நாளை தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளன். இந்த கெடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஓட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஓட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கெடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஓட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.
நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோல்(ஓட்டு) எடுத்தால் ஆடும் வானரங்களாக இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஓட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஓட்டுப்பதிவு அவசியம்.
வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.
யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய் வரிசையில் நிற்பது. வெயில் காலம் என்றால் வெயிலை காரணம் காட்டியும், மழை காலம் என்றால் மழையை காரணம் காட்டியும் விடுமுறையை மட்டும் அனுபவிக்கும் மக்களும் இங்கு உண்டு. அவர்களால்
பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்க்கு முன்பே வரிசையில் நிற்க முடியும்.
விசா வாங்க தூதரக வாசலில் காவல் காக்க முடியும்.
தலைவர் படம் பார்க்க முதல் நாள் இரவே திரை அரங்கு வாயிலில் தவம் இருக்க முடியும்.
கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வாங்க பல மணி நேரம் வரிசையில் நின்று சீட்டு வாங்க முடியும்.
எல்.கே.ஜி. விண்ணப்பம் படிவம் வாங்க விடியும் முன்பே பள்ளி வாசலில் பலிகிடக்க முடியும்.
ஆனால் நம் உரிமையை நிலைநிறுத்த வரிசையில் நிற்க முடியாது. என்ன நியாயம் சார் இது?
கடமையை செய் பலனை எதிர்பாக்காதே னு கண்ணன் சொன்னாரு
கடமையை செய் பலனை எதிர்பார் னு தலைவர் சொன்னாரு
கடமையை செய்ய மாட்டேன், ஆனால் பலனை மட்டும் எதிர்பார்ப்பேனு நம்மில் பலர் சொல்லுறோம். என்னத்த பலனை அடைச்சேன் காரணமும் கேட்பார்கள். அரசாங்க சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்காத மக்கள் மிக சொற்பமே. அந்த மிக சொற்பத்தில் நம்மவர்கள் வருவது அதை விட சொற்பமே.
நம்மளில் பலர் எனக்கு ஒட்டு இல்லை, ஓட்டு போட எல்லாமா ஊருக்கு போவது வேறு வேலை இல்லை என்று சொல்வதை ரொம்ப பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காதலன், காதலி யை பார்க்க முக்கியமான வேலை எதுவாக இருந்தாலும் விடுத்து பல மைல் பயணம் செய்ய தயாராக இருப்பார்கள், ஆனால் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். வரி கட்டுவதற்கு என்ன என்ன சலுகைகள் இருக்கு என்பதை அறிந்து அதற்கு தேவையான எல்லாவற்றையும் முன் கூட்டிய செய்ய முடியும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டை வாங்க நேரமும், தேவையும் இருக்காது. இதில் ஏதுமே பெருமை பட வேண்டிய விசயம் இல்லை, சிறுமை கொள்ள வேண்டிய விடயங்கள் தான்.
என் தொகுதியில் நிற்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள், அயோக்கியர்கள், ஜெயித்து வந்தால் ஏதும் செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு ஏன் என் ஓட்டை போட்டு விரயம் பண்ண வேண்டும் என்று கேட்பவர்களுக்காக இந்த தடவை ஓ போடும் வசதியும் உண்டு. ஓ போடுவது மூலம் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க வைக்க முடியும்.
விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாதா வாழ்க்கை என்று எதுவும் இல்லை
என்ற வைரமுத்து வரிகளை நினைவில் கொள்ளுவோம். அனைவரும் ஓட்டு சாவடிக்கு வந்தோம் என்பதே நாம் விரும்பும் விடியலுக்குக்கான முதல் படியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
Tuesday, April 12, 2011
ஓட்டு போடுங்க ப்ளீஸ்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, April 12, 2011
20
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல், தேர்தல், விழிப்புணர்வு
Friday, March 18, 2011
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும்
கடந்த 9 முறையாக சென்னையில் போட்டியிட்டு வென்ற நம் தமிழக முதல்வர் கருணாநிதி இம்முறை திருவாரூரில் போட்டியிட போகிறார். அதை குறித்த செய்தி கீழே
திமுக தலைவர் கருணாநிதி இம்முறை திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.- விகடன்
திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட அவரிடம் திருவாரூரில் போட்டியிட என்ன காரணம்? என்றதற்கு, "நான் முதன் முதலில் குளித்தலையில் போட்டியிடுவதற்குப் பதிலாக திருவாரூரில் என் சொந்த ஊரில் தான் போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் அது என்னுடைய சொந்த ஊர். அப்படிப்
போட்டியிட முடியாமல் அந்த தொகுதி அப்போது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது, அதாவது அப்போதிருந்த அரசியல்வாதிகளால் - நான் அங்கே நின்றுவிடக் கூடாது என்பதற்காக - அது தனித் தொகுதியாக ஆக்கப்பட்டுவிட்டது.
இப்போது அது தனித் தொகுதியிலிருந்து விடுபட்டு - பொதுத் தொகுதியாக - நான் அங்கே நிற்கலாம் என்ற அளவிற்கு அது எனக்கு 'கனி'த் தொகுதியாக ஆகிவிட்டது," என்றார்.
1957 ம் ஆண்டு தான் அவர் முதன்முதலாக தேர்தலில் போட்டியிட்டார். அந்த தடவை குளித்தலையில் போட்டியிட்டு வெற்றி வெற்றார். ஆனால் அப்பொழுது திருவாரூர் என்ற தொகுதியே கிடையாது. 1962 ம் ஆண்டு தான் திருவாரூர் தொகுதி உருவாக்கப்பட்டது. இல்லாத தொகுதியை எப்படி அவர் நின்று விட கூடாது என்பதற்காக தனி தொகுதி ஆக்கினார்கள் என்பது தான் எனக்கு புரியவில்லை.
