அதிபத்த நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைக் குறிப்பிடுகிறது.
அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில்(நாகையில்) வசித்து வந்தார். மீனவரான அவர், நாகையில் அமைந்துள்ள அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினானாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.
ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட போக, உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார்.
அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.
Source : Dinamalar, Wikipedia
நேற்று(27.08.2011) இந்த விழா நாகை புதிய கடற்கரையில் இனிதே நடந்தேறியது.
Sunday, August 28, 2011
அதிபத்த நாயனார்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, August 28, 2011
2
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஆன்மிகம், நாகை, புகைப்படம்
Monday, February 21, 2011
நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது!
நண்பர்களே!
இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக வலுவான குரல்கள் இணையத்தில் பதியப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற பிரச்சனைகளை போல் அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் குரல் எழுப்பி பின் அதை மறந்து மீண்டும் அடுத்த பிரச்சனையை நோக்கி நம் கவனத்தை திருப்பவதை போல் அல்லாமல், இம்முறை இந்த பிரச்சனையை கை விடாமல் தொடர்ந்து நம்மால் முடிந்த அளவு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய உறுதி ஏற்ப்போம். அதற்கு ஏற்ப நம் வழியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குரலை பதிய முடிவு எடுத்து உள்ளோம். அதனை பற்றிய தகவல் கீழே, உங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டுகிறேன்.
தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்கள் மூலம், மீனவகுடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை/இந்திய அரசுகளுக்கு எதிராகவும் தமிழ் இணையப் பயனர்கள் ஒருமித்த குரலை பல நாட்களாக எழுப்பி வருகிறோம்.
சென்னை கடற்கரையில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.
நாம் அனைவரும் நேரில் போய் நிலவரத்தைக் கண்டறியவும், பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு (வேறு நோக்கங்களின்றி) நாம் செயல்படுவதை மீனவ மக்களுக்கு தெரிவிக்கவும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ் இணையப்பயனர்கள் நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவ கிராமங்களுக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.
நேரில் சென்று நிலவரங்களை அறிந்து
* வலைப்பதிவுகளாகவும்
* டுவீட்டுகளாகவும்
* ஃபேஸ்புக்கிலும் தகவல்களாகவும்
* கூகுள் பஸ் உரையாடல்களாகவும்
* யூடியூப் காணொலிகளாகவும்
* ஒளிப்படங்களாகவும்
இணையத்தில் வெளியிடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.
நண்பர்கள் மார்ச் 4, 5, 6 அல்லது 7 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) ஏதாவது ஒரு நாளில் தமது வசதிக்கேற்ற நாளைக் குறிப்பிட்டால், அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.
வெளியூரில் இருப்பவர்கள் நாகப்பட்டினம் அல்லது ராமேஸ்வரம் வந்துவிட்டால், உள்ளூர் நண்பர்களின் உதவியுடன் மீனவ கிராமங்களுக்குப் போய் வரலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து, அவர்களையே பேசச்செய்து, ஆவணப்படுத்தலாம். 600க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் இப்பயணம் அமையட்டும்.
இந்த முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான இணைய பயனர்கள் கலந்து கொண்டு நமது குரலுக்கு நம்மால் ஆன செயல் வடிவம் கொடுக்க முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கப் பயன்படும் கூகுள் குழுமத்தில் சேர்ந்து மின்னஞ்சல் அனுப்பி (tnfisherman@googlegroups.com)
http://groups.google.com/group/tnfisherman பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். - மா. சிவகுமார்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, February 21, 2011
1 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, January 31, 2011
தமிழக மீனவர்களுக்காக
மற்றவர்களுக்கு எப்படியோ நாகையை சேர்ந்த எனக்கு நாகை மாவட்டத்து மீனவன் சுடப்படுவதும் அதை தொடர்ந்து மீனவர்களின் சில நாள் போராட்டம், அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் மீண்டும் தாக்குதல் மீண்டும் போராட்டம் என்பது பாத்து பாத்து சலித்து போன விசயம். உருப்படியாக ஏதுவும் நடந்ததும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்று வெறுத்து போன மனநிலை தான்.
