Friday, March 30, 2007

வாழ்க சனநாயகம் - 2

வாழ்க சனநாயகம் - 1

சூப்ரீம் கோர்ட் OBC இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதித்தற்க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை(31.03.07) பந்த் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இட ஒதுக்கீட்டில் எனக்கு சில கருத்து மாற்றங்கள் இருந்தாலும், அதற்கு எதிர்ப்பு கிடையாது. அதைப் பற்றியும் விவாதிக்கவில்லை இந்த பதிவு.

என் கேள்வி எல்லாம், நாளை இந்த பந்த் அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன என்பது தான். காவிரி நீர் பிரச்சனை, முல்லை அணை பிரச்சனை, இலங்கை ராணுவத்தால் நித்தமும் இறந்து கொண்டு தமிழக மீனவர் பிரச்சனை போன்ற காரணங்களுக்கு அறிவிக்கப்படாத பந்த் இந்த இடைக்கால தீர்ப்புக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. (நேற்று கூட குமரிக்கு அருகில் இலங்கை ராணுவத்தால் 4 மீனவர்கள் மேல் துப்பாக்கி சூடு நடைப் பெற்று உள்ளது)

இந்த இடைக்கால தீர்ப்பை குறித்து பலரும் பல கருத்துக்கள் கூறி உள்ளார்கள். அதில் காங் - ஒரு இடைக்கால ஏற்பாடு தான் இந்த தீர்ப்பு. சூப்ரீம் கோர்ட்டின் உத்தரவு இட ஒதுக்கீடு கொள்கைக்கு ஏதிரானதல்ல. புள்ளி விபரங்களுக்கு ஏதிராகவே தீர்ப்பு கூறப்பட்டுள்ளது. மத்திய அரசின் முக்கிய கட்சியான காங், இப்படி கூறி இருக்கும் போது பந்த்க்கு என்ன அவசியம். நம் முதல்வர் கூட இந்த பந்த கோர்ட்டுக்கு ஏதிரான பந்த இல்லனு சொல்லுறார். ஏப்ரல் மாசம் நெருங்கி விட்டதுனு ஞாபகப்படுத்துற மாதிரி இன்னும் ஒரு விசயம் சொல்லி உள்ளார். இந்த பந்த்தில் இருந்து அத்தியாவசியப் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று கூறி விட்டு விமான, ரயில் போக்குவரத்தை நிறுத்தும்படி மத்திய அரசை கேட்டுக் கொள்வோம் என்கிறார்.

இந்த தீர்ப்பு ஒரு தவறான தீர்ப்பாகவே இருந்தாலும் அதை சட்ட ரீதியாகவே எதிர்க்கொள்ள வேண்டியது தானே.(மற்ற விசயங்களில் செய்தது போல்) ஏன் இந்த விசயத்தில் மட்டும் இவ்வளவு அளவுக் கடந்த அக்கறை? சமூக நீதி காவலர் என்ற பெயரை தக்க வைத்துக் கொள்ளும் அக்கறையா? அல்லது மற்ற பிரச்சனைகளில் இருந்து திசை திருப்ப கிடைத்த நல்ல வாய்ப்பு அதை பயன்ப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமா?

இந்த பந்த்தை நாளை மறுநாள்(ஏப்ரல் 1) அறிவித்து இருக்கலாம், இன்னும் சரியாக இருந்து இருக்கும். இல்லை நமக்கு என்றும் ஏப்ரல் 1 தான் என்று முடிவு செய்து விட்டார்கள்.

வாழ்க சனநாயகம்

திருமகன் - பொறுமையை சோதிக்க

என்னுடைய பொறுமையை அடிக்கடி பல வழியில் சோதித்து பார்ப்பது வழக்கம்ங்க. நம்ம அரசியல்வாதிகளின் அறிக்கை, பேட்டிகள், இந்திய கிரிக்கெட் போட்டிகள் போன்று பல வழிகளில், அதில் ஒரு வழி நம்ம தமிழ் சினிமா பார்ப்பது. அந்த வழியில் சில நாட்களுக்கு முன்பு திருமகன் படத்தின் மூலம் என் பொறுமையை மீண்டும் சோதித்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சும்மா சொல்லக் கூடாது படம் ஆரம்பித்தில் இருந்து என்னமா சோதிக்குறாங்க... கள்வனின் காதலியை மிஞ்சி விட்டார் S. J. சூர்யா.

கதை என்னனு கேட்குறீங்களா, ரொம்ப தாங்க தமாஸ் உங்களுக்கு, 2.30 முழுசா வர்கார்ந்து பார்த்த எனக்கே தெரியல, என் பதிவ 2 நிமிசம் படிச்சுட்டு கத கேட்குறிங்களே, இது நியாயம். ஒரே ஒரு விசயம் தான் எனக்கு இந்த படத்தில் புரிந்தது - 4 கதாநாயகிகள் சூர்யாவை துரத்தி துரத்தி லவ்வுறாங்க. இவரு மீராவை லவ்வுறார். கடைசியில் தந்தை சொன்ன பொண்ணை கட்டிக்குறார்.

புரியாத விசயம் - அவரை போய் ஏன் லவ்வுறாங்க என்பது தான். இந்த படத்தில் ஒரு சூப்பர் செண்டிமெண்ட் - தாயத்துடன் கூடிய அரணாக் கொடி. எப்படி தான் இப்படி எல்லாம் திங்க் பண்ண முடியுதோ?

சரி, நமக்கு படம் தான் புரியல, எதாச்சும் விமர்சனத்தை படித்தாவது உங்களுக்கு கதை சொல்லி விடலாம் என்று தேடியதில் கிடைத்தவை

குமுதம் : திருமகன் - வக்கிர மகன்

கல்கி : இயக்குனர் ரத்னகுமாரோடு முதல் படம். பாரதிராஜா கூடவே இருந்ததால மண் வாசனைப் படம் தந்ததுல தப்பில்ல. ஆனா, தரமா தரணுமா இல்லையா?