அந்த நேரத்தில் திருவாரூர் எந்த தொகுதியுடன் இணைந்து இருந்தது என்பதை யாராவது கூறினால் அது அப்போது தனி தொகுதியாக இருந்ததா இல்லையா என்பது தெரியும். நன்னிலம், திருத்துறைப்பூண்டி இரண்டும் தனி தொகுதியாக இருந்தது மற்றப்படி நாகை, தஞ்சாவூர், திருவையாறு, மாயவரம் போன்ற தொகுதிகள் எல்லாம் பொது தொகுதிகள் தான். அடுத்த முறை தஞ்சையில் இருந்து வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது தான்.
இம்முறை சென்னை வேண்டாம் என முடிவு எடுத்து இருந்தால் நேரடியாக திருவாரூரில் போட்டியிட ஆசை போட்டியிடுகிறேன் என்று சொல்லாமல், ஏன் அவர் நின்று விட கூடாது என்பதற்காக தான் தனி தொகுதி ஆக்கப்பட்டது என்று தன் வரட்டுத்தனத்தை காட்ட வேண்டும்? மாறவே மாட்டாரா?
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Friday, March 18, 2011
2
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Saturday, February 27, 2010
சிதறல்கள்
இந்த வருட ரயில்வே பட்ஜெட் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்திற்கு பல திட்டங்கள் உள்ளதால் சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. திட்டங்கள் எல்லாம் சரி தான் ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் வேகத்தை காணாம். இந்த வருடம் மார்ச் மாதத்திற்குள் போன பட்ஜெட் டில் அறிவிக்கப்பட்ட புதிய ரயில், விரிவாக்கம் போன்றவை செயல்படுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளார்கள். இதற்கு மட்டும் இவ்வளவு கால தாமதம். ஆனால் நேற்று அறிவிக்கப்பட்ட பெட்ரோல், டீசல் வரி மட்டும் உடனடியாக அமல்படுத்தப்பட்டது. என்னங்கடா நியாயம் இது.
போன வருடம் எங்கள் ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுனு எர்ணாக்குளம் - திருச்சி விரைவு வண்டியை நாகூர் வரை நீட்டித்து இருந்தார்கள். இன்னும் வந்த பாடு இல்லை. மார்ச் இறுதி வரை பொறுத்து இருப்போம். இந்த வருடம் நாகூர் - காரைக்கால் ரெயில்வே திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. விரைவில் திட்டம் நிறைவேற இறைவனை பிராத்திப்பதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கு இல்லை. கூடிய மட்டும் சென்னைக்கு விரைந்து ரயிலை விட்டால் இந்த பகுதிக்கு வந்து போகும் பலரும் உங்களை வாழ்த்துவார்கள். கொஞ்சம் பாருங்கடா கண்ணா!
போன வருடம் தனியார் வசமிடம் ரெயில்வே க்கு சொந்தமான இடங்களை லீஸ் க்கு விடுவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த வருடம் தனியார் மயம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்கிறார்கள். அதற்கும் இதற்கும் ஏதும் சம்பந்தம் உண்டா? அப்படி இல்லை என்றால் போன வருடம் அறிவித்தப்படி லீஸ் க்கு விடப்பட்டதா? இந்த விபரங்களை எங்கு தெரிந்து கொள்வது. இணையத்தில் நான் தேடிய வரையில் எனக்கு ஏதும் கிட்ட வில்லை. விபரம் அறிந்தவர்கள் தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
இந்திய பட்ஜெட் டை பற்றி நேற்று நண்பர்களுடன் கலந்துரையாடும் போதும், பட்ஜெட் எல்லாம் எங்க நாட்டில் நல்லா தான் போடுவாங்க, அதில் 50 % ஆச்சும் குறித்த காலத்தில் நிறைவேற்றினால் எங்கள் நாட்டின் வளர்ச்சி நன்றாக இருக்கும், ஆனால் அது தான் நடப்பது இல்லை என்று சொன்னேன். நண்பர்கள் பலர், நீங்கள் எவ்வளவோ பரவாயில்லை திடமான அரசு என்று ஒன்று இருந்து, திட்டங்கள் போட்டு அதை குறித்த நேரத்தில் நிறைவேற்றுவதை பற்றி கவலைப்பட்டு கொண்டு இருக்கின்றீர்கள். எங்கள் நிலைமை எல்லாம் படு மோசம் என்று சொன்னார்கள். சொன்னவர்கள் - பாகிஸ்தான், கென்யா, ஜிம்ப்பாவே. உண்மை !!! இக்கரைக்கு அக்கரை பச்சை!
நேற்று மாலை வண்டியில் வரும் போது விண்ணைத்தாண்டி வருவாயா பாடல்கள் ஒடிக் கொண்டு இருந்தது. ரூவாண்டன் நண்பன், இந்த பாடலுக்கு இசை ராமன் தானே என்று கேட்க, இல்லை எனக் கூறினேன். இல்லை இல்லை. இது அவன் இசை போல் தான் உள்ளது. A... R... R..A...M...A...N என்று உச்சரிக்க அப்பொழுது தான் எனக்கு புரிந்தது அவன் நம் ரஹ்மானை சொல்கின்றான் என்று. ரஹ்மானே தான் உனக்கு எப்படி தெரியும் என்றால் ஆஸ்கர், கிராமி அவார்ட்ஸ் வாங்கி இருக்கான், இவனை தெரியாதா எனக் கேட்க அப்பொழுது தான் அந்த விருதுகளுக்கு எந்த அளவு உலக அளவில் வீச்சு உள்ளது என்பதை அறிய முடிந்தது. பாடிக் கொண்டு இருந்த பாடல் - அன்பில் அவன். இந்த படத்தின் பாடல்களை காப்பி செய்து வாங்கி சென்றான். மற்ற படங்களை சி.டி. யில் போட்டு கேட்டு உள்ளான். (அவனை பொருத்தவரை ஆல்பம்) ஹும்ம்ம் Once again HATS OFF RAHMAN. சில பாடலகள் மட்டும் Close to Heart என்று சொல்ல முடியும், அது போல் இந்த படத்தில் வரும் மன்னிப்பாயா, அன்பில் அவன் இரண்டும் அந்த வகையில் உள்ளது.
