Thursday, November 23, 2006

வலைப்பதிவர் சந்திப்பா?

இடம் -----------------------------------------------------------------
நேரம் ------------------------------------------------------------------
நாள் -------------------------------------------------------------------
தலைப்பு ---------------------------------------------------------------மக்கா, தலைப்பை பாத்துட்டு எல்லாரும் வரிஞ்சி கட்டிட்டு வராதீங்க..... ஒன்னும் பெரிசா விசயம் இல்லை. இன்னிக்கு வானம் தெளிவா இருந்தா, தலைநகரம் சென்று அங்கட்டு இருந்து அமீரகத்துக்கு(ஷார்ஜா) செல்லலாம் என்று இருக்கேன்.(24.11.06) அப்படி அங்குட்டு போனா ஒரு நாலு, அஞ்சு நாள் இருப்பேன்.(28.11.06). உலககெல்லாம் நம்ம வலைப்பதிவர்கள் சந்திப்பு நிகழ்த்தி கொண்டு இருக்காங்க.... நாமளும் அதில் எல்லாம் எப்ப கலந்துக்குறதுனு ரொம்ப நாள் ஒரு டவுட் இருந்துச்சு. அந்த டவுட் இந்த தடவை கீளியர் பண்ணலாம் என்று முடிவு எடுத்துட்டேன். ஆம் நண்பர்களே, நாமா அங்க சந்திக்கலாம். ஆனா யாரு எல்லாம் அங்க இருக்கீங்கனு எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்த வரை தம்பி, முத்துக் குமரன் இருக்காங்க. நிலவு நண்பன் இன்னும் இந்தியாவில் தான் இருக்காரு.

அங்குட்டு இருக்கும் நண்பர்கள் ஏதும் சந்திப்பு ஏற்பாடு செய்தால் ஒகே. நமக்கு இடம் ஏதும் அங்கு தெரியாது. போன் நம்பரை மெயிலுக்கோ இல்லை பின்னூட்டத்துக்கோ அனுப்பினால் நோட் பண்ணி அங்குட்டு வந்து அழைக்கிறேன்.

அப்படியே ஒருவேளை எல்லாரும் சந்தித்தால் எந்த தலைப்பில் பேசலாம், சண்டை போடலாம் என்பதை எல்லாம் நீங்களே முடிவு எடுத்துக்கோங்க... நான் ஒரு ஒரமா உர்கார்ந்து வேடிக்கை பாக்குறேன், ஒரு டீ இல்லாட்டி காபி அதுவும் இல்லாட்டி வேற எதையாச்சும் குடித்துக் கொண்டே........

நீ எல்லாம் ஒரு ஜல்லி அடிக்கும், மொக்கை போடும் பதிவர், உன்னை எல்லாம் சந்திக்கனுமா அப்படினு ஒரு கேள்வி எழலாம், அதில் தவறும் கிடையாது. ஆனா இதையே எல்லாரும் சொல்லி எஸ்கேப் ஆகக்கூடும் என்பதும் எனக்கு தெரியும். அதுக்கு தான் ஒரு ஆளை ஏற்கனவே புடிச்சுப் போட்டாச்சு (ஐடியா கொடுத்த கப்பி, நீ நல்லா இரு). அப்படி மாட்டுனா அந்த நல்லவன் வேற யாரும் இல்ல நம்ம தம்பி தான். அவரை மட்டுமாச்சும் கண்டுக்கீனு வந்துடுவேன். தம்பி நீங்க சொன்ன "மேட்டரு" எல்லாம் ரெடி தானே...... அவரை மட்டும் சந்திதால் அது வலைப்பதிவர் சந்திப்பு ஆகி விடுமா என்று தெரியல, அதனால தான் தலைப்பில் ஒரு கேள்விக்குறி........

அப்பால வரட்டா...........

Tuesday, November 07, 2006

நட்சத்திர வாரம்!

என்னடா இவன் போன வாரம் தானே தமிழ்மணம் நட்சத்திரமா இருந்தான், இப்ப என்ன நட்சத்திரம் வாரம் தலைப்பு போட்டு பதிவு போடுறானே தானே யோசிக்கிறீங்க. அது ஒன்னும் இல்லங்க. போன வாரம் அதாவது நட்சத்திர வாரத்தில் போட்ட பதிவுகளை பற்றி ஒரு பதிவு போடலாம் என்று எழுந்த எண்ணத்திலும், நன்றி கூவும் பொருட்டும் இந்த பதிவு.

பல நாட்களுக்கு முன்பே நட்சத்திரமாக தேர்வு செய்யப்பட்டதை நமக்கு தெரிவித்து இருந்தாலும் வழக்கம் போல கடைசி நேரத்தில் பாத்துக்கலாம் என்ற சோம்பேறித்தனத்தால் ஒரு பதிவு கூட எழுதி வைக்க வில்லை. எல்லா பதிவுகளுமே வழக்கம் போல சூட சூட டைப் பண்ணி போட்டது தான். எனக்கு இப்படி ஒரு வாய்ப்பை வழங்கிய தமிழ்மணத்திற்கும் என்னை நட்சத்திரமாக தேர்ந்து எடுத்த மதி கந்தசாமிக்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகள்.

1.
மெய்யாலுமா - வழக்கம் போல ஜல்லியடித்த பதிவு. நட்சத்திர அறிமுக பதிவு அது. வராத பெருந்தலைகள் எல்லாம் வந்து நம்மளை வாழ்த்திட்டு போனாங்க. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. ஒரு சில நபர்கள் இதுக்கு மட்டும் தான் வந்தாங்க. அதுவும் கொஞ்சம் சந்தோஷமா இருந்துச்சு.

