Sunday, August 13, 2006

பின் தங்கிய மாவட்டம்


இத பார்த்தவுடன் உங்களுக்கு எல்லாம் என்னங்க தோணுது. நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் வளர்ச்சிக்கு மத்திய அரசு நிதி வழங்கி உள்ளது. அதை குறித்து மகிழ்ச்சி என எண்ணத் தோண்றுகிறதா. இல்ல நம்ம தமிழ்நாட்டில் ஆறு மாவட்டங்கள் மிகவும் பின் தங்கி உள்ளதே என்று ஆதங்கம் வருகின்றாதா? எனக்கு கோவம் வருதுங்க. இதை அறிவித்த மத்திய அமைச்சர் நாகை மாவட்டத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. அவரின் சொந்த மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கியது, அவருக்கு வேண்டுமென்றால் சந்தோஷமாக இருக்கலாம். அந்த மாவட்டத்தை சேர்ந்த எனக்கு வெட்கமாக இருக்கின்றது.

இந்தியாவில் உள்ள 250 பிந்தங்கிய மாவட்டங்களில் தமிழகத்தில் இருந்து ஆறு மாவட்டங்கள் இடம் பெற்று உள்ளது. அதில் இரு மாவட்டங்கள் மத்தியில் மிகவும் முக்கியமான பொறுப்பில் இருக்கும் இரு அமைச்சர்களின் சொந்த தொகுதி. இதை பார்த்து எங்கு போயி முட்டிக் கொள்வது என்று தெரியவில்லை.

மற்ற மாவட்டங்கள் எல்லாம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டு இருக்க நாகை மாவட்டம் மட்டும் ரிவர்ஸ்ல போயிக்கிட்டு இருக்கு. தனி மாவட்டமாகி கிட்டதட்ட 15 வருடங்கள் ஆக போகின்றது. ஏதாவது ஒரு முன்னேற்றம், தேடி பார்த்தாலும் கிடைக்க மாட்டேங்குது. 80களில் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அதன் பிறகு நாகைக்கு இறங்கு முகம் தான். ஒவ்வொரு தேர்தலின் போதும் நாகையில் துறைமுகம் ஏற்படுத்துவோம், கச்சத்தீவை மீட்போம், சுற்றுலா துறை மேம்படுத்துவோம், புதிய தொழிற்சாலைகள் தொடக்குவோம் என்று நம் அரசியல்வியாதிகள் விடும் வெற்று வாக்குறுதிகளுக்கு ஒன்றும் குறைச்சல் கிடையாது. அதுல ஏதாச்சும் ஒன்றாச்சும் செய்து உள்ளார்கள் என்றால் அது தான் கிடையாது. சரிய்யா நீங்க ஏதும் புதுசா கொண்டு வர வேண்டாம். இருப்பதை வச்சு வளர பார்போம் என்றால் அதுக்கும் வழி கிடையாது. ரோலிங் மில்லுனு ஒன்னு இருந்துச்சு. அதையும் தூக்கிட்டுடானுங்க. இருப்பது சி.பி.சி.எல் மட்டும் தான். புதுசாக எந்த ஒரு பெரிய தொழிற்சாலையையும் நாகையில் ஆரம்பிக்கப்பட்டதாக எனக்கு நினைவு இல்லை. சாலைகள் மிகவும் மோசமான நிலையில் தான் உள்ளது. அதுவும் சில வருடங்களுக்கு முன்பு சுற்று வட்டாரத்தில் இருந்த அனைத்து பாலங்களும் ஒன்றன் பின் ஒன்றாக உடைந்து அல்லது பழுது அடைந்து நாய் படாத பாடுப்பட்டோம். எனக்கு தெரிந்து மிகவும் குறுக்கலான சாலைகள் என்றால் அது நாகையில் இருந்து சிதம்பரம், தஞ்சை, மாயவரம் செல்லும் சாலைகள் தான்.

சரி சாலை போக்குவரத்து தான் இப்படி இருக்கு ரயில்வே எப்படி இருக்குனு பார்த்த அது இன்னும் மோசம். நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்து சொல்லுறாங்க, நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் பாதை போடப்படும் என்றும், மீட்டர் கேஜ் பாதைகள் எல்லாம் அகல பாதையாக மாற்றப்படும் என்றும். ஒன்னயும் காணாம். இப்ப தான் பணிகள் நடந்துக் கொண்டு இருப்பதாக கேள்வி.
மீனவர்களின் நெடுநாளைய கோரிக்கையான மீன் பதப்படுத்தும் கிடங்கு இன்னும் கேள்விக்குறி தான். அவ்வப்போது இலங்கை ராணுவத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் அச்சுறத்தலுக்கும் உருப்படியான நடவடிக்கை கிடையாது. சுனாமி வேறு அவர்களை மிகவும் மோசமாக மனது அளவிலும் உடல் அளவிலும் பாதித்து விட்டது.


