Sunday, May 14, 2006

அன்னையர் தினமாம்!



நம் நாட்டிற்கு இது தேவையா, அவசியமா போன்ற கேள்விகளுக்கு நானும் என் ஆதரவை தெரிவிக்கின்றேன். அது என்ன தனியாக ஒரு தினம். நம் நாட்டை பொறுத்தவரை, குறைந்தபட்சம் என்னை பொறுத்தவரை தினம் தினம் அன்னையர் தினம் தான். சரி, அன்னையர் தினத்தில் நம்பிக்கை இல்லனு சொல்லியாச்சு, அப்புறம் எதுக்கு இந்த பதிவுனு யாரும் கேட்பதற்கு முன்பு நானே காரணத்தை சொல்லி விடுகின்றேன். இந்தியாவில் இருந்தாலும் சன் தொலைக்காட்சியில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு அன்னையரை போற்றலாம். சுடானில் சன் தொலைக்காட்சிக்கு வழி கிடையாது. அதுனால ஒரு பதிவு ஒன்னு போட்டு அன்னையரை போற்றலாம் என்பதற்காக தான் இந்த பதிவு.

என் அன்னை மற்றவர்களை பொருத்தவரைக்கும் ஒரு சதாரண(சராசரி) அம்மா தான். ஆனால் எனக்கு ஸ்பேஷல் தான். அப்படி என்ன ஸ்பேஷல்...

பின் தூங்கி முன் எழுர்ந்து, மற்றவர்களுக்கு முன்னால் எனக்கு படுக்கையறை காபி தருவதும்.,
சரியான நேரத்தில் சாப்பிட வரவில்லை என்றால் கைப்பேசியில் அழைப்பதும்.,
என் சகோதரன் கிண்டல் செய்தாலும் எனக்கு பிடித்த பதார்த்தங்களை செய்து கொடுப்பதும்.,
நான் வரும்வரை சாப்பிடாமல் காத்து இருப்பதும்.,
நாங்கள் திட்டினாலும் திருந்தாத சொந்தங்களுக்காக பரிந்து பேசுவதும், அவர்களுக்கு உதவி செய்து கடைசியில் கெட்ட பெயர் எடுப்பதும்.,
இன்னும் உலகம் புரியாமல் இருப்பதும்.,
இரவில் எவ்வளவு தாமதமாக வந்தாலும் விழித்து இருந்து கதவு திறந்து விட்டு சில திட்டுகளை உதிப்பதும்.,
எனக்காக மெகா சீரியலை விட்டுக் கொடுப்பதும்( இது ரொம்ப பெரிய விசயங்க, சில சமயம் தான்).,
எனக்காக தந்தையிடம் பரிந்துரை செய்து காரியத்தை நிறைவேற்றி தருவதும்.,
அவர்களுக்கு நான் வாங்கி கொடுத்த பொருட்களை மற்றவர்களிடம் பெருமையாக காட்டுவதும்.,
வெளியூர்/வெளிநாட்டில் இருந்து எப்பொழுது தொலைப்பேசியில் அழைத்தாலும் சாப்பிட்டாயா என முதலில் கேட்பது(சாப்பிடுரத வேறு எதுமே தெரியாதா என நான் பலமுறை கடிந்து கொண்டாலும் அவர்கள் மாற வில்லை)

இன்று தொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போது கூட என்ன சாப்பிட்டாய் என்று தான் முதலில் கேட்டார். என் தந்தை அன்னையர் தினத்தில் அன்னைக்கு என்ன விசேசம், என்ன பரிசு எனக் கேட்டார். நான் பதில் எதும் சொல்லவில்லை. என் அம்மாவிடம் அன்னையர் தின வாழ்த்துக்கள் எதும் கூறவில்லை. கூறவும் தோணவில்லை. அவருக்கும் தெரியும், எனக்கும் தெரியும் நானே அவருக்கு ஒரு விலைமதிக்க முடியாத பரிசு என்றும், அவரே எனக்கு விலைமதிக்க முடியாத பரிசு என்றும். பின் என்ன தனியாக ஒரு பரிசு இந்த தினத்தில். உண்மைதானே?????? காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதை போல இந்த காக்கைக்கு(என் அம்மாவுக்கு) நான் பொன் குஞ்சு தான்.