ரசித்தவை:
வா ங் கி க் கொ ள் வே ன்
by நெல்லை கண்ணன்
இருக்கின்ற விருதெல்லாம் எனக்கே தாரும்
எனை விட்டால் இதற்கெல்லாம் யார் தான் உள்ளார்
படுப்பதற்கு விருது எழுந்து நின்று
பார்ப்பதற்கு ஒரு விருது நாட்டை நன்கு
கெடுப்பதற்கு விருது மேலும் என்னவெல்லாம்
கிளர்ச்சி தரும் விருதுகளோ அவற்றையெல்லாம்
தடுப்பதற்கு யார் உள்ளார் யாரும் இல்லை
தந்து கொண்டே இரும் நானும் வாங்கிக் கொள்வேன்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, February 27, 2010
9
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Tuesday, May 12, 2009
தொகுதி அலசல் - நாகப்பட்டினம்
நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.
இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.
மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.
சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.
இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:
1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)
2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)
3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)
4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)
மற்றும் 3 சுயேச்சைகள்.
குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.
7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.
இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.
மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.
நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.
வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, May 12, 2009
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, May 11, 2009
கதம்பம்
தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.
*******
தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.
*******
எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.
*******
தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.
*******
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, May 11, 2009
15
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, April 09, 2009
வாழ்க சனநாயகம் 6 - தந்தி/தமிழர் பேரணி
முன்குறிப்பு!
இந்த பதிவை படிக்க வாய்ஸ் மாடுலேசன் ரொம்ப முக்கியம், பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நபர்களின் குரலில் முயற்சி செய்து படிக்கவும்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை(ஏப்ரல் 9) தமிழர் பேரணி!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும். இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
நன்றி : விகடன்
வடிவேலு : ஏண்டா, இன்னும்மாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?
நன்றி : வின்னர் படக் குழுவினர்
பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி தந்தி!
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், "இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில் இருந்து காப்பாற்றுங்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தை தொடங்குவதை உறுதி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : விகடன்
கவுண்டமணி : யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா
நன்றி : மாமன் மகள் படக் குழுவினர்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, April 09, 2009
20
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல், வாழ்க சனநாயகம்
Monday, March 30, 2009
வாழ்க சனநாயகம் 5 - தமிழ் புத்தாண்டு
தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு
தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....
'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.
ஆன்றோர், சான்றோர், புலவர் னு கேட்க நல்லா வக்கனையாக இருந்துச்சு. மக்களும் ஒத்துக்கிட்டாங்க!
இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது.
உண்மை. கோடிக்கணக்கான தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினார்களே. பதிவுலகமே பரபரத்துச்சே. பதிவு , மின் வாழ்த்து, சச்சரவுனு கலக்கிட்டாங்கள!
ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.
அதே பழமைவாதிகள் அப்பவே எதிர்ப்பு குரல் கொடுத்தார்களே!
பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது.
பெரும்பான்மையா? ஏற்கனவே கோடிக்கணக்கான தமிழர்கள் தைத் திங்களை புத்தாண்டாக கொண்டாடியதாக நீங்களே சொல்லிட்டீங்க, அப்ப மிச்சம் இருப்பதும் சில கோடிகள் தானே, இந்த சில கோடிகளுக்காக அந்த சில பல கோடிகளை முட்டாள்கள் ஆக்கி விட்டீர்களே!
இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு
ஆங்! அப்படி சொல்லுங்க, பொது தேர்தல் வந்தா எல்லாமே பின்வாங்குவீங்க போல.
வச்சா குடுமி அடிச்சா மொட்டை.
அரசு ஆனது ஒரு முடிவு எடுப்பதுக்கு முன்பு எல்லா சாதக பாதகங்களையும் பார்த்து தான் முடிவு எடுக்கனும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்லவே. இஷ்டXXXXக்கு மாற்ற.
தேவர்மகன் நாசர் வசனம் என் பதிவில் அடிக்கடி குறிப்பிட வேண்டியதா இருக்கு. அந்த வசனம் மீண்டும் ஒரு முறை
"இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"
அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க. நல்லா இருங்க. வாழ்க சனநாயகம்!
செய்தி : நன்றி - இட்லிவடை
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, March 30, 2009
41
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல், வாழ்க சனநாயகம்
Tuesday, March 17, 2009
கதம்பம்
நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.
தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.
நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.
வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.
Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.
Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.
Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.
லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!
இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,
பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, March 17, 2009
38
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, February 23, 2009
வக்கீல்களுக்கு கண்டனம் - விளக்கம்
நேற்று வக்கீல்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வைகோவின் கண்டன ஆர்பாட்ட அறிவிப்பிற்கு கண்டனம் தெரிவித்து ஒரு பதிவு இட்டு இருந்தேன். அடேங்கப்பா அதை படித்து அதில் உள்ள விசயத்தை உள்வாங்கமாலே சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவாக எழுதி இருக்கேன் ஒரு சாரார் முடிவு பண்ணிட்டாங்க போல. வக்கீல்களுக்கு கண்டனம் என்றால் சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு யாருங்க சொன்னா? சுத்த அறிவிலித்தனமாக இல்லை? இருந்ததும் அதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. இருந்தாலும் நண்பர்கள் சிலர் மெயிலில் இது குறித்து கேட்டதால் இந்த விளக்க பதிவு.
