மற்றவர்களுக்கு எப்படியோ நாகையை சேர்ந்த எனக்கு நாகை மாவட்டத்து மீனவன் சுடப்படுவதும் அதை தொடர்ந்து மீனவர்களின் சில நாள் போராட்டம், அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் மீண்டும் தாக்குதல் மீண்டும் போராட்டம் என்பது பாத்து பாத்து சலித்து போன விசயம். உருப்படியாக ஏதுவும் நடந்ததும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்று வெறுத்து போன மனநிலை தான்.
கடந்த வாரம் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் மீண்டுமா என்ற கேள்வியும் வழக்கம் போல் நாகை மாவட்டத்து மீனவர்களின் காலவரையெற்ற போராட்டம், மறியல், மற்ற சில மீனவ கிராமங்களின் மறியல், ஆளும் கட்சியின் திரைமறைவு நிவாரணம், மற்ற கட்சிகளின் கடமைக்கான எதிர்ப்பு குரல் அம்புட்டு தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக இணையத்தில் வலுவாக குரல்கள் தொடர்ந்து எழுப்பட்ட போது எனக்கே இது உண்மை தானா என்ற ஐயம் வந்தது. ஆனால் என் ஐயத்தை துடைக்கும் வண்ணம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு நிறுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டிவிட்டரில் அவர்களுடன் நாமும் கைகோர்ப்போம்.
அதை பற்றிய விபரங்களுக்கு
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
தொடர்புடைய சுட்டிகள் :
http://www.savetnfisherman.org/
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html
http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html
http://www.petitiononline.com/TNfisher/petition.html
JOIN THE CAUSE : Act Now, Voice your Dissent – Tweet with the tag #tnfisherman
Monday, January 31, 2011
தமிழக மீனவர்களுக்காக
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, January 31, 2011
1 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Sunday, August 15, 2010
சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்
தாய் மண்ணை போலொரு பூமியில்லை பாரதம் எங்களின் சுவாசமே
இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

2006 யில் போட்ட பதிவு... எந்த ஒரு மாற்றம் இல்லாமல் இந்த வருடமும் (மாற்ற இதுவரை தேவை ஏற்படவில்லை - என்ளவில்)
எப்படி கிடைத்தது!!!
போராடி தான் பெற்றோமோ இல்லைபிச்சையிட்டு தான் சென்றார்களோ
நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ
காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ
நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ
எப்படியோ வாங்கினோம்
இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்
எந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு
மிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு
எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு
தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு
உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு
எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு
தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு
தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்
நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.
தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு
தொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு
ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா
தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே
இனம் மாறலாம் குணம் உண்டு தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்
தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)
உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா
தமிழா தமிழா நாளை நம்நாளே
நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது
ஜெய்ஹிந்த்!!!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, August 15, 2010
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Sunday, July 18, 2010
இந்திய ரூபாய் குறியீடு & இந்திய உலாவி
கடந்த வாரம் இந்திய அரசால் நமது ரூபாய் க்கு என்று புதிய குறியீட்டை ( ` ) அறிவித்து இருந்தார்கள். இன்னும் சில மாதங்களில் அந்த குறியீடு நடைமுறைப் படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த குறியீட்டை வடிவமைத்தது ஒரு தமிழ் இளைஞர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அந்த குறியீடு இந்தி எழுத்து போல் உள்ளது, கம்யூனிச சின்னம் போல் உள்ளது, ஆங்கில ஆர் எழுத்து போல் உள்ளது என பல குற்றசாட்டுகள் கிளம்பினாலும் எப்படியும் அந்த குறியீட்டை நாம் உபயோகப்படுத்தி தான் ஆகனும்.
தற்போது அந்த குறியீட்டை எப்படி பயன்படுத்துவது? தற்பொழது அதை நம் கீ-போர்ட் மூலம் பயன்படுத்த முடியாது. அதற்கு இன்னும் சில காலம் பிடிக்கும். அந்த குறையை போக்கும் வகையில் மங்களூரை சேர்ந்த Foradian Technologies என்ற நிறுவனம் Font மூலமாக அதை பயன்படுத்த ஏற்பாடு செய்து உள்ளார்கள். அதற்கு செய்ய வேண்டியது எல்லாம் - இந்த தளத்தில் சென்று Font யை தரையிறக்கம் செய்துக் கொள்ளுங்கள். பின் Control Panel சென்று Fonts யில் அதை Install செய்யவும்.
இந்த குறியீட்டை உபயோகப்படுத்த Word ல் சென்று Rupee Font யை தேர்ந்து எடுத்து TAB மேல் இருக்கும் கீ யை ( ` or ~ Key) அழுத்தினால் இந்த ( ` ) குறீயிடு நமக்கு கிடைக்கும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, July 18, 2010
5
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Wednesday, February 18, 2009
ஈழம் - அடுத்து என்ன?
உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு இதை உரக்க சொல்வோம் உலகுக்கு
இனம் ஒன்றாக மொழி வென்றாக ஒரு வேலை எடுப்போம் விடிவுக்கு
நம் வெற்றி பாதையில் நரிகள் வந்தால் விருந்து வைப்போம் விண்ணுக்கு
பிறந்த பிள்ளை நடந்து பழக கையில் வேலை குடுப்போம்
பிறந்த குழந்தை இறந்து பிறந்தால் வாளால் கீறி புதைப்போம்
யுத்தம் சத்தம் கேட்டால் போதும் முத்த சத்தம் முடிப்போம்
ரத்த குளத்தை நிரப்பி நிரப்பி வெற்றி தாமரை பறிப்போம்
பாட்டு எல்லாம் நல்லா எழுதுறாங்க நம்ம ஆளுங்க. ஆனா பாருங்க யுத்த சத்தம் கேட்டவுடன் ஈழத் தமிழர்களுக்காக பொங்கிட்டு இருந்த நம் மக்கள் முத்த சத்தம் வந்தவுடன் யுத்த சத்தத்தை சிறிதே மறந்து கொண்டாட்ட மூடுக்கு வந்துட்டாங்க போல. இது நமக்கு என்ன புதுசா என்ன. மும்பை தாக்குதலை தொடர்ந்து இந்தியாவே ஒரு சோக நிலையில் ஆங்கில புத்தாண்டை எதிர்கொண்டால் சென்னையில் ஆட்டம் என்ன பாட்டம் என்னனு அசத்தின ஆளுங்க ஆச்சே நாம, இப்ப மட்டும் சும்மா விடுவோமா என்ன. வலைப்பதிவில் ஆரம்பிச்சு வார இதழ்கள் வரை ஏதுவும் மிஞ்சம் வைக்காமல் தடபுடலாக காதலர் தினத்தை கொண்டாடியாச்சு. அதிலும் ஒரு பத்திரிக்கையில் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் காதலர் தினம் முடிந்ததுனு செய்தி வேற. ஏன்ய்யா காதலர் தினம் என்ன சுகந்திர தினமா இல்லை குடியரசு தினமா... இன்னும் போனா வரலாறு காணாத பாதுகாப்பு வேற போடுவீங்க போல. இந்தியா இலங்கையில் சென்று கிரிக்கெட் ஆடியதை மன்னிக்க முடியாத குற்றமாக தெரிந்த நமக்கு இதை மட்டும் கொண்டாட முடிகிறது. என்னத்த சொல்ல.
அது போகட்டும் ஈழம் என்னாச்சு, ஜனாதிபதியின் வார்த்தை ஆறுதல் அளிக்கிறது, அய்யோடா தேர்தல் நேரத்தில் இப்படியாகி போச்சே எப்படி சமாளிப்பதுனு டில்லி பயணம் என்று அரசியல்வாதிகள் ஒரு பக்கம் பிச்சுக்கிட்டு போக நம் மக்களும் காதலர் தின வாழ்த்துக்கள், பிங்க் ஜட்டி னு தடம் புரண்டு திசை திரும்பிட்டுடாங்க. அடுத்து சிதம்பரம் கோவில், பட்ஜெட்
னு நூல் பிடிச்சு இனி நாடாளுமன்ற தேர்தலில் முழு கவனத்தையும் திருப்பிடுவாங்க. அங்க அவங்க நிலைமை எப்பொழுதும் போல திரிசங்கு நிலைமை தான்.
இதே நிலைமை தான் உலக அளவிலும். இந்தியா தேர்தலுக்கு என்பதை விட திருவிழாவிற்கு தயாராகி விட்டது, திருவிழா முடியும் வரை எதுவும் அவர்கள் காதில் விழாது. அத்வானி ஈழ தமிழர் ஆதரவு எந்த வகையிலும் தற்ச்சமயம் பயன் அளிக்க போவது இல்லை. உலக நாடுகளுக்கு தற்போதைய கவலை எல்லாம் காசா, ஆப்கான், பாகிஸ்தான், ஈராக், சோமாலியா, சூடான், ஜிம்பாவே, காங்கோ போன்ற நாடுகளின் மீது தான் உள்ளது.
ஏன் இலங்கை மேல் உலக நாடுகளோ, ஐ.நா.வோ இது வரை மிகவும் கண்டிப்புடன் நடந்து கொள்ளவில்லை என்பது தான் எனக்கு புரியாத புதிராக இருக்கு. அங்கு நடக்கும் இன படுகொலைகளின் எண்ணிக்கை பெரிய அளவில் இல்லை என்று அவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ? ஒரு வேளை இலங்கை ஆப்பரிக்க கண்டத்தில் இருந்து இருந்தாலோ எண்ணெய் போன்ற இயற்கை வளங்கள் கொண்டு இருந்தால் ஏதும் நடவடிக்கை எடுத்து இருப்பார்களோ என்னவோ?
