என்னடா இவனும் சினிமா விமர்சனத்தில் இறங்கிட்டானேனு பாக்காதீங்க, விதி யாரை விடுது. இந்த வாரத்தில் 4 ஆங்கில படமும், ஒரு இந்தி படமும் பார்க்கும்படி நேர்ந்தது. அதனால் யாம் பெற்ற இன்பம்(துன்பம்) பெறுக இவ்வையகம் என்று விமர்சனத்தில் இறங்கியாச்சு. பங்காளி சந்தோஷ் ஆங்கில படமா என்று அதிர்ச்சி அடையாதே. அதுல ஒரு பெரிய மேட்டரே இருக்கு. இந்த வாரம் ஆரம்பத்தில் மனித உரிமை துறையில் உள்ள இருவர் நம்ம துறைக்கு வந்தார்கள். அதுல ஒன்னு நம்ம ஆந்திராவை சேர்ந்தவர், இன்னவொன்னு அமெரிக்க பெண்மணி. சும்மா வெட்டிப்பேச்சு பேசிகிட்டு இருக்கும் போது பேச்சு அப்படியே பேச்சுவாக்குல சினிமா நோக்கி திரும்பிடுச்சு. அந்த அம்மணி சும்மா இல்லாம நீ அமெரிக்க படம் எல்லாம் பாப்பியானு கேட்க, நானும் ஒரு ஆர்வக் கோளாறால் என்ன இப்படி கேட்டீங்க, ஒரு படம் விட மாட்டமுல என பெரும்பேச்சு பேச போக, அப்ப பார்த்திலே உனக்கு பிடிச்ச படத்தை எல்லாம் சொல்லுனு கேட்டுச்சு. ஆஹா, தேடி போய் சொந்த செலவுல சூன்யத்த கேட்டு வாங்கிட்டோமேனு (நன்றி-வாத்தி இளவஞ்சி) மனதுக்குள் இஷ்ட தெய்வத்த எல்லாம் வேண்டிக்கிட்டு ஒரு நாலு அஞ்சு பேமஸ் ஆன படத்தின் பெயர எடுத்து விட்டேன். ஹும்... ஹும் எல்லாத்தையும் கேட்டுகிட்டு, என் கிட்ட நிறைய சி.டி. இருக்கு, வேணுமுனா சொல்லு தரறேன் சொல்ல, நம்மளே மொழிப் பெயர்ப்பாளர் வச்சுக்கிட்டு ஆங்கில படம் பாக்குற ஆளு, இந்த ஊருல மொழிப் பெயர்ப்பாளருக்கு எங்க போயி அலையுறது, இது என்னடா வம்பா போச்சுனு, இல்ல பரவாயில்ல இப்ப எல்லாம் நான் தமிழ் படம் மட்டும் தான் பாக்குறதுனு சொல்லி அப்படியே எஸ்கேப் ஆக பாத்தேன். விடுவானா நம்ம பக்கத்து மாநிலத்துக்காரன், Henry, (அந்த அம்மணி பெயருப்பா) இவனுக்கு ஆங்கிலப்படம்னா உசிருனு ஒரு பிட்ட போட்டுட்டான். அதுவும் அப்படியானு ஒரு ஆச்சரியக்குறிய வார்த்தையில போட்டுட்டு போயி ஒரு சி.டி. கொண்டு வந்து கொடுத்துட்டு சிவா, இதில் இருக்கும் படம் உனக்கு மிகவும் பிடிக்கும்னு சொல்லிட்டு, பாத்துட்டு உன் விமர்சனத்த சொல்லுனு சொல்லிட்டு போடுச்சு. சி.டி.ய பாத்தவுடன் மனசுக்குள் ஒரு சின்ன சந்தோஷம், அது டி.வி.டி. அப்ப சரி, சப்-டைட்டில எழுத்துக் கூட்டு படிச்சு இதில் இருக்கும் படத்துக்கு விமர்சனத்த சொல்லி தப்பிச்சுடலாம் நினைத்துக் கொண்டேன், அதுக்கும் ஒரு ஆப்பு இருப்பது தெரியாமல்......
அந்த டி.வி.டி.யில் இருந்த படங்கள் - தி ரிங்க், தி அதர்ஸ், ப்பனிக் ரூம், போன் பூத். இந்த படத்த எல்லாம் ஒரு வழியா தட்டுத் தடுமாறி பாத்து கதைய ஒரு மாதிரி புரிஞ்சுகிட்டத கிழ கொட்டுறேன்.
