Tuesday, May 12, 2009

தொகுதி அலசல் - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.

இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.

மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.

சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.

இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:

1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)

2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)

3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)

4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 3 சுயேச்சைகள்.

குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.

7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.

இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.

மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.

நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.

வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.

Monday, May 11, 2009

கதம்பம்

தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.

*******

தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.

*******

எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.

*******

தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.

*******