Sunday, August 28, 2011

அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைக் குறிப்பிடுகிறது.

அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில்(நாகையில்) வசித்து வந்தார். மீனவரான அவர், நாகையில் அமைந்துள்ள அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினானாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட போக, உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார்.

அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

Source : Dinamalar, Wikipedia

நேற்று(27.08.2011) இந்த விழா நாகை புதிய கடற்கரையில் இனிதே நடந்தேறியது.