Thursday, April 14, 2011

தமிழ் புத்தாண்டு"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"

இனிய தமிழ் புத்தாண்டு(கர வருட) நல்வாழ்த்துக்கள்

Tuesday, April 12, 2011

ஓட்டு போடுங்க ப்ளீஸ்!

நாளை தமிழ்நாட்டின் அடுத்த ஐந்து ஆண்டுகள் எப்படி அமைய போகின்றது என்பதற்கு உங்கள் பங்கை அளிக்கும் நாள். என்னத்த வோட்டு போட்டு என்னத்த ஆக போகுது என்று நம்மில் பல என்னத்த கண்ணையாக்கள் உள்ளன். இந்த கெடு கெட்ட அரசியல்வாதிகள் ஏன் சார் ஓட்டு போடனும் என்று ஆயிரம் காரணங்களை நம்மால் அடுக்க முடிகிறது. ஏன் ஓட்டு போட வேண்டும் என சிறிது சிந்தித்தால் ஆயிரத்து ஒரு காரணங்கள் கிடைக்கும் என்பது நிதர்சனம். அந்த கெடு கெட்ட அரசியல்வாதிகளை புறம் தள்ள உங்கள் ஓட்டு அவசியம் என்பது ஏன் உங்களுக்கு புரிய மாட்டேங்குது.

நம்மளில் பலர் அடிக்கடி சொல்லும் ஒரு வசனம் - ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கு ஒரு கவலை இல்லை னு சொல்லி சொல்லியே இப்போ வானரங்களை ஆள விட்டு இருக்கிறோம். கோல்(ஓட்டு) எடுத்தால் ஆடும் வானரங்களாக இருந்தவர்கள் இன்று பணம் கொடுத்தால் ஓட்டு போடும் வானரங்களாக நம்மை மாற்றி விட்டார்கள். இதை களைய நம் மனசாட்சிக்கு விரோதம் இல்லாத ஓட்டுப்பதிவு அவசியம்.

வக்கனையாக பல அரசியல் நிலைப்பாடுகளை அலசி ஆராய்ந்து விட்டு, ஆமாம் நான் ஒருத்தன் ஒரு வோட்டு போட்டு தான் இந்த நாடு மாற போகுதா என்று கூறும் ஒரு கூட்டம் உண்டு இங்கு. 5000 கோடி ஊழல் என்று பத்திரிக்கையில் வந்த தலைப்பை செய்தியை படித்து சார் இந்த நாடு உருபடவே உருப்படாது என்று பக்கத்து இருக்கையில் இருக்கும் சக அலுவலரிடம் சொல்லி விட்டு 500 ரூபாய் வாங்கி கொண்டு கோப்பில் கையெழத்து இடும் ஏதோ ஒரு அரசு ஊழியருக்கும் மேலே உள்ளவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வித்தியாசமும் இல்லை. ஒரு வோட்டு பல வரலாறுகளை புரட்டி போடலாம்.

யாருப்பா வொட்டு போடுற இடத்தை தேடி போய் வரிசையில் நிற்பது. வெயில் காலம் என்றால் வெயிலை காரணம் காட்டியும், மழை காலம் என்றால் மழையை காரணம் காட்டியும் விடுமுறையை மட்டும் அனுபவிக்கும் மக்களும் இங்கு உண்டு. அவர்களால்

பாஸ்போர்ட் அலுவலகம் திறப்பதற்க்கு முன்பே வரிசையில் நிற்க முடியும்.
விசா வாங்க தூதரக வாசலில் காவல் காக்க முடியும்.
தலைவர் படம் பார்க்க முதல் நாள் இரவே திரை அரங்கு வாயிலில் தவம் இருக்க முடியும்.
கிரிக்கெட் மேட்ச் டிக்கெட் வாங்க பல மணி நேரம் வரிசையில் நின்று சீட்டு வாங்க முடியும்.
எல்.கே.ஜி. விண்ணப்பம் படிவம் வாங்க விடியும் முன்பே பள்ளி வாசலில் பலிகிடக்க முடியும்.
ஆனால் நம் உரிமையை நிலைநிறுத்த வரிசையில் நிற்க முடியாது. என்ன நியாயம் சார் இது?

கடமையை செய் பலனை எதிர்பாக்காதே னு கண்ணன் சொன்னாரு
கடமையை செய் பலனை எதிர்பார் னு தலைவர் சொன்னாரு
கடமையை செய்ய மாட்டேன், ஆனால் பலனை மட்டும் எதிர்பார்ப்பேனு நம்மில் பலர் சொல்லுறோம். என்னத்த பலனை அடைச்சேன் காரணமும் கேட்பார்கள். அரசாங்க சலுகைகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்காத மக்கள் மிக சொற்பமே. அந்த மிக சொற்பத்தில் நம்மவர்கள் வருவது அதை விட சொற்பமே.

நம்மளில் பலர் எனக்கு ஒட்டு இல்லை, ஓட்டு போட எல்லாமா ஊருக்கு போவது வேறு வேலை இல்லை என்று சொல்வதை ரொம்ப பெருமையாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். காதலன், காதலி யை பார்க்க முக்கியமான வேலை எதுவாக இருந்தாலும் விடுத்து பல மைல் பயணம் செய்ய தயாராக இருப்பார்கள், ஆனால் ஓட்டு போட சொந்த ஊருக்கு செல்ல முடியாது என்று சப்பைக்கட்டு கட்டுவார்கள். வரி கட்டுவதற்கு என்ன என்ன சலுகைகள் இருக்கு என்பதை அறிந்து அதற்கு தேவையான எல்லாவற்றையும் முன் கூட்டிய செய்ய முடியும், ஆனால் வாக்காளர் அடையாள அட்டை வாங்க நேரமும், தேவையும் இருக்காது. இதில் ஏதுமே பெருமை பட வேண்டிய விசயம் இல்லை, சிறுமை கொள்ள வேண்டிய விடயங்கள் தான்.

என் தொகுதியில் நிற்பவர்கள் எல்லாம் மோசமானவர்கள், அயோக்கியர்கள், ஜெயித்து வந்தால் ஏதும் செய்ய மாட்டார்கள் இவர்களுக்கு ஏன் என் ஓட்டை போட்டு விரயம் பண்ண வேண்டும் என்று கேட்பவர்களுக்காக இந்த தடவை ஓ போடும் வசதியும் உண்டு. ஓ போடுவது மூலம் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை மணி அடிக்க வைக்க முடியும்.

விடியாத இரவு என்று எதுவும் இல்லை
முடியாத துயர் என்று எதுவும் இல்லை
வடியாத வெள்ளம் என்று எதுவும் இல்லை
வாழாதா வாழ்க்கை என்று எதுவும் இல்லை

என்ற வைரமுத்து வரிகளை நினைவில் கொள்ளுவோம். அனைவரும் ஓட்டு சாவடிக்கு வந்தோம் என்பதே நாம் விரும்பும் விடியலுக்குக்கான முதல் படியாக இருக்கும், இருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.

So Please Cast your Vote!