நான் சொல்ல விரும்புவது : சூர்யா, நல்லாவே என் பொறுமையை சோதிச்சது இந்த திருமகன், அடுத்த சோதனையாக நான் வியாபாரி பார்க்க ரெடி, ஆனால் அந்த படத்தில் நீங்க உங்க சொந்த குரலில் பேச மாட்டேன் என்று எனக்கு வாக்கு கொடுக்கனும்.

இந்த படத்தை பலர் தடுத்தும் மீறிக் கொண்டு பார்த்து எப்படி இன்னும் தெளிவா இருக்கேன் என்று கேட்பவர்களுக்கு, இந்த படத்தை பார்த்து முடித்தவுடன் "Will Smith" நடித்த "The Hitch" படத்தை பார்த்து என்னை தேற்றிக் கொண்டேன்.

Monday, March 26, 2007

போதை பொருட்கள்!!!

நம்ம வேதா போதை பொருட்கள் குறித்து ஒரு பதிவு போட்டு இருந்தாங்க. அதற்கு ஒரு பதிவு அளவுக்கு பின்னூட்டம் டைப் பண்ணி போட்டுப்ப ப்ளாக்கர் ஒடியாந்து புடுங்கிட்டு போச்சு. சரி மீண்டும் அங்க பின்னூட்டமா இடுவதை விட இங்கு பதிவா போட்டால் இன்னும் விவாதம் விரிவடைந்தாலும் அடையலாம்(!!!) என்ற நம்பிக்கையில் இந்த பதிவு.

வேதா அவர்களின் பதிவு இங்கு.

அவர்கள் கூற வந்த கருத்து, அதற்கு அவர்கள் சொன்ன தீர்வு போன்றவற்றில் எனக்கு முழு உடன்பாடு இருந்தாலும், அவங்கள் சொன்ன சில விசயத்தில் எனக்கு நெறுடல் உண்டு. அவை

//ஆனால் போதை பொருட்களின் வரத்து சமீபகாலங்களில் அதிகரித்து விட்டது, காரணம் இளைஞர்களிடையே பணப்புழக்கம் அதிகரித்துவிட்டது.//

சமீபகாலம் என்பதும் தப்பு. இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் என்பது தப்பு.அதவும் இல்லாமல் இது சென்னையில் உள்ள பெரிய பள்ளிகளில் மட்டும் இது நடப்பது என்று சொல்வதும் தப்பு.

//அதுவும் தவிர தற்போது மிக வேகமாக பரவி மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரமும் இதற்கு காரணம், உலகமயமாக்கலின் காரணமாக ஊடுருவும் கலாச்சார மாற்றங்களில் நன்மைகளும் உண்டு,தீமைகளும் உண்டு. எதை நாம் எடுத்துக்கொள்வது என்பதில் தான் நம் வாழ்க்கையே அடங்கியுள்ளது. //

இந்த மேற்கத்திய பார்ட்டி கலாச்சாரத்தால் ஏற்படும் விளைவுகள் வேறு. அங்கு வரும் மக்கள் வேறு, அவர்களால் கையாளப்படும் போதை வகைகள் வேறு, அதை பற்றி பிறகு பாக்கலாம். பள்ளி, கல்லூரிகளை மட்டும் இப்பொழுது எடுத்துக் கொள்ளலாம்.

முன்பே சொன்ன மாதிரி சமீபகாலமாக எல்லாம் கிடையவே கிடையாதுங்க. ரொம்ப காலமா இருக்கு. வேண்டும் என்றால் சமீபகாலமாக வெளியில் தெரிய ஆரம்பித்து இருக்கின்றது என்று கூறலாம். இளைஞர்களிடையே ஏற்பட்ட பணப்புழக்கம் அதிகரித்து தான் காரணம் என்பதை ஒத்துக்க முடியாது. ஒரு கஞ்சா பொட்டலத்தின் விலை என்ன தெரியுமா? 7 ரூபாய் தான் நான் கல்லூரியில் படிக்கும் போது. ஒரு பொட்டலத்தை வைத்து 5,6 நபர்கள் உபயோகித்து இருப்பதை நான் பார்த்து இருக்கின்றேன். அதுவும் இல்லாமல் அவன் கஞ்சா அடித்து இருக்கின்றான் என்பதை கண்டு பிடிப்பதும் கஷ்டம். ஒரு வித மயக்கத்தில் அவர்கள் கல்லூரிக்கு வருவதும் உண்டு.

கல்லூரியில் தானே பள்ளியில் இல்லையே என்று சொன்னால் அங்கும் உண்டு, ஆனால் பள்ளியில் நான் படிக்கும் போது இவ்வளவு வெளிப்படையாகவும், பரவலாகவும் நடந்து நான் பார்த்தது இல்லை. எங்கள் ஊரில் உள்ள இன்னொரு பள்ளியில் எங்கள் வயது ஒத்த மாணவர்கள் பயன்படுத்துவதாக பேச்சு உண்டு. எங்கள் பள்ளி மாணவர்கள் அவர்களை கஞ்சா அடிக்கும் பசங்க தான்னடா நீங்கனு சொல்லி கிண்டல் அடிக்கும் அளவுக்கு.