நான் அனைவரையும் கேட்டுக்கு கொள்ளவது என்வென்றால் தயவு செய்து உங்கள் பெற்றோர்களை விகுதி குறைவாக கூப்பிட வேண்டாம். என் நண்பர்களில் சிலரும் பெருநகரங்களில் பலரும் தன் பெற்றோர்களை வா, போ என விகுதி குறைவாக கூப்பிடுவதை காண முடிந்தது. நான் அவர்களிடம் வினவியதற்கு, இப்படி கூப்பிட்டால் தான் நெருக்கம் இருக்கின்றது என பதில் கிடைத்தது. நீ எப்படி கூப்பிடுவாய் என கேட்டதற்கு வாங்க, போங்க, என சொன்னேன். இப்படி கூறுவது உனக்கு சங்கடமாக இல்லை, வேற்று மனிதர்களை கூப்பிடுவது போல் தோன்றவில்லை என என்னையே கேள்வி கேட்கின்றார்கள். தவறு இவர்களிடம் இல்லை, இவர்கள் பெற்றோர்களிடம் தான். என்னை பொருத்தவரை எனக்கு அது மரியாதை குறைவாக தோணுகின்றது. என் தாத்தா இருந்துவரை மற்றவர்களிடம் என்னை பற்றி கூறும் போது அவர் வந்தார், போனார் என்று தான் கூறுவார்.
சிறிவர்களையே மரியாதையாக சொல்லும் போது, பெற்றோர்களை மரியாதையாக அழைப்பது தான் நன்றாக இருக்கும். அது தான் நம் பண்பாடு கூட. உங்களை பொருத்தவரை அது நெருக்கத்தின் அடையாளமாக இருந்தாலும் மற்றவர்கள் முன்பு கூறுவதையாவது தவிர்த்தால் நன்றாக இருக்கும்.

"வீட்டில் பெற்றவர்களுக்கு மரியாதை கொடுத்தால் தான் நாட்டில் மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்க தோணும்" என்பது என் கருத்து

25 comments:

tamil said...

அன்னையர் தினத்துக்காக பத்துமாதம் சுமந்து பெற்ற அன்னையை பாராட்டலாம். ஆனால் அன்றாட வாழ்வில் அவள் படும் துயரங்கள் எண்ணிலடங்கா. வீட்டில் அனைவரது தேவைகளையும் பூர்த்தி செய்தும், நோய் நொடி என்று தன் துயர் மறந்தும் அவள் செய்யும் தியாகங்களுக்கு அளவே இல்லை. அவற்றை நினைத்துப் பார்க்க ஒருநாளா...??? மருந்துக்கு ஒத்தடம் கொடுப்பது போல் இல்லையா...?

அன்னையர் தினம் மட்டுமல்ல. எல்லா நாட்களையும் அன்னையர் தினங்களாக மனதிற் கொண்டு அன்னைக்கு பணி செய்வோம்.

பரஞ்சோதி said...

அருமையான பதிவு நண்பரே!

நல்லாவே சொல்லியிருக்கீங்க.

அன்னைக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு நாம் தான்.

சண்முகி அக்காவும் பின்னோட்டத்தில் நன்றாக சொல்லியிருக்காங்க.

அனுசுயா said...

நல்ல பதிவு. நீங்கள் குறிப்பிட்டது போல எந்த நிலையில் எப்பொழுது தொலைபேசியில் தொடர்பு கொண்டாலும் சாப்பிட்டாயா? என்ன சாப்பிட்டாய்? என விசாரிக்கும் கேள்வி அன்னைக்கு மட்டுமே சொந்தமானது.

நாகை சிவா said...

நன்றி சண்முகி, அருமையான பின்னூட்டம். ஒரு நாள் போதுமா, இன்று ஒரு நாள் போதுமா..... நம் அன்னையரின் புகழ் பாட இன்று ஒரு நாள் போதுமா.........

Anonymous said...