சுப்ரமணிய சுவாமிக்கும் எனக்கும் என்ன சம்பந்தம். ஒரு மண்ணும் கிடையாது. அவர் அவ்வபோது தன் பேட்டிகளின் மூலம் மக்களை சந்தோசப்படுத்தும் ஒரு அரசியல் காமெடியன். இது தான் அவர் மீது எனக்கு இருக்கும் கணிப்பு.
சுப்ரமணிய சுவாமி விடுதலை புலிகள் ஏதிரானவர் என்றும் இலங்கை அரசுக்கு ஆதரவாக கருத்து கூறுகிறார் என்றும் அனைவரும் அறிந்ததே. ஆனால் சுப்ரமணிய சுவாமி அன்று நீதி மன்றத்திற்க்கு சென்றது சிதம்பரம் தீட்சிதர்கள் சார்பாக வழக்காட அனுமதி கோரி. அது நியாயமா இல்லையா என்பது வேறு. ஆனால் அதற்கும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக கோர்ட் புறக்கணிப்பில் இருக்கும் வக்கீல்களும் என்ன சம்பந்தம். தங்களுடைய வன்மத்தை அவர் மேல் காட்ட முற்பட்டது ஏன்?
அப்படியே அவருக்கு தங்கள் எதிர்ப்பை காட்ட வேண்டும் என்றால் நீதிமன்ற வளாகத்தில் அவரை எதிர்த்து குரல் எழுப்பி இருக்கலாம். கருப்பு கொடி காட்டி இருக்கலாம். ஏன் முட்டையால் கூட அடித்து இருக்கலாம். அதை எல்லாம் அப்பொழுது செய்யவில்லை. ஏன் என்றால் அவருடன் பாதுகாவலர்கள் இருந்தார்கள். அதான் அடிக்க தைரியம் இல்லை. அதை விடுத்து ஜனநாயகத்தின் கடைசி நம்பிக்கையான நீதிமன்றத்தின் உள்ளே சென்று, கதவுகளை தாழ் இட்டு கொண்டு அதுவும் நீதிபதிகளின் முன்னே அவர் மீது முட்டை அடித்தும், கன்னத்தில் அறைந்தும் நீதிமன்றத்தையே அவமதித்து உள்ளார்கள் நம் வக்கீல்கள். அதை தான் தவறு என்று சொல்கிறேன்.
சரிங்க, அதை மீறி அவர் மீது முட்டை அடித்ததுக்கு காரணம் ஈழ தமிழர்களுக்கு எதிராக சுவாமி நடக்கிறார் என்பதால் உணர்ச்சிவசப்பட்டு முட்டை அடித்தோம், அதில் என்ன தவறு இருக்கிறது என்று நம்பும் வக்கீல்கள் தைரியமாக அடித்ததை ஒத்துக் கொண்டு ஆமாம் அடித்தோம் என்று சொல்லி சட்டப்படி அதை சந்திக்க வேண்டியது தானே. ஏன் ஒடி ஒளிய வேண்டும். சிலரை கைது செய்த பிறகு சுவாமி மீது ஜாதி பெயரை சொல்லி திட்டினார் அவரை கைது செய்த பிறகு எங்களை கைது செய்ய வேண்டும் என்ற ஏன் புகார் கொடுக்க வேண்டும். அப்படியே திட்டி இருந்தால் அன்றே புகார் கொடுத்து இருக்க வேண்டியது தானே. இதில் ஏதுவுமே செய்யாமல் பேடித்தனமாக நடந்துக் கொண்டார்கள் நம் வக்கீல்கள் என்பது தான் என் வாதம்.
போலீசார் தடியடி என்பதை விட கொலை தாக்குதல் நடத்தியது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. அவர்களாக நான் பரிந்து பேசவும் இல்லை. சோறு வைத்தால் வாலாட்டி கொண்டு போகும் நாய் போலவே தான் யார் அதிகாரத்தில் இருக்கிறார்களோ அவர்கள் ஆசைப்படி நடந்து கொள்பவர்கள் நம் காவலர்களில் பலர். அதற்கு உதாரணம் மூன்று மணி நேரம் கலாட்டாக்களுக்கு பிறகு தான் கமிஷ்னர் வந்து தலையை காட்டுகிறார். இதை விட முக்கியமான வேலை அவருக்கு என்ன இருந்தது என்பது அவருக்கு தான் வெளிச்சம். சட்டக்கல்லூரியில் கை கட்டி வேடிக்கை பாத்தார்கள், இப்பொழுது கண்ணில் பட்டவர்கள் எல்லாம் தாக்கி இருக்கிறார்கள். மூளையையும், மனசாட்சியையும் கழட்டி விட்டு யூனிப்பார்ம் போடுவார்கள் போல.
இந்த சம்பவத்தில் இரு தரப்பின் மீது தவறு உள்ளது என்பது மறுக்க முடியாது உண்மை. ஆனால் பிரச்சனைக்கு அஸ்திவாரம் போட்டது வக்கீலகள் என்பதை மறுந்து விட கூடாது. இது போன்ற தவறுகள் மீண்டும் நடக்காமல் இருக்க கடுமையான தண்டனைகள் வழங்க வேண்டும்.