இது காவிரி டெல்டா மாவட்டம் வேறு. காவிரி பிரச்சனையை பற்றி தனியாக சொல்வதற்கு என்ன இருக்கு. இறைவனையும், இயற்கையையும் வேண்டுவதை தவிர. நாகை மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு என்று பார்த்தால் அதுவும் சொல்லிக் கொள்ளும்படி கிடையாது. ஊர சுத்தி எத்தனை புகழ் மிகுந்த கோவில்கள் பல இருந்தும் என்ன பயன். தங்குவதற்கு சரியான இடம் கிடையாது, சரியான போக்குவரத்து வசதி கிடையாது. அவ்வளவு ஏன் சரியான தகவல்கள் சொல்வதற்கு கூட ஆட்கள் கிடையாது. இருந்த தமிழ்நாடு ஹோட்டலையும் கொடுத்து விட்டார்கள்.


இத்தனைக்கும் இது தற்போதைய தமிழக முதல்வரின் சொந்த மாவட்டம், இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஏதாவது செய்து உள்ளார என்று பார்த்தால் போன முறை பதவியில் இருந்த போது கட்டிக் கொடுத்த விளையாட்டு அரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தவிர மற்றவை பூஜ்யம் தான். ஒன்றாக இருந்த மாவட்டத்தை இரண்டாக பிரித்தது தான் அவர் செய்த சாதனை. ஆனா சும்மா சொல்ல கூடாது, ஒட்டு கேட்டு வரும் போது சூப்பராக பேசுவார். மண்ணின் மைந்தனாய் கேட்கின்றேன் உங்களின் ஒருவனாய் கேட்கின்றேன். மண்ணின் மைந்தன் என்ற ஞாபகம் ஒட்டு கேட்டு வரும் போது தான் அவருக்கும் வரும். மற்ற நேரத்தில் வராது. அ.தி.மு.க அரசும் இவர்களுக்கு சளைத்தா என்ன, திருவாரூரை நாகையுடன் இணைத்து விட என்ன செய்யலாம் என்று யோசிப்பதிலே காலத்தை ஒட்டி விட்டார்கள். போன ஆட்சியில் எங்கள் மாவட்டத்தை சேர்ந்த ஒருவருக்கு மாநில அமைச்சராக பதவி கொடுத்து இருந்தார்கள். தனிப்பட்ட முறையில் மிகவும் நல்ல மனிதர். அமைதியானவர். ஆடம்பரத்தை விரும்பாதவர். இருந்தும் அவர் என்ன செய்தார் என்பதை அவர் தான் சொல்ல வேண்டும். சொல்லி தெரிந்து கொள்ளும் நிலைமையில் தான் தொகுதி இருக்கு.

அடுத்த நம்ம மணிசங்கர் அய்யர் அவர்கள், மத்திய அமைச்சர். காரைக்காலில் இருக்கும் O.N.G.C. மீது காட்டிய ஆர்வத்தில் சிறிதாவது மாயவரத்தின் மீதும் காட்டி இருக்கலாம். ஒரு நல்ல பேருந்து நிலையம் உண்டா அங்கு. காவிரி ஆறு என்று போர்டு வைத்து இருக்கின்றார்கள். எட்டி பார்த்தால் குப்பை தான் கிடக்குது. ஒன்னு குப்பையை அள்ள வேண்டும் அல்லது அந்த போர்டை தூக்க வேண்டும். மணிசங்கர் அய்யர் பெயர் சொல்லும்படி எதாவது ஒரு உருப்படியான திட்டம் ஏதும் நடைப்பெற்றதாக எனக்கு தெரியவில்லை.
யப்பா, இவங்களை பத்தி பேச ஆரம்பித்தால் போயிகிட்டே இருக்கு. இதுக்கு மேல என்னத்த சொல்ல, இந்த பணத்தை ஆச்சும் உருப்படியான வழியில் செலவழித்து மாவட்டத்தை முன்னேற்றும் வழியை பாருங்கய்யா.

29 comments:

நவீன பாரதி said...

