுகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, நிவாரண தொகை ஆகிய இடங்களை மட்டும் காலியாக விட்டு அந்தந்த குண்டுவெடிப்புக்கு ஏற்ற மாதிரி நிரப்பி கொள்ளலாம். ஏன்னென்றால் குண்டுவெடிப்புகளும் நிகழாமல் இருக்க போவது இல்லை. உங்கள் அறிக்கையும் வராமல் இருக்க போவது இல்லை.

நீங்களும் எப்பொழுது போல எந்த விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா சகித்து கொள்ளாது, இதற்கு காரணமானவர்களை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். புதிதாக எந்த ஒரு சட்டம் தேவையில்லை. உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம். பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். blah.. blah.... இதை தவிர வேறு என்ன சொல்லி இருக்கீங்க அல்லது செய்து இருக்கீங்க. இந்த தடவையும் அதே பல்லவி தானே?

எதிர்கட்சிகள் உங்கள் அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது அதற்கு பொறுப்பு ஏற்று உங்களை பதவி விலக சொல்லும். நீங்கள் பதவி விலகினாலும் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற நிதர்சனம் அறிந்தே அவர்களும் குரல் எழுப்புகிறார்கள் என்று அறிந்து தான் உள்ளோம். இருந்தாலும் கேள்வி எழுப்ப வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் உங்கள் உள்துறை அமைச்சர் பதில் விதாண்டவாதம் பேசுவார். இந்த வருடத்தில் மட்டும் எத்தனை குண்டுகள் நம் நாட்டில் வெடித்து உள்ளது, எத்தனை இந்திய மக்கள் இறந்து உள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணி பார்த்து அவர் தன் வாயை திறப்பது சால சிறந்தாக இருக்கும்.

உண்மை தான், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவில் மட்டும் இல்லை உலகெங்கும் தான் நடக்கிறது. அமெரிக்காவில் இல்லையா, இங்கிலாந்தில் இல்லையா என கேள்வி எழுப்பவது நியாயம் தான். ஆனால் அங்கு ஒரு முறை நடந்ததுக்கே செய்தவனின் டவுசரை கழுற்றினார்கள். ஆனால் நாமோ ஒவ்வொரு முறையும் நம் டவுசரை அல்லவா கழுற்றி விட்டு காட்டி கொண்டு இருக்கிறோம். அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறோம்.

ஆனாலும் இதில் ஒரு பெருமை பட விசயம் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனுக்கு அடுத்தபடி நம் நாட்டில் தான் அதிக குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது என்ற பெருமைதான் அது. முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது என்பது சதாரணமான விசயமா என்ன? அதற்கு ஒரு பூச்செண்டு உங்கள் அரசாங்கத்துக்கு. அது மலர் வளையமாக தெரிந்தால் அதற்கு நீங்களும் உங்கள் அரசும் தான் முழு பொறுப்பு.

எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம் பாராளுமன்றம் வரை வந்தும் நமக்கு புத்தி வரவில்லை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் பயங்கரவாதம் எப்படி எல்லையை தாண்டி உள்ளே வருகிறது. சந்திரன் வரைக்கும் சென்ற நம்மால், இதை கண்டு பிடிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்றால் எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

எல்லை தாண்டி வந்தவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாக திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை நான் மட்டும் அல்ல நீங்களும் ஒற்றுக் கொள்வீர்கள். அப்ப இங்கு இருக்கும் சிலரும் அதற்கு துணை போகின்றாகள். குறைந்தபட்சம் அவர்களையாவது கண்டுபிடித்து வேரறுத்தால் என்ன? அது எப்படி முடியும் நாம் தான் ஜனநாயக நாடு ஆச்சே. கூடவே சகிப்புதன்மையின் ஒப்பற்ற பிதாமகன்களாக வேறு திகழ்ந்து கொண்டு இருக்கிறோம். கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் மனிதாபிமானம் என்ற வார்த்தையை பிடித்து தொங்குவோம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது சரி நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொல்ல உதவியே மக்களுக்கே கருணை காட்டிய மக்கள் ஆச்சே நாம். வாழ்க.