இதை எல்லாம் நடக்க விட்டும் வேடிக்கை பாத்து கொண்டு இருக்கும் தமிழக அரசை கண்டால் கேவலமாக இருக்கிறது. பீகாரை முந்தி விட வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படாமல் இருக்கிறது நம் அரசு. முதல்வர் மருத்துவமனையில் இருந்தால் மற்றவர்கள் எல்லாம் என்ன பண்ணுகிறார்கள். முதல்வரை அவர் குடும்பத்தாரும், டாக்டர்களும் பார்த்துக் கொள்வார்கள். நீங்கள் வந்து அவர் அவர் வேலையை பாருங்கள்.
இந்த சம்பவங்களுக்கு பின்னால் அரசியல் சதி உள்ளது என்பது உண்மையாக இருக்கலாம். நானும் அதை நம்புகிறேன். ஆனால் படித்த அதுவும் சட்டத்தை படித்த வக்கீலகள் ஏன் இதற்கு பலியாகி இப்படி நடந்துக் கொள்ள வேண்டும். ஆக இப்பொழுது பிரச்சனை திசை திரும்பி விட்டது. இதை எதிர்பார்த்தவர்களுக்கு ரொம்ப சுலபமாக வேலை முடிந்ததில் மகிழ்ச்சி. நடுவில் மாட்டிக் கொண்டு முழிப்பது வக்கீல்களும், போலீசாரும் பொது மக்களும் தான்.
போன பதிவில் பதிந்த என் கண்டனத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஈழ பிரச்சனைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்யுங்கள். அதை தவிர்த்து மற்றவற்றில் கவனத்தை திசை திருப்பாதீர்கள். உங்கள் சுயலாபங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அளிக்கும் ஆதரவை அசிங்கப்படுத்தாரீகள். இதில் உங்கள் சாக்கடை அரசியலை கலக்காதீர்கள்.
வக்கீல்களுக்கு கண்டனம் தெரிவித்தால் பார்ப்பான் என்று சொல்வதும், பார்ப்பான் அல்லாதவனை பார்ப்பான் அடிவருடி என்று சொல்வதும் எந்த விதத்தில் நியாயம் என்பது தான் எனக்கு புரியல. ஒருவரின் கருத்துக்கு எதிர் கருத்து இருந்தால் கருத்துகளை எதிர் வைக்கவும். தனி மனித தாக்குதலை தவிர்க்கவும்.
எல்லாருக்கும் எல்லாமாக எல்லாநேரத்திலும் இருக்க முடியாது. புரிந்தவர்களுக்கு நன்றி. புரியாதவர்களுக்கும் நன்றி.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, February 23, 2009
25
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Tuesday, December 02, 2008
டைரிக் குறிப்பு - 2 (இந்திய அரசியல்)
மகாராஷ்ட்ரா துணை முதல்வர் ராஜினாமா, உள்துறை அமைச்சர் ராஜினாமா, ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக பதவியேற்பு என இந்திய அரசு பரபரப்பாக இயங்கி கொண்டு இருக்கின்றது. இருந்த போதிலும் இந்தியா இன்னும் பல முக்கிய மற்றும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். முக்கியமாக தேசிய பாதுகாப்பிலும், பதில் நடவடிக்கை, உளவுத் துறை போன்ற விசயத்தில். பொறுத்து இருந்து பார்ப்போம்.
இந்தியாவில் மும்பையில் நடைப்பெற்ற சம்பவத்துக்கு யாரு காரணம் என்று கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய அரசு உள்ளது. ஆனால் அதுக்குள் இங்கு மக்கள், எல்லை தாண்டிய தீவிரவாதிகள், பாக் ஆதரவு தீவிரவாதிகள் என்று ஒரு பக்கமும், முஸ்லீம் பயங்கரவாதிகள் என மறுபுறமும், இந்துத்வா வே இதை செய்து இருக்கலாம் என ஒரு பிரிவினரும் குரல் எழுப்ப தொடங்கி விட்டார்கள். அதில் நம் பதிவர்களும் அடக்கம். மக்கா இதை எவன் செய்து இருந்தாலும் எந்த மண்ணாங்கட்டி மதமாக இருந்தாலும் சரி இதுக்கு துணையாக இருந்த அத்தனை பெயரையும் பிடித்து தூக்கில் இட வேண்டும் என்பதே எங்களை போன்றோரின் எண்ணம். அதை விடுத்து இந்த பிணந்தின்னி அரசியலை தொடராதீர்கள்.
இங்கு இப்படி என்றால் பாகிஸ்தானில் அரசில் இருந்து மக்கள் வரை எதற்கெடுத்தாலும் இந்தியா பாகிஸ்தானை குறை கூறுவது சரி அல்ல, ஆதாரத்தை காட்டுங்கள் என அறிக்கை விடுவதும், ஆங்காங்கே கண்டன ஆர்பாட்டம் ஊர்வலம் நடப்பதுமாக உள்ளது. ஆனால் இந்தியாவின் மீது ஏவப்படும் ப்ராக்ஸி வார்(போர்) க்கு பாகிஸ்தான் தான் பின்புலமாக திகழ்கின்றது என்பது உலக அறிந்த உண்மை. ஆப்கானில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ தான் காரணம் என்று அமெரிக்காவே குற்றம் சாட்டி உள்ளது என்பதும் இங்கு குறிப்பிட்ட காண வேண்டிய விசயம். பாகிஸ்தான் என்று கூறுவதால் ஒட்டு மொத்த பாகிஸ்தானையும் குறை கூறுவதாக அர்த்தம் இல்லை. பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாதம் அமைப்பை தான் இந்தியா குற்றம் சாட்டுவதாக என் எண்ணம்.
