நாகப்பட்டினம் எம்.பி. தொகுதியில் இதுவரை நாகப்பட்டினம், திருவாரூர், நன்னிலம், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் இருந்தது. தொகுதி மறு சீரமைப்பிற்கு பின்பு நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நன்னிலம் ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகள் உள்ளன. நாகப்பட்டிணம் தொகுதியில் இருந்த மன்னார்குடி சட்டசபை தொகுதி தஞ்சையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் கீழ்வேளூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு நாகப்பட்டினத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாக்காளர் எண்ணிக்கை : மொத்தம் - 9,76,180 ஆண்கள் - 4,90,716 பெண்கள் : 4,85,464.
இது வரை நடந்த தேர்தலில் 1957, 1962,1967, 1991 ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. 1971, 1977, 1989, 1996, 1998 ஆம் ஆண்டுகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. தி.மு.க. 1980, 1999, 2004ஆம் ஆண்டுகளி்ல் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 1984ஆம் ஆண்டில் வெற்றி பெற்றது. பொதுவாக கம்யூ கோட்டை என்று இத்தொகுதி வர்ணிக்கப்பட்டு வருகிறது.
கடந்த முறை (2004) தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளர் அர்ச்சுனனை விட 2,16,223 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி அடைந்து இருந்தார். கம்யூ போன முறை தி.மு.க. வுடன் கூட்டணி வைத்து இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த முறை 72 % வாக்குகள் பதிவு ஆனது.
மீன் தொழில் மற்றும் விவசாயத்தை பெரிதும் நம்பி இருக்கும் தொகுதி இது. டெல்டா மாவட்டங்களில் கடைசி மாவட்டம் இது தான். போதிய தண்ணீர் இல்லாமை மற்றும் அதிகப்படியான வெள்ளம் என மத்தளத்துக்கு இரு பக்கம் இடி என்பது போன்ற நிலைமையில் உள்ள தொகுதி இது.
சட்டசபை தொகுதிகளில் மூன்று இரு கம்யூ வசமும், இரண்டு திமுக வசம் உள்ளன. கீழ்வேளூர் புதிய தொகுதி. மன்னார்குடி தொகுதி தஞ்சையில் சேர்க்கப்பட்டது அதிமுக கூட்டணிக்கு சிறிது பின்னடைவே.
இந்த முறை நாகப்பட்டினம் தொகுதியில் மொத்தம் 7 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அவர்களின் விவரம் வருமாறு:
1) ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.)
2) எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு)
3) மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)
4) கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி)
மற்றும் 3 சுயேச்சைகள்.
குறைவான நபர்கள் போட்டியிடும் தொகுதி இதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.
இதில் விஜயன் இருமுறை எம்.பி. யாக இருந்து உள்ளார். செல்வராஜ் மூன்று முறை எம்.பி. யாக இருந்து உள்ளார். இருவரும் சித்தமல்லி என்னும் கிராமத்தை சேர்ந்தவர்கள். விஜயன், மறைந்த பெரும் கம்யூ தலைவர் சுப்பையா அவர்களின் மகன் ஆவார்.
7 நபர்கள் போட்டியில் இருந்தாலும் நேரடி போட்டி திமுக மற்றும் கம்யூ இடையே தான்.
இரு முறை எம்பியாக இருந்த விஜயன் தொகுதிக்கு செய்த சாதனைகள் என்று பட்டியலிட பெரிதாக ஏதும் இல்லை, அகல ரயில் பாதையை தவிர்த்து. அதுவும் பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகே திட்டம் நிறைவேறியது. கடந்த இரண்டு தேர்தலின் போது கொடுத்த அதே வாக்குறுதிகளையே இந்த தடவையும் கூறி உள்ளார். நாகை நகரத்தில் அவருக்கு கட்சியினரிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமை, மின் வெட்டு, மீனவர் பிரச்சனை, சுனாமி நிதி சரியான வழியில் செலவிடப்படாமை என பல மைனஸ் வுடன் களத்தில் உள்ளார். அவரின் பலமாக தலைமையிடம் உள்ள செல்வாக்கு, பாராம்பரியமான திமுக தொண்டர்களின் களப்பணி, வைட்டமின் ப, போன்றவை உள்ளன. இவர் சார்பாக 30 c களத்தில் இறக்கப்பட்டு உள்ளதாக ஒரு பேச்சு வலம் வருகிறது. கிராமபுறங்களில் ஈழம் பற்றிய போதிய எழுச்சி இல்லாமை என்பது இவர்களுக்கு ஒரு வரமே.