சமுதாயப் பொறுப்புணர்வுள்ள ஒரு கட்டுரை!

வாழ்க!

நாகை சிவா said...

நன்றி நவீன பாரதி. முதல் வருகை. நல்வரவாகட்டும்.

ILA (a) இளா said...

சிவா!,
உங்க மாவட்டத்தைப் பத்தி தெளிவா சொல்லி இருக்கீங்க. அதுல ஒன்னும் தப்பேயில்லை. அரசியல்வாதிங்க சொந்தத்தொகுதி, சொந்த ஊர் எல்லாம் சட்டசபை போகிறவரைக்குதான். அங்கேயெல்லா போயிட்டா அவுங்களுக்கு இருக்கிற பிரச்சினை என்ன தெரியுமா? அவுங்க தொகுதிக்கு எப்படி பணம் கொண்டு வரதுங்கிறதுதான். அப்படி கொண்டு வந்த பிறகு அவுங்க சாப்பிடறாங்களோ அவுங்களை சுத்தி உள்ளவங்க சாப்பிடராங்களோ அது வேற விஷயம். ஆனா பணம் உங்க தொகுதியிலதான் சுத்தும். பணம் வந்த உடனே எங்கே போச்சுன்னு நாம் யாராவது அவர் கிடா போய் கேட்கிறோமா? இல்லை. வட்டம், தொகுதி இவுங்கதான் போய் கேட்பாங்க. அப்போதான் வரும் அவுங்களுக்கும் பங்கு. தப்பு நம்ம மேலையும் இருக்கு.
சரி மக்கள் தப்பை சொல்லியாச்சு. அரசியல்வாதிங்க என்ன தப்புன்னு சொல்லட்டுமா?

நாகை சிவா said...

இளா, நீங்க சொல்வதை ஒத்துக் கொள்கின்றேன். பின் தங்கிய மாவட்டம் என்று சொல்லி நிதி ஒதுக்கீடு வாங்கும் போது தான் கொஞ்சம் கேவலமாக இருக்கு.

சரி மக்கள் பத்தி சொல்லிட்டிங்க. அரசியல்வாதிங்க பத்தி சொல்லுங்க, தெரிஞ்சுக்கிறேன்.

கப்பி | Kappi said...

பதிவில் உங்கள் ஆதங்கம் புரிகிறது சிவா..இதைப் படித்ததும் எனக்குத் தோன்றியதை இளா அருமையாக சொல்லிவிட்டார்...

இதில் பின் தங்கிய மாவட்டமாக அறிவித்ததற்காக வருந்துவதை விட இந்த நிதியைக் கொண்டு உருப்படியான மேம்மாட்டு திட்டங்கள் வரும் என நம்புவோமாக..

Syam said...

இந்த பணத்தை எல்லாம் கரெக்டா அவங்க குடும்ப வளர்சிக்கு பயன்படுத்திக்குவாங்க...உன்னுது நியாமான கோபம் தான் பங்கு..ஆனா மக்கள் ஓட்டு போடும் போது அவங்களோட கவர்ச்சியான வாக்குறுதிக்கு இரையாகாமல் நல்லவங்களுக்கு போடனும் இல்லன "49 ஓ" போடனும்...

வடுவூர் குமார் said...

சிவா
10 வருடங்களுக்கு பின்பு போனபோதும் நமது நகரம் அப்படியே இருந்தது.இந்த மாதிரி எப்படி மாற்றமே இல்லாமல் வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியமாக இருந்தது.
மதியம் 12 மணிக்கு தெருவே வெறிச்சோடி இருக்கும்.ஏதோ ஒரு சிறையில் இருக்கும் மாதிரி உணர்வு.
மக்கள் எல்லோரும் ஒரு வித தன்னிறைவுடன் இருப்பது போல் உள்ளது.
இவ்வளவு வசதியிருக்கும் போது நாமும் எதற்கு புதிதாக செய்யவேண்டும் என்று அதிகாரிகளும் இருக்கிறார்கள் போலும்.
இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்ஸ் இன்னும் ஞாபகம் இருக்கிறதா?இதை மூடிய போது பலர் சென்னைக்கு குடிபெயர்ந்தது இன்னும் நினைவில் உள்ளது.

கோவி.கண்ணன் said...

சிவா... !
நாகை மாவட்டச் செய்தி ... நன்றாக இருக்கிறது ... மாவட்டத்தை சீர்கெடுத்த பொறுப்பற்ற அரசியல் வாதிகளை அடுத்த தேர்தலில் மாவாட்டா வச்சிடுவோம் !

