Tuesday, August 29, 2006

போட்டிக்கு தயாரா?

மக்களே!
எந்த போட்டிய பத்தி சொல்கிறேன் என்பது உங்களில் பல பெயருக்கு தெரிந்து இருக்கும். பலரும் போட்டியில் கலந்து கொண்டு உங்க படைப்புகளை அனுப்பி கொண்டு தான் உள்ளீர்கள். இருந்தாலும் இன்னும் சென்று அடையாத மற்ற நண்பர்களுக்கும் சொல்லும் பொருட்டு ஏற்கனவே சங்கத்தில் செய்த அறிவிப்பை இங்கு மறுபடியும் வெளியிடுகின்றேன்.

எங்களுக்கு(முக்கியமாக - கைப்புள்ள) தான் கவுஜ் ஆகாது என்று சொல்வதை விட வராது. வராத விசயத்திற்கு நாங்க என்னிக்குமே ஆசைப்பட மாட்டோம். அதுவும் இல்லாம அப்படி எல்லாம் எங்களால் பீல் பண்ண முடியாது. நம் தமிழ்மணத்தில் தான் பீல் பண்ணும் மக்கள் ஏகப்பட்ட நபர்கள் உள்ளீர்களே. அப்படிப்பட்ட நண்பர்கள் அனைவருக்கும் இது ஒரு அருமையான வாய்ப்பு. உங்கள் பதிவுகளில் இருந்து பொதுவான ஒரு தளத்திற்கு வருவதற்க்கான வாய்ப்பு. வாய்ப்பை பயன்படுத்தி மிக அருமையான உங்கள் படைப்புகளை அளித்து எங்களுக்கு மேலும் ஊக்கம் அளிப்பீர்கள் என்று மனப்பூர்வமாக நம்புகின்றோம். அந்த ஊக்கத்தை கொண்டு பல ஆக்கங்களை (முயற்சிகளை) செய்யும் எண்ணம் உள்ளது. கவிதை எழுதும் திறன் உள்ள அனைவரும் கலந்து கொள்ளுங்கள். எத்தனை படைப்புகள் வேண்டுமானாலும் அனுப்புங்கள். வெற்றி அடைய வாழ்த்துக்கள்.



இனிமையான அறிவிப்பு:
தமிழ்ச் சங்கத்தின் சார்பாக நடத்தப் பெறும் கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் படைப்புகளை, கவிஞர் மு.மேத்தா அவர்கள் தேர்வு செய்து தர இசைந்துள்ளார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

* போட்டிக்கான தலைப்பு "இன்னும் இருக்கிறது ஆகாயம்"
* படைப்புகளை அனுப்ப கடைசி நாள் 31-Aug-2006(நள்ளிரவு 23:30-IST)
* படைப்புகளை அனுப்ப - மின்னஞ்சல் முகவரி -
kavithai.tsangam@gmail.com

விதிமுறைகள்:
1. கவிதைகள் மட்டுமே. ஹைக்கூ, புதுக்கவிதை, மரபுக்கவிதை, எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்
2. 20 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும்
3. ஆங்கில வார்த்தை கலவாமல் இருத்தல் நல்லது
4. ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமென்றாலும் அளிக்கலாம்.
5. படைப்புகளை எங்களுக்கு யுனிகோட் எழுத்துருவில் மின்னஞ்சல் மூலம் தனி மடலிடல் வேண்டும்.
6. தனி மடலில் உங்கள் வலைப்பதிவு முகவரி இருத்தல் அவசியம்.(ஆங்கிலத்தில் இருப்பினும் யுனிகோட்டில மாற்றிக்கொள்ள ஏதுவாக அனுப்பி வைக்கவும்)
7. உங்கள் படைப்பு, தமிழ்ச் சங்கத்தில் தனிப்பதிவாக வெளியிடப்படும்.
8. ஜாதி, மத, சமய, தனி நபர் தாக்குதல் கொண்ட பதிவுகள் போட்டியில் சேர்க்கப்பட மாட்டாது.



புகுந்து ஜமாயுங்கள் தோழர்களே!
போட்டிக்கு வந்த க"விதை"களை காண தமிழ் சங்கத்திற்கு வருகை புரியவும்.

