இடம்: நாகை எங்க வீடு
நாள் : இரண்டரை ஆண்டுகள் முன்பு எந்த நாளாக இருந்தாலும்
நேரம் : காலை 11.30
நான் : அம்மா டிபன் எடுத்து வைங்கம்மா
அம்மா : ஏண்டா, காலையில் எழுந்ததே 9 மணி அப்பவே சாப்பாட்டு இருக்கலாம்ல, வெளியில் போயிட்டு 11.30 வந்து காலை சாப்பாடு சாப்பிட்டா மத்தியானம் எப்படா சாப்புடுவ, அதும் இல்லாம உனக்கு சாப்பாடு வைப்பேனா, இல்ல மத்தியான சாப்பாடு செய்வேனா?
நான் : எனக்கு வச்சுட்டு அப்புறம் சமைங்க, மத்தியான சாப்பாட்டு 3, 4 மணிக்கு சாப்பிட்டா போகுது
அம்மா : 3, 4 மணிக்கு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு டா ஆகும்.
நான் : அம்மா, வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக் கூடாது.
அம்மா : அப்படிடா சொல்லுவ, எங்கயாச்சும் போய் காய்ஞ்ச தாண்டா தெரியும்.
நான் : சரி சரி வைங்க மணியாகுது, பசங்க அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க
(சுட சுட ஆப்பம், தேய்காய் பால் பறிமாறப்படுகின்றது.)
நான் : ஏம்மா, போதும்மா
அம்மா : இத ஒன்னு வச்சுக்கடா
நான் : ஏம்மா, போதும்மா சொன்னா கேட்கவே மாட்டீங்களாம்மா, எப்ப பாத்தாலும் இத தாம்மா செய்வீங்க நீங்க.
அம்மா : டேய், இந்த ஒன்னு மட்டும் சாப்பிட்டுட்டு போடா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்
நான் : போயிட்டு வரேன்ம்ம்ம்ம்ம்ம்மா
அம்மா : டேய், மத்தியானம் சீக்கிரம் சாப்பிட வந்துடு
நான் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரீஈஈஈஈஈஇ
நேரம் : மதியம் 3.30
நான் : மம்மிமீஈஈஈஈஈ
அம்மா : புள்ளையாட நீ.... உன்ன சீக்கிரம் வாடா சொன்னா 3.30 மணிக்கு வர.......
நான் : ஏம்மா, மாசத்துக்கு நாலைஞ்சு தடவை தான் நான் ஊருக்கு வரேன், அதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்களே..... நீங்க சாப்பிட்டீங்களா..
அம்மா : ம்ம்ம்ம் உனக்காக இவ்வளவு நேரம் பாத்துட்டு இப்ப தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன், நீ வந்துட்ட
நான் : சரி சரி, பசிக்குது, வைங்கம்மா
அம்மா : சரி, டைனிங் டேபிள்க்கு வாடா
நான் : அம்மா, இங்க கொண்டு வாங்கம்மா
அம்மா : டேய், அவ்வளத்தையும் தூக்கிட்டு வரனும்டா, அங்க வந்து 10 நிமிசம் சாப்பிட்டு வந்து இந்த டிவிய பாத்தா என்ன?
நான் : நான் டிவி பாக்குறதே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான், அதுவும் உங்களுக்கு பொறுக்காதே, போட்டு எடுத்துட்டு வாங்கம்மா
(சிக்கன் குழம்பு, இறால் வறுவல் பறிமாறப்படுகின்றது)
நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...
அம்மா : ஹ்ம் வச்சு இருக்கு. முட்டை வேணுமா என்ன?
நான் : நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்...
அம்மா : அந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கும்டோ உனக்கு?
நான் : ஏம்மா, நானா கேட்டேன், நீங்க கேட்டதால் கொடுங்கனு சொன்னேன். நீங்களே கேட்டுட்டு என்னய குறை சொல்லுங்க?
அம்மா : இந்தாடா இறால் இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ
தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க
அம்மா : ஆமாம்டா உனக்கு நான் சமைச்சு போட்டதே இல்ல பாரு
நான் : அம்மா, அவன் கிடக்குறாம்மா, நீங்க ரசத்தை ஊத்துங்க... என்னமா ரசத்தில் உப்பு அதிகமா இருக்கு, இவ்வளவு வருசம் சமைக்குறீங்க, இன்னும் உங்களுக்கு உப்பு சரியா போட தெரிய மாட்டேங்குது.
அம்மா : டேய், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் சரியா தான் இருந்துச்சு. உனக்கு மட்டும் அதிகமா இருக்கும்டா. சரி இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் ஊத்திக்கோ...
நான் : மோரா! வேணாம். போதும்
நேரம் :இரவு 10.00
நான் : வெளிய போறேன், சீக்கிரம் சாப்பாடு போடுங்க
அம்மா : இத்தன மணிக்கு மேல எங்கடா போற? தோசை தான் இரு ஊத்துறேன்.
நான் : தோசையா, என்னமா நீங்க, சாதம் வைக்க கூடாதா?