2.
உள்கட்டமைப்பு - தானியங்கி(அல்லது ப்ரீபேய்டு) மின்சாரத்தை பற்றிய பதிவு. பல நாள் பாத்தது தான் என்றாலும் அன்று தீடிரென்று இதை பதிவாக போடலாம், அதே சமயத்தில் இதை நம் நாட்டில் எந்த மாதிரி செயல்படுத்தலாம் என்று யோசித்து போட்டப்பட்ட பதிவு அது. பின்னூட்டங்களில் நல்ல கருத்து பரிமாற்றம் இருந்ததாக நம்ம குமரன் சொன்னது மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது.இருந்தாலும் இந்த பதிவின் முதல் வரியில் இருந்த ஒரு வரி சிலரை உறுத்தியதாக சொன்னார்கள். ஒருவர் சற்றே மேல் போய் கேப்டன் பட டயலாக் மாதிரி இருக்குனு சொல்லிட்டார். அந்த வரிகள் போடுவதற்கு காரணமாக இருந்தது பதிவு இது. இந்த பதிவை சமீபத்தில் தான் பார்க்க நேர்ந்தது. பார்த்தவுடன் அதை குறித்து பதிவு போடலாம் என்று இருந்தேன். பிறகு இது போல பதிவுக்கு சம்பந்தம் இல்லாமல், என்ன பிரச்சனை என்றே தெரியாமல் மொட்டை தலைக்கும் முழுங்காலுக்கும் முடிச்சு போடுவது இங்கு ஒன்றும் புதுசு இல்லை என்று விட்டு விட்டேன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படங்களை வைத்து இன்றைய நிலை, அங்கு இப்பொழுது என்ன நடக்கிறது என்பதை எல்லாம் தெரியாமல் சொல்ல வேண்டும் என்பதற்காக பல பின்னூட்டங்கள், அதிலும் குறிப்பிட்ட சில பின்னூட்டங்களை கண்ட பிறகு இந்த வரிகள் என் பதிவில் சேர்க்கப்பட்டது.

3.
சினிமா விமர்சனம் - நாம் பார்த்து கஷ்டப்பட்ட படங்களை பற்றிய பதிவு அது. என்னடா எப்ப பாத்தாலும் 4 படங்களுக்கு சேர்த்து விமர்சனம் எழுதுகிறேன் என்று தம்பி வருத்தப்பட்டார். மதுமிதா போடவில்லை என்று வெட்டி வருத்தப்பட்டார். இந்த பதிவு ரொம்பவே சுமார் என்று நம் நண்பர்கள் சொன்னாங்க. அது உண்மை தான் போல.... இந்த பதிவு போட்ட போது தமிழ்மணத்தில் வெளியீட முடியவில்லை.

4.
வண்ணக் கோலங்கள் - பல நாள் நான் எடுத்து புகைப்படங்களை பதிவாக போட வேண்டும் என்று எண்ணியதை தொடர்ந்து போட்ட பதிவு. பல நல்ல விமர்சனங்களை உள்வாங்கி கொண்டேன். நானே எதிர்பாக்காத அளவுக்கு பலர் வந்து இருந்தனர். இந்த துறையை பற்றி நல்ல அறிவுரைகளை வழங்கினார்கள். அவர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. என்னால் பிடிக்க முடியாத மின்னலை நம்ம கைப்புள்ள போட்டு அசத்தி விட்டார்.

5.
அறுசுவை - சரி நாமலும் ஒரு சமையல் பதிவு போடுவோமே என்று போட்ட பதிவு. நல்ல ரெஸ்பான்ஸ். அறுசுவையை பார்த்து நம்ம வெட்டி கேசரி செய்து சாப்பிட்டு இருக்கார். நல்லா இருந்தது என்று அவரு பக்கத்து வீட்டுக்காரங்களே சொன்னாங்களாம். ஆனா பாருங்க அவரு ஒரு சோதனை முயற்சியாக தான் அவங்களுக்கு முதலில் கொடுத்தார் என்று உண்மை எனக்கு மட்டும் தான் தெரியும். இது போல தம்பி கூட முயற்சி பண்ண போவதாக கேள்வி, பாக்கலாம். இதனால் நம் சமையல் குறிப்பு தொடர்ந்து வரும்.

6,
கண்ணி வெடி - 1 - தொடராக ஆரம்பித்தது. தொடர முடியாமல் போய் விட்டது. நான் நட்சத்திரமாக தேர்ந்து எடுக்கப்பட்டதற்கு காரணமாக இருந்த பதிவு என்று எண்ணுகிறேன். அதனால் தான் இதை ஒரு மீள்ப்பதிவாக போட்டேன். தொடர்ந்து எழுத உள்ளேன். இந்த பதிவு போட்ட தினத்தில் இருந்து பிளாக்கர் சொதப்ப தொடங்கி விட்டது. பின்னூட்டங்கள் போட முடியவில்லை என்று பல மெயில்கள். என்ன பிரச்சனை என்று பார்க்க கூட முடியாதப்படி வேலைப் பளு வேற.