Thursday, August 24, 2006

தேசிய பாடல்! (கண்ணன் கவனத்திற்கு)

திரு நா. கண்ணன், நம் தேசிய கீதத்தை குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தார். அந்த பதிவின் பின்னூட்டத்தில் ஒரு மேட்டரு சொல்லி அதுக்கு வெட்கப்படுகின்றேன் என்று சொல்லி இருந்தேன். அதை தற்சமயம் சரி செய்யும் பொருட்டு இந்த பதிவு. கண்ணன் சார் உங்களிடம் சொன்ன மாதிரி தேசிய பாடலை தவறு இல்லாமல் பாடு முடிகின்றது இப்ப.

"Vande Mataram! Vande Mataram!
Sujalam suphalam, malayaja shitalam,
Shasyashyamalam, Mataram!


Vande Mataram! Vande Mataram!

Shubhrajyotsna pulakitayaminim,
Phullakusumita drumadala shobhinim,
Suhasinim, sumadhura bhashinim,
Sukhadam, varadam, Mataram!


Vande Mataram! Mataram!
Vande Mataram! Mataram!

Sujalam suphalam, malayaja shitalam,
Shasyashyamalam, Mataram!
Vande Mataram!
Vande Mataram!"

இடைக்குறிப்பு:

இந்த பாடலை தற்சமயம் போட்டதற்க்கு காங்கிரஸோ, பா.ஜ.க. வோ, சமாஜ்வாதி பார்ட்டியோ, அர்ஜுன் சிங்கோ, லாலுவோ, எந்த ஒரு அமைப்போ, சக வலைப்பதிவர்களோ காரணம் கிடையாது. கிடையவே கிடையாது. நானே நான் தான் காரணம் என்பதை இங்கு சொல்லிக்கிறேன். இதை நம்புவதும் நம்பாமல் இருப்பதும் உங்கள் விருப்பம் நண்பர்களே! ஆனால் ஏன் இந்த குறிப்பு போட வேண்டியது வந்துச்சு என்பதை சொல்லுறேன் கேட்டுக்குங்க.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நம் சக வலைப்பதிவு நண்பர் ஒருவர்(தென் அமெரிக்காவில் குப்பை கொட்டிகிட்டு இருக்காரு) சாட்டில் நான் இல்லை என்று தெரிந்தும் மெயில் போட்டு சாட்டுக்கு வானு வேல மெனக்கிட்டு என்னயே கூப்பிட்டு வந்தே மாதரம் பத்தி உன் விவ்(View) என்னனு கேட்டார். எனக்கு ஒன்னும் புரியல. என்னய்யா தீடீர்னு கேட்குறனு கேட்டேன். சரி விடு, வந்தே மாதரம் என்று சொன்னா உனக்கு என்ன தோணுதோ அத சொல்லுனான். இது என்னடா வம்பா போச்சுனு. சுகந்திர போரின் போது உபயோகப்பட்ட இந்திய தாரக மந்திரம். அதுவும் இல்லாமல் நம்ம தேசிய கீதத்துக்கு இணையான மதிப்பு பெற்ற நம் தேசிய பாடல் னு சொன்னேன். நீ அங்குட்டு எல்லாம் போக வேண்டாம். சமீபமாக எதாச்சும் சொல்லுனு கேட்டான்.

போன வாரம் நம்ம சக வலைப்பதிவர் கிட்ட அந்த பாடலை தப்பு இல்லாம பாட முடியாதற்கு வெட்கப்படுறேனு சொல்லி இருந்தேன். அதை இப்ப சரி பண்ணிட்டேன். அதை குறித்து ஒரு பதிவு போடலாம் என்று இருக்கேன் என்று சொன்னேன். அட பாவி இப்ப அந்த பதிவ போடாதனு அவன் தென் அமெரிக்காவில் கத்தியது சூடானையும் தாண்டி துபாய் வரைக்கும் கேட்டது. அப்படி ஒரு கதறல். என்னப்பா என்ன ஆச்சு. ஏன் இந்த கலவரம் கேட்டேன். நீ எந்த தினசரியும் ஒரு இரண்டு நாளா படிக்கலய்யா, இல்ல தமிழ்மணம் தான் இரண்டு நாளா பார்க்கலையானு கேட்டுவிட்டு எல்லாம் மேட்டரயையும் பட் பட்னு விளக்க எனக்கு சப்த நாடியும் அடக்கி விட்டது. எப்படி எல்லாம் கிளம்புறானுங்க என்று தான். கொஞ்ச நாளைக்கு முன்னால் ஜெய்ஹிந்த ஆரம்பித்தார்கள் இப்ப வந்தே மாதரமா. சரி நடக்கட்டும். எது நடக்கனும் என்று இருக்குதோ அது நடந்தே தீரும். அத நம்மால தடுத்து நிறுத்தவா முடியும். இருந்தாலும் நாம பதிவு போடனும் என்று முடிவு பண்ணியாச்சு. அதில் இருந்து பின் வாங்க முடியுமா? அதனால பதிவு போடுறது போடுறது தான் அவன்கிட்ட சொல்லிட்டு பதிவையும் போட்டாச்சு. மற்றவை நேயர்கள் விருப்படி நடக்கட்டும். என்ன நான் சொல்லுறது ....