மூன்று முறை எம்.பி.யாக இருந்த செல்வராஜ் க்கு எப்படி மீண்டும் சீட் கொடுத்தார்கள் என்பது தான் இன்னும் புரியவில்லை. கட்சி நிதிக்காக 10 லட்சம் திரட்டி கொடுத்தது ஒரு காரணமாக இருந்து இருக்கலாம். இவரும் மூன்று முறை எம்.பி. யாக இருந்து பெரிதாக தொகுதிக்கு ஏதும் செய்தது இல்லை என்பதும், வைட்டமின் ப பற்றாக்குறையால் தொண்டர்கள் உற்சாகம் மிஸ் ஆனதும் இவரின் பலவீனம். பலத்த கூட்டணி ஆதரவு, அதிமுக வின் உழைப்பு, மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்றவற்றால் ஆளும்கட்சியின் மீது உள்ள அதிருப்தி என்பன போன்ற பலத்துடன் களத்தில் உள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழலை பற்றிய ஒரு புத்தகம் அச்சு அடித்து வீடு வீடாக கொடுத்து உள்ளார்கள். அதில் உள்ள விலைவாசி உயர்வு, மின் வெட்டு, ஈழ பிரச்சனை போன்றவற்றின் விளம்பரங்கள் மக்களை சிறிது யோசிக்க வைத்தே உள்ளது.
நாகை நகரத்தில் திமுக எதிப்பு நிலை காணப்படுகிறது. (ஈழம், மின் வெட்டு முக்கிய காரணம்) அதை தவிர்த்து நாகை கிராமபுறங்களிலும், வேதாரண்யம், திருவாரூர் தொகுதிகளில் திமுக முன்னிலை வகிக்கிறது. நாகை நகரம், கீழ்வேளூர், நன்னிலம், திருத்துறைப்பூண்டி தொகுதிகளில் கம்யூ பலமாக இருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது வாக்கு வித்தியாசம் மிக குறைந்த அளவிலே இருக்கும். கூடவே தேமுதிக வின் ஒட்டு பிரிப்பு யாருக்கு பாதகமாக அமைய போகிறது என்பதும் கவனிக்கப்படவேண்டிய விசயம்.
வேட்பாளர் தேர்விலும், களப்பணியிலும், வைட்டமின் ப விலும் சிறிது கவனம் செலுத்தி இருந்தால் ரொம்ப சுலபமாக அதிமுக கூட்டணி வெற்றிக் கனி பறித்து இருக்கும். ஆனால் தற்போதைய நிலைமை சற்று கவலைக்கிடம் தான். வைட்டமின் ப சரியானப்படி வேலை செய்தால் ஆளும்கட்சி வசம் தொகுதி தங்கும். செங்கொடியா? அல்லது ஹாட்ரிக் வெற்றியா? என்பது 4 நாட்களில் தெரிந்து விடும்.
Tuesday, May 12, 2009
தொகுதி அலசல் - நாகப்பட்டினம்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, May 12, 2009
6
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Monday, May 11, 2009
கதம்பம்
தேர்தல் எங்கள் நாட்டில் தேசிய திருவிழா சொல்லிட்டு இங்க வந்தா மீடியாவில் மட்டும் தான் திருவிழா வா இருக்கு. தேர்தல் கமிஷன் கெடுபிடியால் தேர்தலுக்கான குறைந்தப்பட்ச அறிகுறி கூட இல்லாம இருக்கு ஊர். சுவர் விளம்பரம் இல்லை, பிட் நோட்டிஸ் இல்லை, தோரணம் இல்லை, கொடிகள் இல்லை, கட் அவுட் இல்லை, போஸ்டர் இல்லை, பேனர் இல்லை, டிஜிட்டல் பேனர் இல்லை. கிராமங்களில் மட்டும் ஆங்காங்கே சுவர் விளம்பரங்கள். சென்னையில் கூட கொடி தோரணம் என்று களை கட்டுது. எங்க ஊர் தான் இப்படி(நான் பார்த்த வரையில்), ரொம்ப மோசம் சாமி, ஒரு விறுவிறுப்பே இல்லாம போச்சு. இரு முறை எம்.பி யாக இருந்த ஒரே ஊர்காரர்கள் ஆன செல்வராஜ் (கம்யூ) மற்றும் விஜயன் (திமுக) இருவரும் மல்லுக்கட்டுகிறார்கள்.