7.
திருநாகை அழகியார் - ஆன்மிகம் இல்லாமல் நட்சத்திர வாரமா என்று எண்ணி போட்ட பதிவு இது. குறிப்பாக குமரன், எஸ்.கே, ஜி.ரா, தி.ரா.ச, கீதா போன்ற ஆன்மிக செம்மல்களை குறி வைத்து போட்ட பதிவு இது. குமரன் மற்றும் கீதா தான் உள்ளேன் ஐயா போட்டார்கள். மற்றவர்களுக்கு என்ன வேலையோ? தொடர்ந்து இது போல பதிவுகளும் அவ்வபோது தொடரும். குமரனுக்காவே பாசுரங்கள் போடப்படும். நம்ம ரவி ஒரு பாசுரம் போட்டு இருந்தார். அவருக்கு என் நன்றி. இந்த பதிவும் பிளாக்கர் சொதப்பி விட்டது. பதிவு போட்டு அது காணாமல் போய் மீண்டும் பதிவாக போடும்ப்படி ஆனது.

8.
திருநாகை பெருமாள் கோவில் படங்கள் - இந்த நாளில் வேற ஒரு பதிவு போடலாம் என்று இருந்த நான் திரு. குமார் அவர்கள் அனுப்பிய படங்களை பார்த்த பிறகு அதையே ஒரு பதிவாக போடலாம் என்று போட்ட பதிவு. எம் பெருமான் படமும், அக்கோவிலின் பிற படங்களை போட்டு இருந்தேன். இந்த பதிவு போட உதவியாக இருந்த குமார் மற்றும் பாபுவுக்கும் என் நன்றி.

போன வாரத்தில் என்னால் முடிந்த அளவு நன்றாக செய்த திருப்தி உள்ளது. மொத்ததில் எனக்கு நம்ம ராமநாதன் சொன்ன மாதிரி, நல்ல அவியலாகப்பட்டது. அது சரியா தவறானு நீங்க தான் சொல்லனும்.

இது போக எனக்கு வழக்கம் போல பின்னூட்டங்கள் மூலம் ஆதரவு கொடுத்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. அதிலும் சிலர் ரொம்பவே பாச மழையில் நனைய வைத்து விட்டார்கள். நான் நட்சத்திரம் ஆனதற்கு என்னை விட அதிகம் மகிழ்ந்த சங்கப் பெருமக்களுக்கும், நண்பர்களுக்கும், கூகிள் டாக்ல மெசெஜ் போட்டு கலக்கி அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றிகள். இது போக என்னை தனியாக மெயிலில் அழைத்து வாழ்த்து கூறிய அன்பு உள்ளங்களுக்கும் என் நன்றி.

கடைசியாக நம்ம ராயல் ராம். இவரு தான் நம்மை தாரை தப்பட்டையுடன் வரவேற்றார். நன்றி சொல்லி ஒரு பதிவு போட சொன்னதும் அவரு தான். அவருக்கு என் அன்பு கலந்த பண்பு கலந்த மரியாதை கலந்த இன்னும் என்ன என்ன கலக்கனுமோ எல்லாத்தையும் கலந்த நன்றிகள். ராயல் இது போதும்ல... ரொம்ப கூவுனா நல்லா இருக்காது.

Sunday, November 05, 2006

திருநாகை பெருமாள் கோவில் படங்கள்

நாகையில் ஸ்ரீ செளந்தராஜ பெருமாள் கோவிலை பற்றி போன பதிவில் பாத்தோம். இப்பதிவில் அக்கோவிலின் புகைப்படங்கள் சிலவற்றை காணலாம். படங்கள் எடுத்த திரு. பாபு அவர்களுக்கும் அந்த படத்தை எனக்கு கொடுத்து உதவிய திரு. குமார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

எம்பெருமான்

திருமாது புவிமாதோடு திருநாகை அழகர்

ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவில் வாயில்

வாயில் பக்கவாட்டு படம்

சொர்க்க வாசல் வழி

ராமர் பாதம்

துவார பாலகர்

Saturday, November 04, 2006

திருநாகை அழகியார்

நாகையை சுற்றி அனைத்து மதத்தையும் சார்ந்த பல கோவில்கள் உள்ளன. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய கோவில்கள் - வேளாங்கண்ணி மாதா கோவில், சிக்கல் சிங்காரவேலர், நாகூர் ஆண்டவர், நெல்லுக்கடை மாரியம்மன், செளந்தரராஜப் பெருமாள், எட்டுக்குடி முருகன், திருநள்ளாறு சனீஸ்வரன் போன்ற பல கோவில்களை சொல்லாம். என்னால் முடிந்த அளவு ஒவ்வொரு கோவிகளை பற்றியும் இங்கு தர முயற்சிக்கின்றேன். முதலில் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள் கோவிலை பற்றி காண்போம்.

சிறு குறிப்பு

மூலவர் : ஸ்ரீ செளந்தரராஜப் பெருமாள்
தாயார் : ஸ்ரீ செளந்தரவல்லி
உத்ஸ்வர் : நாகை அழகியார்
மூன்று கோலங்கள் : கிடந்தான், இருந்தான், நின்றான்
சிறப்பு அர்ச்சாமூர்த்திகள் : அஷ்டபுஜ நரசிம்மன், கருடன்
அமர்ந்தநிலை, பச்சைவண்ணன், பவழவண்ணன்
பூஜை : ஸ்ரீபாஞ்சராத்ரம் பாத்மசம்ஹிதை பிரகாரம்
விமானம் : பத்ரகோடி விமானம்
புஷ்கரணி : சாரபுஷ்கரணி செளந்தர்ய புஷ்கரணி
ஸ்தலவிருட்ஷம் : மாமரம்

நாககன்னிகைக்கும் சாலீசுக மகராஜனுக்கும், பெருமாள் கன்னிகாதானம் செய்து கொடுத்த ஸ்தலம்.