நமக்கு வந்தே மாதரம் பாடலை பாடுவதில் எந்த பிரச்சனையும் கிடையாது, தயக்கமும் கிடையாது. அதனால்

"ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்
ஜெய ஜெய மாதரம் ஜெய வந்தே மாதரம்."

விருப்பம் இருக்குறவன் சொல்லுங்க, விருப்பம் இல்லையா டைய(எவ்வளவு நாளைக்கு தான் துண்டுனு சொல்லுறது) உதறி தோளில் போட்டு போய் பொழப்ப பாருங்கப்பா.

Monday, August 21, 2006

வாழ்த்த வாருங்கள்!

இன்று என்ன நாள், பொன் எழுத்துகளால் சரித்திரத்தில் பொறிக்கப்பட்ட நாள். மனிதர் குல மாணிக்கம் நம் மண்ணில் பல பல வருடங்களுக்கு முன்பு அவதரித்த நாள். தமிழ் வலையுலகை எல்லாம் பெருமைப்பட வைத்த சிங்கம். மாபெரும் கர்மவீரன். யார் அந்த மாமனிதன் என்பதை கண்டுப்பிடித்தீர்களா இல்லையா? இன்னுமா கண்டுபிடிக்கவில்லை.என்ன போங்க நீங்க?

சரி மேலும் சில குறிப்புகள் கொடுகின்றேன் முயற்சி செய்து பாருங்கள்.

"தமிழ் வலையுலகிலே முதன் முதலாக தனக்கு என ரசிகர் மன்றம் கண்டு வெற்றி வேந்தன்."

"கவுஜ் அவருக்கு பிடிக்காது என்றாலும் கவுஜ் படைப்பதில் அவர் ஒரு படையப்பா." அவர் எழுதிய கவுஜ்ல ஒன்னு இங்க சாம்பிளுக்கு

" பார்த்திரு.
காத்திரு.
ஒரு நாள்
எனக்கும்
கவிதை வரும்!"

"அனைத்து ஆப்புகளை சில வாரங்களுக்கு தோளில் தாங்கிய தியாக செம்மல்"

இன்னுமா கண்டுபிடிக்கவில்லை. சரி அவரின் பட்டப்பெயர்களை சொல்கின்றேன். அப்பவாது தெரியுதா என்று பாருங்கள்.

"பின்னூட்ட புயல்"
"வெண்பா வேந்தன்"
"புரோட்டா பாவலர்"
"அறுசுவை தமிழன்"
"கடமை கண்ணாயிரம்"
"இலவச நடமாடும் இலக்கியம்"


போதும் அவர் வாங்கிய பட்டப்பெயர்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் நம்ம பாலைய்யா போல "இன்று ஒரு நாள் போதுமா? இன்று ஒரு நாள் போதுமா? அவர் வாங்கிய பட்டங்களை எல்லாம் சொல்ல இன்று ஒரு நாள் போதுமா? என்று பாட ஆரம்பிக்க வேண்டியது தான். நமக்கு வேற குரல் வளம் அம்புட்டு நல்லா இருக்காது. அதனால அத விட்டு விடுவோம்.

சரி அவருடைய படத்தை காட்டுறேன். அதை பார்த்தாவது கண்டுபிடிச்சு அவருக்கு வாழ்த்துக்களை சொல்லுங்கள்.





கண்டுபிடித்து இருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அவரே தான்!!!

இப்ப தான் உங்களுக்கு ஒரு சவால். இவரின் வயதை சரியாக கணித்துக் கூற வேண்டும். சரியாக சொல்வர்கள் பதிவிற்கு சே.. வீட்டிற்கு வந்து இலவசமாக அவர்களின் தோட்டங்களை கொத்தி தரப்படும். ஒரு சின்ன க்ளு அவர் இன்னும் 60 வயதை கடக்கவில்லை.