*******
தேர்தல் லோடு கோவில் திருவிழாவும் இங்கு. வழக்கம் போல் சிறப்பான முறையில் அமைந்தது. செடில் உற்சவத்திற்கு மக்கள் வழக்கம் போல் வரிசையில் வர மாட்டேன் என்று முண்டியடித்து அவர்களிடம் கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியது. நாம் வரிசையில் நின்றால் தான் ஒரு ஜீவன் இருப்பதே தெரியாத மாதிரி அல்லது ஒரு பேக்கு நிக்குறான் என்பது போல் நமக்கு முன்னால் போவார்கள், வரிசை ஒழுங்குப்படுத்தும் போதும் அப்படி தான் நினைப்பார்கள் போல். வரிசையில் நின்று வருவது என்பது ஏதோ ஒரு பாவச்செயல் என்பது போன்று நம் மக்கள் மனதில் பதிய காரணம் என்னவென்று தான் தெரியல. நாம் செய்வது தவறு என்பதே புரியவே மாட்டேங்குது.
*******
எந்த வங்கியின் அட்டையை வைத்தும் அனைத்து(எந்த) வங்கியின் ஏ.டி.எம். சேவையையும் பயன்படுத்தலாம் என்று சொன்னாலும் சொன்னார்கள். எல்லா எ.டி.எம். லையும் கூட்டம் அள்ளுது. ஆனா பணம் தான் வர மாட்டேங்குது. பாதி ஏ.டி.எம். முடி உள்ளது. மிஞ்சம் போதில் பணம் இல்லை இல்லை என்று துப்புது. இன்னும் சிலது பணம் எடுத்துக்கோ னு காசை பிடிச்சுக்கிட்டு Error Message குடுக்குது. சில நேரங்களில் பணம் மறுபடியும் நம் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. சில நேரங்களில் வங்கி கிளையில் புகார் பண்ணி தான் பெற வேண்டியது இருக்கு. மக்களுக்கு பயன் அளிக்கும் வழியில் ஒரு சேவையை அறிமுகப்படுத்தினால் மட்டும் போதாது. அதை உரிய முறையில் அமல்படுத்தி இருக்க வேண்டும். உடனடியாக அமல்படுத்திய அதனால் இந்த பிரச்சனை என்று காரணம் கூற முடியாது. ஒரு வருடத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்ட திட்டம் இது. ஏப்ரல் 1 ம் தேதி முதல் அமல்ப்படுத்தப்பட்டதால் இப்படி நடக்குதோ என்னவோ.
*******
தொலைக்காட்சியில் விரும்பி பார்ப்பது விளம்பரங்கள் தான். கவர்ந்த விளம்பரங்கள் பல உள்ளன. அதை பற்றி ஏற்கனவே ஒரு பதிவும் போட்டும் இருக்கேன். இந்த தடவையும் சில விளம்பரங்கள் அட போட வைத்தது. இன்னும் சில அட சே னு சொல்ல வைத்தது. அதில் ஒன்று ஹமாம் விளம்பரம். ஒரு தாய் தன் குழந்தையிடன் போய் சோப் வாங்கிட்டு வா னு சொல்லிட்டு குழந்தை போன பிறகு அய்யோ எந்த சோப் னு சொல்லலையே, பரு வந்துடும், அழகு போயிடும், தன்னம்பிக்கையே போயிடும் னு பதறி வெளியே எல்லாம் ஒடி வீட்டுக்கு வந்து பாத்தா அந்த குழந்தை ஹமாம் சோப் தான் வாங்கி வந்து இருப்பது பார்த்து அமைதி அடைவது போன்று அமைந்த விளம்பரம். இதை விட கேவலமாக யோசிக்க முடியாது என்ற வகையில் அந்த விளம்பரம் அமைந்து உள்ளது என்பது என் கருத்து. அப்படியே வேற சோப் வாங்கி வந்தா அதை உபயோகப்படுத்தாமல் மாற்றி கொள்ள மாட்டார்களா? என்ன லாஜிக் ல அந்த விளம்பரம் வந்துச்சோ. அவர்களே வெளிச்சம். இது போன்ற சொதப்பல் விளம்பரங்கள் னு ஒரு போஸ்டே போடலாம் போல.