தி ரிங்க (The Ring) - இந்த படத்துக்கு அவ்வளவா பிரச்சனை இல்லங்க,

ஏன்னா நம்ம "அரணி பரணி பாடி வரும் தாமிரபரணியின், தவப்புதல்வன்" சிங்கம்
டுபுக்கு இந்த படத்தின் விமர்சனத்தை எழுதி விட்டார். இருந்தாலும் நான் பார்த்து புரிந்தது இங்கு - ஒரு டேப்(வீடியோ கேசட்) இருக்குப்பா, அத பாத்தவங்க எல்லாம் அத பார்த்த ஏழாவது நாள் இறந்து விடுகின்றார்கள். இறந்த ஒரு பெண்ணின் உறவினர், அதாம்ப்பா கதாநாயகி அந்த டேப்பை பாக்குறாங்க, அதப் பார்த்தவுடன் ஒரு போன் வருது, இன்னும் ஏழு நாள் தான் என்று. அதில் இருந்து ஒவ்வொரு நாளா ஏழு நாள் வரை கதைப் போகுது. இந்த ஏழு நாள்ல அவங்க என்னவெல்லாம் கண்டுப்பிடிக்கிறாங்க என்பது தான் கதை. நடுவில் இந்த டேப்பை அவங்க பையனும், நண்பரும் வேற பாத்து விடுகின்றார்கள். இந்த படத்தின் + பாயிண்டா ஒளிப்பதிவையும், ஒலிப்பதிவையும் சொல்லாம். இரண்டையும் வைத்து பார்ப்பவர்க்களை மிரட்டி உள்ளார்கள். படத்தின் கதாநாயகி அம்மணி நல்லா நடிச்சு இருக்குப்பா. கண்டிப்பாக ஒரு தடவை பார்க்கலாம். இதுக்கு இன்னவொரு பார்ட்ட வேற வந்து உள்ளதாம். பார்த்தவர்கள் சொல்லாம்.
போன் பூத்(Phone Booth) - இந்த தலைப்பு தான் படத்தின் கதையே. ஆமாப்பா, ஒரு போன் பூத்க்குள்ளயே படத்த எடுத்து முடிச்சுட்டாங்க. கதாநாயகன்(கல்யாணம் ஆன) ஒரு ப்பளிக் போன் பூத்துக்கு வந்து தன் காதலிக்கு போன்

பண்ணிட்டு திரும்பும் போது, போன் ரிங்க் அடிக்குது, இவர் போன எடுத்தா, போனில் ஒரு குரல் இவர் பெயர சொல்லி கூப்பிட்டுது, அது மட்டும் இல்லாமல் இவனின் அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்று விடாமல் கூறுகின்றது அந்த குரல். மேலும் அந்த குரல் தான் சொல்லும்படி அவன் செய்யாவிட்டால் அவனை கொன்று விடுவதாக மிரட்டுகிறது. இவன் மிரண்டு போயி யாரு என்னனு கேட்டுக் கொண்டு இருக்கும் போது, வெளியே ஒருவன் போன் பூத்தில் வெகு நேரமாக இவனே பேசிக் கொண்டு மற்றவர்களை(பொண்ணுங்கள) போன் பேச விட மாட்டேன் என்கின்றானே என்று சண்டைக்கு வருகின்றான். அவனை மறுமுனையில் இருக்கும் அந்த குரல் துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விடுகின்றது. சுற்றி இருக்கும் அனைவரும் கதாநாயகன் தான் கொலைச் செய்தான் என்று நினைக்கின்றார்கள். அந்த குரல் நீ போனை கட் செய்தால் உன்னையும் கொன்று விடுவேன் என்று மறுபடியும் மிரட்டுகின்றது. அதற்குள் போலிஸ் வர, கதாநாயகனின் மனைவி, காதலி, பத்திக்கையாளர்க்கள் எல்லாம் வந்து விடுகின்றார்கள். ஆனால் அந்த குரல் விடாமல் அவனை மிரட்டிக் கொண்டே இருக்கின்றது. கடைசியில் போலிஸின் உதவியுடன் அவன் எப்படி தப்பிக்கின்றான் என்பது தான் கதை. இந்த படத்தின் திரைக்கதையை கண்டிப்பாக பாராட்டியாக வேண்டும். ஒன்றரை மணி நேரக் கதையை ஒரு போன் பூத்தை சுற்றியும், இருவருக்கும் இடையான உரையாடலை கொண்டுமே போர் அடிக்காமல் படத்தை கொண்டு சென்று இருக்கின்றார்கள். படத்தின் கதாநாயகன் மிக அருமையாக அனைத்து விதமான உணர்ச்சிகளையும் காட்டி உள்ளார். அந்த குரல் உண்மையிலே மிரட்டும் குரல் தான். இது போன்று ஒரு படம் தமிழில் வர வேண்டும்.
