இன்று சட்டசபையில் தமிழ் மொழியை 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் கட்டாயமாக்க சட்ட மசோதவை தாக்கல் செய்து அதை நிறைவேற்றி உள்ளார்கள். இது மிகவும் வரவேறக்கதக்கது. அதை குறித்த செய்தி குறிப்பு கிழே,
2006-07 கல்வியாண்டில் இருந்து மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக்குவது என்றும் பினவரும் வடிவமைப்பை அறிமுகம் செய்வதெனவும் கருதப்பட்டுள்ளது.பகுதி 1 - தமிழ்(கட்டாயம்)
பகுதி 2 - ஆங்கிலம்(கட்டாயம்)
பகுதி 3 - கணிதம், அறிவியல், சமூக அறிவியல் முதலான பிற பாடங்கள்
பகுதி 4 - தமிழ் அல்லாத ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மாணவர்கள் அவர்த்தம் தாய் மொழியை ஒரு விருப்ப பாடமாக கற்கலாம்.
அரசு ஆழ்ந்த பரிசீலனைக்கும், ஆய்வுக்கும் பின்பு இந்த ஆண்டில் இருந்து படிப்படியாக மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழை கட்டாயப் பாடங்களில் ஒன்றாக கற்பதற்கு வகை செய்வதற்கென இச்சட்டத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளது.
அனைத்து பள்ளிகளில் மாநில அரசால் நடத்தப்படும் பள்ளிகளும், மாநில நிதி உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து தனியார் பள்ளிகளும், மாநில அரசு நிதி உதவி பெறாத சிறுபான்மையினர் பள்ளி உள்பட அனைத்து மழலையர், தொடக்கபள்ளி, மெட்ரிக்குலேஷன் பள்ளி, ஆங்கிலோ இந்தியன் பள்ளி மற்றும் கீழ்த்திசைப் பள்ளிகளும் இதில் அடங்கும் என அந்த சட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதிவில் என் கருத்துகளை பதிவு செய்வதற்கு முன்பாகவே, ஆங்கிலம் வேண்டாமா, இந்தி தெரியாமல் தமிழ் நாட்டிலே முடங்க போகின்றாயா என பல பின்னூட்டங்கள் வந்து உள்ளது. அதற்கு பதில் அளிப்பதற்கு முன்பு, இந்த சட்ட பற்றி என் கருத்துகளையும் பிற கருத்துகளையும் பதிவு செய்ய விரும்புகின்றேன்.
முதலில் இந்த சட்டம் அமல்படுத்தியதற்கு முதல்வர் கருணாநிதி அவர்களுக்கும் அவரின் அரசுக்கும் என் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கின்றேன்.
அந்த சட்ட மசோதவுடன் பின்வருவனற்றையும் அமல்படுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
இதுவரை தமிழை முதல் பாடமாக படிக்காத மாணவர்களுக்கு விலக்கு அளிப்பது தான் முறையாக இருக்கும்(குறைந்தபட்சம் 9ஆம் மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு)
தமிழ் பாடத் திட்டத்தை எளிமை படுத்த வேண்டும்.
தமிழ் மொழியை படிப்பதற்கு ஒரு ஆர்வம் உண்டாக்கும் விதமாக இருக்க வேண்டும்.
பிற மொழிகளும் பயில வாய்ப்பு அளிக்க வேண்டும்.
தமிழ் மொழிகளில் ஆர்வம் ஏற்படும் வண்ணம் பல Work Shop நடத்த வேண்டும்.
பல போட்டிகள் நடத்தி அவர்களின் தமிழ் திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும்.
தமிழ் மணத்தில் தமிழ் படிப்பதை குறித்து, இந்தி தெரியாமல் இருப்பதற்கு வெட்கபட வேண்டும், இந்தி படிக்காதால் அவமானப்பட்டோம் என பல பதிவுகள் வந்து உள்ளது. இந்த பதிவின் மூலம் தமிழ் மற்றும் இந்தி குறித்த என் கருத்துகளை இந்த பதிவுல் பதிவு செய்ய ஆசைப்படுகின்றேன்.
தமிழ் மொழியை இங்கு கட்டாயமாகாமல் வேறு எங்கு கட்டாயம் ஆக்குவது.
ஆங்கில மொழியை இலக்கண தவறாக பேசினால் வெட்கபடும் நாம், தமிழ் இலக்கணம் கற்று கொள்ளாமால் இருப்பதற்கு என்றாவது வெட்கபட்டு, குறைந்தபட்சம் யோசித்து இருக்கின்றோமா?