பாக்தாத், காபூல், மும்பை என்ற வரிசையில் அடுத்து எந்த இந்திய மாநகரம் சேர போகிறது என்ற வாக்கெடுப்பு நடப்பதாக கேள்வி. வாக்கெடுப்பு முடிவுக்காக காத்து இருக்க போகின்றீர்களா இல்லை வேறு ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதா? சொரணையற்ற தேசமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் என் தேசம் இருக்க போகிறது. நீங்களும் இந்த நாடும் ஏன்றைக்கு சுயமாகவும் தைரியமாகவும் முடிவுகளை எடுக்க போகின்றது.

சரி வெட்டி கதை எதற்கு, இது வரை நடந்தற்கு என்ன பண்ண போகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நாளை இந்திய மண்ணில் வாழ எங்களுக்கு பாதுகாப்பாக வாழ வழி இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது.

ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்புக்கு பின், இந்திய மக்கள் தங்கள் ஒற்றுமையை பறை சாற்ற வேண்டிய நேரம் இது, பயம் கொள்ள தேவையில்லை அமைதி காக்கவும் என்று சொல்லி சொல்லி உங்களுக்கும் அலுத்து விட்டது எங்களுக்கும் அலுத்து விட்டது. வேற எதாச்சும் செய்யுங்க எஜமான்!

இப்படிக்கு,

இன்னுமாடா இந்த நாடு நம்மள நம்புது என கேட்கும் குரலை அலட்சியப்படுத்தி கொண்டே இந்திய அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டின் எந்த பகுதியிலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு இந்திய குடிமகன்.

ஜெய்ஹிந்த்!

Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)

Thursday, November 13, 2008

சினிமா

சங்கிலி பதிவிட அழைத்த சங்கத்து சிங்கங்கள் தல கைப்புள்ளைக்கும், அண்ணன் வெட்டிகாருக்கும் என் வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு நேரா கேள்விக்கு போகலாம்.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நல்ல கேள்வி ஆனா பதில் தான் தெரியல. நினைவு தெரிந்துனா Mr.பாரத். அதுல என்னத்த உணர்ந்தேன் என்பதை இப்ப உணர முடியல. நாகையில் அப்ப மூன்று திரையரங்கம் தான். சிறுவயதில் அடிக்கடி சினிமா சென்ற ஞாபகம் இருக்கு. அப்பா வோடு சென்றது ரொம்பவே கம்மி தான். கடைசியாக நாங்கள் இருவரும் சேர்ந்த பார்த்த படம் என்றால் Iron Leg (15 வருசம் இருக்கும்) அம்மாவோடும் கம்மி தான், ஆயுத எழுத்து (அக்கா திருமணம் முடிந்த பிறகு பார்த்த படம்) இரண்டுமே பாண்டியில் (முதலாவது ஆனந்தா அடுத்து ஸ்ரீராமன், இரண்டு அரங்கமும் இப்ப இல்லை:) )

நம்மை சினிமாவுக்கு அடிமைப்படுத்திய பெருமை என் மச்சானுங்களுக்கு தான் சேரும், அவர்கள் நாகை வந்தாலும், நான் தேவகோட்டை சென்றாலும் சினிமா பார்ப்பதும், ஹோட்டலில் சாப்பிடுவதும் மட்டும் தான் வேலை. பள்ளிக் காலங்களில் பாண்டிக்கு செல்லும் போது எல்லாம் அடிக்கடி வீட்டில் சொல்லிவிட்டு சினிமாவுக்கு செல்வது உண்டு. 11ம் வகுப்பில் இருந்து தான் கட் அடித்து சினிமா பார்க்கும் பழக்கம் ஏற்பட்டது. முதல் படம் - இந்தியன். அதன் பிறகு எந்த படமாக இருந்தாலும் விடுவது இல்லை. அதிலும் குறிப்பாக தெலுங்கு டப்பிங் (சாய்க்குமார், ராஜ்சேகர், வெங்கடேஷ், சிரஞ்சீவி எங்கள் ஆஸ்தான நாயகர்கள்) மற்றும் ஆங்கில டப்பிங் படங்கள் தான் (ஜெட் லீ). அதுவும் போக வீட்டிற்கு அருகில் வீடியோ கடை இருந்ததால் அனைத்து படங்களையும் ஒசியில் கண்டு ரசித்தது உண்டு.

