Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)

Monday, October 23, 2006

தீபாவளி கொண்டாட்டம்!

இந்த தீபாவளிக்கு முன்பு வரை தீபாவளி அன்று ஊரில் இல்லாமல் இருந்தது இல்லை(தாத்தா மறைந்த வருடத்தை தவிர). இந்த வருடம் ஊருக்கு போக முடியாது என்று தெரிந்தவுடன் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அப்புறம் சிலதை பெற சிலதை இழப்பது தானே வாழ்க்கை(தத்துவம் நல்லா இருக்குல) என்று எனக்கு நானே ஆறுதல் சொல்லி மனதை தேற்றிக் கொண்டேன். இதுக்கு நடுவில் நம் வீட்டிற்கு போன் பண்ணும் போது எல்லாம் புது துணி எடுத்துட்டியானு ஒரே குடைச்சல். நானும் புது துணி ஒன்னுக்கு தான் இங்க குறைச்சல்னு சொல்லிட்டேன். வியாழக்கிழமை அன்னிக்கு காலையில தலைநகரத்தில் இருக்கும் நம்ம பய போன் பண்ணி என்ன சிவா, இந்த தடவை தீபாவளிக்கு வீட்டுக்கு போக முடியாம போச்சேனு பீல் பண்ணி நம்மளையும் பீல் பண்ண வச்சுட்டான். டேய், பேசாம நீ இங்க வாடா நாம் எதாச்சும் பண்ணலாம் அவனை கூப்பிட்டேன், அது சரியா வராது நீங்க இங்க வாங்க நான் மத்த பசங்களையும் கூப்பிடுறேன் சொல்ல, இதுவும் நல்ல ஐடியாவே இருக்குனு உடனே கிளம்பியாச்சு. வியாழன் இரவு அங்க போயிட்டு அடுத்த நாள் சமைக்க வேண்டியது எல்லாம் வாங்கிட்டு, நல்லா சாப்பிட்டுட்டு தூங்கியாச்சு.

வெள்ளிக்கிழமை நாம எப்படி தீபாவளி கொண்டாடுவது என்று திட்டம் வகுக்கும் படலம் ஆரம்பித்தது. பசங்க ஆளுக்கு ஒன்னா சொல்லிக்கிட்டு இருந்தாங்க, நாம நாட்டாமை மாதிரி நடுவில் புகுந்து புது துணி எடுக்குறோம், சுழியம், வடை, பாயசத்துடன் செய்து சாப்பிடுறோம், மத்த பசங்களை போயி பாக்குறோம். இது இந்த நாட்டாமை தீர்ப்பு எவனும் தீர்ப்ப மாத்த சொல்லக்கூடாது, வண்டிய உடுங்கடா டிரஸ் எடுக்க போவோம் சொல்லிட்டேன். டிரஸ் எடுக்க போனா ஒரு கடை கூட இல்ல. என்னடானு பாத்தா நைட் எட்டு மணிக்கு மேல தான் திறப்பாங்க சொல்லிட்டானுங்க. சரினு மத்த தமிழ் பசங்களை பாக்கலாம் போயி எல்லா மக்களையும் பார்த்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டோம் என்பதை விட நல்லா சாப்பிட்டோம். அப்பால போயி டிரஸ் எடுத்துட்டு மறுபடியும் போய் மத்த பசங்களை பார்த்துட்டு தீபாவளிக்கு அவர் அவர்கள் ஊரில் அடித்த கூத்துக்களை எல்லாம் சொல்லி மகிழ்ந்தோம். வீட்டிற்கு வர மணி 2.30 ஆச்சு.