இது போக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் இந்த பான்பராக், மாணிக்சந்த், சூப்பர் பாக்கு, பிறகு ஏதோ இலையை கையில் வைத்து கசக்கி உதட்டுக்கு கீழ் வைத்து கொள்வது, நாக்குக்கு கீழ் அடக்கி கொள்வது, இன்னும் என்ன என்னமோ இருக்குங்க. இது எல்லாம் ஒரு பொட்டலத்தின் விலை ஐந்து ரூபாய்க்கு கீழ் தான். ஒரு பள்ளியிலோ, கல்லூரியிலோ படிக்கும் பசங்களுக்கு இந்த 5 ரூபாய் ஒரு பெரிய காசு கிடையாது. இது பசங்க கிட்ட மட்டும் தான் இருக்குனு நினைக்காதீங்க பெண்களிடமும் பரவலாக உண்டு. என்ன சகவீதம் கொஞ்சம் கம்மி. இந்த மேற்கூறியவைகள் அனைத்தும் எங்கள் ஊரின் நிலைமை. ஓரு நகரத்தில் இப்படி என்னும் போது மாநகரங்களில் எப்படி இருக்கும் என்று எண்ணி பாத்துக் கொள்ளுங்கள்.

அடுத்து நீங்கள் கூறிய சென்னையில் உள்ள பணக்கார பள்ளிகள், நீங்கள் எந்த பள்ளியை மனதில் வைத்து சொன்னீர்கள் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்த பள்ளியில் நடந்த ஒரு சம்பவத்தை இங்கு சொல்லிட்டு அப்பீட்டு ஆயிக்குறேன்.

சென்னையில் இருந்து பூந்தமல்லி போகும் வழியில் அமைந்து உள்ள ஒரு போர்டிங் பள்ளியில் என் நண்பர் (பேஸ்கட் பால் டீம் சீனியர்)உடற்கல்வி ஆசிரியராக சில வருடங்கள் பணியாற்றி இருந்தார். அவர் கூறிய விசயம், அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பணம் வைத்துக் கொள்ள அனுமதியில்லை. ஒவ்வொரு முறை அவர்கள் விடுமுறை முடிந்து பள்ளிக்கு வரும் போதும் எப்படி தான் சோதனை போட்டு உள் அனுப்பினாலும் அவர்களிடம் பணம் புழங்குமாம். சூ வை கிழித்து அதன் அடியில், கீழ் உள் ஆடைக்குள் வைத்து எப்படியாவது கொண்டு வந்து விடுவார்களாம்.

பிறகு அந்த பள்ளியில் வேலை பார்க்கும் வாட்ச்மேன், துப்புரவு பணியில் இருப்பர்கள் மூலம் சிகரெட் போன்றவைகள் பெற்று வந்தார்களாம். அதை கண்டுப்பிடித்த நிர்வாகம் ரைடு நடத்தி பணத்தை பறிமுதல் செய்து விட்டார்களாம். வேறு வழி இல்லாத மாணவர்கள் (10 ம் வகுப்பு) கெமிக்கல் லேப்பில் முயன்று ஒரு போதை பொருள் கண்டுப்பிடித்து (ஸ்பிர்ட் வாசம் தூக்கலா இருந்துச்சாம்) அதை பயன்ப்படுத்தி வந்து உள்ளார்கள். 9 வகுப்பு மாணவர்கள் அவர்களிடம் கேட்க இவர்கள் மறுக்க போட்டிக்கு 9 வகுப்பு மாணவர்கள் வேறு ஒன்றை புதுசா கண்டுப்பிடித்து பயன்படுத்தி உள்ளார்கள். கடைசியில் நிர்வாகம் இதை கண்டுப்பிடித்து சில மாணவர்களை வெளியில் அனுப்பி பிறகு தான் சரியாச்சாம்.

இத என்னனுங்க சொல்லுறது...

Saturday, March 24, 2007

2011 உலக கோப்பை இந்தியாவுக்கு தான்

முக்கிய செய்தி : 2011 உலக கோப்பையை இந்தியா கிரிக்கெட் அணி கண்டிப்பாக கைப்பற்றும், அதற்கான அணியை இப்பொழுது இருந்தே தயார் செய்யப்படும் என்று இன்று புதிதாக பொறுப்பேற்ற இந்திய கிரிக்கெட் அணி பயற்சியாளர் _____________ தெரிவித்தார்.


இந்த உலகப் கோப்பையில் இந்திய அணி தோல்வி அடைந்தற்கான காரணங்களை விசாரிக்க அமைக்கப்பட்ட கமிட்டி தன் அறிக்கை இன்று பி.சி.சி.ஐ. யிடம் சமர்பித்தது. அதில் இடம் பெற்று இருக்கலாம் என எண்ணப்படுவைகளில் சில

1, நாட்டு நலன் கருதி தோல்வி அடைந்து இருக்கலாம் என்று சந்தோஷ் அறிக்கை கூறுகின்றது

2, இந்தியா, பாகிஸ்தான் உறவு பலப்பட வேண்டும் நோக்கில் பாக் தோற்றுவுடன் நாமும் தோற்றால் பாகிஸ்தானுக்கு நம் மீது மதிப்பு கூடி அமைதி பேச்சுவார்த்தையில் ஒத்துழைப்பார்கள் என்ற நம்பிக்கைக்காக

3, டாம் மூடியை இந்திய அணி பயற்சியாளராக தேர்ந்து எடுக்க மறுத்தது. அதனால் தான் அவர் இந்திய அணியை இலங்கை அணி மூலம் பழி வாங்கி விட்டார்.

4, வெற்றிக்கரமான கேப்டன் கங்குலியை கேப்டன் பதிவியில் இருந்து இறக்கியது. (இதில் கடுப்பான கங்குலி மற்ற வீரர்களுக்கு கொடுத்து இருந்த தாயத்துகளை பறித்ததும் ஒரு முக்கிய காரணம்.)

5, அபி அப்பா இலங்கைக்கு ஏதிரான ஆட்டத்தில் இந்திய அணி பேட் செய்யும் போது அவர் நண்பர் குரங்கு ராதாவுடன் அமர்ந்து மேட்ச் பார்த்தது.