மும்பை பயங்கரம் முடிவுக்கு வந்த அடுத்த நாளே கராச்சியில் நடைபெற்ற கலவரத்தில் 16 நபர்கள் இறந்தும், 40 க்கு மேற்பட்டோர் காயம் அடைந்தும் உள்ளனர். இதில் இந்தியாவின் கை இருக்கலாம் என அங்கு உள்ள மக்கள் அச்சம் எழுப்பி உள்ளனர். இந்தியா பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் வாய்ப்பு உள்ளாதாகவும்,அதை முன்னிட்டு ஆப்கான் எல்லையில் இருந்து 1 லட்சம் படை வீரர்களை விலகி இந்திய எல்லையில் நிறுத்த இருப்பதாக செய்தி. இது போதாது என்று நேட்டோ படைகளுக்கு அளிக்கும் ஆதரவை விலகி கொள்ளா விட்டால் தலிபான் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் என்று ஒரு அறிக்கை கூறுகிறது. உண்மையில் பாகிஸ்தான் மிகவும் இக்கட்டான நிலைமையில் உள்ளது. ஒரே ஆறுதல் நம் புல்தடுக்கி பயில்வான் அரசு இது வரைக்கும் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும் எண்ணத்திலோ பயங்கரவாதிகளை பாகிஸ்தானில் நுழைந்து பிடிப்பது போன்ற எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை என்பதே.
உலகமே பற்றி எரிந்தாலும் சரி, எவன் எக்கெடு கெட்டு போனாலும் சரி நம் அரசியல் நடந்தா சரி என்று இருக்கும் நம் தமிழக அரசியல் தலைவர்கள். சில நாள் வரை இலங்கை பிரச்சனை இப்பொழுது அருந்ததி பிரச்சனை. நல்லா இருங்கடே. உங்க பொழுப்பு நல்லாவே நடக்குது.
நாகை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களை மிக கடுமையாக தாக்கிய நிஷா (பெயர் நல்லா இருக்கு) நாகை அதன் சுற்று வட்டாரங்களில் இன்னும் தண்ணீர் வடியவில்லை என்பதை கேட்க நல்லாவே இல்லை. திருவாரூர் அருகே உள்ள அம்மையப்பன் பகுதிகளிலும் சீர்காழி பகுதிகளிலும் சிறிய வாகனங்கள் போக முடியாத அளவுக்கு இன்னும் நிலைமை நீடிக்கிறது. ஸ்டாலின் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு நிவாரணம் அளிக்கப்படும் என்று ஆறுதல் அளித்து உள்ளார். எவன் ஆட்சிக்கு வந்தாலும் நிவாரணம் அளிப்பதில் தான் குறியாக இருக்கானே தவிர அடிப்படை வசதிகளை மேம்படுத்த யாரும் தயாராக இல்லை என்பது தான் நிதர்சனம். பணம் ஒட்டாக மாறும் வரை இதே நிலைமை தான் நீடிக்கும்.
மழை இந்த கொட்டோ கொட்டு என்று கொட்டி உள்ளது. ஆனாலும் அடுத்த வருடம் வழக்கம் போல் தண்ணீருக்கு அடுத்த மாநிலங்களிடம் கை ஏந்தி கொண்டு தான் இருக்க போகிறோம். அவ்வளவு தண்ணீரும் வீணாக கடலில் கலப்பதை தடுத்து குறைந்தபட்சம் கடலோர நகரங்களில் ஆவது சில தடுப்புணைகளை உருவாக்கலாம். சிந்திப்பார்களா? சென்னையில் நிலைமை இன்னும் மோசம். ஏரி, குளங்களில் உள்ள ஆக்கரமிப்பை அகற்றியும், வடிக்காலை ஒழுங்குப்படுத்துவதையும் தவிர்த்து வேறு வழி இல்லை.
குடும்ப சண்டைகளை விலக்கி, தமிழன தலைவராக நிலைநிறுத்திக் கொள்ள தொடர்ந்து எழுதும் அறிக்கைகளை, கடிதங்களை நிறுத்தி தமிழக மேம்பாட்டிற்கு ஏதாவது உபயோகமாக செய்தால் புண்ணியமாக போகும் நமக்கு எல்லாம். எதிர்கட்சியும் எல்லாத்துக்கு நொண்டி நாட்டியம் ஆடாமல் உள்கட்சியை பலப்படுத்துவது போன்ற நடவடிக்கையில் இறங்கலாம்.
இந்திய குண்டுவெடிப்பை தொடர்ந்து ஐ.நா. தன் கண்டத்தை பதிவு செய்து இருந்தது. அதை தொடர்ந்து ஐ.நா.விடம் எழுப்பட்ட கேள்விக்கு தொட்டும் தொடாமலும் தான் பதில் அளித்து உள்ளது. அதன் விபரம்
Question: In view of this weekend’s events in India, in which there is tension between India and Pakistan which has arisen, is the Secretary-General going to intervene at some point in time to caution, I mean some sort of, I mean talks between India and Pakistan, you know, to lessen the tension that has arisen over there?
Deputy Spokesperson: The Secretary-General, as you know, was one of the first to express his strong condemnation of these attacks, as well as his sympathy and solidarity with the Government and people of India. That solidarity extends to other nations who lost citizens in these heinous attacks. He reiterates his strong condemnation today. He also joins in the call, by Indian authorities, for full cooperation, by all concerned both inside and outside the country, with their investigation.
Question: What will he do, you know, to, because there are indications that India may, in an act of reprisal, attack? Pakistan fears it may attack Pakistan, because although it says it has nothing to do with those non-state actors, but still the responsibility is being pinned on Pakistan. What does the Secretary-General plan to do about that?
Deputy Spokesperson: I just read to you what the Secretary-General has said on the subject.