கடந்த வாரம் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் மீண்டுமா என்ற கேள்வியும் வழக்கம் போல் நாகை மாவட்டத்து மீனவர்களின் காலவரையெற்ற போராட்டம், மறியல், மற்ற சில மீனவ கிராமங்களின் மறியல், ஆளும் கட்சியின் திரைமறைவு நிவாரணம், மற்ற கட்சிகளின் கடமைக்கான எதிர்ப்பு குரல் அம்புட்டு தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக இணையத்தில் வலுவாக குரல்கள் தொடர்ந்து எழுப்பட்ட போது எனக்கே இது உண்மை தானா என்ற ஐயம் வந்தது. ஆனால் என் ஐயத்தை துடைக்கும் வண்ணம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு நிறுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டிவிட்டரில் அவர்களுடன் நாமும் கைகோர்ப்போம்.
அதை பற்றிய விபரங்களுக்கு
#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.
தொடர்புடைய சுட்டிகள் :
http://www.savetnfisherman.org/
http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html
http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html
http://www.petitiononline.com/TNfisher/petition.html
JOIN THE CAUSE : Act Now, Voice your Dissent – Tweet with the tag #tnfisherman
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, January 31, 2011
1 பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, July 26, 2010
தாயாருடன் திருநாகை அழகியார்
சொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.
கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.
அதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.
அப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.
ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்
திருநாகை அழகியார் - சிறு குறிப்பு
மட்டையடி உற்சவம்
திருக்கோவில் படங்கள்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, July 26, 2010
10
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஆன்மிகம், நாகை, புகைப்படம்
Friday, March 05, 2010
மட்டையடி உற்சவம் - நாகை
பொங்கல் அன்று நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவில் சென்ற போது நாளை மாலை மட்டையடி உற்சவம் உள்ளது தவறாமல் வந்து விடுங்கள் என்று கூற, ஏதோ ஒரு பதிவில் இதை பற்றி படித்தும், இது ஸ்ரீரங்கத்தில் மட்டும் தான் நடைபெறும் என்று நினைத்துக் கொண்டு இருந்ததும் ஞாபகத்தில் வந்தது. வீட்டில் இதை பற்றி கேட்கும் போது இவ்வளவு நாளாக இங்கு இருக்கிறாய், இது கூடவா தெரியாது என்று நம் அறியாமையை பதம் பார்த்த காரணத்தால் அதன் புராண கதையை கேட்க முடியாமல் போயிற்று. சரி எப்படியும் நாளை மாலை இந்த உற்சவத்தை தவறாமல் கண்டு விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன்.
இதை பற்றிய புராணக் கதை மிக தெளிவாக அறியாத காரணத்தால் எனக்கு தெரிந்தவற்றை மட்டும் இங்கு. துலக்க நாச்சியார் காண நம்பெருமாள் சென்ற காரணத்தால் கோவம் கொண்டு தாயார் மீண்டும் வீட்டின் உள்ளே அனுமதிக்க மறுப்பதே இந்த மட்டையடி உற்சவத்தின் சாரம்சம். வாழை மட்டை கொண்டு அடிக்கப்படுகிறது. அழ்வார் வந்து சாமாதனம் செய்வதாகவும் தெரிகிறது.
மாலை நான் சிறிது தாமாதமாக சென்ற காரணத்தால் முழுமையாக காண முடியவில்லை. படங்களும் சரியாக அமையவில்லை. சலனப்படம் சிறிதே எடுக்க முடிந்தது.
நம்பெருமாள் துலக்க நாச்சியாரை காண செல்லும் புகைப்படம்
கோவிலுக்குள் செல்ல முயலும் புகைப்படம்
மட்டையடி கொடுத்து வாயில் மூடப்படும் புகைப்படம்
தாயாரும், நம்பெருமாள் இணைந்து காட்சி கொடுக்கும் புகைப்படம்
மேலே உள்ள படத்தில் மட்டையடி உற்சவத்தை பற்றிய புராண கதையை கோவில் பட்டாச்சாரியார்கள் விளக்கும் காட்சியையும் காணலாம்.
சலனப்படம்
புராணங்கள் எப்படி இருந்தாலும், இந்த உற்சவத்தை கோவில் அங்கத்தினர்கள் நடத்திய பாங்கு என்னை மிகவும் கவர்ந்தது, அத்தனை அழகு. ஒரு ஒழுங்குடன், மிகவும் நேர்த்தியாக அமைந்தது இருந்தது. திருநாகை அழகியாருக்கு நடந்த இந்த உற்சவம் ஒரு அழகியல் நிகழ்வு என்பதால் தான் இந்த பதிவு.
ஸ்ரீரங்க மட்டையடி உற்சவத்தை பற்றி மாதவிபந்தலில் வந்த பதிவு.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, March 05, 2010
7
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அனுபவம், ஆன்மிகம், நாகை, நிகழ்வுகள்
Saturday, February 27, 2010
சிதறல்கள்
இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.
போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!
போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!
நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.
ரசித்தவை:
வா ங் கி க் கொ ள் வே ன்
by நெல்லை கண்ணன்
இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, February 27, 2010
9
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Tuesday, May 12, 2009
தொகுதி அலசல் - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.
இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.
மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.
சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.
இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:
1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)
2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)
3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)
4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)
மற்றும் 3 சுயேச்சைகள்.
குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.
7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.
இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.
மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.
நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.
வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, May 12, 2009
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Sunday, November 05, 2006
திருநாகை பெருமாள் கோவில் படங்கள்
எம்பெருமான்திருமாது புவிமாதோடு திருநாகை அழகர்
ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவில் வாயில்
வாயில் பக்கவாட்டு படம்
சொர்க்க வாசல் வழி
ராமர் பாதம்
துவார பாலகர்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Sunday, November 05, 2006
22
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஆன்மிகம், நட்சத்திரம், நாகை, புகைப்படம்
Saturday, November 04, 2006
திருநாகை அழகியார்
சிறு குறிப்பு
மூலவர் : ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ செளந்தரவல்லி
உத்ஸ்வர் : நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன்
அமர்ந்தநிலை, பச்சைவண்ணன், பவழவண்ணன்
பூஜை : ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
விமானம் : பத்ரகோடி விமானம்
புஷ்கரணி : சாரபுஷ்கரணி செளந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்
நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும், பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம்.
திவ்யதேசங்கள் நூற்றெட்டு ஆகும். இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள். இந்த நாற்பதில் நாகை வட்டத்தில் அமைந்த உள்ளவை இரண்டு. ஒன்று நாகப்பட்டினத்திலும் மற்றது திருக்கண்ணங்குடியில் உள்ளது. இத்திருகோவில் நாகை புகைவண்டி நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு பஸ்நிறுத்தமும் உள்ளது.
கோவிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறம் உயர்ந்த மதில்களும் உள்ளன. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், நாற்புறமும் தேர் ஒடும் பெரிய வீதிகளும் பொருந்தியுள்ளன.
மேற்கூறிய இடம் தான் எங்களில் எவர்கீரின் ஸ்பாட். இந்த நாலு தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருப்போம். கோவிலுக்கு எதிரில் இருக்கும் ராஜா டீ கடையும் நம்ம ஸ்பாட்டில் ஒன்று. நம்ம சக பதிவர் "வடவூர் குமார்" மடவிளாகம் என்று தன் பதிவிற்கு பெயர் வைத்ததும் இந்த கோவிலின் மடவிளாகத்தை குறிக்கும் பொருட்டு தான் என்று எண்ணுகின்றேன். என்ன குமார் அண்ணன் சரி தானே? இது போக இந்த பகுதியில் இருந்து வந்து இருக்கும் மற்ற சக பதிவர்கள் நாம் அனைவரும் அறிந்த "கிழக்கு பதிப்பகம்" பத்ரி மற்றும் நண்பர் "அறுசுவை" பாபு. கோவிலை சுற்றியுள்ள தெருகளில் தான் நாங்க சிறு வயதில் கிரிக்கெட், கிட்டிபுல், பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். தெருவில் இருக்கும் அனைவரின் சாபத்தையும் வாங்குவோம். ஹும் அது எல்லாம் ஒரு காலம். இன்றும் அங்கு நின்று சேட்டைகள் செய்தாலும் அந்த அறியா வயதில் செய்த சேட்டைகளே தனி தான். சரி சரி மீண்டும் கோவிலுக்கு போவோம்....
இக்கோவிலை சுற்றி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீ தேசிகர் கோவில், அனுமன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சர்ச் மதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோவிலும் உள்ளன.
கி.பி. 8 நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் எம்பெருமானை கண்டு வழிபட நாகை வந்தார், நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காம நோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார்.
இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்க பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக முவகைக் கோலங்களில் கோவில் கொண்டுள்ளார். நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாயந்தது. திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப்படைப்பாகும். இது போன்ற பல சிற்பங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு அத்தோடு விடுகின்றேன். அடுத்த கட்டுரையில் இக்கோயிலில் நடைப்பெறும் பூஜைகள், விழாக்கள், கோவில் உள் இருக்கும் சன்னதிகளை பற்றி எழுதுகிறேன்.
எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க.....
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, November 04, 2006
18
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் ஆன்மிகம், நட்சத்திரம், நாகை