ஐ.நா. வும் ஏதோ சொல்லனும் என்ற காரணத்திற்காக சிவிலியன் யாரும் பாதிக்கப்பட கூடாது என இரு தரப்பிறக்கும் ஒரு வேண்டுகோளை வைத்து அமைதியாகி விட்டது. ஐ.நா.வின் தற்போதைய கவலை எல்லாம் சூடானின் டார்பூர் மீது தான் உள்ளது. அந்த நாட்டின் ஜனாதிபதிக்கு ஐ.சி.சி. அரெஸ்ட் வாரண்ட் குடுக்குமா குடுக்காதா? அப்படி கொடுத்தால் சூடானில் நடந்து வரும் அமைதி பேச்சுவார்த்தைகள் என்ன ஆகுமோ அதை எப்படி சமாளிப்பது என்று தான் உள்ளது.
WFP காட்டு கத்து கத்திக் கொண்டு இருக்கிறது, போரினால் பாதிக்கப்பட்டு மக்கள் உணவு இல்லாமல் தவிக்கிறார்கள். அவர்களுக்கு உணவு கொண்டு செல்ல இரண்டு வாரமாக முயற்சி செய்தும் முடியவில்லை என்று. கேட்கதான் நாதியில்லை.இந்நிலையில் கப்பல் மூலமாக உணவு பொருட்கள் செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்படும் என்று இலங்கை அரசு தெரிவித்து உள்ளது. காயம்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாத நிலை தொடர்வதாக ஐ.சி.ஆர்.சி. கவலை தெரிவித்து உள்ளது. யுனிசெப் விடுதலை புலிகள் சிறுவர்களை படையில் சேர்த்து வருவதாக கவலை தெரிவித்து உள்ளது. இப்படி எல்லாரும் மாற்றி மாற்றி கவலை மட்டும் தான் தெரிவிக்குறாங்க. அதை களைய எந்த முயற்சியும் எடுக்கவில்லை அல்லது முடியவில்லை என்பது தான் சோகம்.
விடுதலை புலிகள் மற்ற சமயங்களை போல் இந்த தடவை உக்கிரமான பதில் தாக்குதல் கொடுக்காமல் தற்காப்புக்கில் ஈடுப்பட்டது, உலக நாடுகள் மூலம் இலங்கை அரசுக்கு மிக கடுமையான கண்டனம் வரும் அதை வைத்து உலக நாடுகளின் நல்லுறவும் மீண்டும் கிட்டும் என்ற எண்ணத்தில் தான் போர் மரபுகளை மீறாமல் சண்டையிட்டு வந்ததாக நான் கருதுகிறேன். துரதிஷ்டவசமாக அவர்கள் எண்ணம் ஈடேறாத காரணத்தால் அவர்கள் மீண்டும் கொரில்லா யுத்தத்தில் இறங்கி விட்டார்கள். ஆளும் கூட்டணிக்கு இடைத்தேர்தலில் கொடுத்த வெற்றி இலங்கை ராணுவத்தை இன்னும் படுபாதக செயல்களை செய்ய தூண்ட வைக்கும் என்ற நிலையில் விடுதலை புலிகளின் நிலையை குறை சொல்ல முடியாத நிலைமைக்கு கொண்டு செல்கிறது. ஆனால் புலிகளின் தற்கொலை தாக்குதல்கள் இலங்கை அரசால் மிக பெரிய அளவில் உலக மீடியாவில் பதிவு செய்கிறது. ஆனால் இலங்கை ராணுவத்தினர் செய்யும் இனப்படுகொலைகள் அந்த அளவில் உலக மீடியாவில் பதிவு செய்யபட வில்லை.
வேற என்ன தான் வழி! ஐ.நா.வும், உலக நாடுகளும் தான். அவர்களை விட்டால் வேற வழி இல்லை. அவர்களோ இந்தியாவோ மனது வைத்தால் ஒழிய அங்கு ஒரு நிரந்திர தீர்வு ஏற்படுவது வெறும் கனவாகவே இருக்கும். அது வரை விடுதலை புலிகள் தக்க ஆயுத பலத்தோடும், மக்கள் ஆதரவோடும் இருக்க வேண்டியும் மிக முக்கியம். அதை விடுத்து ஆயுத போராட்டத்தின் மூலம் தீர்வு கிடைக்கும் என்று அதே ஜல்லியை அடித்தால் இதே நிலைமை தான் என்றும் தொடரும். விடுதலை புலிகள் போய் வேறு ஒரு அமைப்பு, ராஜபாக்சே போய் வேறு ஒரு ஜனாதிபதி. இது வரை நடந்த கொடூரம் போதும் உலக நாடுகளின் காதிலும், ஐ.நா.வின் காதிலும் ஊதி கொண்டே இருப்பது தான் இப்பொழுது நம் முன் இருக்கும் ஒரே வழி. அதற்கு ஈழ தமிழர்களும், விடுதலை புலிகளும் மற்ற தமிழர்களும் தொடர்ந்து முயல வேண்டும் வெற்றி கிடைக்கும் வரை முயற்சிக்க வேண்டும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Wednesday, February 18, 2009
38
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Friday, January 23, 2009
வீரவணக்கம் !