திவ்யதேசங்கள் நூற்றெட்டு ஆகும். இதில் சோழ நாட்டில் உள்ளவை நாற்பது தலங்கள். இந்த நாற்பதில் நாகை வட்டத்தில் அமைந்த உள்ளவை இரண்டு. ஒன்று நாகப்பட்டினத்திலும் மற்றது திருக்கண்ணங்குடியில் உள்ளது. இத்திருகோவில் நாகை புகைவண்டி நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ளது. பெருமாள் கோவிலுக்கு பஸ்நிறுத்தமும் உள்ளது.

கோவிலின் முகப்பில் ஒரு நாற்கால் மண்டபமும், அதனை அடுத்து தொண்ணூறு அடி உயரமுள்ள எழுநிலை கோபுரமும், விளங்க நாற்புறம் உயர்ந்த மதில்களும் உள்ளன. மேற்புற மதிலில் சிறு கோபுரத்துடன் கூடிய மேற்கு நோக்கிய வாயில் ஒன்று உள்ளது. மதில்களைச் சூழ நான்கு மாட வீதிகளும், இராஜ கோபுர வாயிலுக்கு நேரே நீண்டதொரு சன்னதித் தெருவும், நாற்புறமும் தேர் ஒடும் பெரிய வீதிகளும் பொருந்தியுள்ளன.

மேற்கூறிய இடம் தான் எங்களில் எவர்கீரின் ஸ்பாட். இந்த நாலு தெருவில் ஏதாவது ஒரு இடத்தில் தான் இருப்போம். கோவிலுக்கு எதிரில் இருக்கும் ராஜா டீ கடையும் நம்ம ஸ்பாட்டில் ஒன்று. நம்ம சக பதிவர் "வடவூர் குமார்" மடவிளாகம் என்று தன் பதிவிற்கு பெயர் வைத்ததும் இந்த கோவிலின் மடவிளாகத்தை குறிக்கும் பொருட்டு தான் என்று எண்ணுகின்றேன். என்ன குமார் அண்ணன் சரி தானே? இது போக இந்த பகுதியில் இருந்து வந்து இருக்கும் மற்ற சக பதிவர்கள் நாம் அனைவரும் அறிந்த "கிழக்கு பதிப்பகம்" பத்ரி மற்றும் நண்பர் "அறுசுவை" பாபு. கோவிலை சுற்றியுள்ள தெருகளில் தான் நாங்க சிறு வயதில் கிரிக்கெட், கிட்டிபுல், பம்பரம் போன்ற விளையாட்டுகள் விளையாடுவோம். தெருவில் இருக்கும் அனைவரின் சாபத்தையும் வாங்குவோம். ஹும் அது எல்லாம் ஒரு காலம். இன்றும் அங்கு நின்று சேட்டைகள் செய்தாலும் அந்த அறியா வயதில் செய்த சேட்டைகளே தனி தான். சரி சரி மீண்டும் கோவிலுக்கு போவோம்....

இக்கோவிலை சுற்றி ஸ்ரீ நவநீத கிருஷ்ணன் கோவில், ஸ்ரீ தேசிகர் கோவில், அனுமன் கோவில், அங்காள பரமேஸ்வரி கோவில், கன்னிகா பரமேஸ்வரி கோவில், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், சர்ச் மதில் சுவற்றை ஒட்டி பவழக்காளி அம்மன் கோவிலும் உள்ளன.

கி.பி. 8 நூற்றாண்டில் திருமங்கையாழ்வார் எம்பெருமானை கண்டு வழிபட நாகை வந்தார், நின்ற கோலத்தில் உள்ள கருமாணிக்க கள்வனிடம் தன் உள்ளத்தைப் பறி கொடுத்தார். தான் ஒரு தலைவி நிலையை அடைந்து தலைமகனாகிய பெருமானிடம் காதல் பூண்டார். அக்காம நோய் பலவாறு தன்னை நலிய அதனால் அப்பெருமானை உருவெளிப்பாட்டில் கண்டு மயங்கிக் கூறியதாக அகத்துறை பாசுரங்கள் அமைந்த பதிகம் ஒன்று அருளியுள்ளார்.

இக்கோயிலில் புராணம் சிற்பம் சரித்திரம் ஆகிய நிலைகளில் காணத்தக்க உருவங்கள் பல உள்ளன. ஸ்ரீ பெருமான் மூலவராக நின்ற நிலையிலும், அரங்க பெருமான் எனக் கிடந்த நிலையிலும் கோவிந்தராஜனாக இருந்த நிலையிலும் ஆக முவகைக் கோலங்களில் கோவில் கொண்டுள்ளார். நாயக்கர் மண்டபத்தில் ஸ்ரீ பெருமாள் சன்னதிக்கு செல்லும் தேர்வாயிலின் இருபுறமும் திருவாசியுடன் கூடிய எட்டடி உயரமுள்ள இரு துவார பாலகர்களின் சுதை உருவங்கள் அரிய சிற்ப அழகு வாயந்தது. திரிபங்கி நிலையில் சங்கு, சக்கரம், கதை ஆகியவற்றை மூன்று கரங்களில் தாங்கிக் கொண்டு ஒரு கையால் காவல் முத்திரை காட்டிக் கொண்டு அமைதி தவழும் முகத்துடன் பல அணிகளைப் பூண்டு நிற்கும் இப்படைப்பு உருவம் பதினேழாம் நூற்றாண்டின் கலைப்படைப்பாகும். இது போன்ற பல சிற்பங்கள் இருந்தாலும் கட்டுரையின் நீளத்தை கருத்தில் கொண்டு அத்தோடு விடுகின்றேன். அடுத்த கட்டுரையில் இக்கோயிலில் நடைப்பெறும் பூஜைகள், விழாக்கள், கோவில் உள் இருக்கும் சன்னதிகளை பற்றி எழுதுகிறேன்.

