Tuesday, July 07, 2009

சிதறல்கள்

நேற்று முன் தினம் நடந்து விம்பிள்டன் டென்னிஸ் இறுதி ஆட்டம் மிகவும் பரபரப்பாக அமைந்து இருந்தது. கிட்டதட்ட 4 1/2 மணி நேரம் நடந்த இந்த போட்டியில் மிகவும் போராடி பெடரர் வெற்றி பெற்றார். தோல்வி அடைந்த போதிலும் ரோடிக் கின் ஆட்டம் பாராட்ட பட வேண்டிய ஒன்று. சமீபத்தில் நான் ரசித்த போட்டி இது தான். போன வருட விம்பிள்டன் இறுதி போட்டி பார்க்கவில்லை என்பது வேறு விசயம். 2001 ல் இவான்செவிக் மற்றும் ராப்டரின் ஆட்டத்திற்கு பிறகு இது தான் எனக்கு பிடித்த ஆட்டம். இந்த ஆட்டம் விம்பிள்டனின் முதல் ஆறு சிறந்த இறுதியாட்டங்களில் ஒன்றாக தேர்வு பெற்று உள்ளது. பார்க்க கிடைத்தவர்கள் உண்மையிலே பாக்கியசாலிகள். இருவரின் ஆட்டத்தை பார்த்து யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை என்றே நினைக்க வைத்தார்கள். 50 ஏஸ்கள் போட்டு பெடரர் கோப்பையை தட்டி சென்றார். தருமி, மருத்துவர் அய்யா ராமநாதன் மிகவும் மகிழ்ந்து இருப்பார்கள். நான் ரோடிக் பக்கம். மிகவும் அருமையான ஒரு ஆட்டம் தந்ததுக்காக. It's not winning that's important, it's how you play the game. Good Job Roddick.

நம்ம பயஸ் கலப்பு இரட்டையர் ஆட்டத்தில் இறுதியாட்டம் வரை வந்தார்.

இந்த நேரத்தில் வருண பகவானுக்கு என் நன்றியை சொல்லிக்கனும், இல்லையென்றால் கிரிக்கெட் டில் சரணாகதி அடைந்து இருப்போம்.

******

காணவில்லை - 1!

மக்களே! நம்ம ஊரில் குட்டி சாமியார் குட்டி சாமியார் னு ஒருத்தர் இருந்தாரே, அதான்ப்பா பரணிதர ஸ்ரீஹரி ராகவேந்திர சுவாமி. என்னப்பா ஆனார் அவர். ரொம்ப நாளாக அவரை பற்றி எந்த ஒரு செய்தியும் இல்லை. தெரிஞ்சவங்க கொஞ்சம் சொல்லுங்களேன்.

காணவில்லை - 2!

நம்ம தேங்காய் சீனிவாசன் பேத்தி ஸ்ருதி னு ஒருத்தவங்க சினிமாவில் நடிச்சாங்களே, அங்க எங்கப்பா இப்போ? அதான்ப்பா ஆல்பம், ஸ்ரீ, தித்திக்குதே, நள தமயந்தி போன்ற படங்களில் நடிச்சாங்களே, அவங்களே தான்! ரொம்ப மிஸ் பண்ணுறேனு நினைக்காதீங்க, லைட்டா தான் ;)

******

நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா என்று கதற வைக்கும் சக்தி இசை கருவிகளை கற்றுக் கொள்ளும் நம் நண்பர்களால் நமக்கு அடிக்கடி வாய்க்கும். கீ-போர்டு வாசிக்க கற்றுக் கொள்ளும் அனைவரும் பயிலும் அல்லது பயில விரும்பும் ஒரு பாடல் ஏக், தோ, தின் பாட்டு. அதை வாசிக்கா விட்டால் அந்த கருவியில் தேர்ச்சி பெறாத மாதிரி ஒரு எண்ணம் அவர்களுக்கும் ஏற்படுமோ என்னவோ! நான் படும் கஷ்டம் எனக்கே! ஏண்டா காலங்காலமா இதே தானா? மாத்துங்கப்பா, முடியல....ப்ளீஸ்..... இன்னும் சிலர் ஆரம்பத்தில் பல பாடல்களை வாசித்து பிறகு இந்த பாடலை முடிவு தொடுவதாக (அதான்ப்பா finishing touch ஆம்)இசைக்கிறார்கள். ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்?

