ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ 60
பக்கங்கள் : 112
ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். அப்படி ஒரு எழுத்து நடை. எழுத்து நடை என்பதை விட நம் அருகில் நின்று நம்முடன் ஒருவர் உரையாடுவது போன்று ஒரு தோணி புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. பேச்சு வழக்கிலே எழுதியதிலே ஆசிரியர் வெற்றி பெற்று விட்டார். அதுவும் அந்த உரையாடல் நமக்கு படிக்கும் போது அவர் குரலிலே நம் மனதுக்குள் ஒலிப்பது தனிச்சிறப்பு. நீயா நானா நிகழ்ச்சி நம் மனக்கண்ணில் வந்து போகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பல பேச்சுகளை இந்த புத்தகத்தில் அச்சு ஏற்றி உள்ளார் என்பது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும்.
பொதுவாக தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களை நான் படிப்பது இல்லை. ஏற்கனவே அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஒரு எண்ணம் தான் அதற்கு காரணம். அதையும் மீறி இந்த புத்தகத்தை வாங்குவதற்கு ஒரே காரணம் தலைப்பும், கோபிநாத்ம் தான். வாங்கி படித்து முடித்த பிறகு இப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு ஏற்பட காரணம் என் எண்ண ஒட்டங்களில் பலவற்றை அப்படியே பிடுங்கி பதிவு செய்தது போல் ஒரு மாயை. கூடவே ஒரு உற்ற நண்பனுடன் பல விசயங்களை கலந்தாலோசித்து பிறகு ஏற்படும் தெளிவு இதில் ஏற்படுகிறது. அந்தளவுக்கு எளிமையாக அன்றாட விசயங்களை தொகுத்து அதற்கு தகுந்த உதாரணங்களை மனவியல் நிபுணர் முதல் ஜனகராஜ் வரைக்கும் எடுத்து கையாண்டு உள்ளார்.
அட!
- ஒவ்வொரு அத்தியானத்துக்கும் தலைப்பு ஏதும் வைக்காமல் அந்த பகுதியின் மையக்கருத்தை கட்டம் கட்டி போட்டு இருப்பது. அதே போல பல இடங்களில் முக்கிய கருத்தை BOLD பண்ணி இருப்பது.
- எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான் - கவுண்டமணி. சீரியஸ் ஆகவே நமது வாழ்க்கையை இப்படித் தான் வைத்து இருக்கிறோம் என்று சொல்கின்றன ஆய்வுகள்.
- நீங்கள் கவனிக்காமலும் கண்டுக் கொள்ளாமலும் விட்ட விஷயம் மெகாசைஸ் "என்னவோ மாதிரி இருக்குது" ஆக மாறி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
- உங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை. வம்படியாய் எந்தக் சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு எல்லாரும் போய் விடுவார்கள்.
- உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தரமாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல மனோ வியாதி.
- இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகத்திற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.
- இழந்து போனது குறிந்த நினைவுகளையும், கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டு சிரமப்படுகிறோம். அதை விட்டு விட்டால் வெளியே வந்து விடலாம். ஆனால் விடமாட்டோம். குரங்குக்கு தான் அது தெரியாது. நமக்கும் கூடவா தெரியாது.
அட்ரா சக்கை!
- சிரிப்பு வந்தால் சிரியுங்கள்! நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்
- உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்... இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள். உங்கள் மனத் தொட்டியில் மேலும் மேலும் குப்பை கொட்டுபவர்.. உங்கள் நண்பராக இருக்க முடியாது.
- முழு இட்லியை முழுங்க நினைத்தால் விக்கல் தான் வரும். அதை பிட்டு பகுதி பகுதியாக சாப்பிடுங்கள். அது தான் எளிது.
- என்னமோ போடா... பின்றடா - ஜனகராஜ்
- உங்களை இயக்க தான் கொள்கைகள் முடக்க அல்ல.
- Nothing Interesting... Then make it interesting. வாழ்க்கை போரடிச்சா.. அதை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
- வேலையாளாக இருப்பது . லாபம் வந்தால் நமக்கு. நட்டம் வந்தால் அவனுக்கு. இதிலிருந்து வெளியே வர வேண்டியது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டுக்காவும் தான்.
உறுத்தல்!
- தலைப்பு - எதிர்மறையான தலைப்பு தான் என்னை புத்தகத்தை புரட்டி பார்த்து வாங்க வைத்தது என்ற போதிலும் இவ்வளவு பாசிட்டிவான தகவல்களை புத்தகம் முழுவதும் கொடுத்து விட்டு தலைப்பை இது போல வைத்தது 13 ரீலில் கண்டதையும் காட்டி விட்டு 14 ரீலில் புத்தி சொல்லுவது போல் எடுக்கப்படும் தமிழ் சினிமாவை தான் ஞாபகப்படுத்துகிறது. புத்தகமும் வியாபாரம் தானே, அதனால் இருக்கலாம்
- புத்தக்கத்தில் இருக்கும் புகைப்படங்கள். வண்ணத்தில் கொடுத்து இருக்கலாம் அல்லது குறைந்தபட்டம் புகைப்படத்தின் தரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.
மொத்ததில் முன்னுரையில் என்ன சொல்லி இருந்தாரோ அதில் இருந்து சிறிது கூட மாறாமல் புத்தகத்தை முடித்து உள்ளார். புதுசாக ஏதும் அதில் இல்லை. ஆனால் நம்மை புதுபித்து கொள்ள உதவும். நம்பி வாங்கி படிக்கலாம். மற்றவர்களையும் வாங்க சொல்லாம்.