6. நம் கச்சேரி தேவ் கூறியதை முரளிதரனின் சூழ்ச்சியின் காரணமாக நம் இந்திய அணியினர் வீராச்சாமி படத்தை பார்க்க நேர்ந்ததால்.

மற்ற காரணங்களை நண்பர்கள் பின்னூட்டங்களில் ஈடுவார்கள். என்னால முடியல, அப்புறம் அழுதுடுவேன்......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Thursday, March 22, 2007

கிறுக்குத்தனமா???

சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி (ஆண்ட்டி இல்லாப்பா, ஆண்டி தான்). அது போல சிவனே னு இருந்த என்னை என்னுள் இருக்கும் ஐந்து WEIRD விசயங்களை எழுத சொல்லி இல்ல கன்பூஸ் பண்ணி என்னய பூஸ் போக வச்சுட்டாங்க மை பிரண்டு. (பெயரை மட்டும் பிரண்ட் னு வச்சுக்கிட்டு என்ன வில்லத்தனம் பாருங்க!)

Weird னு சொன்னவுடன் நமக்கு ஒன்னும் புரியல, இந்த படத்த பாருங்க,


இது போல ஏதாச்சும் நமக்கு இருக்கா யோசிச்சேன், அப்படி ஏதும் இல்ல பின்ன வேற எதப்பத்தி சொல்லுறாங்கனு திங்க் பண்ணிக்கிட்டு இருக்கும் போது, கூகிள் டாக்கில் வந்த ஒரு நல்லவங்க, ஏய் அகராதி பிடிச்சவனே அகராதிய புரட்டி என்னனு பாக்க வேண்டியது தானே சொல்ல, கிடைத்த பதில்கள அப்படியே பிடிச்சு அவங்கக்கிட்ட கொட்டினேன் - unusual, supernatural, strange, eldritch, uncanny, unearthly. அவங்க இது எல்லாத்தையும் விட்டுபுட்டு Peculiar சொல்லி, உன்க்கிட்ட இருக்குற different na அதாவது அடுத்தவங்க நோட் பண்ணுற வித்தியாசயமான குணங்கள்னு சொல்ல, அடுத்த கன்பூஸ்சன்

மத்தவங்க போல நாமளும் கையாலே தானே சாப்பிடுறோம், காலால் தான் நடக்குறோம், வாயால் தான் பேசுறோம், அவ்வளவு ஏன் காதால் தான் கேட்கிறோம்னு கேட்டா இப்படி குதர்க்கமா சிந்திக்குற பாரு அதுக்கு பெயர் தான் Weird சொல்லிட்டு அவங்களே ஒரு 5 பாயிண்டும் சொல்லி ஒரளவு எனக்கு புரியவச்சுட்டு அவங்க குழம்பி போய் இடத்த காலி பன்ணிட்டாங்க...அதனால் நானா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டு, அவனின்றி ஒரு அணுவும் அசையாதுனு முடிவு பண்ணி அவன் மேல் பாரத்தை போட்டு, ஸ்டார்ட்டிங் மை நான் சென்ஸ்.

நக்கல்
பழகியவர்களிடம் மட்டும் தான் இந்த நக்கல் விடுவது எல்லாம். சில சமயம் மற்றவர்களிடமும். ஏன்னா நமக்குனே வந்து கேள்வி கேட்பானுங்க. அதிலும் நம்மக்கூட இருக்கும் பசங்க பாவம் தான். அவனுங்க, ஏண்டா இவன்க்கிட்ட வாய கொடுத்தோம் அப்படிங்குற அளவுக்கு, எப்ப எப்ப வாய்ப்பு கிடைக்குதோ அப்ப எல்லாம் நக்கல் அடிச்சிடுறது. உனக்கு இந்த வாய் மட்டும் இல்லாட்டி நாய் கூட மதிக்காது சொன்னானுங்க. இப்ப எல்லாம் ஏய்! மேன், இந்த வாய் இல்லாட்டி டாக் வந்து உன் பாட்டத்தை கவ்விட்டு ஒடிடும் அப்படிறானுங்க. அது ஒரு அளவு உண்மையும் கூட நம்ம இந்த அளவுக்கு வந்ததுக்கு என் அக்கடமிக் பேக் கிரவுண்ட் விட இந்த மவுத் பேக் கிரவுண்ட் தான் உதவுச்சு.

பொங்குறது
இது இங்க அவ்வப்போது நடக்கும். சிங்கத்தை சீண்டி பாப்பது போல் புலியை வந்து பிராண்டி பாத்துடுவானுங்க. நம்மள பிராண்டுனா நாம திருப்பி டபுள் மடங்கா பிராண்டி வைச்சுடுவேன். இங்க தான் பல நாட்டில் இருந்து சில லாடு லப்க்கு தாஸ் இருப்பாங்களே, அவர்களுடைய அதிகாரத்தை அடுத்தவன்க்கிட்ட காட்டுவதில் தான் குறியா இருப்பானுங்க. கம்யூனிகேஸ்சன் ல ஏதாச்சும் ஒரு நெட்வொர்க டவுன் ஆவது சகஜம். நாமா அது என்னனு பாத்துக்கிட்டு இருக்கும் போது சரியா வருவானுங்க. வாய்ய சரியா புடுங்குவானுங்க, சரியாகுமா இல்ல உன் தலைய போய் பாக்கவா அப்படினு நூல் விட்டு பாப்பானுங்க, இத கேட்ட வேகத்துக்கு பால் பொங்குற மாதிரி சர்ருனு பொங்கி அது உன் திறமையை பொருத்துனு போயிக்கிட்ட இருப்பது. இப்ப எல்லாம் யாருச்சும் வந்தாலே நம்ம தலயே முதல பேசிட்டு வடிக்கட்டி தான் நம்மக்கிட்ட அனுப்புறார்.