ஒரு நாட்டின் சுகந்திரம் என்பது
போராடி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம்
செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர,
கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல
பேரம் பேசிப் பெறுவதும் அல்ல
- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்

இந்த தேசம் இருக்கும் வரை உனை
நினைத்து சில சுவாசங்கள் இருக்கும்
ஜெய்ஹிந்த்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, January 23, 2009
27
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Sunday, December 28, 2008
மும்பை தாக்குதலை தொடர்ந்து...
அவந்திகாவின் தொடர் அழைப்பை ஏற்று இந்த பதிவு. ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகளில் இதை பற்றி பேசிய காரணத்தினால் இந்த விசயத்தை பற்றி மேற்க்கொண்டு ஏதும் எழுத வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருந்த போதிலும் ஒரு இளைய உள்ளத்திற்கு தேசத்தின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். Better Late than Never என்ற அளவுகோளின் படி.
அவந்திகா கொடுத்த தலைப்பை புலம்பலாக மாற்றிய பெருமை முத்துலெட்சுமியை சாரும். அதை தொடர்ந்து எல்லாமே புலம்பல் பதிவாக அமைந்து விட்டது(நான் பார்த்த வரை)ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் புலம்பலாக மாறி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அவந்திகா தன்னுடைய பதிவில் regarding the incompetency and selfishness of our politicians என்ற வாதத்தை பதிவு செய்து உள்ளார். இதில் சுயநலம் என்ற பதத்திற்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து கிடையாது. ஒட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளிடம் சுயநலம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திறமையின்மை என்ற வாதத்தோடு தான் ஒத்து போகவில்லை. சிவராஜ் பாட்டில், ப்ரதீபா பாட்டில் போன்ற சில அல்லகைகளை தவிர்த்து பார்த்தால் மிக சிறந்த அதிகாரிகள் துணையுடன் கூடிய அறிவுசார்ந்த அரசியல் தலைவர்கள் அநேனகம் நம் நாட்டில். ஆனால் அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டியதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொண்டு இருப்பது தான் நம்முடைய துர்பாக்கியம்.
மும்பை தாக்குதலை தொடர்ந்து நம் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக வெளியுறத்துறை, இந்த பிரச்சனையை மிக அழகாகவும் அழுத்தமாகவும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விதம் மிக நேர்த்தி. பாகிஸ்தானை கை காட்டியதோடு நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மற்ற நாடுகளை குரல் கொடுக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் சரியான வாதங்களை எடுத்து வைத்ததோடு இல்லாமல் பகிரங்கமாகவே பாக் மீது குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ஒரு அமைப்பை எந்த ஒரு கேள்விகளும் இன்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை செய்ய வைத்தது. இதை எல்லாம் கண்டு உண்மையாகவே பாகிஸ்தான் பயந்து தான் போனது, என்ன செய்வது என்று முழிக்க வேண்டிய கட்டாயம் பாக். அரசிற்கு. எங்களை ஒரேடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள் இது நியாயம் இல்லை. இந்த பிரச்சனையை ஐ.நா. தலையீட்டு விசாரிக்க வேண்டும் என்ற பாக். கதறலை ஐ.நா. கண்டுக் கொள்ளவில்லை. எத்தனை முறை கேள்வி எழுப்பியும் இதில் தலையீட எண்ணம் இல்லை என்ற ஒற்ற பதில் தான் கிடைத்தது.
உலக அளவில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்ட அதே நேரத்தில் எல்லையில் தன் படைகளை குவித்தும் பாக். வான் வெளியில் தாக்குதல் விமானங்களை பறக்க விட்டும் அந்த நாட்டிற்கு மிக கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் உள்ளது. போர் தொடுக்காமல் ஏன் இந்த பம்மாத்து வேலை என்ற கேள்வி எழுலாம். இந்த பம்மாத்து வேலை தான் மிக சிறந்த ராஜத்தந்திரம் என்பது என் எண்ணம். இதற்கு தகுந்த பலன் தான் சர்தாரியின் தற்சமய பேச்சுகள் எல்லாம். இறங்கி வர வேண்டிய கால கட்டாயம் பாக்.னுக்கு பத்ரியின் இந்த பதிவை படியுங்கள், சில விபரங்கள் புரியலாம். இது போன்ற செயல்களை அமெரிக்கா ரசிக்கவில்லை என்பது வேறு விசயம். இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் பாக். ஆப்கானில் இருந்து படைகளை வாபஸ் பெற்று இந்திய எல்லையில் குவிக்கும் காரணத்தால் நேட்டோ படைகளுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.