இவர் பிறந்த சாதனை திருநாளில் பிறந்த பெருமை அடைந்த மற்றவர்கள் http://www.nndb.com/lists/751/000106433/

Tuesday, August 15, 2006

எப்படி கிடைத்தது!!!

சுகந்திரம்!!!

போராடி தான் பெற்றோமோ இல்லை
பிச்சையிட்டு தான் சென்றார்களோ


நம் எதிர்ப்பினை கண்டு தான் பின்வாங்கினார்களோ
அவ்வளவு தான் இங்கு கிடைத்தது என்று வேட்டையை முடித்து திரும்பினார்களோ


காந்தி ஒருவரால் தான் கிடைத்ததோ
இல்லை அனைவரின் கூட்டுக் முயற்சியால் தான் கிடைத்தோ

நெஞ்சை நிமித்தி தான் வாங்கினோமோ
இல்லை சுபாஷ்யை அடகு வைத்து வாங்கினோமோ

எப்படியோ வாங்கினோம்
இப்பொழுது நாம் சுகந்திரமானவர்கள்
எந்த முடிவையும் நாமளே எடுக்கும் திறமை உள்ளவர்கள்
உலகின் மிக பெரிய ஜனநாயக நாடு
மிக சிறந்த அறிவாளிகளை பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் கொண்டு உள்ள நாடு
எந்த நாட்டவராலும் நிரகாரிக்க முடியாது இளைஞர் படை கொண்ட நாடு.
அடுத்த நாட்டின் நிலங்களின் மேல் ஆசைப்படாத நாடு
தன் நிலத்தை அடுத்தவன் அபகரித்தாலும் பொறுத்துக் கொள்ளும் தியாக செம்மல் நாடு


உலகின் அனைத்து பிரச்சனைகளிலும் பெரும்பாலும் நடுநிலைமை வகிக்கும் நாடு
எத்தனை முறை குண்டு வைத்தாலும் அசராமல் சகஜ நிலைக்கும் வரும் நாடு
சரித்திரத்தை மிக சரியாக ஆட்சி பொறுப்பில் இருந்தவர்களால் பதிவு செய்த நாடு
தன் பொருட்களை அடுத்தவன் உரிமை கொள்ள முயலும் போது அதை தடுக்க மிக தீவிரமாக போராடும் நாடு
தன் நாட்டவர்களை கொன்றாலும் அவர்களுக்கு ஆயுதம் அளிக்கும் கொடை வள்ளல்
நம்மால் சுகந்திர அடைந்தவர்களாக இருந்தாலும் அவர்களின் மிரட்டலுக்கு தலை வணங்கும் பண்பு உள்ள நாடு.
தன் நாட்டில் இருந்து கொண்டே அடுத்த நாட்டிற்க்கு ஆதரவாகவும், தாய் நாட்டை பழித்து கூறுவதையும் சகித்துக் கொள்ளும் நாடு

தொலைக்காட்சியில் சிறப்பு காட்சிகளை கண்டு சுகந்திரத்தை போற்றும் நாடு

ஏது எப்படி இருந்தாலும் இது என் நாடு.
நான் பிறப்பதற்கு இந்த மண்ணில் இடம் கொடுத்து நாடு
இங்கு பிறந்தற்க்கு என்னை பெருமைப்பட வைத்த நாடு
மிக பழமையான பண்பாடு, கலாச்சாரம், மொழி, மதம், வரலாறு தந்த புண்ணிய நாடு.
எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும், இன்னல்கள் வந்தாலும் இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மீண்டும் இந்த சொர்க்க பூரியில் பிறக்க தான் ஆசை.
என் தாய் நாடே உன்னை மட்டும் நேசிக்கும் ஜென்மங்கள் இருக்கும் வரை உனக்கு என்றுமே சிறுமை நேராது. நாங்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் என்றும் உன்னை நினைத்து இருப்போம். உன்னை அயலான் தூற்ற ஒரு போதும் விட மாட்டோம். உன் பிரச்சனைகளை கயலவதற்க்கு தயங்க மாட்டோம். விரைவில் உலகின் வல்லரசாக காண ஆசை. அது நிறைவேறும் காலம் தொலைவில் இல்லை. அது வரை வீழவும் மாட்டோம்.



எல்லாருக்கும் இனிய சுகந்திர தின வாழ்த்துக்கள்!!!