எம்பெருமானை நாகை அழகியார் என்று அழைப்பார்கள். அந்த சற்றும் மிகை கிடையாது. ஒரு முறை எம்பெருமானை வந்து தரிசித்து பாருங்கள். அவன் அழகில் கண்டிப்பாக நீங்களும் மயங்கி விடுவீர்கள். வரும்போது நம்ம வீட்டுக்கும் ஒரு வருகை கொடுத்துட்டு போங்க.....

Friday, November 03, 2006

கண்ணி வெடி - 1

கண்ணி வெடி என்பது ஒரு வகையான வெடிக்குண்டு தான்.

முதலில் இதை ராணுவத்தில் தான் பயன்படுத்தினார்கள். இரண்டாம் உலக போரின் போது தான் இது பெரும் அளவில் பயன்படுத்த பட்டது. அதன் பிறகு வியட்னாம் போர், கொரியன் போர், முதல் வளைகுடா போன்ற போர்க்களின் வாயிலாக உலகத்தின் மூலை முடுக்கு எல்லாம் இது பரவி விட்டது. இன்று இந்த வெடிகள் பல நாட்டில் தயாரிக்கபடுகின்றது, இந்தியாவையும் சேர்த்து...

இந்தியா நான்கு போர்க்களில் கண்ணிவெடிகளை பயன்படுத்தி உள்ளது.1947-48, 1965 மற்றும் 1971 ஆண்டுகளில் பாகிஸ்தானுக்கு எதிராகவும், 1962யில் சீனாவிற்க்கு எதிராகவும் பயன்படுத்தி உள்ளது. கார்க்கில் போரின் போதும் பயன்படுத்த பட்டு இருக்கலாம். சரியாக விபரங்கள் கிடைக்கவில்லை. இந்திய ராணுவம் தன் உள்நாட்டு பிரச்சனைகளுக்காக ஒரு போதும் இந்த வகை குண்டுகளை பயன்படுத்தில்லை என தெரிவித்து உள்ளது.

எதற்காக இந்த வகையான வெடிக்குண்டுகள் உருவாகப்பட்டது என்று பார்க்கும் போது, எதிரிகளின் முன்னேற்றத்தை தடுக்கவும், இரவு நேரங்களில் எதிரிகள் தீடிரென்று தாக்குவதை தடுக்கவும், எதிரிகளின் வாகனங்களை அழிப்பதற்க்கும், பாதைகளை, நீர் ஆகாரங்களை துண்டிப்பதற்க்காகவும் தான் உருவாக்கபட்டது. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் எதிராளிகளை செயல் இழக்க செய்யவும், அந்த தருமணத்தில் தாங்கள் சுகாரித்து கொள்வதற்கும். இந்த வகை குண்டுகளை தொடுவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதுன் மூலமும், காந்த சக்தியின் மூலமும், ரிமோட் கொண்டு இயக்குவது மூலமும், டிரிப் வயர் மூலமும் வெடிக்க செய்யலாம்.

கண்ணி வெடிகளை ஒரு சிறந்த(முழுமையான) போர் வீரன் என்று சொல்வது உண்டு.

"The landmine is eternally prepared to take victims. It is the perfect solider."

- Nobel prize winner Mr. Jody Williams.


ஆனால் ஒரு இடத்தில் போர் நிறைவு பெற்றால் பெரும்பாலான போர் வீரர்கள் திரும்பி விடுவது உண்டு. ஆனால் இந்த கடமை வீரன்(கண்ணி வெடிகள்) தன் கடமையை 50 வருடங்கள் ஆனாலும் தவறாது செய்வதற்கு காத்து கொண்டு இருக்கும் என்பது தான் கசப்பான உண்மை.

கண்ணி வெடிகளில் இரு வகை உண்டு. ஆண்டி டேங்க் வெடிகள்(Anti-Tank Mines) மற்றும் ஆண்டி பர்ச்சனல் வெடிகள்(Anti-Personnel Mines). இவற்றை குறித்து விரிவாக பின்வரும் தொடர்களில் காணுவோம். ஆண்டி டேங்க் வெடிகள் தான் ஆரம்ப காலத்தில் பெரும்பாலும் உபயோகபடுத்தபட்டது. ஆனால் எதிராளிகள் இதை சுலபமாக கண்டுபிடித்து அகற்றிய காரணத்தால், இந்த ஆண்டி பர்ச்சனல் வகை வெடிகள் தயாரிக்கப்பட்டது. இந்த வெடிகள் முதலில் ராணுவ(போர்) வீரர்க்களை மட்டும் தான் குறி வைத்து வைக்கப்பட்டது. பின்னர் சிவிலியன் என்று அழைக்கப்படும் பொது மக்களையும், அவர்களின் நிலங்களையும் நோக்கி திரும்பி விட்டது. அவ்வாறு நோக்கம் மாறியதால் இந்த வெடி குண்டுகளை வைக்கும் போது கடைப்பிடிக்கும் சில விதிமுறைகளும் காற்றில் பறக்கவிடப்பட்டன.