இந்தி மொழி பயிலமால் இருப்பதற்கு வெட்கபட வேண்டிய அவசியம் இல்லை. என்னை பல நாட்டவர்கள் இந்தி தெரியாதா என கேட்டால், தெரியாது என வெட்கபடாமல் கூறுவேன். எதற்காக வெட்கபட வேண்டும். அது ஒன்றும் என் தாய்மொழி அல்லவே. என் தாய்மொழி தவிர மற்ற மொழிகளை கற்பதும், மறுப்பதும் என் தனிப்பட்ட விருப்பம். அதில் தலையீட யாருக்கும் எந்த ஒரு முகாந்திரம் கிடையாது.ஆனால் தாய் மொழி கற்காமல் வெறும் பேச்சு மொழியாக நிறுத்தி கொள்ளவது சரியல்ல.நம் பெற்ற தாயை மறுப்பதும், தாய் மொழியை கற்க மறுப்பதும் கிட்டதட்ட ஒன்று தான்.
முதலில் தமிழர்கள் ஒருவருக்கு ஒருவர் பிற மொழிகளில் பேசுவதை தவிர்க்க வேண்டுகிறேன். இங்கு பீட்டர் விட்டு ஒன்றும் பெரிதாக சாதிக்க போவது ஒன்றும் இல்லை. போலி வேஷம் போடுவதை தவிர்க்க முயலுங்கள். அவர் அவர்களின் தாய் மொழி தான் அவர்களின் கலாச்சாரத்தின் முதல் வெளிப்பாடு. உங்கள் அடையாளங்களை தொலைத்து அடுத்தவர்களின் அடையாளத்தை மூகமுடியாக அணிய முயல்வது ஏன்?
இந்தி மொழி கற்காதால் நாங்க(தமிழ்மணத்தின் என் கருத்தோடு ஒத்து போகும் மற்ற வலைப்பதிவாளர்கள்) என்ன சிறுமைப்பட்டா விட்டோம். இந்தி தெரியாதா என ஏரளம் செய்பவர்களை கண்டு வெட்கப்படுவதை முதலில் நிறுத்துங்கள். எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.
ஒரு முறை ஆப்கானிஸ்தான் ஒருவன் என்னிடம் இந்தியில் கேள்விகள் கேட்க நான் ஆங்கிலத்தில் பதில் அளித்து கொண்டு இருந்தேன். நீ ஏன் இந்தியில் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாய் என வினவினான். எனக்கு இந்தி தெரியாது எனக் கூறினேன். இந்தியன் நீ உனக்கு இந்தி தெரியாதா என கேட்டான். உடனே அருகில் இருந்த வட இந்தியன், அவன் முழு இந்தியன் கிடையாது, அரை இந்தியன் எனக் கூறினான். நான் பொறுமையாக இந்தி பேசினால் தான் இந்தியன் என நீ நினைத்தால் நான் ஒன்றும் பண்ண முடியாது. அதும் இல்லாமல் மொழியின் அளவை பொறுத்து என் தேசப்பற்றை வரையுருக்கும் உன் அறியாமையை நினைத்து வேதனைப்படுக்கின்றேன் என கூறினேன். பிறகு அன்று முழுக்க என்னிடம் அவன் வாய் திறக்கவில்லை.
மற்றோரு முறை இன்னொருவன், இந்திய நண்பர்களுடன் நடந்த ஒரு கலந்துரையாடலின் போது இந்தி தெரியாத நீ எல்லாம் இந்தியாவில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என ஆவேசமான கூறினான். அவனை விட ஆவேசமாக இந்திய ரூபாயில் இருந்து இந்தியை தவிர மற்ற மொழிகளை அல்லது குறைந்தப்பட்சம் தமிழ் மொழியை நீக்கி விடு அன்றே நான் உட்பட அனைத்து தமிழர்களும் இந்தியாவை விட்டு வெளியேற்கின்றோம் என கூறினேன். அவன் பதில் ஏதும் சொல்லி இருப்பான் என நினைக்கின்றீர்கள்.
இது போன்ற எண்ணில் அடங்கா பல சம்பவங்கள், இவை அனைத்துக்கு பிறகும் கூட நான் இந்தி தெரியாதற்கு வருத்தப்பட்டதில்லை. வருத்த பட போவதுமில்லை. எனக்கு இந்தி கற்று கொள்ளவதற்கு என்று தோணுகிறதோ, அன்று நான் இந்தி கட்டாயம் கற்று கொள்வேன். அது என் சொந்த விருப்பமாக தான் இருக்கும்.அடுத்தவர்களுக்காக இருக்காது.
என் அனுபவங்களை ஏனோ இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்ள தோணியது. அதனால் இந்த பதிவில் இதை பதிவு செய்தேன். இந்த சட்ட மசோதாவிற்க்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டார்க்கள் என்ற நம்பிக்கையுடன் முடிக்கின்றேன்.