ஒலி வடிவில்

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே(2)

என் வீடு தாய் தமிழ் நாடு என்றே சொல்லுடா
என் நாமம் இந்தியன் என்றே என்றும் நில்லடா

தமிழா தமிழா நாளை நம் நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

இனம் மாறலாம் குணம் உண்டு தான்
இடம் மாறலாம் நிலம் ஒன்று தான்
மொழி மாறலாம் பொருள் ஒன்று தான்
கலி மாறலாம் கொடி ஒன்று தான்
திசை மாறலாம் நிலம் ஒன்று தான்
இசை மாறலாம் மொழி ஒன்று தான்
நம் இந்தியா அதும் ஒன்று தான்

தமிழா தமிழா கண்கள் கலங்காதே
விடியும் விடியும் உள்ளம் கலங்காதே(2)

உனக்குள்ளே இந்திய ரத்தம் உண்டா இல்லையா
ஒன்றான பாரதம் உன்னை காக்கும் இல்லையா

தமிழா தமிழா நாளை நம்நாளே
தமிழா தமிழா நாடும் நம் நாடே

நவபாரதம் பொதுவானது
இது வியர்வையால் உருவானது

ஜெய்ஹிந்த்!!!
வந்தே மாதரம்!!!

Sunday, August 13, 2006

பின் தங்கிய மாவட்டம்


இத பார்த்தவுடன் உங்களுக்கு எல்லாம் என்னங்க தோணுது. நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. அதை குறித்து மகிழ்ச்சி என எண்ணத் தோண்றுகிறதா. இல்ல நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் மிகவும் பின் தங்கி உள்ளதே என்று ஆதங்கம் வருகின்றாதா? எனக்கு கோவம் வருதுங்க. இதை அறிவித்த மத்திய அமைச்சர் நாகை மாவட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அவரின் சொந்த மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, அவருக்கு வேண்டுமென்றால் சந்தோஷமாக இருக்கலாம். அந்த மாவட்டத்தை சேர்ந்த எனக்கு வெட்கமாக இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள 250 பிந்தங்கிய மாவட்டங்களில் தமிழகத்தில் இருந்து ஆறு மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளது. அதில் இரு மாவட்டங்கள் மத்தியில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் இரு அமைச்சர்களின் சொந்த தொகுதி. இதை பார்த்து எங்கு போயி முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

மற்ற மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்க நாகை மாவட்டம் மட்டும் ரிவர்ஸ்ல போயிக்கிட்டு இருக்கு. தனி மாவட்டமாகி கிட்டதட்ட 15 வருடங்கள் ஆக போகின்றது. ஏதாவது ஒரு முன்னேற்றம், தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. 80களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நாகைக்கு இறங்கு முகம் தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் நாகையில் துறைமுகம் ஏற்படுத்துவோம், கச்சத்தீவை மீட்போம், சுற்றுலா துறை மேம்படுத்துவோம், புதிய தொழிற்சாலைகள் தொடக்குவோம் என்று நம் அரசியல்வியாதிகள் விடும் வெற்று வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது. அதுல ஏதாச்சும் ஒன்றாச்சும் செய்து உள்ளார்கள் என்றால் அது தான் கிடையாது. சரிய்யா நீங்க ஏதும் புதுசா கொண்டு வர வேண்டாம். இருப்பதை வச்சு வளர பார்போம் என்றால் அதுக்கும் வழி கிடையாது. ரோலிங் மில்லுனு ஒன்னு இருந்துச்சு. அதையும் தூக்கிட்டுடானுங்க. இருப்பது சி.பி.சி.எல் மட்டும் தான். புதுசாக எந்த ஒரு பெரிய தொழிற்சாலையையும் நாகையில் ஆரம்பிக்கப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதுவும் சில வருடங்களுக்கு முன்பு சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து பாலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து அல்லது பழுது அடைந்து நாய் படாத பாடுப்பட்டோம். எனக்கு தெரிந்து மிகவும் குறுக்கலான சாலைகள் என்றால் அது நாகையில் இருந்து சிதம்பரம், தஞ்சை, மாயவரம் செல்லும் சாலைகள் தான்.