Question: Yes, following up on the India-Pakistan situation, the Pakistan Ambassador sent a letter to the Secretary-General yesterday. Does he have any comments on it?
Deputy Spokesperson: I have to follow up on the receipt of the letter. I am not aware of a receipt of a letter from Pakistan.
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, December 02, 2008
15
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல், அனுபவம், ஐ.நா., டைரிக் குறிப்பு
Thursday, November 27, 2008
இந்திய பிரதமரே!
இந்திய பிரதமரே!
வணக்கம். இந்திய மக்கள் ஆகிய நாங்கள் நலமாக இல்லை. எங்களின் தலைவராகிய நீங்களாவது நலமாக உள்ளீர்களா? நேற்று இரவு நடந்த குண்டுவெடிப்புக்கு பிறகு எப்படி நலமாக இருக்க முடியும் என்று கேட்குறீர்களா.. அதுவும் சரி தான். இன்னும் சில நாட்களுக்கு உங்களை நாட்டில் உள்ள பிரதான எதிர்கட்சி முதல் கடைசி குடிமகன் வரை கேள்விகளாலும், விமர்சனங்களாலும் துளைத்து எடுக்க போகிறார்கள். அவர்களை எப்படி சமாளிப்பது என்ற கவலையே உங்களை வாட்டி எடுத்து கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் நானும் என் பங்கிற்கு இரண்டு பைசாகளை கொடுத்து விட்டு போகிறேன்.
இன்று இரவு நாட்டு மக்களுக்கு ஆற்ற வேண்டிய உரை தயாரிக்கும் பணியில் மும்முரமாக இருப்பீர்கள். இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு யோசனை. ஒவ்வொரு தடவையும் குண்டிவெடிப்பிற்கு பிறகு உரை தயாரிப்பதற்கு பதில் அனைத்திற்கும் பொருந்துகின்ற மாதிரி ஓரு உரையை உங்கள் துறையினரிடம் சொல்லி தயாரித்து வைத்து கொள்ளுங்கள். தேதி, இடம், வெடித்த குண்டுகள், இறந்தவர்கள் எண்ணிக்கை, நிவாரண தொகை ஆகிய இடங்களை மட்டும் காலியாக விட்டு அந்தந்த குண்டுவெடிப்புக்கு ஏற்ற மாதிரி நிரப்பி கொள்ளலாம். ஏன்னென்றால் குண்டுவெடிப்புகளும் நிகழாமல் இருக்க போவது இல்லை. உங்கள் அறிக்கையும் வராமல் இருக்க போவது இல்லை.
நீங்களும் எப்பொழுது போல எந்த விதமான பயங்கரவாதத்தையும் இந்தியா சகித்து கொள்ளாது, இதற்கு காரணமானவர்களை கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம். புதிதாக எந்த ஒரு சட்டம் தேவையில்லை. உலக நாடுகளுடன் இணைந்து பயங்கரவாதத்தை எதிர்கொள்வோம். பயங்கரவாதிகளை இரும்பு கரம் கொண்டு அடக்குவோம். blah.. blah.... இதை தவிர வேறு என்ன சொல்லி இருக்கீங்க அல்லது செய்து இருக்கீங்க. இந்த தடவையும் அதே பல்லவி தானே?
எதிர்கட்சிகள் உங்கள் அரசு அனைத்து வகையிலும் தோற்று விட்டது அதற்கு பொறுப்பு ஏற்று உங்களை பதவி விலக சொல்லும். நீங்கள் பதவி விலகினாலும் ஒன்றும் ஆக போவது இல்லை என்ற நிதர்சனம் அறிந்தே அவர்களும் குரல் எழுப்புகிறார்கள் என்று அறிந்து தான் உள்ளோம். இருந்தாலும் கேள்வி எழுப்ப வேண்டியது அவர்கள் கடமை. அதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்காமல் உங்கள் உள்துறை அமைச்சர் பதில் விதாண்டவாதம் பேசுவார். இந்த வருடத்தில் மட்டும் எத்தனை குண்டுகள் நம் நாட்டில் வெடித்து உள்ளது, எத்தனை இந்திய மக்கள் இறந்து உள்ளார்கள் என்பதை ஒரு முறை எண்ணி பார்த்து அவர் தன் வாயை திறப்பது சால சிறந்தாக இருக்கும்.
உண்மை தான், இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம் இந்தியாவில் மட்டும் இல்லை உலகெங்கும் தான் நடக்கிறது. அமெரிக்காவில் இல்லையா, இங்கிலாந்தில் இல்லையா என கேள்வி எழுப்பவது நியாயம் தான். ஆனால் அங்கு ஒரு முறை நடந்ததுக்கே செய்தவனின் டவுசரை கழுற்றினார்கள். ஆனால் நாமோ ஒவ்வொரு முறையும் நம் டவுசரை அல்லவா கழுற்றி விட்டு காட்டி கொண்டு இருக்கிறோம். அதை ஏன் ஒப்பு கொள்ள மறுக்கிறோம்.
ஆனாலும் இதில் ஒரு பெருமை பட விசயம் உள்ளது. ஈராக், ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனுக்கு அடுத்தபடி நம் நாட்டில் தான் அதிக குண்டுவெடிப்புகள் நடந்து கொண்டு இருக்கிறது என்ற பெருமைதான் அது. முதல் ஐந்து இடங்களுக்குள் வருவது என்பது சதாரணமான விசயமா என்ன? அதற்கு ஒரு பூச்செண்டு உங்கள் அரசாங்கத்துக்கு. அது மலர் வளையமாக தெரிந்தால் அதற்கு நீங்களும் உங்கள் அரசும் தான் முழு பொறுப்பு.