*******
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Monday, May 11, 2009
15
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
Thursday, April 09, 2009
வாழ்க சனநாயகம் 6 - தந்தி/தமிழர் பேரணி
முன்குறிப்பு!
இந்த பதிவை படிக்க வாய்ஸ் மாடுலேசன் ரொம்ப முக்கியம், பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் நபர்களின் குரலில் முயற்சி செய்து படிக்கவும்.
முதல்வர் கருணாநிதி தலைமையில் நாளை(ஏப்ரல் 9) தமிழர் பேரணி!
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் எழுப்பிடும் உருக்கமிகு குரலை மதித்து இலங்கை அரசு போரை நிறுத்திட வலியுறுத்தி தலைநகர் சென்னையில் மாபெரும் தமிழர் பேரணி நாளை (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்த பேரணிக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். தீவுத்திடலில் உள்ள மன்றோ சிலையில் தொடங்கும் இந்த பேரணி, சேப்பாக்கம் வரை நடைபெறும். இந்த மாபெரும் தமிழர் பேரணியில், கட்சி வேறுபாடின்றி தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.
நன்றி : விகடன்
வடிவேலு : ஏண்டா, இன்னும்மாடா இந்த ஊர் நம்மள நம்பிக்கிட்டு இருக்கு?
நன்றி : வின்னர் படக் குழுவினர்
பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்திக்கு முதலமைச்சர் கருணாநிதி தந்தி!
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால் அங்கு தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடும். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் ஏற்படவும், சமாதான பேச்சுவார்த்தை தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி ஆகியோருக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி தந்தி அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் அனுப்பியுள்ள தந்தியில், "இலங்கையில் தமிழ் இனம் முற்றிலுமாக அழிந்துவிடுவதில் இருந்து காப்பாற்றுங்கள், போர் நிறுத்தம் செய்யப்பட்டு உடனடியாக சமாதான பேச்சுவார்த்தை தொடங்குவதை உறுதி செய்யுங்கள்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
நன்றி : விகடன்
கவுண்டமணி : யப்பா! போதும்டா சாமி! உங்க ரீல் அந்து போய் ரொம்ப நேரம் ஆச்சுப்பா
நன்றி : மாமன் மகள் படக் குழுவினர்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Thursday, April 09, 2009
20
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் அரசியல், வாழ்க சனநாயகம்
Tuesday, April 07, 2009
ருவண்டா இனப்படுகொலை - 1
குறுகிய நாட்களில் மிக அதிகம் மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய நாடு ருவண்டா. 100 நாட்களில் 1 மில்லியன் மக்களை கொன்று குவித்தார்கள். இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. டூசி யினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு கூறும் நாள் இன்று. அதை நினைவு கூறும் வகையில் ருவண்டாவின் இனப்படுகொலை பற்றி எனக்கு தெரிந்த, பார்த்த, கேள்விப்பட்ட விசயங்களை வைத்து இந்த பதிவு. மேலும் விபரங்களுக்கு இங்கே காணவும்.
ருவண்டா மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ருவண்டா வின் தலைநகரம் கிகாலி (Kigali). ருவண்டா, ஆயிரம் மலைகளின் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்படும் (Land of 1000 Hills). அதன் அண்டை நாடுகள் காங்கோ, உகாண்டா, புருண்டி, தன்சானியா. நான்கு நாடுகளுக்கு நடுவில் அமைந்த நாடு. அதனால் இது வியாபாரத்திற்க்கு மைய சந்தையாக விளங்குகிறது. ருவாண்டாவின் மக்கள் தொகை 9 மில்லியன். ஆப்பிரிக்காவிலே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு ருவாண்டா. கிறிஸ்த்துவர்கள் பெரும்பான்மையாக உள்ளன். அதில் கத்தாலிக்க மக்கள் 55% ஆவர். ருவாண்டாவில் கின்யருவாண்டா (Kinyarwanda), ஆங்கிலம், பிரெஞ்ச் என மூன்று ஆட்சி மொழிகள் உள்ளன. 99% மேல் கின்யருவாண்டா பேசுவார்கள். பெரும்பாலும் ருவண்டா மக்கள் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்றவர்கள்.
