Sunday, August 28, 2011

அதிபத்த நாயனார்

அதிபத்த நாயனார் 63 நாயன்மார்களுள் ஒருவர். "விரிதிரை சூழ் கடற்நாகை அதிபத்தர்க்கடியேன்" என்று திருத்தொண்டத் தொகை இவரைக் குறிப்பிடுகிறது.

அதிபத்தர், என்னும் சிவபக்தர் இவ்வூரில்(நாகையில்) வசித்து வந்தார். மீனவரான அவர், நாகையில் அமைந்துள்ள அருள்மிகு காயாரோகணேஸ்வரர் திருக்கோயில் சிவன் மீது அதீத பக்தி கொண்டிருந்தார். தினமும் மீன் பிடிக்கச் செல்லும் அவர், முதலில் கிடைக்கும் மீனை, கடலில் வீசி சிவனுக்கே அர்ப்பணம் செய்துவிடுவார். ஒருகட்டத்தில் இவரது பக்தியை சோதிக்க எண்ணிய சிவன், கடலில் ஒரு மீன் மட்டுமே கிடைக்கும்படி செய்தார். ஆனாலும், அதிபத்தர் அந்த மீனை, சிவனுக்கே படைத்தார். வறுமையில் வாடினானாலும், அதிபத்தர் தனது பக்தியை சற்றும் விட்டுக்கொடுக்கவில்லை.

ஒருசமயம் மீன் பிடிக்கச் சென்ற அதிபத்தருக்கு, கடலில் ஒரு தங்க மீன் கிடைக்கச் செய்தார் சிவன். அது மணிகள் பதித்த பொன்மீன். அம்மீன் கடலில் உதிக்கும் சூரியன்போல் கரையில் இழுத்த வலையிலே ஒளிர்ந்தது. வலைஞர் அதிசயமிகுதியோடு “மீன் ஒன்று பிடித்தோம்” என்று அதிபத்தரிடம் கூறினார். அதிபத்தர் உலகம் யாவும் பெறும் என்று மதிக்கத்தக்க அம்மீனைப் பார்த்து மகிழ்ந்தார். “இப்பொன்மீன் என்னை ஆளுடைய நாயகனின் பொற்கழல் சேர்க” என்று அலைமீது விட போக, உடனிருந்த மீனவர்கள் அதனை கடலில் போட வேண்டாமென தடுத்தனர். ஆனால், அதிபத்தர் அதை கடலில் வீசி விட்டார். அவரது பக்தியை மெச்சிய சிவன், அம்பிகையுடன் காட்சி கொடுத்து முக்தி கொடுத்தார். இவர் நாயன்மார்களில் ஒருவராகும் அந்தஸ்தை பெற்றார்.

அதிபத்தருக்கு இக்கோயிலில் சன்னதி இருக்கிறது. ஆவணி மாத, ஆயில்யம் நட்சத்திரத்தன்று இவரது குருபூஜை விழா நடக்கிறது. அன்று அதிபத்தர் உற்சவர் ஒரு கட்டுமரத்தில் எழுந்தருளி, கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்வார். அப்போது மீனவர்கள், இரண்டு தங்க மீன்களை வலையில் வைத்து, கடலில் பிடித்ததைப் போல பாவனை செய்வர். அவ்வேளையில் இத்தலத்து சிவன், கடற்கரையில் எழுந்தருளுவார். அவருக்கு அதிபத்தர், தங்க மீன் படைத்து பூஜை செய்வார். அதன்பின் சிவன் அவருக்கு காட்சி தரும் வைபவம் நடக்கும். இந்த விழாவின்போது மட்டுமே தங்க மீனை பார்க்க முடியும்.

Source : Dinamalar, Wikipedia

நேற்று(27.08.2011) இந்த விழா நாகை புதிய கடற்கரையில் இனிதே நடந்தேறியது.










Friday, July 15, 2011

காளையார் கோவில் தெப்பக்குளம்

Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு



"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இனிய தமிழ் புத்தாண்டு(கர வருட) நல்வாழ்த்துக்கள்

Tuesday, April 12, 2011

ஓட்டு போடுங்க ப்ளீஸ்!