எல்லை தாண்டிய பயங்கரவாதம் நம் பாராளுமன்றம் வரை வந்தும் நமக்கு புத்தி வரவில்லை. எனக்கு ஒரே ஒரு சந்தேகம் தான் பயங்கரவாதம் எப்படி எல்லையை தாண்டி உள்ளே வருகிறது. சந்திரன் வரைக்கும் சென்ற நம்மால், இதை கண்டு பிடிக்கவோ தடுக்கவோ முடியவில்லை என்றால் எல்லையை பலப்படுத்தாமல் என்ன மயிற்றுக்கு நிலாவ நொண்டிக்கிட்டு இருக்க என்ற கேள்வி வருது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.
எல்லை தாண்டி வந்தவர்களால் மட்டும் இவ்வளவு அருமையாக திட்டமிட்டு குண்டுவெடிப்புகளை நிகழ்த்த முடியுமா? கண்டிப்பாக முடியாது என்பதை நான் மட்டும் அல்ல நீங்களும் ஒற்றுக் கொள்வீர்கள். அப்ப இங்கு இருக்கும் சிலரும் அதற்கு துணை போகின்றாகள். குறைந்தபட்சம் அவர்களையாவது கண்டுபிடித்து வேரறுத்தால் என்ன? அது எப்படி முடியும் நாம் தான் ஜனநாயக நாடு ஆச்சே. கூடவே சகிப்புதன்மையின் ஒப்பற்ற பிதாமகன்களாக வேறு திகழ்ந்து கொண்டு இருக்கிறோம். கண்டுப்பிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம், ஆனால் சட்டம் தன் கடமையை செய்ய விடாமல் மனிதாபிமானம் என்ற வார்த்தையை பிடித்து தொங்குவோம். பாத்திரம் அறிந்து பிச்சை இடு என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது. அது சரி நம் நாட்டின் முன்னாள் பிரதமரை கொல்ல உதவியே மக்களுக்கே கருணை காட்டிய மக்கள் ஆச்சே நாம். வாழ்க.
பாக்தாத், காபூல், மும்பை என்ற வரிசையில் அடுத்து எந்த இந்திய மாநகரம் சேர போகிறது என்ற வாக்கெடுப்பு நடப்பதாக கேள்வி. வாக்கெடுப்பு முடிவுக்காக காத்து இருக்க போகின்றீர்களா இல்லை வேறு ஏதும் செய்யும் எண்ணம் உள்ளதா? சொரணையற்ற தேசமாக இன்னும் எத்தனை நாட்களுக்கு தான் என் தேசம் இருக்க போகிறது. நீங்களும் இந்த நாடும் ஏன்றைக்கு சுயமாகவும் தைரியமாகவும் முடிவுகளை எடுக்க போகின்றது.
சரி வெட்டி கதை எதற்கு, இது வரை நடந்தற்கு என்ன பண்ண போகின்றீர்கள் என்று அறிந்து கொள்ளும் ஆவல் எனக்கு இல்லை. நாளை இந்திய மண்ணில் வாழ எங்களுக்கு பாதுகாப்பாக வாழ வழி இருக்குமா என்ற கேள்வி மட்டும் தான் உள்ளது.
ஒவ்வொரு முறையும் குண்டுவெடிப்புக்கு பின், இந்திய மக்கள் தங்கள் ஒற்றுமையை பறை சாற்ற வேண்டிய நேரம் இது, பயம் கொள்ள தேவையில்லை அமைதி காக்கவும் என்று சொல்லி சொல்லி உங்களுக்கும் அலுத்து விட்டது எங்களுக்கும் அலுத்து விட்டது. வேற எதாச்சும் செய்யுங்க எஜமான்!
இப்படிக்கு, 
இன்னுமாடா இந்த நாடு நம்மள நம்புது என கேட்கும் குரலை அலட்சியப்படுத்தி கொண்டே இந்திய அரசாங்கத்தின் மூலம் இந்த நாட்டின் எந்த பகுதியிலும் பாதுகாப்பாக வாழ முடியும் என்று இன்னமும் நம்பும் ஒரு இந்திய குடிமகன்.
ஜெய்ஹிந்த்!
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, November 27, 2008
22
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Saturday, June 30, 2007
உயிர் வாழனுமா? அரசியல் வேண்டாமய்யா...
கல் வீச்சு
கொடும்பாவி எரிப்பு
ஆட்டோவில் வந்து அடிப்பது
உருட்டு கட்டையால் உருட்டி எடுப்பது
ஆசிட் வீசுவது
செருப்பால் அடிப்பது
பஸ்சை கொளுத்துவது
கை, கால் எடுப்பது
அரிவாளால் வெட்டுவது
போலீசாரை ஏவி விடுவது
பொய் வழக்கு போடுவது
கஞ்சா வழக்கு
ப.ஆபிஸ் கொளுத்துவது
கை ஏறி குண்டு வீசுவது
என்று நாள் ஒரு மேனியாக வளர்ச்சி அடைந்து இன்று
ரிமோட் குண்டுல வந்து நிக்குது...
வேணாமய்யா இந்த அரசியல் நமக்கு, ஒழுங்கா பொழப்ப பாத்தோமா, வெட்டி நியாயம் பேசி தேர்தல் அன்னிக்கு கிடைக்கும் விடுமுறை அனுபவிச்சோமா, ஒரு வீடு வாங்கினோமா,ஒரு கார் வாங்கினோமா, கேட்குற வரிய கட்டினோமா, புள்ள குட்டிகள படிக்க வைச்சோமம, அதுக்கு ஒரு கண்ணாலம் காட்சிய பாத்தோமா என்று வாழுற வழிய பாருங்கய்யா.....
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Saturday, June 30, 2007
38
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல்