நாகை சிவா said...

//இதில் பின் தங்கிய மாவட்டமாக அறிவித்ததற்காக வருந்துவதை விட இந்த நிதியைக் கொண்டு உருப்படியான மேம்மாட்டு திட்டங்கள் வரும் என நம்புவோமாக.. //
அட நீ வேற கப்பி. இது முதல் தடவையாக இருந்தால் சரி என்று விடலாம்.
வறட்சி மாவட்டம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மாவட்டம், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டம் என்று ஏதாவது சொல்லி நிதி வாங்கிட்டு தான் இருக்காங்க. மேம்பாட்டு திட்டம் தான் எதையும் காணாம்.

நாகை சிவா said...

//மக்கள் ஓட்டு போடும் போது அவங்களோட கவர்ச்சியான வாக்குறுதிக்கு இரையாகாமல் நல்லவங்களுக்கு போடனும் இல்லன "49 ஓ" போடனும்... //
என்னத்த சொல்ல, நாங்களும் கம்யூ, காங், பி.ஜே.பி, தி.மு.க., அ.தி.மு.க, மூஸ்லிம் லீக் னு எல்லாத்துக்கும் போட்டு பாத்தாச்சு. ஏதுவும் தேறல.

நாகை சிவா said...

//மக்கள் எல்லோரும் ஒரு வித தன்னிறைவுடன் இருப்பது போல் உள்ளது.//
உண்மை தான் குமார். மக்கள் தன்னிறைவுடன் தான் உள்ளார்கள். அவர்கள் வாழ்வு மேம்பட்டு கொண்டு தான் இருக்கின்றது. அதை குறித்து மிக்க மகிழ்ச்சி தான். :)

//இந்தியன் ஸ்டீல் ரோலிங் மில்ஸ் இன்னும் ஞாபகம் இருக்கிறதா?//
அதை எப்படி மறக்க முடியும். அதை மூடிய பிறகு அந்த இடத்தில் சில காலம் கிரிக்கெட் விளையாடினோம். இப்பொழுது அந்த இடத்தை ப்ளாட் போட்டு விற்று விட்டார்கள் :(

நாகை சிவா said...

//மாவட்டத்தை சீர்கெடுத்த பொறுப்பற்ற அரசியல் வாதிகளை அடுத்த தேர்தலில் மாவாட்டா வச்சிடுவோம் ! //
சீர்கெடுத்த என்பதை விட சீர்படுத்த மாட்டேங்குறாங்களே என்பது தான் வருத்தமாக உள்ளது கண்ணன்.

கஸ்தூரிப்பெண் said...

கடவுளே! இந்த தடவையாவது உருப்படியா எதாவது செஞ்சா தேவலை.
அவுரித்தெடல்ல கலைஞர் பேச்ச கேட்டது இன்னும் பசுமையா ஞாபகமிருக்கு. ஆடிபெருக்கன்னிக்கு காஞ்சு போன காவேரிய நினச்சி ஒரு மஞ்ச கயிற கட்டிகிட்டாச்சு. மும்மதமும் சம்மதமுன்னுங்கிற பெத்த பேர காப்பாத்துற மாதிரியாவது எதாவது ஒரு சுற்றுலா மையம் கட்டினா நல்லாயிருக்கும்.

ஊர்ஸ், அநியாயத்துக்கு ஊர் ஞாபகம் கிளப்பி விட்டீங்க, ரொம்ப சொன்னா சென்டிமென்டல்லா அடிக்கிறேனுடுவீங்க. ஆனால் உங்க ஆதங்கம்தான் எல்லாருக்கும், என் ஊர் முன்னேறனுமுன்னு.

துபாய் ராஜா said...

தன்மானம் உள்ள எவருக்கும் வரக்கூடிய நியாயமான கோபம் சிவா.
சம்பந்தப்பட்டவர்கள் கண்டிப்பாக பதில்
கூறத்தான் வேண்டும்.இந்தப்பதிவை
ஏதாவ்து பத்திரிக்கைக்கு அனுப்பி எல்லா
மக்களையும் சென்றடைய ஏற்பாடு செய்யுங்கள்.

ஜோ/Joe said...

நல்ல கட்டுரை!