நாளை தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளன். இந்த கெடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஓட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஓட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கெடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஓட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோல்(ஓட்டு) எடுத்தால் ஆடும் வானரங்களாக இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஓட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஓட்டுப்பதிவு அவசியம்.

வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.

யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய் வரிசையில் நிற்பது. வெயில் காலம் என்றால் வெயிலை காரணம் காட்டியும், மழை காலம் என்றால் மழையை காரணம் காட்டியும் விடுமுறையை மட்டும் அனுபவிக்கும் மக்களும் இங்கு உண்டு. அவர்களால்

பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்க்கு முன்பே வரிசையில் நிற்க முடியும்.
விசா வாங்க தூதரக வாசலில் காவல் காக்க முடியும்.
தலைவர் படம் பார்க்க முதல் நாள் இரவே திரை அரங்கு வாயிலில் தவம் இருக்க முடியும்.
கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வாங்க பல மணி நேரம் வரிசையில் நின்று சீட்டு வாங்க முடியும்.
எல்.கே.ஜி. விண்ணப்பம் படிவம் வாங்க விடியும் முன்பே பள்ளி வாசலில் பலிகிடக்க முடியும்.
ஆனால் நம் உரிமையை நிலைநிறுத்த வரிசையில் நிற்க முடியாது. என்ன நியாயம் சார் இது?

கடமையை செய் பலனை எதிர்பாக்காதே னு கண்ணன் சொன்னாரு
கடமையை செய் பலனை எதிர்பார் னு தலைவர் சொன்னாரு
கடமையை செய்ய மாட்டேன், ஆனால் பலனை மட்டும் எதிர்பார்ப்பேனு நம்மில் பலர் சொல்லுறோம். என்னத்த பலனை அடைச்சேன் காரணமும் கேட்பார்கள். அரசாங்க சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்காத மக்கள் மிக சொற்பமே. அந்த மிக சொற்பத்தில் நம்மவர்கள் வருவது அதை விட சொற்பமே.

நம்மளில் பலர் எனக்கு ஒட்டு இல்லை, ஓட்டு போட எல்லாமா ஊருக்கு போவது வேறு வேலை இல்லை என்று சொல்வதை ரொம்ப பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காதலன், காதலி யை பார்க்க முக்கியமான வேலை எதுவாக இருந்தாலும் விடுத்து பல மைல் பயணம் செய்ய தயாராக இருப்பார்கள், ஆனால் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். வரி கட்டுவதற்கு என்ன என்ன சலுகைகள் இருக்கு என்பதை அறிந்து அதற்கு தேவையான எல்லாவற்றையும் முன் கூட்டிய செய்ய முடியும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டை வாங்க நேரமும், தேவையும் இருக்காது. இதில் ஏதுமே பெருமை பட வேண்டிய விசயம் இல்லை, சிறுமை கொள்ள வேண்டிய விடயங்கள் தான்.

என் தொகுதியில் நிற்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள், அயோக்கியர்கள், ஜெயித்து வந்தால் ஏதும் செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு ஏன் என் ஓட்டை போட்டு விரயம் பண்ண வேண்டும் என்று கேட்பவர்களுக்காக இந்த தடவை ஓ போடும் வசதியும் உண்டு. ஓ போடுவது மூலம் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க வைக்க முடியும்.

விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாதா வாழ்க்கை என்று எதுவும் இல்லை

என்ற வைரமுத்து வரிகளை நினைவில் கொள்ளுவோம். அனைவரும் ஓட்டு சாவடிக்கு வந்தோம் என்பதே நாம் விரும்பும் விடியலுக்குக்கான முதல் படியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

So Please Cast your Vote!

Monday, March 21, 2011

கதவுகள் - புகைப்படம்


Friday, March 18, 2011

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும்

கடந்த 9 முறையாக சென்னையில் போட்டியிட்டு வென்ற நம் தமிழக முதல்வர் கருணாநிதி இம்முறை திருவாரூரில் போட்டியிட போகிறார். அதை குறித்த செய்தி கீழே

திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.

திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப்
போட்டியிட முடியாமல் அந்த தொகுதி அப்போது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது, அதாவது அப்போதிருந்த அரசியல்வாதிகளால் - நான் அங்கே நின்றுவிடக் கூடாது என்பதற்காக - அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது.

இப்போது அது தனித் தொகுதியிலிருந்து விடுபட்டு - பொதுத் தொகுதியாக - நான் அங்கே நிற்கலாம் என்ற அளவிற்கு அது எனக்கு 'கனி'த் தொகுதியாக ஆகிவிட்டது," என்றார்.
- விகடன்

1957 ம் ஆண்டு தான் அவர் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தடவை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். ஆனால் அப்பொழுது திருவாரூர் என்ற தொகுதியே கிடையாது. 1962 ம் ஆண்டு தான் திருவாரூர் தொகுதி உருவாக்கப்பட்டது. இல்லாத தொகுதியை எப்படி அவர் நின்று விட கூடாது என்பதற்காக தனி தொகுதி ஆக்கினார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை.

அந்த நேரத்தில் திருவாரூர் எந்த தொகுதியுடன் இணைந்து இருந்தது என்பதை யாராவது கூறினால் அது அப்போது தனி தொகுதியாக இருந்ததா இல்லையா என்பது தெரியும். நன்னிலம், திருத்துறைப்பூண்டி இரண்டும் தனி தொகுதியாக இருந்தது மற்றப்படி நாகை, தஞ்சாவூர், திருவையாறு, மாயவரம் போன்ற தொகுதிகள் எல்லாம் பொது தொகுதிகள் தான். அடுத்த முறை தஞ்சையில் இருந்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது தான்.

இம்முறை சென்னை வேண்டாம் என முடிவு எடுத்து இருந்தால் நேரடியாக திருவாரூரில் போட்டியிட ஆசை போட்டியிடுகிறேன் என்று சொல்லாமல், ஏன் அவர் நின்று விட கூடாது என்பதற்காக தான் தனி தொகுதி ஆக்கப்பட்டது என்று தன் வரட்டுத்தனத்தை காட்ட வேண்டும்? மாறவே மாட்டாரா?

Monday, February 21, 2011

நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது!

நண்பர்களே!

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக வலுவான குரல்கள் இணையத்தில் பதியப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற பிரச்சனைகளை போல் அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் குரல் எழுப்பி பின் அதை மறந்து மீண்டும் அடுத்த பிரச்சனையை நோக்கி நம் கவனத்தை திருப்பவதை போல் அல்லாமல், இம்முறை இந்த பிரச்சனையை கை விடாமல் தொடர்ந்து நம்மால் முடிந்த அளவு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய உறுதி ஏற்ப்போம். அதற்கு ஏற்ப நம் வழியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குரலை பதிய முடிவு எடுத்து உள்ளோம். அதனை பற்றிய தகவல் கீழே, உங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டுகிறேன்.

தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்கள் மூலம், மீனவகுடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை/இந்திய அரசுகளுக்கு எதிராகவும் தமிழ் இணையப் பயனர்கள் ஒருமித்த குரலை பல நாட்களாக எழுப்பி வருகிறோம்.

சென்னை கடற்கரையில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

நாம் அனைவரும் நேரில் போய் நிலவரத்தைக் கண்டறியவும், பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு (வேறு நோக்கங்களின்றி) நாம் செயல்படுவதை மீனவ மக்களுக்கு தெரிவிக்கவும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ் இணையப்பயனர்கள் நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவ கிராமங்களுக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நேரில் சென்று நிலவரங்களை அறிந்து

* வலைப்பதிவுகளாகவும்
* டுவீட்டுகளாகவும்
* ஃபேஸ்புக்கிலும் தகவல்களாகவும்
* கூகுள் பஸ் உரையாடல்களாகவும்
* யூடியூப் காணொலிகளாகவும்
* ஒளிப்படங்களாகவும்

இணையத்தில் வெளியிடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.

நண்பர்கள் மார்ச் 4, 5, 6 அல்லது 7 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) ஏதாவது ஒரு நாளில் தமது வசதிக்கேற்ற நாளைக் குறிப்பிட்டால், அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.