காலணி ஆதிக்கத்திற்க்கு முன்பு ருவாண்டாவில் மன்னராட்சி நடந்து வந்தது. ஆங்காங்கே அமைச்சர்கள் மூலம் கவுன்சில் அமைத்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். ஆரம்ப காலங்களில் ருவண்டாவில் மூன்று விதமாக மக்கள் வகைப்படுத்தப்பட்டனர், அவர்களின் சமூக - பொருளாதார நிலையை வைத்து வகைப்படுத்தப்பட்டனர், இது அவர்கள் இனத்தை குறிக்காது. ஹுடூ (Hutu), டூ்சி (Tutsi), டுவா (Twa).
கால்நடைகளை வைத்து பராமரித்து வந்தவர்கள் டூசி என்ற வகையிலும், விவசாயிகள் ஹுடூ வகையாகவும், வேட்டை மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் டுவா வகையாகவும் வாழ்ந்து வந்தார்கள். பொருளாதார நிலையை வைத்தே வகைப்படுத்த பட்டதால் அவர்களிடம் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவை வைத்து அவர்கள் வகையும் மாறுப்படும். Its based on the dynamics of the "Haves and the Have not". அந்த காலக்கட்டத்தில் அவர்கள் இடையே மாற்று திருமணங்கள், ஒரே கலாச்சாரம் என அமைதியாகயும் ஒற்றுமையாகவுமே வாழ்ந்து வந்தார்கள். ஹுடூ ஸ் பெரும்பான்மையாக இருந்தனர்.
1894 ஆண்டு ருவண்டா ஜெர்மன் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த காலக்கட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. உள்நாட்டில் நடக்கும் கலவரங்களை அடக்கவே ஜெர்மனியர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. முதலாம் உலக போரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து உலக நாடுகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் படி ருவண்டா பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் நடுவே ஒரே கடவுள் என்று இருந்த ருவாண்டாவில் காலணி ஆதிக்கத்தை தொடர்ந்து கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் ஐரோப்பின் வழியாக உள்ளே நுழைந்தது. பெல்ஜியத்தின் ஆதிக்கத்திற்க்கு முன்பு வரை மன்னருக்கு போதிய அதிகாரம் இல்லாத போதிலும் மரியாதை இருந்தது. பெல்ஜியர்கள் வந்த பிறகு அதுவும் இல்லாமல் போயிற்று.
அதிகாரத்தை கையில் எடுத்த பெல்ஜியர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். பொருளாதார வசதி படைத்த டூசி னரை உயர்ந்தவர்களாகவும், ஹுடூஸ், நடுநிலை டூசி னரை மற்றும் பிற மக்களையும் தாழ்ந்தவர்களாக வகைப்படுத்தினார்கள். எவ்வாறு பிரித்தார்கள் என்றால் 10 கால்நடைகளுக்கு மேல் வைத்தது இருந்தவர்கள் உயர்ந்த டூசினர், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற வகையில். கூடவே அதிகாரத்தில் இருந்த ஹுடூஸ் மக்களை அதிகாரத்தை விட்டு அகற்றினார்கள். இதன் மூலம் ஹுடூஸ் மக்கள் பெரும் கோபம் அடைந்தனர். ஆயுதம் ஏந்தி போராடவும் பார்த்தார்கள். ஆனால் பெல்ஜியர்கள் மேல் இருந்த பயத்தால் அதை பெரும் அளவு போராட்டமாக மாறவில்லை.
உயர் டூசினரை கொண்டு வரிகள் வசூலிப்பதையும், தங்களின் கொள்கைகளை பரப்பவும் செய்தார்கள். 1935 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் எந்த வகையை சார்ந்தவர்கள் என்பது அச்சிடப்பட்டது. இது தான் 1994 ல் நடந்த மிக பெரிய இனப் படுகொலைக்கு ஆரம்ப வேராக அமைந்தது.