தனிமை
நம்மளுக்கு இது கொஞ்சம் பிடித்த விசயம். பெரும்பாலான வேலைகளை தனிமையில் அம்ர்ந்து செய்வது தான் வழக்கம். அப்படி செய்யும் போது தான் என்ன செய்ய வேண்டும் என்று விரும்புகிறோனோ அது சரியாக அமையும். டீம் வொர்க் வேற இது வேற. எங்கள் துறைக்கு வரும் சவுத் ஏசியன்களை தவிர மற்றவர்கள் வந்தால் நிமிர்ந்து பார்த்து ஒரு ஹாய் சொல்லிட்டு பொட்டிக்குள் முழ்கி விடுவேன். மாலை நேரங்களில் இது இன்னும் மோசம், பதிவுலக களப்பணியில் இருக்கும் போது நானாக சிரிப்பதை பார்த்து இவனுக்கு என்னமோ ஆச்சுடா காலையில் எல்லாம் நல்லா தான் இருக்கான், சாயங்காலம் ஆனா ஒரு மார்க்கமா ஆயிடுறானேனு சொன்னவங்க அனேகம். இரவிலும் மற்ற நண்பர்கள் உறங்கிய பிறகும் வெளியில் தமிழ்சை கேட்டுக் கொண்டு யோசித்த நேரங்கள் அதிகம்.

உணவு
இந்த விசயம் நம்மளை ரொம்பவே தனிமைப்படுத்தி காட்டும். பீப், பன்னி, டூனா பீஷ், அப்படி இப்படினு ஏகப்பட்டது சாப்பிட மாட்டேன். அதிலும் பிரட் னா காதா தூரம் ஒடுவேன். கிடைப்பதை சாப்பிடனும் என்று சொன்னால் எனக்கு பிடிப்பது கிடைக்கும் போது மற்றவற்றை ஏதுக்கு சாப்பிடனும் என்று ஏகத்தாளம் பேசும் ஆளு நாம். ஆனா மற்ற நாட்டுக்காரங்க இருக்காங்களே, அத ஏன் சாப்பிட மாட்டேங்குற, இத ஏன் சாப்பிட மாட்டேங்குற கேள்விய மட்டும் நல்லா கேட்டுட்டு, நம்ம வீட்டுக்கு சாப்பிட வரவும் போது, இத்தன வெரைட்டி இருக்கா உங்க உணவில் அப்படினு சப்புக் கொட்டி சாப்பிட்டுவானுங்க.

மொழி
நான் ஹைத்தியில் இருந்து போது பிரஞ்ச், க்ரியோல்(Creole), ஸ்பானிஷ், இங்கு அரபி, ஹிந்தி போன்ற மொழிகள் கற்றுக் கொள்ள வாய்ப்புகள் கிடைத்தும் ஏனோ நான் இது வரை பயன்படுத்திக் கொள்ளவில்லை. வாய்ப்புகளை தவற விடுவது தவறு என்பது எனக்கு புரிந்தும், சிலர் சொல்லியும் கூட பிற மொழி கற்றுக் கொள்வதில் ஒரு ஆர்வம் ஏனோ இது வரை வர மாட்டேன் என்கிறது. ஆர்வம் இல்லாமல் செய்ய வேண்டும் என்பதற்காக எல்லா விசயத்தையும் செய்ய முடியாதே!!!

இப்ப ஆள் பிடிக்குற வேலை

1.சிறுமுயற்சி முத்துலெட்சுமி
2.ஒரமாக நடக்கும் ராதா
(40 % ஒதுக்கீடு கொடுத்து இருக்கோம்... கொடுத்து பட்டத்தை திரும்ப பெற எதாச்சும் வழி இருக்கானு பாருங்க மக்கா... )
3. உங்கள் எங்கள் நண்பன் சரா
4. 50 மணி நேரம் ஆணி புடுங்கும் கார்த்திக்
5. பங்கு சந்தோஷ் aka Santhosh

பி.கு : Weird க்கு கிறுக்குத்தனம் என்று அர்த்தம் இருப்பதாக கொத்துஸ் சொல்லி அதை ராம்ஸ் தொடர்ந்து என்னையும் கிறுக்கன் வகையில் சேர்த்து இருக்கார்(சற்று நேரம் முன்பு). மறுபடியும் இதை பற்றி யோசித்தேன் என்றால் கிறுக்கு முற்றி விடும். அதனால ஆள விடுங்க சாமிகளா...

Monday, March 12, 2007

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

இடம்: நாகை எங்க வீடு
நாள் : இரண்டரை ஆண்டுகள் முன்பு எந்த நாளாக இருந்தாலும்
நேரம் : காலை 11.30

நான் : அம்மா டிபன் எடுத்து வைங்கம்மா

அம்மா : ஏண்டா, காலையில் எழுந்ததே 9 மணி அப்பவே சாப்பாட்டு இருக்கலாம்ல, வெளியில் போயிட்டு 11.30 வந்து காலை சாப்பாடு சாப்பிட்டா மத்தியானம் எப்படா சாப்புடுவ, அதும் இல்லாம உனக்கு சாப்பாடு வைப்பேனா, இல்ல மத்தியான சாப்பாடு செய்வேனா?

நான் : எனக்கு வச்சுட்டு அப்புறம் சமைங்க, மத்தியான சாப்பாட்டு 3, 4 மணிக்கு சாப்பிட்டா போகுது

அம்மா : 3, 4 மணிக்கு சாப்பிட்டா உடம்பு என்னத்துக்கு டா ஆகும்.

நான் : அம்மா, வாழ்வதற்காக சாப்பிடனும், சாப்பிடுவதற்காக வாழக் கூடாது.

அம்மா : அப்படிடா சொல்லுவ, எங்கயாச்சும் போய் காய்ஞ்ச தாண்டா தெரியும்.