இந்தியா இத்தோடு நிறுத்தி விட கூடாது. இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு பாக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்களை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தாக்குதல் ஏதும் இந்தியா மீது நடந்தால் குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து நாம் போர் கொடுக்கலாம். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு இருக்கும்.ஏற்கனவே பாக் னுக்கு உள்நாட்டில் பல உள்நாட்டு பிரச்சனைகள், பல குண்டுவெடிப்புகள் இதில் இது போன்ற உலக நாடுகளின் கண்டிப்பும் தொடர்ந்தால் இரு நாடுகளுக்குமே விமோசனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் இஸ்ரேலை சிறிது தூரத்திலே நிறுத்தி வைத்தது. இஸ்ரேல் இந்த விவகாரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தும் நாம் மறுத்து விட்டோம். இதுவும் சரியான நடவடிக்கை தான். இஸ்ரேலை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்தி வைப்பது தான் நல்லது. அவர்கள் என்றுமே முழுக்க நம்பக் கூடிய நண்பர்கள் கிடையாது.
உலக அளவில் சரியான நடவடிக்கைகளை எடுத்த இந்தியா உள்துறை அளவில் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்னும் தீவிரமான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பயங்கரவாதம் செயல்களுக்கு கண்டிப்பாக உள்நாட்டு மக்களின் உதவி இல்லாமல் ஏதுவுமே செய்ய முடியாது. அந்த உதவிகளை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை தேவையோ அத்தனையையும் எந்த ஒரு மதக் குறிக்கீடும் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இது போன்று அசம்பாவிதங்கள் நடக்க நேர்ந்தால் அதை சந்திக்கும் அளவுக்கு நம் காவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உயர்ந்த தரத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு தருவித்து தர வேண்டும். தேச நலனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால் மற்ற விவகாரங்களுக்கு செவி அளிக்க தேவை இருக்காது. அதை விட்டு ஒட்டு போயிடும், கூட்டணி போயிடும், ஆட்சி போயிடும் னு பாத்த பழைய குருடி கதவை திருடி கதை தான்.
நம் மக்களும் நிறைய மாற வேண்டியது உள்ளது. அதை பட்டியலிட நேரமில்லை. சுருங்க கூறனும் என்றால் தனி மனித ஒழுக்கம், எவன் செத்தா என்ன என் பொழுப்பு நடந்தால் சரி என்ற எண்ணத்தை தவிர்த்து தேசம் ன்னா என்ன? ஒரு குடிமகனின் கடமை என்ன? தேச நலன் என்றால் என்ன? போன்றவற்றை நினைவில் கொண்டு நினைவில் இல்லா விட்டால் மீண்டும் பழைய சமூக அறிவியல் புத்தகத்தை புரட்டி பாத்தோ கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தோ தெரிந்துக் கொள்ளவது நலம். அவன் செய்யல, இவன் செய்யல எனக்கு மட்டும் தான் இது எல்லாம் பொருந்துமா போன்ற விதாண்டவாத கேள்விகளை தவிர்த்து நாம் நம் கடமையை ஒழுங்கா செய்வோம், அடுத்தவன் தானா செய்வான் அல்லது அவனையும் செய்ய வைக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கலாம், ஆனா முதலில் நாம் தொடங்க வேண்டும்.
இந்த தொடரை கைப்புள்ள தொடர்ந்தால் மகிழ்வேன்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, December 28, 2008
16
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Friday, November 28, 2008
மும்பை பயங்கரம் - புகைப்படங்கள்


















Thanks : Arasi Arul(for Mail) & M.Rishan Shareef (for Photos)
Source : M.RISHAN SHAREEF COLLECTION OF ARTICLES.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, November 28, 2008
9
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் இந்தியா, கண்டனம், குண்டு வெடிப்பு, சோகம், புகைப்படம்
Thursday, November 27, 2008
இந்திய பிரதமரே!
இந்திய பிரதமரே!
வணக்கம். இந்திய மக்கள் ஆகிய நாங்கள் நலமாக இல்லை. எங்களின் தலைவராகிய நீங்களாவது நலமாக உள்ளீர்களா? நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு எப்படி நலமாக இருக்க முடியும் என்று கேட்குறீர்களா.. அதுவும் சரி தான். இன்னும் சில நாட்களுக்கு உங்களை நாட்டில் உள்ள பிரதான எதிர்கட்சி முதல் கடைசி குடிமகன் வரை கேள்விகளாலும், விமர்சனங்களாலும் துளைத்து எடுக்க போகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்ற கவலையே உங்களை வாட்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நானும் என் பங்கிற்கு இரண்டு பைசாகளை கொடுத்து விட்டு போகிறேன்.
இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு தடவையும் குண்டிவெடிப்பிற்கு பிறகு உரை தயாரிப்பதற்கு பதில் அனைத்திற்கும் பொருந்துகின்ற மாதிரி ஓரு உரையை உங்கள் துறையினரிடம் சொல்லி தயாரித்து வைத்து கொள்ளுங்கள். தேதி, இடம், வெடித்த குண்டுகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, நிவாரண தொகை ஆகிய இடங்களை மட்டும் காலியாக விட்டு அந்தந்த குண்டுவெடிப்புக்கு ஏற்ற மாதிரி நிரப்பி கொள்ளலாம். ஏன்னென்றால் குண்டுவெடிப்புகளும் நிகழாமல் இருக்க போவது இல்லை. உங்கள் அறிக்கையும் வராமல் இருக்க போவது இல்லை.
நீங்களும் எப்பொழுது போல எந்த விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா சகித்து கொள்ளாது, இதற்கு காரணமானவர்களை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். புதிதாக எந்த ஒரு சட்டம் தேவையில்லை. உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம். பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். blah.. blah.... இதை தவிர வேறு என்ன சொல்லி இருக்கீங்க அல்லது செய்து இருக்கீங்க. இந்த தடவையும் அதே பல்லவி தானே?
எதிர்கட்சிகள் உங்கள் அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது அதற்கு பொறுப்பு ஏற்று உங்களை பதவி விலக சொல்லும். நீங்கள் பதவி விலகினாலும் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற நிதர்சனம் அறிந்தே அவர்களும் குரல் எழுப்புகிறார்கள் என்று அறிந்து தான் உள்ளோம். இருந்தாலும் கேள்வி எழுப்ப வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் உங்கள் உள்துறை அமைச்சர் பதில் விதாண்டவாதம் பேசுவார். இந்த வருடத்தில் மட்டும் எத்தனை குண்டுகள் நம் நாட்டில் வெடித்து உள்ளது, எத்தனை இந்திய மக்கள் இறந்து உள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணி பார்த்து அவர் தன் வாயை திறப்பது சால சிறந்தாக இருக்கும்.
உண்மை தான், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவில் மட்டும் இல்லை உலகெங்கும் தான் நடக்கிறது. அமெரிக்காவில் இல்லையா, இங்கிலாந்தில் இல்லையா என கேள்வி எழுப்பவது நியாயம் தான். ஆனால் அங்கு ஒரு முறை நடந்ததுக்கே செய்தவனின் டவுசரை கழுற்றினார்கள். ஆனால் நாமோ ஒவ்வொரு முறையும் நம் டவுசரை அல்லவா கழுற்றி விட்டு காட்டி கொண்டு இருக்கிறோம். அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறோம்.
ஆனாலும் இதில் ஒரு பெருமை பட விசயம் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனுக்கு அடுத்தபடி நம் நாட்டில் தான் அதிக குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது என்ற பெருமைதான் அது. முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது என்பது சதாரணமான விசயமா என்ன? அதற்கு ஒரு பூச்செண்டு உங்கள் அரசாங்கத்துக்கு. அது மலர் வளையமாக தெரிந்தால் அதற்கு நீங்களும் உங்கள் அரசும் தான் முழு பொறுப்பு.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம் பாராளுமன்றம் வரை வந்தும் நமக்கு புத்தி வரவில்லை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் பயங்கரவாதம் எப்படி எல்லையை தாண்டி உள்ளே வருகிறது. சந்திரன் வரைக்கும் சென்ற நம்மால், இதை கண்டு பிடிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்றால் எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.
எல்லை தாண்டி வந்தவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாக திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை நான் மட்டும் அல்ல நீங்களும் ஒற்றுக் கொள்வீர்கள். அப்ப இங்கு இருக்கும் சிலரும் அதற்கு துணை போகின்றாகள். குறைந்தபட்சம் அவர்களையாவது கண்டுபிடித்து வேரறுத்தால் என்ன? அது எப்படி முடியும் நாம் தான் ஜனநாயக நாடு ஆச்சே. கூடவே சகிப்புதன்மையின் ஒப்பற்ற பிதாமகன்களாக வேறு திகழ்ந்து கொண்டு இருக்கிறோம். கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் மனிதாபிமானம் என்ற வார்த்தையை பிடித்து தொங்குவோம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது சரி நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொல்ல உதவியே மக்களுக்கே கருணை காட்டிய மக்கள் ஆச்சே நாம். வாழ்க.
பாக்தாத், காபூல், மும்பை என்ற வரிசையில் அடுத்து எந்த இந்திய மாநகரம் சேர போகிறது என்ற வாக்கெடுப்பு நடப்பதாக கேள்வி. வாக்கெடுப்பு முடிவுக்காக காத்து இருக்க போகின்றீர்களா இல்லை வேறு ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதா? சொரணையற்ற தேசமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் என் தேசம் இருக்க போகிறது. நீங்களும் இந்த நாடும் ஏன்றைக்கு சுயமாகவும் தைரியமாகவும் முடிவுகளை எடுக்க போகின்றது.
சரி வெட்டி கதை எதற்கு, இது வரை நடந்தற்கு என்ன பண்ண போகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நாளை இந்திய மண்ணில் வாழ எங்களுக்கு பாதுகாப்பாக வாழ வழி இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது.
ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்புக்கு பின், இந்திய மக்கள் தங்கள் ஒற்றுமையை பறை சாற்ற வேண்டிய நேரம் இது, பயம் கொள்ள தேவையில்லை அமைதி காக்கவும் என்று சொல்லி சொல்லி உங்களுக்கும் அலுத்து விட்டது எங்களுக்கும் அலுத்து விட்டது. வேற எதாச்சும் செய்யுங்க எஜமான்!
இப்படிக்கு, 
இன்னுமாடா இந்த நாடு நம்மள நம்புது என கேட்கும் குரலை அலட்சியப்படுத்தி கொண்டே இந்திய அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டின் எந்த பகுதியிலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு இந்திய குடிமகன்.
ஜெய்ஹிந்த்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, November 27, 2008
22
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, October 30, 2006
உள்கட்டமைப்பு!
நான் பார்த்த வளர்ந்த நாடுகளை விட்டு விடலாம். தற்சமயம் நான் இருக்கும் சூடானில் தலைநகரம் மட்டும் தான் வாழ்வதற்கு தகுந்த நகரம் என்று சொல்லாம். மற்ற நகரங்கள் எல்லாம் சராசரிக்கும் கீழ் தான். அடிப்படை வசதிகள் என்றாலே என்னவென்று தெரியாத அளவுக்கு மோசம். (பல மாநிலத்தின் தலைநகரங்கள்) அப்படிபட்ட சூடானிலே அடிக்கடி தடைப்படும் மின்சார சேவையை முழுவதும் தானியங்கி படுத்தி உள்ளார்கள். இதை ஏன் நம் நாட்டில் இன்னும் செயல் படுத்தவில்லை(எனக்கு தெரிந்த வரை) என்ற ஆச்சரியம் எனக்கு அடிக்கடி ஏற்படுவது உண்டு. அந்த சேவையை இங்கு எப்படி செயல்படுத்துகின்றார்கள் என்பதை சுருக்கமாக காணலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் பக்கத்தில் படத்தில் உள்ளது போன்ற ஒரு
கருவியை பொருத்தி உள்ளார்கள். அதன் அவுட் புட் வீட்டிற்குள் வரும் மெயினில் இணைத்து உள்ளார்கள். அந்த கருவிக்கு ஒரு எண் நிர்ணயித்து ஒரு அட்டை வழங்கி உள்ளார்கள். நமக்கு எப்பொழுது மின்சாரம் தேவை உள்ளதோ அப்பொழுது மின்சார அலுவலகத்துக்கு சென்று மின் இணைப்பு எண் சொல்லி நமக்கு தேவையான அளவு மின்சாரத்தை யூனிட்
அளவுகளில் நாம் வாங்கி கொள்ளலாம். அதற்கு ஒரு சின்ன ரசீது கொடுகின்றார்கள். அதில் இருக்கும் குறியீட்டு எண்ணை வீட்டில் இருக்கும் கருவியில் அதில் இருக்கும் பட்டன்களை கொண்டு உள் செலுத்தினால், அது எந்த அளவுக்கு நாம் மின்சார யூனிட் வாங்கி இருந்தோமோ அதை திரையில் காட்டும். பின் அதில் இருந்து மின்சாரம் நம் பயன்பாட்டை பொருத்து குறைந்து கொண்டே வரும். மின்சார யூனிட்கள் முற்றிலும் முடிந்த பிறகு நாம் மறுபடியும் பணம் செலுத்தி வாங்கி கொள்ள வேண்டியது தான்.
இதற்கு மாதம் ஒரு குறிப்பிட்ட ஒரு தொகை வாடகையாக
பெற்றுக் கொள்கின்றார்கள். பழைய பாக்கி ஏதும் இருந்தால் அதையும் குறிப்பிட்ட மாத இடைவேளையில் சரியான அளவில் பங்கீட்டு செய்து வசூலித்து விடுகின்றார்கள். இங்கு குறிப்பிட்ட சொல்ல வேண்டிய இன்னொரு விசயம், முதல் 100 யூனிட்கள் வரை ஒரு விகிதம். மேற்கொண்டு போகும் யூனிட்களுக்கு இன்னொரு விதிகம் என்றும் வகைப்படுத்தி உள்ளார்கள்.இதை நம் தமிழகத்தில் அமல் படுத்தினால் ஏற்படும் சில சாதகங்கள் :
* மாதம் மாதம் மின்சார பணம் கட்ட வேண்டிய தேதிக்குள் கட்ட வேண்டும் என்ற நிலை இருக்காது
* உங்களுக்கு தேவைப்பட்ட அளவு மின்சாரத்தை முன்கூட்டி பணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்
* மின்சார பாக்கி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
* மீட்டர் கணக்கு எடுக்க வேண்டும் என்ற நிலை கிடையாது
* இலவச மின்சாரம் குடுப்பது என்றாலும் மாதத்திற்கு இவ்வளவு என குறிப்பிட்ட யூனிட்களை கொடுக்கலாம்.