இதை தொடர்ந்து கத்தோலிக்க ஆலயங்களிலும், பள்ளிகளிலும் டூசி யினருக்கும் ஹூடு வினருக்கும் இடையான வேற்றுமைகளை விதைக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் தனி தனியாக பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1940 களில் ஆரம்பித்த இதற்கு நல்ல அறுவடை கிடைக்க தொடங்கியது. 40களின் மத்தியில் பலர் கத்தோலிக்காக மாற தொடங்கினார்கள். 1950 களில் அதிகாரத்தில் டூசி யினருக்கு காட்டப்படும் சலுகையும், ஹுடூஸ் மறுக்கப்படும் உரிமையையும் ஐ.நா கண்டிக்க தொடங்கியது. அதே நேரத்தில் 1954ல் டூசி யினர் தங்களுக்கு சுகந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப தொடங்கினார்கள். இதை தொடர்ந்து மறைமுகமாக பெல்ஜியர்களும், மத தலைவர்களும் ஹுடூ யினரை டூசி யினருக்கு ஏதிராக துவேஷத்தை உண்டாக்கினார்கள். அதை தொடந்து 1957ல் ஹுடூ வினர் ஒரு அமைப்பினை(PARMEHUTU) தோற்றுவித்து பின்பு அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். அதே போல் 1959ல் டூசி யினர் ஒரு அமைப்பினை(UNAR) தோற்றுவித்து அவர்களும் அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். இரு தரப்பினருக்கும் மோதல்கள் வலுக்க தொடங்கின.
1959 ல் டூசி படையினர் ஹுடூஸ் அரசியல் தலைவர் ஒருவரை அடித்து விட, அவர் இறந்து விட்டார் என்ற எழுந்த வதந்தியால் பல்லாயிரகணக்கான டூசி யினர் கொல்லப்பட்டனர். ருவண்டாவில் நடந்த முதல் பெரிய படுகொலை இது தான். இது பெல்ஜியர்களின் தூண்டுதலினால் தான் நடந்தது என்று டூசியினர் குற்றம் சாட்டினர். பல்லாயிரகணக்கான டூசியினர் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
1960 ல் பெல்ஜினர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சம்மதித்து தேர்தல் நடத்தினார்கள். பெரும்பான்யான மக்களாக ஹூடூ ஸ் இருந்ததால் அனைத்திலுமே ஹூடூ யினரே வெற்றி பெற்றனர். இது வரை அதிகாரத்தில் இருந்த டூசி யினர் வெளியற நேர்ந்தது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் திட்டமும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தது. ஐ.நா.வின் வலியுறுத்தலை தொடர்ந்து நாடுகளை பிரித்து சுகந்திரம் அளிப்பது என்று முடிவு எடுத்து 1961ல் அதற்கான ஆயுத்தங்கள் செய்யப்பட்டன.
1961 ல் தேர்தல் நடத்தப்பட்டு பெல்ஜியர்கள் ஆதரவுடன் ஹுடூஸ் குடியரசு ஆட்சியை அமைத்தது. பெல்ஜியர்கள் டூசி யினரின் அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும் என்பதுக்காக ஹுடூஸ் க்கு உதவி செய்தது. 1959 ல் டூசி யினரால் தாக்கப்பட்ட அரசியல் தலைவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதுவே சோதனையாக வந்து அமைந்தது டூசி யினருக்கு. பதவியேற்றவுடன் அந்த தாக்குதலை நினைவு கூர்ந்து டூசியினர் என்றுமே ஆபத்தானவர்கள் மற்றும் கொல்லப்பட வேண்டியவர்கள் என சூளுரைத்தார். அதை தொடர்ந்து 1961, 1962ல் டூசி கொரில்லா படையினர் பக்கத்து நாடுகளில் இருந்து போர் புரிந்தனர். ஹுடூ ஸ்ம் பதில் தாக்குதலில் இறங்க அதிலும் பல்லாயிரகணக்கானோர் பலியாகினர்.
1962 ஜூலை 1 ஆம் தேதி ருவண்டா மற்றும் புருண்டி நாடுகளுக்கு சுகந்திரம் கிடைத்தது. ருவண்டாவில் ஹுடூ ஸ் நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியதோடு ஒரே கட்சி நாடாக மாறியது. ஹூடூ யினருக்காக PARMEHUTU வை தோற்றுவித்த Gregoire Kayibanda சுகந்திர நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
- தொடரும்
சொன்னது
நாகை சிவா
என்னிக்குனா
Tuesday, April 07, 2009
33
பேர் நான் சொன்னதுக்கு என்ன சொல்லி இருக்காங்கனா
வகைகள் Genocide, ஆப்பிரிக்கா, ஐ.நா.


