Monday, July 26, 2010

தாயாருடன் திருநாகை அழகியார்

சொந்த ஊரை விட்டு பிரிந்து இருப்பதன் மூலம் சொந்தங்கள், நட்பு, உணவை மட்டும் இழப்பது இல்லை. அவ்வூரில் நடைபெறும் மதம் சார்ந்த நிகழ்வுகள், விழாக்கள் போன்ற பல அழகியல் விசயங்களையும் தவற விடுகிறோம். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த கோவில்களாலும், புகழ் பெற்ற மாதா கோவில்கள் மற்றும் தர்காகளால் சுழப்பட்ட ஊர் நாகப்பட்டினம்(நாகை). இதன் காரணமாக வருடத்தின் அனைத்து மாதங்களிலும் எங்காவது ஒரு விழா தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கும். மதங்கள் குறித்தும், அதில் செய்யப்படும் சடங்குகள், நிகழ்வுகள் போன்றவற்றின் மீது மாறுபட்ட கருத்துக்கள் பல சமயம் இருந்தாலும் அந்த விழாக்களில் இருக்கும் அழகு, தொண்மை, பழமை போன்ற விசயங்கள் என்னை எப்பொழுதும் கவர தவறியது இல்லை.

கடந்த முறை ஊருக்கு சென்று இருந்த போது காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலட்சி, நாகை நீலாயதாட்சி எனவும் சக்தி பீடங்களில் ஒன்றுமான நாகை அருள்மிகு காயாரோகனேஸ்வர உடனுறை ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் (24.06.2010) நடைப்பெற்றது. உற்ற தோழன் திருமணத்தின் காரணமாக அதில் கலந்துக் கொள்ள முடியவில்லை. இக்கோவிலில் விநாயகர் சதுர்த்தி அன்று மாலை நாகையில் இருந்து நாகூருக்கு 32 அடி விஸ்வரூப விநாயகரின் ஊர்வலம் மிக விமர்சையாக நடைப்பெறும். மேலும் இக்கோவிலில் 18 சித்தர்களின் ஒருவரான அழுகுணி சித்தர் ஜீவசமாதி அடைந்த தலம் ஆகும். இக்கோவிலில் உள்ள கால பைரவர், தலை திரும்பி இருக்கும் நந்தி என பல விசேஷங்களுக்கு உரியதாகும். இக்கோவிலை பற்றி பின்னொரு நாள் விரிவாக எழுத முயல்கிறேன்.

அதே நேரத்தில் நாகை ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் கோவிலில் வருடத்துக்கு ஒரு முறை நடைப்பெறும் வசந்த உற்சவமும் நடைப்பெற்று கொண்டு இருந்தது. இவ்விழாவினை முன்னிட்டு ஸ்ரீ செளந்தர்யவல்லித் தாயார் திருக்கோவிலின் உள்பிரகாரங்கள் வழியாக உலா வருவார்கள். படித்தாண்ட பத்தினி என்னும் சொல்லுக்கு ஏற்று கோவிலை விட்டு வெளியே வர மாட்டார்கள் என்பது ஐதீகம் என்று எண்ணுகிறேன். இவ்விழாவை முன்னிட்டு திருக்கோவிலின் பின்புற வாயில் திறக்கப்படும். அவ்வழியாகவும் தாயார் உலா வரும் போது தரிசிக்கலாம். அவ்வாயிலுக்கு அருகில் தாயார்க்கு விசேஷ ஆராதனைகளும், பூஜைகள் தினமும் நடைப்பெறும். ஊஞ்சல் வைபோகம் உள்ளிட்ட பல நிகழ்வுகளும் உண்டு. இவ்விழாவின் 10ம் நாள் அன்று திருத்தேர் கோவிலின் உள்ளேயே வடம் பிடிக்கப்படும். நிறைவு விழாவாக தாயாருக்கு திருகோவில் உள்ளே அமைந்து இருக்கும் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடைப்பெற்றது. முதல் முறையாக இத்தடவை தாயாருடன் திருநாகை அழகியார் என போற்றப்படும் எம்பெருமான் ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாளும் உடன் எழுந்து அருள் பாவித்தார்.

அப்படங்கள் உங்கள் பார்வைக்கு. கடைசி மூன்று படங்கள் நண்பன் கே.பி. எடுத்தது. தாமதமாக சென்ற காரணத்தினால் சலனப்படம் எடுக்க முடியவில்லை.

ஸ்ரீ செளந்தர்யராஜ பெருமாள் பற்றிய என்னுடைய பிற பதிவுகள்

திருநாகை அழகியார் - சிறு குறிப்பு
மட்டையடி உற்சவம்
திருக்கோவில் படங்கள்













10 comments:

Vidhya Chandrasekaran said...

புகைப்படங்கள் நன்று. நல்ல கவரேஜ்.

ஆயில்யன் said...

செளந்தராஜ பெருமாள் கோவிலுக்கு போகணும்ன்னு ஆசை ஆனா நேரம்தான் இன்னும் அமையல :))

அப்புறம் புலி @ நாகையா?

நாகை சிவா said...

@ வித்யா - நன்றிங்கோ

@ ஆயில்ஸ் - வாங்க வாங்க எப்போ வறீங்கனு மட்டும் சொல்லுங்க போதும்... நாகையில் இப்போ இல்ல...

அபி அப்பா said...
This comment has been removed by the author.
அபி அப்பா said...

புலி எப்ப ஊருக்கு?

நாகை சிவா said...

@ தொல்ஸ்... எங்க ஒரு கமெண்ட்டை தூக்கிட்டீங்க.. :)))) ஊருக்கு வர இன்னும் நாள் இருக்கு.. வந்தால் அழைக்கிறேன்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அழகியவனின் அண்மைப் படம் (க்ளோசப்) ரொம்ப அழகா இருக்கு சிவா! நீங்க எடுத்ததா?

அச்சோ ஒருவர் அழகியவா!
அச்சோ ஒருவர் அழகியவா!

முருகன்=அழகன்!
108 திவ்யதேசப் பெருமாள்களில், இவன் ஒருத்தனை மட்டும் முருகன்-ன்னு தாராளமாச் சொல்லலாம்! :)
அச்சோ ஒருவன் என் முருகன் இவன்!
அச்சோ ஒருவன் என் முருகன் இவன்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

கோழியும் கூடலும் கோயில் கொண்ட
கோவலர் ஒப்பர் குன்றம் அன்ன
பாழியும் தோளும் ஓர்நான்கு உடையார்
பண்டிவர் தம்மையும் கண்டறியோம்!!

வாழியரோ இவர் வண்ணம் எண்ணில்
மாகடல் போன்று உளர் கையில் வெய்ய
ஆழி ஒன்று ஏந்தி, ஓர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா!
அச்சோ ஒருவர் அழகியவா!!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அன்னமும் கேழலும் மீனும் ஆய
ஆதியை நாகை அழகியாரை
கன்னி நன் மாமதிள் மங்கை வேந்தன்
காமரு சீர்க் கலி கன்றி குன்றா

இன்னிசையால் சொன்ன செஞ்சொல் மாலை
ஏழும் இரண்டும் ஓர் ஒன்றும் வல்லார்,
மன்னவராய் உலகு ஆண்டு மீண்டும்
வானவராய் மகிழ்வு எய்துவரே!!

Sweatha Sanjana said...

பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!