கீ-போர்டு பார்ட்டிகள் இப்படி என்றால் கிடார் மக்கள் என் இனிய பொன் நிலவே னு சட்னு பிரதாப் போத்தானா மாறி விடுகிறார்கள். ஏதோ ராஜா தெரியாம அந்த பாட்டுக்கு கிடாரை உபயோகப்படுத்திட்டார். அதுக்குனு இப்படியா? என்னை பார்த்தால் பாவமா இல்லையா?

இது போல் என்னை இம்சை பண்ணும் அதிலும் முக்கியமாக நான் நன்றாக தூங்கி கொண்டு இருக்கும் போது அலைப்பேசியில் அழைத்து இது போல் இம்சை கூட்டும் நண்பர்களுக்கு மன்னிப்பே கிடையாது. ஆனால் என் உற்ற நண்பனில் ஒருவன் கிடார் கற்றுக் கொண்டு என் பிறந்தநாள் அன்று புதிதாக கிடார் வாங்கி அவன் நண்பர்களையும் உடன் சேர்த்து பிறந்தநாள் வாழ்த்து கூறியது போல் எதாச்சும் புதுமையாக செய்பவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்பது உபரித்தகவல்.

Monday, July 06, 2009

ரெயில்வே பட்ஜெட்!

சில நாட்கள் முன்பு ரெயில்வே பட்ஜெட் தாக்கல் செய்து இருந்தாங்க. சில நல்ல விசயங்கள் இருக்க தான் செய்தது. ஆனால் மகளிர்கான தனி கழிப்பறை வசதி என்ற செய்தி சிறிதே தனித்துப்பட்டது எனக்கு. வைப்பதில் தவறு இல்லை. ஆனால் அதை எப்படி அமல்படுத்த போகின்றார்கள் என்ற அளவில் தான். இருக்கும் இரண்டை ஆளுக்கு ஒன்றாக மாற்றியா? அது தீர்வாகாது என்பது என் எண்ணம். அதற்கு பதில் கழிப்பறைகளை சுத்தமாக பராமரிப்பது ஒரு வழி, அல்லது கழிப்பறைக்கு என்றே தனியாக சில பெட்டிகள் சேர்க்கலாம். தற்சமயம் வரை கழிப்பறையில் வெறும் ஒட்டை தான் இருக்கும் (தவறு என்றால் சுட்டிக் காட்டவும்) அதற்கு பதில் இது போன்ற தனிப்பட்ட பெட்டிகள் வைப்பது என்றால், அந்த அந்த நிறுத்தங்களில் அந்த கழிப்பறை பெட்டியை மட்டும் கழட்டி வேறு பெட்டி இணைத்து கொள்ளலாம். சுத்தம் செய்வதும் வசதியாக இருக்கும். சுற்றுசூழல் மாசுவை தடுக்கலாம். கூடவே கதவு ஒரத்தில் நின்று பயணம் செய்பவர்களுக்கும் துற்நாற்றத்தில் இருந்து தப்பிக்க வழி வகுக்கும்.

*****

கூடவே இந்த அளவு தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்தும் அடிக்கடி விபத்துக்கள் நடப்பது கண்டிப்பாக தவிர்க்க பட வேண்டிய ஒன்று. அதற்கு முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கூடவே சில மாதங்களுக்கு முன்பு கூட ரெயில்வே துறையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிரிப்பாய் சிரித்தது. அதற்கு தகுந்த நடவடிக்கைகள் தேவை.