நான் : சரி சரி வைங்க மணியாகுது, பசங்க அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க

(சுட சுட ஆப்பம், தேய்காய் பால் பறிமாறப்படுகின்றது.)

நான் : ஏம்மா, போதும்மா

அம்மா : இத ஒன்னு வச்சுக்கடா

நான் : ஏம்மா, போதும்மா சொன்னா கேட்கவே மாட்டீங்களாம்மா, எப்ப பாத்தாலும் இத தாம்மா செய்வீங்க நீங்க.

அம்மா : டேய், இந்த ஒன்னு மட்டும் சாப்பிட்டுட்டு போடா, டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்

நான் : போயிட்டு வரேன்ம்ம்ம்ம்ம்ம்மா

அம்மா : டேய், மத்தியானம் சீக்கிரம் சாப்பிட வந்துடு

நான் : ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் சரீஈஈஈஈஈஇ

நேரம் : மதியம் 3.30

நான் : மம்மிமீஈஈஈஈஈ

அம்மா : புள்ளையாட நீ.... உன்ன சீக்கிரம் வாடா சொன்னா 3.30 மணிக்கு வர.......

நான் : ஏம்மா, மாசத்துக்கு நாலைஞ்சு தடவை தான் நான் ஊருக்கு வரேன், அதுக்கே இப்படி சலிச்சுக்குறீங்களே..... நீங்க சாப்பிட்டீங்களா..

அம்மா : ம்ம்ம்ம் உனக்காக இவ்வளவு நேரம் பாத்துட்டு இப்ப தான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் படுக்கலாம்னு படுத்தேன், நீ வந்துட்ட

நான் : சரி சரி, பசிக்குது, வைங்கம்மா

அம்மா : சரி, டைனிங் டேபிள்க்கு வாடா

நான் : அம்மா, இங்க கொண்டு வாங்கம்மா

அம்மா : டேய், அவ்வளத்தையும் தூக்கிட்டு வரனும்டா, அங்க வந்து 10 நிமிசம் சாப்பிட்டு வந்து இந்த டிவிய பாத்தா என்ன?

நான் : நான் டிவி பாக்குறதே, ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் தான், அதுவும் உங்களுக்கு பொறுக்காதே, போட்டு எடுத்துட்டு வாங்கம்மா

(சிக்கன் குழம்பு, இறால் வறுவல் பறிமாறப்படுகின்றது)

நான் : ஏம்மா, சிக்கன் வாங்கிட்டு இறால் வேற ஏம்மா. சரி இறால் வச்சிங்களே, ரசம் வச்சிங்களா...

அம்மா : ஹ்ம் வச்சு இருக்கு. முட்டை வேணுமா என்ன?

நான் : நான் என்ன வேணாம்னா சொல்ல போறேன்...

அம்மா : அந்த முட்டையில் அப்படி என்னதான் இருக்கும்டோ உனக்கு?

நான் : ஏம்மா, நானா கேட்டேன், நீங்க கேட்டதால் கொடுங்கனு சொன்னேன். நீங்களே கேட்டுட்டு என்னய குறை சொல்லுங்க?

அம்மா : இந்தாடா இறால் இன்னும் கொஞ்சம் வச்சுக்கோ

தம்பி : ம்ம்ம் ஊட்டி விடுங்கம்மா, பச்ச குழந்தை பாருங்க அவன், அந்த கட்டு கட்டிக்கிட்டு இருக்கான். அவன் வந்தா மட்டும் தாம்மா நீங்க இப்படி வகை வகையா சமைக்கிறீங்க

அம்மா : ஆமாம்டா உனக்கு நான் சமைச்சு போட்டதே இல்ல பாரு

நான் : அம்மா, அவன் கிடக்குறாம்மா, நீங்க ரசத்தை ஊத்துங்க... என்னமா ரசத்தில் உப்பு அதிகமா இருக்கு, இவ்வளவு வருசம் சமைக்குறீங்க, இன்னும் உங்களுக்கு உப்பு சரியா போட தெரிய மாட்டேங்குது.

அம்மா : டேய், நாங்க எல்லாரும் சாப்பிட்டோம் சரியா தான் இருந்துச்சு. உனக்கு மட்டும் அதிகமா இருக்கும்டா. சரி இன்னும் கொஞ்சம் சாதம் போட்டு மோர் ஊத்திக்கோ...

நான் : மோரா! வேணாம். போதும்

நேரம் :இரவு 10.00

நான் : வெளிய போறேன், சீக்கிரம் சாப்பாடு போடுங்க

அம்மா : இத்தன மணிக்கு மேல எங்கடா போற? தோசை தான் இரு ஊத்துறேன்.

நான் : தோசையா, என்னமா நீங்க, சாதம் வைக்க கூடாதா?

அம்மா : எனக்கு என்னடா தெரியும், நீ வீட்டுக்கு சாப்பிட வருவீயா இல்ல வெளியில் சாப்பிட்டு வருவீயானு, சாதம் வைச்சு நீ வராட்டி வேஸ்டா போயிடும் தான் வைக்கல.

அப்பா : ஏண்டி, அவனுக்கு சாதம் கொஞ்சம் வச்சி இருக்கலாம்ல, நீயும் இப்படி தாண்டி பண்ணுவ

அம்மா : உடனே, என்ன சொல்லிடுவீங்களே? இப்ப தோசை சாப்பிட்டா என்ன ஆயிட போகுது.

நான் : சரி, சரி விடுங்க, நான் வெளியில் சாப்பிட்டுக்குறேன். வரேன்ம்மா

அம்மா : 1 மணிக்கு வந்து நிக்காம சீக்கிரமா வந்துடு.........

நான் : ம்ம்ம்ம்ம் பாக்கலாம்.