----------------------------------------------------------------------------------
பொதுவான தகவல்கள்:
*தற்பொழுது உலகம் முழுவதும் 100 மில்லியன் கண்ணி வெடிகள் உள்ளன.

*1975 ஆண்டில் இருந்து 2005 வரை 1 மில்லியன் மக்கள் இந்த கண்ணி வெடிகளால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.( இறந்தவர்களையும் சேர்த்து)

*இந்த கண்ணி வெடிகளால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் - ஆப்கானிஸ்தான்(உபயம் - சோவியத் யூனியன்), ஈராக்(உபயம் - பெரியண்ணன் அமெரிக்கா), கம்போடியா,அங்கோலா, புருண்டி, கொழும்பியா, நேபாளம்,ஸ்ரீலங்கா, சூடான்.........

*இந்தியாவில் பெரிய அளவில் கண்ணி வெடி பாதிப்புகள் கிடையாது. வடகிழக்கு மாநிலங்களிலும், காஷ்மீரிலும் கண்ணி வெடி பாதிப்பு ஒரு அளவுக்கு உண்டு.

*மேற் சொன்ன நாடுகளில் ஆப்கானிஸ்தான் மற்றும் கம்போடியாவில் 35 % சகவீதத்துக்கு மேற்பட்ட நிலங்கள் கண்ணிவெடிகளால் நிறைந்து உள்ளது. *ஈராக் நிலவரம் கிட்டதட்ட அது போல் தான் உள்ளது.

*ஸ்ரீ லங்காவில் இன்னும் போர் நடந்து கொண்டு இருப்பதால் எந்த அளவுக்கு கண்ணி வெடிகள் உள்ளது என்பது இன்னும் ஒரு கேள்வி குறி தான்.

*ஒரு தரமான ஆண்டி பர்ச்சனல் வெடிகுண்டை ஒரு மூன்று டாலர் இருந்தால் செய்து விடலாம்.

*நிலத்தில் புதைத்த ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்க்கோ, செயல் இழக்க செய்வதற்க்கோ ஆகும் செலவு குறைந்தபட்சம் 1000 டாலர்.
----------------------------------------------------------------------------------

- சோகம் தொடரும்...
பின்குறிப்பு : இது ஒரு மீள் பதிவு. ஜுன் மாத கடைசியில் ஆரம்பித்த இந்த தொடரை ஒரு சில காரணங்களால் தொடர்ந்து எழுத முடியவில்லை. இனி தொடர்ந்து எழுதலாம் என்று எண்ணிய காரணத்தால், இதை மீண்டும் அனைவரின் கவனத்திற்கு கொண்டு வரும் பொருட்டு இதை ஒரு மீள் பதிவாக வெளியிடுகிறேன்.
ஒரு கண்ணி வெடியை எடுப்பதற்கு 1000 டாலர் மிகவும் அதிகம் என்று பலர் பின்னூட்டம் இட்டு இருந்தார்கள். அதற்கு விளக்கம் பின் வரும் தொடர்களில் கண்டிப்பாக எழுதுகின்றேன்.

Thursday, November 02, 2006

அறுசுவை

தலைப்பு "அறுசுவை" னு வச்சாச்சு. அதுக்கு தகுந்த மாதிரி ஏதும் மேட்டர கண்டிப்பாக எழுதனும். ஆனா நம்ம செய்த சமையல் என்னிக்கு அறுசுவையோடு இருந்து இருக்கு. அதனால் அதை முதலில் எழுதாமல், தலைப்புக்கு தகுந்த மாதிரி ஒரு விசயத்தை சொல்லிட்டு நம்ம மேட்டருக்கு போயிடலாம்.

நம்ம வலைப்பதிவு முகப்பில் இடது கை பக்கம் "அறுசுவை" அப்படிங்குற ஐகான் பாத்து இருப்பீங்க. சிலர் வலைப்பக்கத்திலும் இந்த பெயரை நான் உபயோகித்து இருப்பேன். அந்த அறுசுவையை பற்றி சில வரிகள்....

"முற்றிலும் சமையல் குறித்த முதல் தமிழ் இணையத்தளமாய், கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக அறுசுவை இயங்கி கொண்டு உள்ளது . இந்த தளம் முழுக்க முழுக்க உணவு சம்பந்தமான தகவல்களைத் தருவதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது. உணவு சம்பந்தமாக இந்ததளத்தில் கிடைக்காத தகவல்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு அனைத்து தகவல்களையும் முழுமையான அளவிற்கு தருவதற்கான முயற்சிகள் மேற்கொண்டு அதில் ஒரளவும் வெற்றி பெற்று உள்ளார்கள். அனைத்து வகையான குறிப்புகளை சரியாக வரிசைப்படுத்தி நமக்கு வேண்டிய உணவு வகைக்கான குறிப்புகளை உடனே கிடைக்கும் படி செய்து உள்ளது மிகவும் பயன் உள்ளதாக உள்ளது.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய சில பக்கங்கள்:

கூட்டாஞ்சோறு - பல சமையல் வல்லுனர்களின் குறிப்புகள் உள்ள பக்கம்
மன்றம் - பல வகையான தலைப்புகள் கொடுத்து ஒரு உரையாடற் களமாக உள்ள பக்கம்
ஆரோக்கியம் - உடல் ஆரோக்கியத்துக்கு உணவின் பங்கை குறித்து விளக்கும் பக்கம்
யாரும் சமைக்கலாம் - படத்துடன் உணவை சமைப்பது எப்படி என்று விளக்கும் பக்கம்

மொத்ததில் இந்த வலைத்தளம் என்னை போல உறவையும் நல்ல உணவையும் பிரிந்து வாழும் மக்களுக்கு பயன் தருமாறு உள்ளது. எங்களுக்கு மட்டும் இல்லை உங்களுக்கும் இது ஒரு நல்ல பயன் தரும் வலைத்தளமாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் இங்கு அந்த தளத்தை பற்றி எழுதி உள்ளேன். ஒரு முறை போய் பாத்துட்டு வாங்க, உங்களுக்கே பிடிக்கும்.