தீபாவளி அன்று நல்லா தூங்கிட்டு இருக்கும் போது அதிகாலையில்(7.20) இல்ல இல்ல நடு ராத்திரினு கூட சொல்லாம் நம்ம கைப்பேசி தூது வருமா தூது வருமா சவுண்டு விட எடுத்து பாத்தா வேற யாரு, இந்த புண்ணியவான பெற்ற மகான்கள் தான். அவங்கிட்ட வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொண்டு நம் பணியை தொடர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கும் போது நம்ம பய வந்து ஒரு அதிமுக்கியமான கேள்விய கேட்டான். சிவா, தலைக்கு எண்ணெய் வைக்கனும், உன்கிட்ட நல்லெண்ணெய், அரப்பு, சீயக்காய் எல்லாம் வச்சு இருக்கியானு கேட்டான். டேய், நல்ல நாள் அதுமா என்ன கொலைக்காரனா ஆக்காம ஒடிப் போயிடுனு சொல்லிட்டு விட்ட பணிய தொடர போன சமயத்தில் வேற ஒருத்தன் காபியுடன் வந்தான். படுக்கை காபி கொடுக்கும், நீ வாழ்க உன் குடும்பம் வாழ்கனு சொல்லிட்டு காபி கொடுடா கேட்க போயி பல் தேய்ச்சுட்டு வாங்குறான். டேய் எங்க இருந்துடா வறீங்க நீங்க எல்லாம், போயி என்ன என்ன பண்ண சொன்னேனூ அத பண்ணுங்கடா சொல்லிட்டு காபிய குடிச்சு முடிச்சுட்டு சேம் ஜாப்பை தொடர போகலாம்னா வந்தான்ய்யா மறுபடியும் சிவா தலைக்கு எண்ணெய் வைக்கனும் என்பது சாஸ்த்திரம். அத பண்ணாட்டி அப்புறம் என்ன தீபாவளினு கேட்க சரி நம்ம பய ரொம்ப தான் பீல் பண்ணுறான் சொல்லிட்டு நீ ஒன்னு பண்ணு, சமையல் அறையில் இருக்கும் கார்ன் ஆயிலையோ இல்ல தேங்காய் எண்ணெய்யோ எடுத்து தேச்சுக்கோ எந்த எண்ணெயா இருந்தாலும் மனதில் இறைவனை நினைத்துட்டு தேச்சா அது நல்லெண்ணெய் தான் என்று ஒரு சூப்பர் தத்துவம் + ஐடியா கொடுத்தேன். அவன் தேங்காய் எண்ணெய எடுத்துக்கிட்டு வந்து கேட்டான் பாருங்க அடுத்து ஒரு கேள்வி, மாப்ஸ் நான் நிற்கிற இடத்தில் இருந்து கிழக்கு பக்கம் ஏதுனு சொல்லுனான். மவனே சொல்லிட்டு அடுத்த வார்த்தை சொல்லங்காட்டியும், நம்ம முகம் போன போக்கை பாத்துட்டு ஏதும் கேட்காம ஒடி போயிட்டான். ஒரு வழியா எல்லாரும் குளிச்சு முடிச்சுட்டு புது துணி எல்லாம் போட்டு சாமிக்கிட்ட ஒரு பேரம் நடத்தி முடிச்சுட்டு வந்து பாத்தா வடையையும் காணாம், சுழியத்தையும் காணாம். டேய் என்னங்கடா எதையும் காணாம் கேட்டா, நீ வடைக்கும், சுழியத்துக்கும் தேவையான எதையும் வாங்கல அப்புறம் எப்படினு நம்மளையே எதிர் கேள்வி கேட்குறானுங்க. சரி இது இப்ப வேலைக்கு ஆகாதுனு வச்ச தோசைய சாப்பிட்டுட்டு, ஒன்னும் பிரச்சனை இல்ல நாம அந்த வடை, சுழியம் மேட்டர கொஞ்ச நேரத்துக்கு போஸ்ட் போன் பண்ணிக்கலாம் என்று சொல்லிட்டு மற்ற பசங்களை பார்க்க போயிட்டு அப்படியே வடை, பாயாசம் வைப்பதுக்கு தேவையான மேட்டரையும் வாங்கி கொடுத்துட்டு நம்ம பசங்க கிட்ட எதை எப்படி செய்யனும் என்பதை சொல்லிட்டு நாம் எஸ் ஆயிட்டோம். நம் அலுவலக மக்களை பார்க்க. வெல்லம் கிடைக்கல அதுனால சுழியம் கேன்சல்.