சரி சாலை போக்குவரத்து தான் இப்படி இருக்கு ரயில்வே எப்படி இருக்குனு பார்த்த அது இன்னும் மோசம். நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து சொல்லுறாங்க, நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் பாதை போடப்படும் என்றும், மீட்டர் கேஜ் பாதைகள் எல்லாம் அகல பாதையாக மாற்றப்படும் என்றும். ஒன்னயும் காணாம். இப்ப தான் பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதாக கேள்வி.
மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கையான மீன் பதப்படுத்தும் கிடங்கு இன்னும் கேள்விக்குறி தான். அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறத்தலுக்கும் உருப்படியான நடவடிக்கை கிடையாது. சுனாமி வேறு அவர்களை மிகவும் மோசமாக மனது அளவிலும் உடல் அளவிலும் பாதித்து விட்டது.


இது காவிரி டெல்டா மாவட்டம் வேறு. காவிரி பிரச்சனையை பற்றி தனியாக சொல்வதற்கு என்ன இருக்கு. இறைவனையும், இயற்கையையும் வேண்டுவதை தவிர. நாகை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு என்று பார்த்தால் அதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. ஊர சுத்தி எத்தனை புகழ் மிகுந்த கோவில்கள் பல இருந்தும் என்ன பயன். தங்குவதற்கு சரியான இடம் கிடையாது, சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவ்வளவு ஏன் சரியான தகவல்கள் சொல்வதற்கு கூட ஆட்கள் கிடையாது. இருந்த தமிழ்நாடு ஹோட்டலையும் கொடுத்து விட்டார்கள்.


இத்தனைக்கும் இது தற்போதைய தமிழக முதல்வரின் சொந்த மாவட்டம், இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்து உள்ளார என்று பார்த்தால் போன முறை பதவியில் இருந்த போது கட்டிக் கொடுத்த விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தவிர மற்றவை பூஜ்யம் தான். ஒன்றாக இருந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தது தான் அவர் செய்த சாதனை. ஆனா சும்மா சொல்ல கூடாது, ஒட்டு கேட்டு வரும் போது சூப்பராக பேசுவார். மண்ணின் மைந்தனாய் கேட்கின்றேன் உங்களின் ஒருவனாய் கேட்கின்றேன். மண்ணின் மைந்தன் என்ற ஞாபகம் ஒட்டு கேட்டு வரும் போது தான் அவருக்கும் வரும். மற்ற நேரத்தில் வராது. அ.தி.மு.க அரசும் இவர்களுக்கு சளைத்தா என்ன, திருவாரூரை நாகையுடன் இணைத்து விட என்ன செய்யலாம் என்று யோசிப்பதிலே காலத்தை ஒட்டி விட்டார்கள். போன ஆட்சியில் எங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநில அமைச்சராக பதவி கொடுத்து இருந்தார்கள். தனிப்பட்ட முறையில் மிகவும் நல்ல மனிதர். அமைதியானவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். இருந்தும் அவர் என்ன செய்தார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் தான் தொகுதி இருக்கு.

அடுத்த நம்ம மணிசங்கர் அய்யர் அவர்கள், மத்திய அமைச்சர். காரைக்காலில் இருக்கும் O.N.G.C. மீது காட்டிய ஆர்வத்தில் சிறிதாவது மாயவரத்தின் மீதும் காட்டி இருக்கலாம். ஒரு நல்ல பேருந்து நிலையம் உண்டா அங்கு. காவிரி ஆறு என்று போர்டு வைத்து இருக்கின்றார்கள். எட்டி பார்த்தால் குப்பை தான் கிடக்குது. ஒன்னு குப்பையை அள்ள வேண்டும் அல்லது அந்த போர்டை தூக்க வேண்டும். மணிசங்கர் அய்யர் பெயர் சொல்லும்படி எதாவது ஒரு உருப்படியான திட்டம் ஏதும் நடைப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை.
யப்பா, இவங்களை பத்தி பேச ஆரம்பித்தால் போயிகிட்டே இருக்கு. இதுக்கு மேல என்னத்த சொல்ல, இந்த பணத்தை ஆச்சும் உருப்படியான வழியில் செலவழித்து மாவட்டத்தை முன்னேற்றும் வழியை பாருங்கய்யா.

Monday, August 07, 2006

பாக். பிரிந்ததால்.....