* திருட்டு மின்சாரத்தை பெரும் அளவு குறைக்கலாம்.
இதை எப்படி அமல்படுத்துவது, ஏற்கனவே இருக்கும் மின்சார மீட்டர் அனைத்தையும் மாற்றுவது என்பது உடனடியாக நடக்கும் காரியாம என்றால கண்டிப்பாக இல்லை தான். இதை சிறிது சிறிதாக அறிமுகப்படுத்தலாம். புதிதாக வீடு கட்ட பெறும் ஒரு ஏரியா, ஒரு பெரிய அலுவலக வளாகம் அல்லது ஒரு கிராமத்தையோ நகரத்தையோ தேர்ந்து எடுத்து அங்கு பரிசோதனை முயற்சி செய்து பார்க்கலாம். இந்த கருவிகளை யாரு செய்வது என்பது எல்லாம் நம் நாட்டில் தற்சமயம் ஒரு பொருட்டே கிடையாது. இது மாதிரி வேண்டும் என்றால் நாம் கேட்ட விலையை விட குறைந்த விலைக்கு செய்து கொடுக்கும் திறமையும், ஆட் பலமும் நம் நாட்டில் உள்ளது.
இந்த திட்டத்தில் எந்த குறையும் கிடையாதா, இதை தவறாக பயன்படுத்த முடியாது என்று கேட்டால் கண்டிப்பாக இருக்கும், அதை சரி செய்ய வேண்டும். நானே அந்த கருவிக்கு முன்னால் வரும் வயரை கட் பண்ணி செக் பண்ணனும் என்று இருந்தேன். ஆனால் நேரமின்மை காரணமாக செய்ய முடியவில்லை. அதுவும் இல்லாமல் அவ்வளவு சுலபமாக இருக்காது என்பதும் என் எண்ணம். நானே இப்படினா, காளை மாட்டிலும் பால் கறக்கும் ஆட்கள் நம்ம ஆட்கள். ஒரு பொருளை உருவாக்க சிந்திக்கும் மக்களை விட அதை எப்படி மிஸ்யூஸ் பண்ணலாம் என்று கிரிமினல் மூளையுடன் யோசிக்கும் மக்கள் தான் அதிகம். அவர்களையும் கணக்கில் கொண்டு இந்த கருவிகளை உருவாக்க வேண்டும். உதாரணமாக இதை கிட்டதட்ட ஒரு ப்ரி பேய்டு செல் போன் போன்று கொண்டு வரலாம்.
ஒவ்வொரு கருவிகளுக்கும் ஒரு யூனிக் நம்பர் அசைன் பண்ணலாம், ஏரியா, ஊர் வைத்து அவைகளை பிரிக்கலாம் அல்லது மின்சார நிலையத்தை வைத்தும் பிரிக்கலாம். இதை செய்தாலே பாதி வேலை முடிந்தது. காசு இருக்கும் வரை உபயோகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்து விட்டால் நோ சர்வீஸ். மின்சார ப்ரி பேய்டு அட்டைகளை பல இடங்களில் கிடைக்கும் படி செய்யலாம். நாம் செல்போனை கடையில் கொடுத்து ரீ சார்ஜ் செய்வது போல் இதை செய்வது சற்று கடினம். கார்டு வாங்கி வந்து நம்மாளக செய்யவது சற்று சுலபம். அந்த ரீ சார்ஜ் கார்டில் எவ்வளவு சார்ஜ் பிடித்தம் செய்ய வேண்டுமோ அதை பிடித்தம் செய்து பாக்கி காசுக்கு யூனிட் கொடுக்கலாம்.
செல்போனில் எப்படி மாதம் மாதம் ஒரு சில குறிப்பிட்ட சேவைகளுக்கு கட்டணம் தானாக குறைந்து விடுமோ அது போல மாத வாடகையை தானாக குறையும் படி செய்து விடலாம். இந்த வகை அட்டைகளை எல்லா இடங்களிலும் கிடைக்கும் படி செய்யலாம். முன்பு மீட்டர் கணக்கு எடுக்க வந்த நபர்களை இந்த அட்டைகளை குடுத்து பணம் வாங்கி வர வைக்கலாம்.
இவ்வளவு தாங்க எனக்கு தோன்றியது. தீடிரென்று தோணியது, அப்படியே எழுதியாச்சு. இன்னும் சற்று வர்கார்ந்து யோசித்தால் இன்னும் கொஞ்சம் சுலபமான வழி புலப்படலாம். ஆனால் இது போன்ற சேவைகள் நம் நாட்டில் எவ்வளவுக்கு எவ்வளவு விரைவாக தொடங்க பெறுகின்றதோ அவ்வளவுக்கு அவ்வளவு நல்லதுங்க.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, October 30, 2006
54
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் இந்தியா, உள்கட்டமைப்பு, நட்சத்திரம்