ஆனாலும் நம்ம பசங்க கெட்டிக்கார பசங்க, என்ன சொன்னமோ அதை கரேட்டா பண்ணி இருந்தாங்க, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், பாயாசம் என்று சூப்பரா பண்ணி இருந்தானுங்க. வடை என்னடா ஆச்சுனு கேட்டா மிக்ஸ்சில மாவு ஒடிக்கிட்டு இருக்குனூங்க. சரினுட்டு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிட்டு நம் நாட்டு மக்களுக்கு போன் பண்ண மறுபடியும் எஸ் ஆயிட்டேன். போன கொஞ்ச நேரத்தில் நம்ம பய போன் பண்ணி வடை போடுவதில் கொஞ்சம் சிக்கலா இருக்கு வந்து சீக்கிரம் தீர்த்து வைப்புனு கேட்க, சிக்கல் என்னும் ஊருக்கு பக்கத்தில் இருந்து வரும் நமக்கே சிக்கல் சவால் விடுவதானு போயி என்னனு கேட்டா, வடை தட்ட வர மாட்டேங்குதுனாங்க, ஒத்துங்கடா சொல்லிட்டு வீராப்பா நானும் வடைய தட்ட முயற்சி செய்து பார்த்தேன். ஒன்னும் சரியா வரல, சரி நம்ம அம்மாவுக்கு போன் பண்ணி என்ன பண்ணலாம் என்று கேட்போம் திங்க் பண்ணும் போதே வடைய போண்டா ஆக்கிட்டா என்னனு ஒரு சின்ன சின்னதா புடிச்சி போட்டா சூப்பர வந்துச்சு. சரி எல்லா மாவையும் அது மாதிரி போட்டு எடுத்தேன். வடைக்கு தேங்காய் சட்னி வச்சு சாப்பிட்டா சூப்பரா இருக்கும்னு பக்கத்தில் நின்னு வேடிக்கை பாத்துட்டு இருந்த பய சொல்ல, தேங்காய் இங்க கிடைக்காது இருந்தாலும் நீ சட்னிக்கு ஆசைப்பட்டுட்ட அதனால் வெங்காயம், தக்காளி எடுத்து வெட்டுனு அவனுக்கு ஒரு வேல கொடுத்து சட்னியும் ரெடி பண்ணியாச்சு.

நம்ம மற்ற பசங்களும் நம்ம வீட்டுக்கு வர அவங்களுக்கு வடை, பாயசம் கொடுக்க அதில் ஒருத்தன் வடை பார்த்துட்டு என்ன இது சிக்கன் 65 மாதிரி இருக்குனு கேட்டுட்டான். அவன் தலைய தட்டி சாப்பிட்டா வடை மாதிரி இருக்குல பேசமா சாப்பிட்டு கிளம்புனு சொல்லி போய் மற்ற பசங்களை பாக்க போயி இருந்தாம்.














சும்மா சொல்லக்கூடாது எல்லாம் பய புள்ளங்களும் பாச மழையில் நம்மள நணைய வச்சுட்டானுங்க. அதுவும் ஒரு வீட்டில் மத்தாப்பு வேற வச்சு இருந்தாங்க, அதை கொளுத்தி வெடி மேட்டரையும் சால்வ் பண்ணியாச்சு. அதன் பிறகு ஒரு மால் சென்று ஷாப்பிங் பண்ணிட்டு (பார்த்துட்டு இது தான் சரியா இருக்கும்) அங்க இருக்கும் பவுலிங், பில்லியட்ஸ் எல்லாம் நம்ம பசங்க விளையாட அதையும் வேடிக்கை பாத்துட்டு, ஐஸ்கீரிம் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு அதை சர்வ் பண்ணுன பொண்ண மறுபடியும் கூப்பிட்டு நீங்க கொடுத்த ஐஸ்கீரிம் சாப்பிட்டு தலைவலி வந்துடுச்சு அதனால் நல்லா காபியா ஒன்னு கொடுங்க சொல்லி வாங்கி குடிச்சுட்டு ஒரு வழியா 2 மணிக்கு வீடு வந்து சேர்ந்தோம். அப்புறம் எங்க தூங்குறது, பசங்களோடு மறுபடியும் கதை அடிச்சுட்டு, படம் பாத்துட்டு காலையில் 7 மணிக்கு செக் இன் போயி நின்னு நம்ம இடத்துக்கும் வந்து சேர்ந்தாச்சு.

என்ன தான் இந்த தடவை தீபாவளியை கொஞ்சம் மகிழ்ச்சியாக நண்பர்களுடன் கொண்டாடி இருந்தாலும், நம்ம ஊர்ல இல்லயே என்ற ஏக்கம் ஒரு ஒரமாக இருக்க தான் செய்தது.