இடம் : சூடான் நேரம் : கடந்த வெள்ளி, அதிகாலை 11.00

VHF ரேடியாவில் கால் வருகின்றது

நான் : F.Q. 8.1.1 தான் விசயத்தை சொல்லு

எதிர்முனை : இண்டர் மிஷன் நெட்வொர்க் ல பிரச்சனை, கொஞ்சம் வந்துட்டு போனா நல்லா இருக்கும்.

நான் : அட என்னய்யா, வெள்ளிக்கிழமை காலாங்காத்தாலே தொல்லை பண்ணுறீங்க, சரி இரு ஒரு அரை மணி நேரத்தில் வரேன்.

ப.பெண் : சிவா, பிரேட் இருக்கு, சாப்பிட்டு போ.

நான் : பிரட்டா, எனக்கு உடம்பு எல்லாம் நல்லா தான் இருக்கு. மத்தியானம் வந்து சாப்பிடுக்குறேன். மதியம் என்ன?

ப.பெண் : சாப்பாத்தி, பர்த்தா.

நான் : சரி, ஒகே.

ஆபிஸ்ல எப்பவும் போல கடமையில் முழ்கிட்டோம்.

நேரம் : மாலை 4.25, நம்ம மொபைல் பாடுது

நான் : சொல்லுங்க தாப்பா

எதிர்முனை : எங்க இருக்க, நாங்க எல்லாம் கிரவுண்டுக்கு வந்தாச்சு. பேட், ஸ்டம்பு எல்லாம் உன் வண்டியில் தான் இருக்கு.

நான் : இன்னும் 10 நிமிசத்தில் அங்க இருப்பேன். (மனதிற்க்குள் இன்னிக்கு சாப்பாட்டு போச்சுடா)

நேரம் : மாலை 7.00 ,மொபைல் பாடுது

நான் : சொல்லு மச்சி என்ன விசயம்

எதிர்மனை : மச்சி பிஸியா இல்லாட்டினா இங்க வந்துட்டு போயேன், நம்ம XXXXX பத்தி ஒரு மேட்டரு பேசனும்.

நான் : கிரவுண்டல இருக்கேன் மச்சி. ஒரு 15 நிமிசத்தில் அங்க இருப்பேன்.

எதிர்முனை : இன்னிக்கு இங்க பீப், உனக்கு வேற எதாச்சும் சமைக்கட்டுமா?

நான் : பீப்பா! இல்ல மச்சி, கசகசனு இருக்கு, குளிச்சுட்டு சாப்பிட்டா தான் சரியா வரும். அதனால் எனக்கு வேணாம்.

நேரம் : இரவு 9.30

கோயல்: வா, சாப்பிட்டு வந்துட்டியா, இல்ல இங்க தானா

நான் : இல்ல இங்க தான், காலையில் இருந்து சாப்பிடல, இரு குளிச்சுட்டு பிரஷா வரேன்

கோயல் : போ, போ உனக்காக தான் நாங்களும் வெயிட்டிங்

(மனதுக்குள், இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி இருக்கே, சே..சே... இவனுக்கு இது எல்லாம் தெரியாது) சிறிது நேரம் பிறகு

நான் : வாங்க, சாப்பிடலாம்

கோயல் : நீ சாப்பிடு, நாங்க அப்புறம் சாப்பிடுறோம்.

நான் : என்னடா இது புதுசா இருக்கு. எட்டு மணிக்கே சட்டிய எம்டி ஆக்கிடுவாங்க, இன்னிக்கு என்ன ஆச்சு பசங்களுக்கு..

திறந்து பாத்தால், குண்டு அரிசியும்(எகிப்து அரிசி, நம் கேரளா அரிசி விட பெரிசா இருக்கும்), தால்லும் இருந்துச்சு.

நான் : யாரு இந்த அரிசிய சமைக்க சொன்னது. வர வர இந்த பொண்ணு பண்ணுறது நல்லாவே இல்ல. வேற வழி இல்ல, இன்னிக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணுறேன். அட பாவிங்களா, தால் என்னடா இவ்வளவு உப்பு.

கோயல் : அதான், நாங்க சாப்பிடாம வர்கார்ந்து இருக்கோம். பிரட் இருக்கு சாப்பிடுறீயா, முட்டை பொறித்து தரேன்.

நான் : டேய், நான் புலி, பசித்தாலும் வீக் எண்ட்ல பிரட் சாப்பிட மாட்டேன். வேற எதாச்சும் செய்ய வேண்டியது தானே.

கோயல் : டயர்டா இருந்துச்சு. அதான் முடியல.

நான் : நமக்கும் அதே கதி தான், நீ முட்டைய ஒத்து, இதுக்கு ஒரு வழி வச்சு இருக்கேன்

ப்ரிட்ஜில் இருந்து தயிர், ஊறுகாய் வெளி வருகின்றது. விதி ய நொந்து தயிர் சாதம் சாப்பிடுறேன்.

பழமொழி : முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

நம்ம கருத்து : நல்லாவே விளையுதுடோய்.... மாப்பு கேட்டுகுறேன் மம்மி, மாப்பு

Friday, March 09, 2007

ஆண்டு அறிக்கை

தமிழ் பதிவுலகில் பதிவு போட்டு விளையாட ஆரம்பித்து ஒரு வருசம் ஆச்சங்க. அதான் ஆண்டு அறிக்கை வாசித்து விட்டு போகலாமேனு இந்த பதிவு.