******

இந்த பட்ஜெட் ல் பாராட்ட பட வேண்டிய விசயங்களில் ஒன்று, ரயில்வே க்கு சொந்தமான இடங்களை தனியாருக்கு லீஸ் க்கு விடும் திட்டம். எவ்வளவு இடம் ரயில்வே வசமிடம் எதற்க்கும் உதவாமல் உள்ளது என்பது நம்மில் யாரு ஊரில் எல்லாம் ரயில் நிலையம் உள்ளதோ அவர்கள் அறிவார்கள். வெறும் புதராக மண்டி கிடைக்கும் அந்த இடங்களில் என்ன நடக்கிறது என்பதும் நாம் அறிந்தது தான். அதற்கு முடிவு கட்டும் விதமாக இது ஒரு நல்ல விசயம். வருமானத்துக்கும் வருமானும் ஆச்சு. சமூக விரோதிகளுக்கு கூடாரமாக அமைவதிலும் இருந்தும் ஒரு பெரிய விடுதலை கிடைக்கும்.

******

சென்னை டூ டில்லி பாயிண்ட் டூ பாயிண்ட் ரெயில்- நல்ல முடிவு. விமான சேவை மலிந்து விட்ட இந்த காலத்தில் இது போன்ற திட்டங்கள் தான் நல்ல பயனை தரும். இது போன்ற பல பாயிண்ட் டூ பாயிண்டு ரெயில்கள் வரவேற்கதக்கதே. அதே நேரத்தில் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பது மக்களுக்கு பயன் தரும்.

******

எங்க ஊருக்கு ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு னு எர்ணாக்குளம் டூ திருச்சி வரை இருந்த எக்ஸ்பிரஸ் வண்டியை நாகூர் வரை நீட்டித்து உள்ளார்கள். கேரளாவில் இருந்து வேளாங்கண்ணி, நாகூர் வரும் பக்தர்களுக்கு கண்டிப்பாக பயன் தரும். அதே போல் பெங்களூர் ரெயிலையும் நீட்டித்து இருந்தால் இன்னும் பயன் தந்து இருக்கும். வேளாங்கண்ணி திட்டம் என்ன ஆச்சோ. இதை எல்லாம் நம் மக்கள் பிரநிதிகள் கோரிக்கை வைத்து செய்து இருக்கனும். அவங்களை என்னத்த சொல்ல. நல்லா இருங்கடே.

******

என்ன தான் மாஞ்சு மாஞ்சு பட்ஜெட் போட்டாலும் அதை செயல்படுத்துவதில் தான் உள்ளது திறமை. அந்த அந்த கால அளவில் குறித்த திட்டங்களை நிறைவேற்றுவது தான் நம் நாட்டின் தற்போதைய அவசர தேவை,அதிலும் முக்கியமாக கட்டுமான துறையில். அதை விடுத்து நாகூர் டூ திருவாரூர் வரை இருவத்தி சொச்ச கி.மீ போட 2004ல் இருந்து 2009 வரை ரெயிலை நிறுத்தி வைத்து அதற்கு பல போராட்டங்களை நடத்தி வேலை முடிக்க வைத்து ரெயில் கொண்டு வர நாங்கள் பட்ட பாடு மீண்டும் தொடர்ந்தால் ஒன்னும் சொல்வதற்கு இல்லை. வாழ்க பாரதமே தான் !

******

Wednesday, June 10, 2009

அது ஏனோ?


எதற்கும் சஞ்சலப்படாத
மனசு கொட்டும் மழைக்கும்
ஜில்லிடும் காற்றுக்கும்
சூடான தேநீர், பஜ்ஜியுடன்
பழங்கதைகளை கதைக்க
நண்பனையும் தேடுவது ஏனோ?

Tuesday, May 12, 2009

தொகுதி அலசல் - நாகப்பட்டினம்

நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.

இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.

கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.

மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.

சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.

இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:

1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)

2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)

3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)

4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)

மற்றும் 3 சுயேச்சைகள்.

குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.

7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.

இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.

மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.

நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.

வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.