கல்லூரி சென்ற பிறகு திரையரங்கில் பதிவேடு வைக்கும் அளவுக்கு நம்ம சினிமா மோகம் இருந்தது. சினிமா பார்ப்பதை பெருமையாக நினைக்காமல் கடமையாக நினைத்த காலம் அது. ஊர் ஊராக சென்ற சினிமா பார்த்த பருவம். படம் எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் அதை பெருந்தன்மையாக தாங்கிய பருவமும் கூட.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

ராமன் தேடிய சீதை & ஏகன். முதல் படம் ஆரம்பத்தில் சேரனின் நடிப்பை கண்டு வாங்கடா போயிடலாம் என்றேன், பசங்க வரல. பிறகு மருத்துவமனை காட்சியை கண்டு பசங்க கூப்பிட நான் போகலையே (பழிக்கு பழி). ஏகன் பற்றி என்னத்த சொல்ல, ராஜு சுந்தரம் தன் நடனத்தை தொடர்வது நல்லது. அஜித் முடிந்த அளவு ஆடி இருக்கார்ல?

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?

தமிழ் - தில்லுமுல்லு & கோவில், ஆங்கிலம் - He Got Game - சூடானில் தங்கி இருக்கும் அறையில். தில்லுமுல்லு எனக்கு மிகவும் பிடித்த படங்களில் ஒன்று. அப்படி இருந்த ரஜினியை இப்படி ஆக்கிடானுங்களே என்று வாசு மேல நல்லாவே கோவம் வருது. கோவில் - சிம்பு இந்த படத்தில் நடித்த மாதிரியே வாய் அடக்கமா நடித்தால் எவ்வளவு நல்லா இருக்கும். He Got Game - Denzel Washington & Ray Allen நடிச்ச படம். நல்ல படம். நேரம் இருந்தால், கூடைப்பந்து பிடிக்கும் என்றால் கண்டிப்பாக பார்க்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நாம தான் சினிமாவை விமர்சனம் என்ற பெயரில் தாக்கிக்கிட்டு இருக்கோம். அது எங்க நம்மள தாக்குவது. நினைவில் இருக்கும் சில படங்கள் என்று எடுத்துக் கொண்டால் நின்றுக் கொண்டே பார்த்த ஒரே படமான மன்னன், டிக்கெட் கிடைக்காமல் காத்து இருந்து அடுத்த காட்சி பார்த்த படையப்பா(காரைக்காலில்),கல்லூரியே திரண்டு சென்று பார்த்த காதலர் தினம், எத்தனை தடவை பார்த்தோம் என்று கணக்கு இல்லாத படையப்பா(நாகையில்), ஊர் ஊராக சென்று பார்த்த அலைபாயுதே, ஃபைக்ல 4 நபர்கள் சென்று பார்த்த சாமி(திருவாரூர்), கார் எடுத்து சென்று பார்த்த பத்ரி(மாயவரம்) அடித்து பிடித்து டிக்கெட் எடுத்த பார்த்த காதல் தேசம்(பாண்டி) 2 நாளில் நாகையில் இருந்து எடுத்த விட்டார்கள் என்று திருச்சிக்கு சென்று பார்த்த கன்னத்தில் முத்தமிட்டால், சும்மா போய் பார்ப்போம் என்று சென்று மிரண்ட சேது, தேர்வை அவசர அவசரமான முடித்து விட்டு சென்ற ஆய்த எழுத்து, முதல் தடவை பார்த்தப்ப ஏன் இந்த படம் நமக்கு பிடிக்கல என எண்ண வைத்த அன்பே சிவம், திரை அரங்கில் தான் காண வேண்டும் எனக் காத்து இருந்து கண்ட சிவாஜி, இது போல இன்னும் ஏகப்பட்ட மறக்க முடியாத படங்கள் இருக்கு.

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

கழுதை நம்மள என்னத்த தாக்க போகுது. சினிமா வந்தா பாத்தோமா அதை பத்தி நண்பர்களுடன் பேசினோமா அடுத்த வேலைய பாக்க போனாமனு இருக்குற ஆளு நான். அதுனால பெருசா எதுவும் நம்மள தாக்கல. இருந்தாலும் ஆளு ஆளுக்கு பஞ்ச் டயலாக் மூலமா சக நடிகர்களை வம்புக்கு இழுப்பது, இமேஜ் என்ற வட்டத்தில் அடைப்பட்டுக் கொள்வது, எல்லாத்துக்கும் ரஜினியை ஊறுகாய் போல் தொட்டுக் கொள்வது, எதாச்சும் பேசனும் என்பதுக்காக அதிகப்படியா பேசுவது(தமிழன் உருப்புடுவானா....), சினிமா வை வைத்து அரசியல் பண்ணுவது,அந்த பெயர வைக்காத இந்த பெயர வைக்காதனு... இது எல்லாம் எப்படா நிறுத்துவீங்க என்று இருக்கு.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?