அங்க இங்க சுற்றி தமிழ்பதிவுலக்கு வந்து, பிளாக்கரில் ஒரு கணக்கை தொடங்கி அப்ப அப்ப பதிவு போட்டுக் கொண்டு இருந்தேன். சில மாதங்கள் கழித்து தான் தமிழ்மணம் என்று ஒன்று இருப்பதை அறிந்து, பல தொழில்நுட்ப தடுமாற்றங்களுக்கு பிறகு அதில் சேர்ந்தேன். அங்குட்டு வந்த பிறகு தான் பல விசயங்கள் தெரிய ஆரம்பித்தது. அந்த கதையை எல்லாம் சொல்லி உங்களை போர் அடிக்க விரும்பல. அது எல்லாத்துக்கும் தெரிந்த சமாச்சாரம் தான். ஆண்டு அறிக்கைனு சொல்லியாச்சு, அப்புறம் புள்ளி விபரங்கள் இல்லாட்டி எப்படி? அதனால

இது வரை ஆடிய ஆட்டங்கள் - 69 * (இதையும் சேர்த்து)

அறிக்கை:

ஆண்டு - மார்ச் 06 - பிப்ரவரி 07

மார்ச் - 06 : பதிவுகள் - 2, மொத்த பின்னூட்டங்கள் - 1

ஏப்ரல் - 06 : ப - 07, மொ.பி - 39

மே - 06 : ப - 14, மொ.பி - 219

ஜுன் - 06 : ப - 04, மொ.பி - 189

ஜுலை - 06 : ப - 08, மொ.பி - 676

ஆகஸ்ட் - 06 : ப - 07, மொ.பி - 512

செப்டம்பர் - 06 : ப - 00, மொ.பி - 00

அக்டோபர் - 06 : ப - 09, மொ.பி - 541

நவம்பர் - 06 : ப - 07, மொ.பி - 338

டிசம்பர் - 06 : ப - 02, மொ.பி - 46

ஜனவரி - 07 : ப - 03, மொ.பி - 65

பிப்ரவரி - 07 : ப - 04, மொ.பி - 121

ஆடிய மொத்த ஆட்டங்கள் - 67

எடுத்த மொத்த பின்னூட்டங்கள் - 2747 (நம்ம பங்கும் இதில் கணிசமாக இருக்கு)

அதிகப்பட்ச பின்னூட்டம் - 168 (கொத்துஸ் தயவில்)

குறைந்தப்பட்ச பின்னூட்டம் - 0 (மூன்று முறை)

சதங்கள் : 5 முறை

அரைச் சதங்கள் : 14 முறை

வந்து நொந்தவர்கள் : 18473 (பல மாதங்கள் பிறகு தான் நிறுவப்பட்டது)

குறிப்பிடத்தக்க வெற்றி - வ.வா. ச உறுப்பினர் ஆனது, தமிழ்மணம் நட்சத்திரம் ஆனது

சொல்ல விரும்புவது - என் தொல்லை தொடரும்...

Thursday, March 08, 2007

உலக பெண்கள் தினம்

தமிழ்மணத்தில் மிக "சூடாக" உலக பெண்கள் தினம் கொண்டாடிக்கிட்டு இருக்கும் போது எப்பவும் அரசியல் ரீதியாக சூடாக இருக்கும் சூடானின் ஒரு பகுதியில் எப்படி பெண்கள் தினம் கொண்டாடினார்கள் என்பதை பாருங்க.

சூடானின் மிகவும் வஞ்சிக்கப்பட்ட பகுதியான டார்பூரில் அல்-பஷர் என்ற இடத்தில் ஐ.நா. வின் அங்கமான UNFPA என்ற அமைப்பு பல N.G.O களின் உதவியுடன் கடந்த ஒரு வருடத்தில் பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பணியில் சிறப்பாக ஈடுப்பட்ட 10 நபர்களை கவுரவிக்கும் பொருட்டும், உலக பெண்கள் தினத்தை கொண்டாடும் பொருட்டும் இன்று ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த நிகழ்ச்சியில் ஆங்கிலத்தில் பேசிய பேச்சுகளை அரபியில் மொழி பெயர்த்தார்கள், ஆனால அரபியில் பேசிய பேச்சுகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவில்லை. அதனால பல விசயங்கள் எனக்கு புரியவில்லை. ஆனால் இங்கு இருக்கும் பெண்கள் வாழ்வில் சிறுதளவேனும் முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது என்ற அளவில் எனக்கு மகிழ்ச்சி மேலும் கவுரவிக்கப்பட்ட 10 நபர்களில் 9 நபர்கள் அந்த மாநிலத்தை சேர்ந்து பெண்கள், ஒருவர் வெளிநாட்டை சேர்ந்தவர், அதுவும் நம் நாட்டை சேர்ந்தவர், என் நண்பர் என்ற வகையில் மிக்க மகிழ்ச்சி. அவரு பணி புரிவது மனித உரிமை துறையில்.

நிகழ்ச்சியின் படங்கள்(படத்தின் மேல் சொடுக்கினால் பெரிதாக தெரியும்)


இங்கு நான் கவனித்து ஒரு விசயம். மற்றவர்களை வரவேற்க்கும் போதும், வாழ்த்தும் போதும் கையை தலைக்கு மேல் தூக்கி விரல்களை அசைத்து வாழ்த்துக்கிறார்கள்.(நம்ம ஊர்ல உன்னை கொன்னுடுவேன் என்று சொல்லும் போது நம்ம கை விரல் எப்படி இருக்குமோ அது போல). மேலே இருக்கும் இரண்டு படங்களை பார்த்தால் தெரியும். அது போக ஆரவாரம் செய்யும் போது நம்ம ஊர் பக்கம் நாக்கை மடிச்சுக்கிட்டு ஒரு ஒலி எழுப்புவாங்களே(குழவி யா???) அது போல இங்கு ஒரு புது மாதிரியான ஒலி எழுப்புகின்றார்கள் நாக்கை மடிக்காமலே...

பாராம்பரிய நடனங்கள் சில:
Prevent Gender Based Violence

Say No Violence Aganist Women

பெண்கள் தின வாழ்த்துக்கள்