வெளியூரில் இருப்பவர்கள் நாகப்பட்டினம் அல்லது ராமேஸ்வரம் வந்துவிட்டால், உள்ளூர் நண்பர்களின் உதவியுடன் மீனவ கிராமங்களுக்குப் போய் வரலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து, அவர்களையே பேசச்செய்து, ஆவணப்படுத்தலாம். 600க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் இப்பயணம் அமையட்டும்.

இந்த முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான இணைய பயனர்கள் கலந்து கொண்டு நமது குரலுக்கு நம்மால் ஆன செயல் வடிவம் கொடுக்க முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கப் பயன்படும் கூகுள் குழுமத்தில் சேர்ந்து மின்னஞ்சல் அனுப்பி (tnfisherman@googlegroups.com)
http://groups.google.com/group/tnfisherman பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். - மா. சிவகுமார்


FOLKS ITS TIME FOR ACTION. PLEASE REACT.

Monday, January 31, 2011

தமிழக மீனவர்களுக்காக

மற்றவர்களுக்கு எப்படியோ நாகையை சேர்ந்த எனக்கு நாகை மாவட்டத்து மீனவன் சுடப்படுவதும் அதை தொடர்ந்து மீனவர்களின் சில நாள் போராட்டம், அரசியல்வாதிகளின் கண்துடைப்பு நாடகம் மீண்டும் தாக்குதல் மீண்டும் போராட்டம் என்பது பாத்து பாத்து சலித்து போன விசயம். உருப்படியாக ஏதுவும் நடந்ததும் இல்லை, நடக்க போவதும் இல்லை என்று வெறுத்து போன மனநிலை தான்.

கடந்த வாரம் நாகை மாவட்டம் புஷ்பவனம் பகுதியை சேர்ந்த மீனவர் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார் என்பதை கேள்விப்பட்டவுடன் மீண்டுமா என்ற கேள்வியும் வழக்கம் போல் நாகை மாவட்டத்து மீனவர்களின் காலவரையெற்ற போராட்டம், மறியல், மற்ற சில மீனவ கிராமங்களின் மறியல், ஆளும் கட்சியின் திரைமறைவு நிவாரணம், மற்ற கட்சிகளின் கடமைக்கான எதிர்ப்பு குரல் அம்புட்டு தான் இருக்கும் என்ற எண்ணத்திற்கு மாறாக இணையத்தில் வலுவாக குரல்கள் தொடர்ந்து எழுப்பட்ட போது எனக்கே இது உண்மை தானா என்ற ஐயம் வந்தது. ஆனால் என் ஐயத்தை துடைக்கும் வண்ணம் தொடர்ந்து குரல் கொடுப்பதோடு நிறுத்தாமல் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் இறங்கி இருக்கும் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். டிவிட்டரில் அவர்களுடன் நாமும் கைகோர்ப்போம்.

அதை பற்றிய விபரங்களுக்கு




#tnfisherman போராட்டமானது அனைவரின் பங்களிப்போடும் நடைபெறுவது. தொடர்ந்து இதனை முன்னெடுத்துச் செல்வதே, ஒரு தீர்வு கிடைக்க வழி செய்யும். இங்கு நாம் குறிப்பிட்டுள்ள பங்களிப்புகளில் உங்களுக்கு எப்படியெல்லாம் முடியுமோ, அப்படியெல்லாம் பங்களித்து வாருங்கள். நம் சகோதரர்களைக் காக்க ஒன்றிணைந்துள்ள நாம் வெற்றி காண்பது அனைவரின் பங்களிப்பிலுமே உள்ளது. தொடர்ந்து ட்விட்டரிலும், மற்ற வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள்.

தொடர்புடைய சுட்டிகள் :

http://www.savetnfisherman.org/

http://thoughtsintamil.blogspot.com/2011/01/blog-post_31.html

http://allinall2010.blogspot.com/2011/01/tnfisherman_31.html

http://www.petitiononline.com/TNfisher/petition.html

JOIN THE CAUSE : Act Now, Voice your Dissent – Tweet with the tag #tnfisherman