ஒகே இப்ப நம்ம மேட்டருக்கு போலாம்.

என்ன மேட்டருனா, படத்துடன் கூடிய ஒரு சமையல் குறிப்பு தான் இன்னிக்கு மேட்டரு.

சமையல் குறிப்போட பெயர் என்ன வேணுமோ அதை நீங்களே வச்சுக்கலாம். இதுக்கு உண்மையிலே என்ன பெயருனு தெரிஞ்சவங்க சொல்லாம். இல்லாட்டி அப்பால நான் சொல்லுறேன்.

முதல் எத்தனை பேர் இருக்கோம் என்பதை பாத்துக்கோனும். அளவுக்கு இல்ல யாரு யாரு என்ன என்ன வேலை செய்வதுனு முடிவு பண்ண. அளவு எல்லாம் ஒரு மேட்டரே எவ்வளவு பொருள் இருக்கோ அதை வச்சு மேனேஜ் பண்ணிக்கனும். தேவையான பொருட்கள் - கோதுமை மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், உருளைகிழங்கு, எண்ணெய் இன்ன பிற...
செயல் விளக்கம்:


படத்தில் இருப்பது போல் கோதுமை மாவை கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி விட்டு நல்லா பிசையனும். இது கொஞ்சம் கஷ்டமான வேலை. அதுனால இந்த வேலைய அடுத்தவன் கிட்ட தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல வெங்காயம், பச்சை மிளகாய நல்லா பொடியா வெட்டிங்கோங்க. இது கண்ணுல கண்ணீர் வர மேட்டர். அதனால இதையும் தள்ளி விட்டுட்டுங்க.

படத்தில் இருப்பது போல உருளைகிழங்கை நன்கு வேக வைத்து உரித்து மசித்து கொள்ளவும். இதை சூடாகாக இருக்கும் உரித்தால் கையே சுடும், அதனால் இதுவும் நமக்கு வேண்டாம்.


படத்தில் இருப்பது போல வெட்டிய வெங்காயம், ப.மிளகாய், உ.கிழங்கு எல்லாத்தையும் ஒன்றாக போட்டு நன்கு பிசறி கொள்ளவும். பிசுறு இல்லாமல் நன்றாக மசிக்க வேண்டும். அதனால் இதுவும் நமக்கு சரிப்பட்டு வராது.


படத்தில் இருப்பது போல கோதுமை மாவை பெரிதாக உருட்டி முதலில் சிறிதாக தேய்த்து அதில் இந்த பிசைந்து வைத்த கிழங்கை வைக்கவும். இதை தேய்க்கம் போது வட்டமாக தேய்க்கனும். இது நமக்கு வராது, அதனால் இதுவும் இதை தேய்த்து முடிக்கும் வரை நாம் வர வேண்டாம்.

படத்தில் இருப்பது போல மூடி, உள்ளங்கையில் வைத்து தட்டிக் கொள்ளவும்.படத்தில் இருப்பது போல உள்ள வைத்த கிழங்கு வெளிய வந்து விடாமல் நல்லா வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.படத்தில் இருப்பது போல எண்ணெய் விட்டு இதை கல்லில் போடவும். அப்ப அப்ப திருப்பி போடுங்க அப்ப தான் கருகாமல் இருக்கும். நமக்கு வேற வேலை இருப்பதால் இதையும் அடுத்தவனிடம் கொடுத்து விடலாம்.


படத்தில் இருப்பது போல திருப்பி போடுவதில் வல்லவராக இருந்தால் அந்தரத்தில் திருப்பி போடுங்கள். இதை சரியாக போட்டோ எடுக்க என்னை மாதிரி பக்கத்தில் ஆள் இருந்தால் பண்ணுங்கள். இல்லாட்டி வீண் முயற்சி வேணாம்.


படத்தில் இருப்பது தான் பைனல் அவுட்புட்டு. மேல நெய் தடவினால் இன்னும் மணமாக இருக்கும். இப்ப தான் நம்ம தேவை ரொம்ப முக்கியம். அதனால இந்த வேலைய நம்ம பாத்தே ஆகனும். கிழங்கு பிசையும் போது கொஞ்சம் மிளகாய் தூள் போட்டு பிசைந்தால் இன்னும் நல்லா இருக்கும். இரண்டு சாப்பிட்டா போதுங்க அன்றைய பொழுதுக்கு வேறு தேவையில்லை.

முயற்சி செய்து பாருங்க, நல்லா இருந்தா சொல்லுங்க, மேற்கொண்டு பல சமையல் குறிப்புகள் போடுறேன். நல்லா இல்லாட்டி, அரசியல் (சமையல்) வாழ்வில் இது எல்லாம் சகஜம் என்று நினைச்சுக்கிட்டு என்ன மன்னிச்சு விட்டுட்டுங்க.