தி அதர்ஸ்(The Others) - இது கொஞ்சம் வித்தியாசமான படம். கணவன் போரில் இறந்து விட்டான் என்று நம்பும் மனைவி தன் இரு குழந்தைகளுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வருகின்றார். அந்த குழந்தைகளால் ஒரு விளக்கின்

ஒளியை தவிர பிரகாசமான ஒளியை பாத்தால் இறந்து விடக்கூடிய நோயால் பாதிக்கப்பட்டவர்கள். அதனால் வீடு முழுவதும் வெளிச்சம் உள்ளே வராதாவாறு தீரை சீலைக் கொண்டு மூடி வைத்து உள்ளார். அந்த வீட்டில் புதிகாக மூன்று வேலையாட்கள் சேருகின்றார்கள். அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தை அடிக்கடி ஒரு சிலரை பார்ப்பதற்காக தன் தாயிடம் கூறுகின்றது. அதை நம்பாத தாய் ஒரு சமயத்தில் தானும் அதுப் போல உணர்க்கின்றாள். அவளுக்கு இந்த பேய், பிசாசுகளின் மேல் நம்பிக்கை இல்லாதால், இது வேற யாருடைய சதி என்று நினைக்கின்றாள். ஒரு நாள் தீடிரென்று வீட்டில் இருந்த அனைத்து திரைசீலைகளும் காணாமல் போகின்றது. தீரைச்சீலைகள் இல்லாததை கண்டு குழந்தைகள் அலற, ஒரு போர்வையால் அவர்க்களை போர்த்தி, வீட்டின் வேலைக்காரர்க்கள் மேல் சந்தேகப்பட்டு அவர்களை வேலையை விட்டு அனப்புகின்றாள். அன்று இரவு, அந்த வேலையாட்கள் மூவரும் வீட்டை நோக்கி வருகின்றார்கள், கதாநாயகி அவர்களை பிசாசுகள் என்று நினைத்து குழந்தைகளை ஒரு இடத்தில் ஒளிந்து கொள்ள கூறி விட்டு அவர்களை நோக்கி துப்பாக்கியால் சூடுகின்றாள், பின் வாசல் கதவை அடைத்து விட்டு, மாடிக்கு வருகின்றாள். அங்கு ஒரு ஐந்து நபர்கள் அமர்ந்து ஒரு முக்கியமான விசயத்தை குறித்து விவாதித்து கொண்டு இருக்கின்றார்கள். அது என்ன என்பது தான் சஸ்பென்ஸ். யாருமே ஊகிக்க முடியாத ஒரு கதை என்று சொல்லாம். அனைவருமே மிக அருமையாக நடித்து உள்ளார்கள். கொடுரமான பேய் முகம், ரத்தம் போன்றவைகள் இல்லாமல் படத்தை மிக அருமையாக நகர்த்தி இருக்கின்றார்கள். ஒளிப்பதிவை மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
ப்பனிக் ரூம் - Panic Room - ஒரு வீட்டிற்கு சமீபமாக விவாகரத்து பெற்ற ஒரு தாய் தன் மகளுடன் குடியேறுகின்றார். அன்று இரவே அந்த வீட்டில்

இருக்கும் 22 மில்லியன் டாலர் மதிப்பு உள்ள பத்திரத்தை எடுப்பதற்கு மூன்று நபர்கள் வருகின்றார்கள். அவர்கள் வீட்டில் நுழைந்ததை அறிந்த தாய், தன் மகளுடன் சென்று ஒரு பாதுகாப்பான அறையில் ஒளிந்துக் கொள்கிறாள். அந்த அறையில் தான் அந்த பத்திரம் உள்ளது. அந்த அறை மிகுந்த பாதுக்காப்பான அறை, அந்த அறையில் நுழைவதற்கு அந்த நபர்கள் செய்யும் முயற்சிகளும், இடையில் அவர்கள்குள்ளே ஏற்படும் பிரச்சனை, இந்த நபர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு அந்த தாய் எடுக்கும் முயற்சிகள் என்று படத்தை மிகவும் விறுவிறுப்பாக கொண்டு சென்று இருக்கின்றார்கள். அடுத்த காட்சி என்னவாக இருக்கும் என்று ஆவலை தூண்டும்படி இருப்பது இந்த படத்தின் திரைக்கதைக்கு கிடைத்த வெற்றி என்று கூறலாம். இதுவும் பார்க்க கூடிய ரகத்தை சேர்ந்த படம் தாங்க.
அம்புட்டுத் தாங்க,மேல சொன்ன ஆப்பு என்னனா, நான் பார்த்த நாலு படத்தில தி அதர்ஸ் படத்துக்கு மட்டும் தாங்க சப்-டைட்டில் இருந்தது. மற்ற படத்துக்கு இல்லங்க. ஏதோ தட்டுத் தடுமாறி ஒரு மாதிரி புரிஞ்சி நான் இந்த விமர்சனத்தை எழுதி இருக்கேன். எங்க எங்க தப்பு பண்ணி இருக்கேன் என்று இந்த படத்தை எல்லாம் (புரிஞ்சி) பாத்தவங்க, கொஞ்சம் கதைய சொல்லி இந்த தம்பியின் மானத்தை காப்பாத்துங்க செல்லங்களா....