"தாயின் மடியில் தலைவைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை." அனுபவ வார்த்தைகள்!!!
தாயுள்ளோர் எல்லோரும் ,அவரைப் போற்றுங்கள்;தந்தையையும் ஏற்றுங்கள்;
எனக்கந்தக் கொடுப்பனவு இல்லை. உலகத் தாயுள்ளங்களைப் போற்றுகிறேன்.
யோகன்
பாரிஸ்

நாகை சிவா said...

நன்றி பரஞ்சோதி, ஆம் சண்முகி அருமையாக கூறியுள்ளார்

சிங். செயகுமார். said...

நம்ம ஊரு கிராமங்க அவங்களுக்கு அன்னையர் தினமெல்லாம் தெரியாது. எல்லாரும் பதிவுல போடுராங்களேன்னு நானும் போன் பண்ணி சொன்னேன். எல்லாரும் சொல்றமாதிரி தம்பி வேளா வேளைக்கு நல்லா சாப்பிடு. ராத்திரியில எங்கேயும் சுத்தாத! இன்னும் காதுல ஒலிச்சிகிட்டே இருக்கு.

வல்லிசிம்ஹன் said...

சிவா, நல்ல பதிவுக்கு நன்றி. நானும் என் குழந்தைகளை சாப்பிட்டாயா என்றுதான் கேட்பேன்.என் அம்மாவும் அதைத் தான் அவர்கள் இருந்த போது கேட்டார்கள்.
அம்மாவுக்கு தாங்கள் பக்கத்தில் இல்லை என்றால் பிள்ளைகள் சரியாக சாப்பிடாத மாதிரித் தான் தோன்றும்.
அன்னையரை எப்போதும் கொண்டாடுவோம்.

நாகை சிவா said...

உண்மை தான் அனு. வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி

Thekkikattan|தெகா said...

அன்னையர் தினமன்று தனது அன்னையை கூப்பிட தனது மனைவியிடம் அனுமதி வாங்கிச் சொல்வதை என்னவென்று கூறுவது. அது போன்ற மனைவிமார்கள் கிழவி ஆவார்களா, மாட்டார்களா? :-)

தெகா.

நாகை சிவா said...

வருத்தம் வேண்டாம் யோகன்! உங்கள் மனைவியே உங்களை தாய் போல அரவணைக்க வாழ்த்துக்கள். வருகைக்கு நன்றி.

நாகை சிவா said...

என்ன புஷ்வனத்தாரே! கொஞ்ச நாளா ஆளையே காணாம்.
அம்மா சொல்லுரப்படி கேட்டு ஊர் சுத்தாம ஒழுங்கா இருங்க.
ஊருக்குள்ள தகராறு போல...... உண்மையா.

நாகை சிவா said...

தெக்கிகட்டன்!
இது உங்கள் சொந்த அனுபவமா? இல்லை யாரையும் குத்திக் காட்டுவதற்காக கூறுகின்றீர்க்களா.
வினை விதைத்தவன் ஒருநாள் கண்டிப்பாக வினை அறுப்பான்.
வருகைக்கு நன்றி

நாகை சிவா said...

//அம்மாவுக்கு தாங்கள் பக்கத்தில் இல்லை என்றால் பிள்ளைகள் சரியாக சாப்பிடாத மாதிரித் தான் தோன்றும்//
ஆம் மானு, சரியாக சாப்பிட்டால் போதும் அவர்க்களுக்கு.
வருகைக்கும், பின்னூட்டங்களுக்கும் நன்றி

Thekkikattan|தெகா said...

சிவா,

//இது உங்கள் சொந்த அனுபவமா?//

இது ஒரு பொதுப் படையான அனுபவமென்று நான் கருதுகிறேன். தாங்களுக்கு மணம் ஆகிவிட்டதா? எல்லோருக்கும் அப்படியென்று பொதுப்படை மரை ஒன்றும் இல்லைதான், இருப்பினும் இன்றைய தினங்களில் பிரைவேசி, இண்டிபெண்டெண்சி, இத்தியாதிகளால்...