இன்னிக்கு மதியம் 3 மணி போல வேலை பிஸியில் மண்ட காய்ஞ்சு போய் வர்கார்ந்து இருந்தேன். அப்ப நம்ம பய புள்ள ஒன்னு தலைமையகத்தில் இருந்து தொலைப்பேசியில் மூலம் அழைத்தான். கூப்பிட்டவன் குசலம் விசாரிச்சுட்டு, சிவா உன் கிட்ட ஒரு முக்கியமான கேள்வி கேட்க தான் போன் பண்ணினேன் என்றான். ஏலேய், ஏற்கனவே நான் இங்க நொந்து போய் இருக்கேன். அதனால நொகடிக்காத மாதிரி கேளுடானு சொன்னேன். அவனும் நம்ம ஊர் பையன் தான், பேராவூரணி பக்கம். இது மாதிரி அடிக்கடி போன் பண்ணி சந்தேகம் கேட்டபான். அந்த ஞாபகத்தில் சொல்லுடானு சொல்ல..... பாகிஸ்தான் நம்மள விட்டு பிரிந்தாதால் நாம் இழந்தது என்னனு ஒரு கேள்விய கேட்டான். நானும் ஆர்வமாக பாக் மட்டும் பிரியாமல் இருந்து இருந்தால் பிரிவினையின் போது பல உயிர் இழப்புகள் ஏற்பட்டு இருக்காது என்று சொன்னேன். அவன் வேற அப்படினான், இந்த காஷ்மீர் பிரச்சனை ஏற்பட்டு இருக்காதுனுனேன். அப்புறம் என்றான் அவன். நாம ராணுவத்துக்கும், ஆயுதத்துக்கும் இவ்வளவு செலவு செய்யாமல் உள்கட்டமைப்பில் கவனம் செலுத்தி முன்னேறி இருக்கலாம் என்றேன். அவனும் விடாம வேறனு கேட்டான். கொஞ்சம் யோசிச்சி தண்ணீர் பிரச்சனன இருந்து இருக்காது, உணவு பொருட்கள் பிரச்சனை, ஈரான்யில் இருந்து பெட்ரோல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காதுனேன். இன்னும் வேற எதாவதுனான் ஒன்னா இருந்து இருந்தால் நம் நாட்டில் தீவிரவாதம், குண்டு வெடிப்பு போன்றப் பிரச்சனைகள் அவ்வளவாக இருந்து இருக்காது என்றேன். அவன் என்னடா இப்படி அரசியல் கண்ணோட்டத்துடன் பாக்குற, அரசியல தவிர்த்து எதாவது சொல்லுனான். நானும் அவன் சீரியஸா தான் கேட்குறான் என்று நினைத்து டேய் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருந்து இருந்தால் நம்ம கிரிக்கெட் அணியை கொஞ்சம் நினைச்சு பாரு. வாக்கர் யூனஸ், வாசிம் அக்ரம், கபில், சச்சின் ஆரம்பித்தேன். அவன் நிறுத்து நிறுத்துனு சொல்லிட்டு, சிவா ஒன்கிட்ட இருந்து நான் இன்னும் கொஞ்சம் பெட்டரா எதிர்பாக்குறேன் என்று காதல் படத்தில் வரும் இயக்குனர் டயலாக்ல கேட்க, ஆகா இவன் நம்மள வச்சி எதோ காமெடி பண்ணுற மாதிரியில இருக்கு என்று லேசா சுதாரிச்சுக்கிட்டு, எனக்கு தெரியல நீயே சொல்லு அப்படினேன். அவன் உன் வயசு என்னனு கேட்டான். அது உனக்கு தெரியாதானு நான் எதிர் கேள்வி கேட்டேன். இல்ல சும்மா சொல்லேனான். நாம கொஞ்சம் கடுப்பாயி(ஆப்புனு கன்பார்மா தெரிஞ்ச்சுடுச்சு) சொல்லறாதா இருந்தா சொல்லு எனக்கு இங்க நிறைய வேல இருக்குனு ஒரு சவுண்ட் போட்டேன். சிவா கடைசியா ஒரு கெஸ் பண்ணுனான். என்னால முடியாதுனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். விடாம உடனே போன போட்டான். எடுத்து டேய் சொல்லி தொலைடா , இல்ல ஆள விடுடா வேல இருக்குனு கத்த., கத்தாத உன் லொட்ஸ்(Lotus-Mail) ஒபன் பண்ணி பாருனு சொல்லிட்டு போனை வச்சுட்டான். அவன் வைக்கவும் அவன் அனுப்பிய மெயில் வரவும் சரியாக இருந்தது. திறந்து பார்த்தா.........
....
....
....
....
....
....

இந்த படங்கள்............... இந்தியா இழந்தது இவர்களையாம்., எப்படியெல்லாம் யோசிக்குறாங்க பாருங்க மக்களே....

