Monday, February 21, 2011

நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது!

நண்பர்களே!

இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தாக்குப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்கு ஆதரவாக வலுவான குரல்கள் இணையத்தில் பதியப்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்ததே. மற்ற பிரச்சனைகளை போல் அந்த நேரத்தில் உணர்ச்சி வேகத்தில் குரல் எழுப்பி பின் அதை மறந்து மீண்டும் அடுத்த பிரச்சனையை நோக்கி நம் கவனத்தை திருப்பவதை போல் அல்லாமல், இம்முறை இந்த பிரச்சனையை கை விடாமல் தொடர்ந்து நம்மால் முடிந்த அளவு ஆக்கப்பூர்வமான பணிகளை செய்ய உறுதி ஏற்ப்போம். அதற்கு ஏற்ப நம் வழியை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அடுத்த கட்ட நடவடிக்கையாக பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குரலை பதிய முடிவு எடுத்து உள்ளோம். அதனை பற்றிய தகவல் கீழே, உங்களால் முடிந்த பங்களிப்பை அளிக்க வேண்டுகிறேன்.

தமிழக மீனவர்களின் மீதான இலங்கை கடற்படை தாக்குதல்கள் மூலம், மீனவகுடும்பங்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகியிருக்கிறது. மீனவர்களுக்கு ஆதரவாகவும், இலங்கை/இந்திய அரசுகளுக்கு எதிராகவும் தமிழ் இணையப் பயனர்கள் ஒருமித்த குரலை பல நாட்களாக எழுப்பி வருகிறோம்.

சென்னை கடற்கரையில் நடந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் தலைவர்களை சந்திக்கும் பணி சிறப்பாக நடந்து வருகிறது.

நாம் அனைவரும் நேரில் போய் நிலவரத்தைக் கண்டறியவும், பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண்பதற்கு (வேறு நோக்கங்களின்றி) நாம் செயல்படுவதை மீனவ மக்களுக்கு தெரிவிக்கவும் மார்ச் முதல் வாரத்தில் தமிழ் இணையப்பயனர்கள் நாகப்பட்டினம், ராமேஸ்வரம் பகுதியிலுள்ள மீனவ கிராமங்களுக்கு செல்லலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

நேரில் சென்று நிலவரங்களை அறிந்து

* வலைப்பதிவுகளாகவும்
* டுவீட்டுகளாகவும்
* ஃபேஸ்புக்கிலும் தகவல்களாகவும்
* கூகுள் பஸ் உரையாடல்களாகவும்
* யூடியூப் காணொலிகளாகவும்
* ஒளிப்படங்களாகவும்

இணையத்தில் வெளியிடுவதன் மூலம் குறிப்பிடத்தக்க தாக்கத்தை நாம் ஏற்படுத்த முடியும்.

நண்பர்கள் மார்ச் 4, 5, 6 அல்லது 7 தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு, திங்கள்) ஏதாவது ஒரு நாளில் தமது வசதிக்கேற்ற நாளைக் குறிப்பிட்டால், அதற்கேற்ப பயண ஏற்பாடுகளை ஒருங்கிணைத்துக் கொள்ளலாம்.

வெளியூரில் இருப்பவர்கள் நாகப்பட்டினம் அல்லது ராமேஸ்வரம் வந்துவிட்டால், உள்ளூர் நண்பர்களின் உதவியுடன் மீனவ கிராமங்களுக்குப் போய் வரலாம். பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாக பேசி, அவர்களின் பிரச்சனைகள் குறித்து, அவர்களையே பேசச்செய்து, ஆவணப்படுத்தலாம். 600க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த காலங்களில் படுகொலை செய்யப்பட்டிருப்பதை ஓர் ஆவணப்படுத்தும் முயற்சியாகவும் இப்பயணம் அமையட்டும்.

இந்த முயற்சியில் பெரும் எண்ணிக்கையிலான இணைய பயனர்கள் கலந்து கொண்டு நமது குரலுக்கு நம்மால் ஆன செயல் வடிவம் கொடுக்க முன்வரும்படி கேட்டுக் கொள்கிறேன்.

கலந்து கொள்ள ஆர்வமுள்ளவர்கள், இந்த முயற்சிகளை ஒருங்கிணைக்கப் பயன்படும் கூகுள் குழுமத்தில் சேர்ந்து மின்னஞ்சல் அனுப்பி (tnfisherman@googlegroups.com)
http://groups.google.com/group/tnfisherman பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். - மா. சிவகுமார்


FOLKS ITS TIME FOR ACTION. PLEASE REACT.