Wednesday, November 01, 2006

வண்ணக் கோலங்கள்

நமக்கு இந்த கலைத் தாகம் கொஞ்சம் உண்டுங்க. அதிலும் இந்த போட்டோகிராப்பி (சரியா படிக்கவும், ஸ்டெபி கிராப் இல்ல)மேல் ஒரு தனி ஈர்ப்பு உண்டு. அதை முறையாக கற்று கொண்டதும் கிடையாது. அதற்கு முயற்சி செய்ததும் கிடையாது. நான் போட்டோவிற்கு நிற்பதை விடவும் எடுக்க தான் அதிகம் ஆசைப்படுவேன். எந்த டப்பா கேமராவா இருந்தாலும் அதை கையில் வைத்து இருந்தால் நம்மளை ஒரு பெரிய ரேஞ்சல திங்க் பண்ணி பாத்துப்பேன். கல்லூரி முடிந்த சென்னையில் குப்பை கொட்டிக் கொண்டு இருந்த போது இந்த மேட்டரை எல்லாம் மறந்து ஒழுங்கா பொழப்ப பாத்துக்கிட்டு இருந்தேன். போன வருடம் ஹைத்தி போய் சோனி சைபர் சாட் 7.2 கேமரா வாங்கினவுடன் மறுபடியும் கிறுக்கு புத்தி வந்துடுச்சு. அந்த பொட்டிய வச்சு நம்ம திறமைய(???) என்னமா காட்டி இருக்கேனு கீழே இருக்கும் புகைப்படங்களை பாருங்க. சிலது நிக்கான் பொட்டியில் புடிச்சது.

எனக்கு பெரும்பாலும் மனிதர்களை எடுப்பதை விட வானம் நித்தம் நித்தம் காட்டும் வண்ணக் கோலங்களை எடுப்பதில் தான் ஆனந்தம் அதிகம். பாருங்க எப்படி இருக்குனு, பாத்துட்டு அப்படியே ஒரு வார்த்தையும் சொல்லிட்டு போங்க. ஏன் கேட்குறேனா.... இந்த பேசிக் மாடல் கேமராவ விட்டு அடுத்த லெவலான இண்டர்மிடியட் கேமரா (நிக்கானில்) வாங்கலாம் என்று இருக்கேன். உன் லட்சணம் இதுலே தெரியுதுனு சொல்லிட்டிங்க வைங்க, அந்த கேமரா பொட்டி வாங்கும் எண்ணத்தை கொஞ்சம் நிறுத்தி வைப்பவன்ல, அதுக்கு தான்.

இடைக்குறிப்பு : அனைத்து புகைப்படங்களையும், அந்த அந்த புகைப்படத்தின் மேல் க்ளிக் பண்ணினால் தனி ஜன்னலில் பெரிதுப்படுத்தி பார்க்கலாம்.

அந்திமாலை பொழுது, சூரியன் விடை பெறும் நேரம். இடம் : ஹைத்தி, தங்கி இருந்த ஹோட்டல் பால்கனியில் இருந்து புடிச்சது. பொட்டி - நிக்கான்.

சூரியன் தன் கடமையை செய்ய வெளி வந்த காலை பொழுது. இடம் : ஹைத்தி, உணவகத்தில் ரொட்டிக்காக(பிரட்) காத்து இருந்த நேரத்தில் புடித்தது. பொட்டி - சோனி

நான் என் கடமையை செய்ய ஹெலிகாப்டரில் போன மதிய பொழுது. இடம் : ஹைத்தி, வானில் இருந்து பிராக்கு பார்த்துக் கொண்டே புடிச்சது. பொட்டி - நிக்கான்

மீண்டும் ஒரு மயக்கும் மாலை பொழுது. இடம் : ஹைத்தி, அறையின் சன்னல் வழியாக ஜும் பண்ணி புடிச்சது. பொட்டி - நிக்கான்

வார விடுமுறையை அனுபவிக்க சென்ற பகல் பொழுது. இடம் : ஹைத்தி, தனித்து அமர்ந்து லபாடி பீச்ல புடிச்சது. பொட்டி - நிக்கான்

வண்ணக்கோலங்கள் காட்டிய மாலை பொழுது. இடம் : ஹைத்தி, மாடியில் உலாத்தி கொண்டு இருக்கும் போது சட்னு பாத்து பட்னு புடிச்சது. பொட்டி - நிக்கான்

உலக அதிசயத்தை அண்ணாந்து பார்த்த மாலை பொழுது. இடம் : பாரீஸ், டாக்சியில் இருந்து அவரத்தில் புடிச்சது. பொட்டி - சோனி

இந்தியன் மாபியா துள்ளி விளையாண்ட மாலை பொழுது. இடம் : பாரீஸ், ஈஃபில் டவரை பாத்துட்டு திரும்பும் போது நம்ம பசங்க ஆடிய ஆட்டத்தை புடிச்சது. பொட்டி - சோனி


கனவு புகைப்படமான மின்னலை புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற முயற்சித்த இருள் கவ்விய இரவு பொழுது. இடம் : சூடான், மின்னல் அடிக்கடி மின்னுவதை முழுமையாக பிடிக்க முடியாமல் ஆறுதலுக்கு புடிச்சது. பொட்டி - சோனி

மணல் புயலை புகைப்படம் எடுத்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒடிய மாலை பொழுது. இடம் : சூடான், மணல் புயலை பிடிக்க ஒடிய நம்மை மழை துரத்த தொடங்கிய போது புடிச்சது. பொட்டி - சோனி