கமல், மணித்ரத்னம், ஷங்கர், P.C ஸ்ரீராம் படங்களில் இருக்கும் தொழில்நுட்பங்களை தெரிந்துக் கொண்டு படம் பார்க்கும் ஆவல் உண்டு. என்னை கவர்ந்தது என்றால் கறுப்பு ரோஜா என்ற படத்தில் தான் முதல் முதலாக DTS(இந்தியாவில்) அறிமுகப்படுத்த பட்டது என்று நினைக்கிறேன். அந்த நேரத்தில் அது ஒரு வித்தியாசமான அனுபவமாகப்பட்டது.

6. தமி்ழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

இல்லையா பின்ன. சினிமா இல்லாத தமிழ் இதழ்கள் ரொம்பவே கம்மி ஆச்சே.

7.தமிழ்ச்சினிமா இசை?

என் தனிமை நேரத்து தோழன் தமிழ்ச்சினிமா இசை. அதிலும் என்றும் ராஜா தான். எல்லா இசையும் கேட்பது உண்டு.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

பெரும்பாலும் ஆங்கில படங்கள், அரிதாக ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்கள். கவர்ந்த படங்கள் என்று சொன்னால் Brave Heart, Forest Gump, Pirates of Carribean, Phone Bhooth, The Rock, The Last king of Scotland, Blood Diamond......

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

இல்லை. நண்பர்கள் சிலர் சினிமா துறையில் இருந்தார்கள், இருக்கிறார்கள். அவர்களிடம் கதை கேட்பதோடு சரி. தொடர்ந்து தமிழ் சினிமா பாத்துக்கிட்டு வரேன், அது தொடர்ந்தாலே போதும்.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

நல்லா தான் இருக்கும். பாலா, அமீர்,வெங்கட் பிரபு, லிங்குசாமி, வெற்றிமாறன் போன்றோர்கள் நம்பிக்கை அளிக்கிறார்கள். அது போக ஹீரோ வழிப்பாட்டு பாடல், புரட்சி தளபதி, சின்ன இளைய தளபதி போன்ற அடைமொழி, கவர்ச்சி வேறு ஆபாசம் வேறுனு ஜல்லி அடிச்சுட்டு மார்புக் கோட்டையும், தொப்புளையும் Closeup வைப்பது போன்றவற்றை தவிர்க்கலாம் கூடவே தாலி செண்டிமெண்ட்டும் வேண்டாம் தாலியை தூக்கி ஏறியுற K.B. சிந்தனைகளும் வேண்டாமே.

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ரொம்ப சந்தோஷம். விட்டு போன மற்றும் பழைய நல்ல படங்களை பார்க்கலாம். அதை தான் இப்ப செய்துக்கிட்டு இருக்கேன் என்பது வேற விசயம். ஊடகங்களால் எனக்கு எந்த பாதிப்பது இருக்காது. ஆனால் தமிழ் சினிமா இல்லை என்றால் ஊடகங்களுக்கு கண்டிப்பாக பாதிப்பு இருக்கும். தமிழ் சினிமாவை வைத்து அரசியல் செய்துக் கொண்டு இருக்கும் தலைவர்கள் வேறு துறையை தேட வேண்டியது இருக்கும். வருங்கால முதல்வரே என போஸ்டர் அடித்தே பிழைப்பை ஒட்டும் நபர்கள் பாதிக்கப்படுவார்கள். சினிமாவே இல்லாட்டினா சினிமா விருது வழங்கும் விழாவும் இருக்காது, அய்யோ நம் தமிழக அமைச்சரவை ரொம்பவே பாதிக்கப்படுமே.

12. தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

ஒரு புடலைங்காவும் ஆகாது. என்ன தமிழ் தொலைக்காட்சியில் சினிமா சம்பந்தப்பட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் இல்லாமல் அவனால் சுகந்திர, குடியரசு, தீபாவளி, ரம்ஜான், பொங்கல் தினங்களை போற்ற முடியாது. அது ஒன்னு தான் வருத்தம்.

கலைத்துறையில் இருந்து இத்தனை முதல்வர்களை உருவாக்கிய நாம் சினிமா இல்லாமலா, நடக்குற கதையா எதாச்சும் இருந்தா சொல்லுங்கப்பா.

ஆட்டத்தை இத்தோடு முடிச்சுப்போம்.