அம்மா : எனக்கு என்னடா தெரியும், நீ வீட்டுக்கு சாப்பிட வருவீயா இல்ல வெளியில் சாப்பிட்டு வருவீயானு, சாதம் வைச்சு நீ வராட்டி வேஸ்டா போயிடும் தான் வைக்கல.
அப்பா : ஏண்டி, அவனுக்கு சாதம் கொஞ்சம் வச்சி இருக்கலாம்ல, நீயும் இப்படி தாண்டி பண்ணுவ
அம்மா : உடனே, என்ன சொல்லிடுவீங்களே? இப்ப தோசை சாப்பிட்டா என்ன ஆயிட போகுது.
நான் : சரி, சரி விடுங்க, நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன். வரேன்ம்மா
அம்மா : 1 மணிக்கு வந்து நிக்காம சீக்கிரமா வந்துடு.........
நான் : ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.
இடம் : சூடான் நேரம் : கடந்த வெள்ளி, அதிகாலை 11.00
VHF ரேடியாவில் கால் வருகின்றது
நான் : F.Q. 8.1.1 தான் விசயத்தை சொல்லு
எதிர்முனை : இண்டர் மிஷன் நெட்வொர்க் ல பிரச்சனை, கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்.
நான் : அட என்னய்யா, வெள்ளிக்கிழமை காலாங்காத்தாலே தொல்லை பண்ணுறீங்க, சரி இரு ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.
ப.பெண் : சிவா, பிரேட் இருக்கு, சாப்பிட்டு போ.
நான் : பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. மத்தியானம் வந்து சாப்பிடுக்குறேன். மதியம் என்ன?
ப.பெண் : சாப்பாத்தி, பர்த்தா.
நான் : சரி, ஒகே.
ஆபிஸ்ல எப்பவும் போல கடமையில் முழ்கிட்டோம்.
நேரம் : மாலை 4.25, நம்ம மொபைல் பாடுது
நான் : சொல்லுங்க தாப்பா
எதிர்முனை : எங்க இருக்க, நாங்க எல்லாம் கிரவுண்டுக்கு வந்தாச்சு. பேட், ஸ்டம்பு எல்லாம் உன் வண்டியில் தான் இருக்கு.
நான் : இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன். (மனதிற்க்குள் இன்னிக்கு சாப்பாட்டு போச்சுடா)
நேரம் : மாலை 7.00 ,மொபைல் பாடுது
நான் : சொல்லு மச்சி என்ன விசயம்
எதிர்மனை : மச்சி பிஸியா இல்லாட்டினா இங்க வந்துட்டு போயேன், நம்ம XXXXX பத்தி ஒரு மேட்டரு பேசனும்.
நான் : கிரவுண்டல இருக்கேன் மச்சி. ஒரு 15 நிமிசத்தில் அங்க இருப்பேன்.
எதிர்முனை : இன்னிக்கு இங்க பீப், உனக்கு வேற எதாச்சும் சமைக்கட்டுமா?
நான் : பீப்பா! இல்ல மச்சி, கசகசனு இருக்கு, குளிச்சுட்டு சாப்பிட்டா தான் சரியா வரும். அதனால் எனக்கு வேணாம்.
நேரம் : இரவு 9.30
கோயல்: வா, சாப்பிட்டு வந்துட்டியா, இல்ல இங்க தானா
நான் : இல்ல இங்க தான், காலையில் இருந்து சாப்பிடல, இரு குளிச்சுட்டு பிரஷா வரேன்
கோயல் : போ, போ உனக்காக தான் நாங்களும் வெயிட்டிங்
(மனதுக்குள், இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே, சே..சே... இவனுக்கு இது எல்லாம் தெரியாது) சிறிது நேரம் பிறகு
நான் : வாங்க, சாப்பிடலாம்
கோயல் : நீ சாப்பிடு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்.
நான் : என்னடா இது புதுசா இருக்கு. எட்டு மணிக்கே சட்டிய எம்டி ஆக்கிடுவாங்க, இன்னிக்கு என்ன ஆச்சு பசங்களுக்கு..
திறந்து பாத்தால், குண்டு அரிசியும்(எகிப்து அரிசி, நம் கேரளா அரிசி விட பெரிசா இருக்கும்), தால்லும் இருந்துச்சு.
நான் : யாரு இந்த அரிசிய சமைக்க சொன்னது. வர வர இந்த பொண்ணு பண்ணுறது நல்லாவே இல்ல. வேற வழி இல்ல, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுறேன். அட பாவிங்களா, தால் என்னடா இவ்வளவு உப்பு.
கோயல் : அதான், நாங்க சாப்பிடாம வர்கார்ந்து இருக்கோம். பிரட் இருக்கு சாப்பிடுறீயா, முட்டை பொறித்து தரேன்.
நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.
கோயல் : டயர்டா இருந்துச்சு. அதான் முடியல.
நான் : நமக்கும் அதே கதி தான், நீ முட்டைய ஒத்து, இதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன்
ப்ரிட்ஜில் இருந்து தயிர், ஊறுகாய் வெளி வருகின்றது. விதி ய நொந்து தயிர் சாதம் சாப்பிடுறேன்.
பழமொழி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்
நம்ம கருத்து : நல்லாவே விளையுதுடோய்.... மாப்பு கேட்டுகுறேன் மம்மி, மாப்பு