இந்நேரத்தில் எங்கள் குமரி மாவட்டத்தைப்பற்றியும் சில வார்த்தைகள் சொல்ல வேண்டியிருக்கிறது .குமரி மாவட்டத்தைப் பபறுத்தவரை ,நீண்ட நெடுங்காலமாக அரசியல் ரீதியாக புறக்கணிக்கப்பட்டு வருகிற மாவட்டம் .அதற்கு காரணம் திராவிட கட்சிகளுக்கு இங்குள்ள செல்வாகின்மை .தொழிற்சாலைகள் என்று எதுவுமே கிடையாது .பல குறைகள் இருந்தாலும் தமிழகத்தில் பின் தங்கிய மாவட்டமாக இது இல்லாததற்கு ஒரே காரணம் படிப்பறிவு .படிப்பறிவில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பதே இம்மாவட்டம் சுகாதாரம் ,சாலை வசதி ,வீட்டு வசதி போன்றவற்றில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம் .கல்வியறிவும் விழிப்புணர்வும் வளர்ச்சிக்கு மிகவும் அவசியம் என்பது என் கருத்து

Syam said...

இந்த template நல்லா இருக்கு பங்கு :-)

Syam said...

கடை தொறந்தாச்சு :-)

நாகை சிவா said...

//அவுரித்தெடல்ல கலைஞர் பேச்ச கேட்டது இன்னும் பசுமையா ஞாபகமிருக்கு. //
அது தான் அவரின் திறமையே. பேச்சால் எல்லாரையும் கவர்ந்து விடுவார்.

//மும்மதமும் சம்மதமுன்னுங்கிற பெத்த பேர காப்பாத்துற மாதிரியாவது எதாவது ஒரு சுற்றுலா மையம் கட்டினா நல்லாயிருக்கும்.//
இதே தான் ஊர்ஸ், என் ஆசையும், கனவும். செய்யனும் கண்டிப்பாக இதை செய்யனும்.

நாகை சிவா said...

//ஒரே காரணம் படிப்பறிவு .படிப்பறிவில் தமிழகத்தில் முதலிடம் வகிப்பதே இம்மாவட்டம் சுகாதாரம் ,சாலை வசதி ,வீட்டு வசதி போன்றவற்றில் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு காரணம்//
மறுக்க முடியாத உண்மை ஜோ. உங்கள் மாவட்டத்தில் சுற்றுலா துறை கொஞ்சம் தேவலாம் என்பது என் கருத்து. உங்கள் கருத்துகளுக்கு மிக்க நன்றி.

முதல் வருகை நல்வரவாகட்டும்.

நாகை சிவா said...

//இந்தப்பதிவை
ஏதாவ்து பத்திரிக்கைக்கு அனுப்பி எல்லா
மக்களையும் சென்றடைய ஏற்பாடு செய்யுங்கள். //
வாங்க ராசா, பாக்க பாக்க கோவம் பயங்கரமா வருது.
பத்திரிக்கைக்கு அனுப்பும் அளவுக்கு எழுதி உள்ளேன். :)

நாகை சிவா said...

//இந்த template நல்லா இருக்கு பங்கு :-) //
மெய்யாலுமா சொல்லுற. நன்றி

//கடை தொறந்தாச்சு :-) //
வரேன் வரேன்....
:)))

Raji said...

A very thought provoking post.
Sad state of affairs really

Amar said...

மிகுந்த வருத்தம் அளிக்கும் செய்திகள்.
நாகை எத்தனை சிறப்பாக இருந்த பகுதி!

கிரேக்க Periplus of the Erythraean Seaயில் கூட நாகையை பற்றி referances இருக்காமே?

சோழர் காலத்தில் நாகை ரொம்ப சிறப்பாக இருந்தது இல்லையா?

நாகை Entrepreneurகளை உருவாக்குவது தான் சிறந்த வழி என்று எனக்கு தோன்றுகிறது....

நாகை சிவா said...

//A very thought provoking post.
Sad state of affairs really //
உண்மை தான் ராஜி. முயற்சியே எடுக்க மாட்டேங்குறாங்க. அது தான் வருத்தமாக உள்ளது

நாகை சிவா said...

//சோழர் காலத்தில் நாகை ரொம்ப சிறப்பாக இருந்தது இல்லையா?//
வாங்க சமுத்ரா, ரொம்ப நாள் ஆச்சு பார்த்து :)
உண்மை தான் சோழர் காலத்தில் மிகவும் பிரசித்து பெற்றது நாகை. பூம்புகாரை தெரியாதவர் உண்டா ?