வந்த கோவத்துக்கு மறுபடியும் போன்னை போட்டு, ஏன்னடா அவன் அவன் இங்க நொந்து நொடுல்ஸ் ஆயிகிட்டு இருக்காங்க, உனக்கு காமெடியா இருக்கானு கத்த, அவன் கூலா படத்து பாத்தும்மா இவ்வளவு கோவப்படுறனு கேட்டான். அதுக்கு என்னத்த சொல்ல, சரி சரி பொழச்சு போனு சொல்லிட்டு போன வச்சுட்டேன். வேற என்ன பண்ணுறது.

இந்த படங்களை நம்ம ஜொள்ளு பாண்டிக்கும், க.பி. கழகத்துக்கும் சமர்ப்பனம் செய்கின்றேன். மிச்ச படம் வேணுமுனா கேட்கவும்.

Sunday, August 06, 2006

நன்றி சொல்வேன்!!!


கவிதா அவர்கள் நண்பர்கள் தினம் குறித்து எனக்கு தோன்றுவதை எழுதி தருமாறு கேட்டு இருந்தார்கள். நாமலும் அதை வழக்கம் போல மறந்தாச்சு. இரு முறை நினைவுப்படுத்தியும் அனுப்பவில்லை. பிறகு அவர்கள் திட்டி ஒரு மெயில் அனுப்பிய பிறகு அவசர அவசரமாக அந்த நிமிடத்தில் மனதில் தோன்றியதை அவர்களுக்கு எழுதி அனுப்பியதை இங்கு பதிவு செய்கின்றேன். இந்த வருடம் தான் என் நண்பர்கள் வட்டாரம் மிகவும் விரிவடைந்தது என்பதையும் மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதோ கவிதாவின் பதிவிற்க்கு எழுதியது:

நண்பர்கள்/நட்பு

தலைப்பை பார்த்தவுடன் ஏதுவும் எழுத தோன்றவில்லை. நண்பர்களை பற்றி நினைவுகளில் மூழ்க தான் முடிகின்றது.

நண்பர்கள்:

"நண்பர்களால் நான் காயப்பட்டது உண்டு. ஆனால் ஒரு போதும் நண்பர்களை நான் காயப்படுத்தியது இல்லை(எனக்கு தெரிந்த வரை)"

"நேற்றையே பொழுது நல்ல நினைவுகளோடு
நாளைய பொழுது நல்ல எதிர்பார்ப்புகளோடு
இன்றைய பொழுது நல்ல நண்பர்களோடு"

நட்பு:

நம்ம நட்பு வட்டாரம் ரொம்ப பெரியது.

"பள்ளியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
படித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சைட் அடித்த கல்லூரியில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
தெருவில்(ஏரியாவில்) பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
சண்டைகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
அலுவலகங்களில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
உறவுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
NIIT யில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
நண்பர்களால் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்
வெளிநாடுகளில் பெற்ற நண்பர்கள் ஒரு வட்டம்"

இவை அனைத்தும் நேரில் பார்த்து, பல நாள் பழகி கிடைத்த நட்புகள்.
ஆனால் இன்றோ தமிழ் என்ற ஒற்ற சொல்லின் மூலம் கிடைத்த ஒரு வட்டம் இருக்கின்றதே........
உற்ற தோழர்கள் அளவுக்கு நேரடியாக நெருங்கி விட்ட ஒரு வட்டம்.
ஒளி பொருந்திய மிகப் பெரிய வட்டம்.
யாரையும் நேரில் பார்த்ததும் இல்லை, பல பேரிடம் தொலைப்பேசியிலும் பேசியது இல்லை.


இருந்தாலும் இந்த நண்பர்கள் என்னுடைய ஒவ்வொரு நாளையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரம்பிக்கவும், முடிக்கவும் செய்கின்றார்கள்.
ஒருவரா, இருவரா எத்தனை நண்பர்கள், எத்தனை விதமான நண்பர்கள், வயது வித்தாயசமின்றி.....பால் வித்தாசமின்றி.....
ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் முத்துக்கள்.....
இங்கு யாரையும் தனிப்பட்ட முறையில் சொல்ல விரும்பவில்லை...
காலம் அனுமதித்தால் அனைவரையும் நேரில் சந்திப்பேன்.
என்னுடைய நண்பரானதுக்கு உள்ளங்கை பற்றி நன்றி சொல்வேன்.

அனைவருக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்