இங்கே போய் படித்துப் பாருங்களேன்... புரியும்

http://thekkikattan.blogspot.com/2005/10/blog-post_112975875971348634.html


//இல்லை யாரையும் குத்திக் காட்டுவதற்காக கூறுகின்றீர்க்களா.//

இதிலென்ன இருக்கிறது நண்பரே குத்திக்காட்டுவதற்கு உலக மரை... இது ஒரு 'இனிவர்சல் லா'

wife over the mother (or) mother over the wife... tug of war! It has been happening from time immemorial.

அன்பே சிவம்,

தெகா.

மாதங்கி said...

மிக நல்ல பதிவு மற்றும் படங்கள் சிவா;
சில வீடுகளில் தந்தையை நீங்க என்பார்கள்; தாயை நீ என்பார்கள்; இருவரையும் நீ என்று சொல்வதற்கும் விளக்கம் கொடுத்துக்கொள்ளலாம்.

நான் மூன்று வயதிலிருந்து இன்று வரை தாய் தந்தையர் இருவரையும் நீங்க என்று சொல்லி வருகிறேன்.
அவர்களுக்கு எனக்கு சிறந்த நண்பர்களாக இருக்கிறார்கள்.

துளசி கோபால் said...

சிவா,

அருமையான பதிவு.
நாம் பட்டினியாக் கிடப்பமோன்னுதான் முதல்லே அவுங்க நினைக்கறது. அதான் தாயுள்ளம்.
நானும் எம் பொண்ணை அதான் கேப்பேன்.

படங்கள் அருமைப்பா. அதிலும் அந்த பாப்பா ஒட்டைச்சிவிங்கி... அடடடடடா.......
அஸ்ஸாம் போறப்பவும் மனநிலை இப்படித்தானே இருக்கும்?

நாகை சிவா said...

நன்றி மாதங்கி, பெற்றோர்க்கள் உற்ற தோழர்களாக தான் பெருபாலும் இருப்பார்கள். சில சமயம் செல்லமாக பெயர் சொல்லிகூட அழைப்பேன், ஆனால் வெகு அரிதாக தான். கண்டிப்பாக மற்றவர் முன் கிடையாது.

அப்புறம் மாதங்கி, தங்களுக்கு காபி, தேநீர் பிடிக்காதா? தூக்க கலக்கத்துடன் காலையில் அம்மா தரும் காபியில் கிடைக்கும் சந்தோஷமே தனி. அந்த சுகத்தை அனுபவித்தால் தான் தெரியும்.

நாகை சிவா said...

வாங்க வாங்க, துளசியாரே! அடிக்கடி வந்து போங்க!
நம் தாய்குலங்கள் உலகத்தின் எந்த மூலையில் வாழ்ந்தாலும் அவர்களின் தாயுள்ளம் மாறாது.
படங்களை குறித்த உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. அனேக புகைப்படங்கள் இருந்தாலும் இந்த இரண்டு புகைப்படங்கள் தான் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் இந்த புகைப்படங்களை பிளாக்கரில் ஏற்றுவதற்கு நான் பட்ட பாடு இருக்கே. ஒரு தனி பதிவு போடலாம். பிளாக்கர் சிறிது கருணை காட்டினால் அருமையான படங்களுடன் தொடர்ந்து சந்திப்பேன்.

நாகை சிவா said...

தெக்கிக்காட்டான்!
ஆண்டவன் புண்ணியத்தில் இன்னும் மணம் ஆகவில்லை.(ரொம்ப சின்ன பையங்க நானு, 25தான் ஆவது)
உங்கள் வலைப்பக்கத்தை படித்தேன். பெருபாலனான கருத்துகளுடன் ஒத்து போகின்றேன்.

//இன்றைய தினங்களில் பிரைவேசி, இண்டிபெண்டெண்சி, இத்தியாதிகளால்...//

இது எல்லாம் பேசனும் என்பதற்காக பேசி மேடையில் கைத்தட்டு வாங்கவதற்கு வேண்டுமென்றால் நன்றாக இருக்கும்.
சிறிது விட்டு கொடுத்தால் இது போன்ற பிரச்சனைகள் எழதாது என்பது என் கருத்து.
நேற்று வந்தவளுக்காக பெற்று வளர்த்த பெற்றோர்க்களை ஒதுக்குவதும் தவறு.
ஒரே நாளில் குடும்பத்தை பிரிந்து நம்மளை நம்பி வந்தவளை மட்டம் தட்டுவதும் தவறு.

உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

Geetha Sambasivam said...

அது எப்படிங்க சொந்தங்களுக்குச் செய்யறதில இருந்து எல்லாத்துக்கும் என் குணத்தப் பிட்டுப்பிட்டு வச்சிருக்கீங்க. உங்கள் கவனிப்பு ரொம்ப ஆச்சரியப்பட வைக்கிறது. உண்மையில் எனக்கும் இந்த அன்னையர் தினம் மட்டும் அல்ல மற்ற எந்த தினமும் கொண்டாடுவது ஏதோ அந்நியப்படுத்துவது போல இருக்கும். அதனாலே நான் அது பத்தி எதுவும் எழுதுவது இல்லை. உங்கள் எண்ணங்கள் தெளிந்த நீரோட்டமாக இருக்கிறது.

நாகை சிவா said...

வாங்க கீதா!
உங்கள் குணமும் அப்படி தான் என்றால் மிக்க மகிழ்ச்சி. சொந்தங்களால் காயப்படுவது மிகவும் கொடுமைங்க. உங்களுக்கும் அந்த அனுபவம் இருந்தால் சாரிங்க. இல்லாவிட்டால் ரொம்ப சந்தோஷம்.


//உங்கள் கவனிப்பு ரொம்ப ஆச்சரியப்பட வைக்கிறது//
அம்மாவை இந்த அளவுக்கு கூட கவனிக்காவிட்டால் எப்படி.?

//உங்கள் எண்ணங்கள் தெளிந்த நீரோட்டமாக இருக்கிறது. //
என்னை பாராட்டியதற்கு மிக்க நன்றி. இது எனக்கு மேலும் ஊக்கம் அளிக்கின்றது.


இந்த பதிவை என் அன்னை இன்னும் காணவில்லை. அதற்குள் நீங்கள், துளசி மற்றும் பலரும் பாராட்டியதற்கு மிக்க நன்றி.
என் தந்தைக்கு தான் சிறிது வருத்தம், என்னடா அம்மாவ காக்கைவுடன் ஒப்பீட்டு விட்டாய என கேட்டார்,அது ஒரு உதாரணுத்துக்கு தான்...............என்னங்க நான் சொல்லுறது சரிதான?

Geetha Sambasivam said...

சொந்தங்களால் காயப்பட்டது தான் முக்கிய விஷயமே. என் பதிவுகளில் இருந்து தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அம்மாவைக் காக்கை என்றது ஒரு உதாரணத்திற்குத் தானெ. அதுவும் நல்ல முறையில் அதனால் ஒன்றும் தவறில்லை.

நாகை சிவா said...

நன்றி கீதா!
சொந்தகளால் காயப்பட்டவர்கள் தான் இந்த உலகத்தில் அதிகம் என்று நினைக்கின்றேன். இதுவும் நல்லது தான், அவர்களின் சுயரூபத்தை வெகு விரைவிலே காட்டி விடுகின்றார்கள். அவர்களின் தொல்லை இல்லாமல் வாழ்க்கையின் பிற பகுதி நிம்மதியாக கழிக்கலாம்.

Anonymous said...

அன்பு சிவா!
"அம்மா என்றும் அருமை.
அவளுக்கோ பிள்ளைகள் அருமையிலும் அருமை.
அன்னை என்பவள் நாம் செய்த தவம்.
அவள் செய்த தவத்தின் தவம் பிள்ளைகள்.
தாயின் அருமை புரிந்து கொண்டு உன்னைபோல் உலகுக்கு அறிவிக்கும் பிள்ளைகள் கிடைத்தது மிக மிக மகிழ்ச்சி.
உன் அன்னையை நன்கு புரிந்து கொண்டவர்கள் நாங்கள் என்பதால்,
உன்னை போன்ற மகன் உன் அம்மாவின் வாழ்கையின் வெற்றி".