//கிரேக்க Periplus of the Erythraean Seaயில் கூட நாகையை பற்றி referances இருக்காமே?//
சரியாக தெரியவில்லை. விசாரித்து சொல்கின்றேன்.

//நாகை Entrepreneurகளை உருவாக்குவது தான் சிறந்த வழி என்று எனக்கு தோன்றுகிறது.... //
உண்மை தான். உருவாகி கொண்டு இருக்கின்றோம். சாதித்து காட்டுவோம். தாமதம் ஆகலாம். ஆனால் முயன்ற வரை முயலுவோம்.

நாகை சிவா said...

C.T.,
நான் பின்னூட்டம் எதிர்பார்க்கும் நபர்களில் நீங்கள் மிகவும் முக்கியமானவர். அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் கண்டிப்பாக தவறாக பொருள் கொள்ள மாட்டேன். நீங்கள் சொல்ல வரும் பொருளை உள்வாங்கி கொள்ள என்றுமே முயலுவேன்.

//If we don't like the kaveri board we can give petition to the district collector to either clean the place or to remove the board.Hope social justice group won't create any problem........//
இதை இது வரை நான் செய்யவில்லை. இந்த முறை கண்டிப்பாக ஊருக்கு செல்லும் போது அந்த பலகை மறுபடியும் இருந்தால் கண்டிப்பாக பெட்டிசன் குடுத்து அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க முயல்வேன்.

//We are blaming the politicians.I agree with that but not totally.......what is the attitude of the people ? are they really worried about it.//
100 % ஒத்துக் கொள்கின்றேன்.
இந்த பதிவு பின் தங்கிய மாவட்டமாக என் மாவட்டத்தை கூறி விட்டார்களே என்ற ஆதங்கத்தில் போட்டது தான்.

நம் மக்களின் மனநிலை மாற வேண்டும் என்பதில் முழுக்க முழுக்க உண்மை. நாம் அனைவருமே நம் தேவைகளை நோக்கி கொண்டு தான் ஒடிக் கொண்டு இருக்கின்றோம். அதற்கு சுயநலம் தான் காரணம். அந்த சுயநலம் எனக்கும் உண்டு. அதை மறுக்க வில்லை.

ஒவ்வொரு முறை தவறைகளை காணும் போது கோபம் வருகின்றது. எதிர்த்து கேள்வியும் கேட்க முடிகின்றது. ஆனால் அந்த தவறை சரி செய்யும் அளவுக்கு நேரம் இல்லாமல் போகின்றது(சுயநலத்தால்).

நான் இப்படி இருப்பதால் தான் அரசியல்வாதிகளும் அவ்வாறு உள்ளார்கள் என்பதும் உண்மை தான். என்னை பொறுத்தவரை அரசியல்வாதிகளை விட நம் அதிகாரிகள் ஒழுங்காக இருந்தால் எல்லாம் ஒழுங்காக நடக்கும். அந்த அதிகாரிகளை ஒழுங்குப்படுத்த வேண்டிய நிலையில் இருப்பது அரசியல்வாதிகள். எப்படி பார்த்தாலும் இவர்கள் இருவரும் பின்னி பிணைந்து உள்ளனர். அது தான் இங்கு பிரச்சனையே.

நீங்கள் சொன்னதை போன்ற ஒரு அமைப்பு ஏற்படுத்தும் எண்ணம் பல நாட்களாக எனக்கு உண்டு. அது கண்டிப்பாக ஒரு நாள் நிறைவேறும். அது தற்சமயம் முடியாதற்கு காரணம் நான் மேலே சொன்ன சுயநலம் தான் காரணம்.

மக்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும். அடைவதற்கு என்னால் ஆன முயற்சிகளை கண்டிப்பாக செய்வேன் CT.

மு.கார்த்திகேயன் said...

siva, enga dindigul district-um irukirahai paaththu manasu punnai pOchchcu.. atleast intha maniyaththai vachchavathu mavattaththai munnEthinaa sari..

நாகை சிவா said...

CT,
புரிந்து கொண்டமைக்கும், உங்கள் ஊக்கத்துக்கும் மிக்க நன்றி :)))

நாகை சிவா said...

வாங்க கார்த்திக்!
பயணம் எல்லாம் எப்படி இருந்தது. செட்டில் ஆயாச்சா அங்கு.

ஆமாங்க, நீங்கள் சொல்வது மாதிரி இந்த தடவையாவது உருப்படியாக மேம்பாட்டிற்கு செலவு செய்யட்டும்.