Monday, January 26, 2009

ப்ளீஸ்! இந்த பதிவை படிக்காதீங்க!

ப்ளீஸ்! இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க!
கோபிநாத்
சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்
விலை : ரூ 60
பக்கங்கள் : 112

ப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். அப்படி ஒரு எழுத்து நடை. எழுத்து நடை என்பதை விட நம் அருகில் நின்று நம்முடன் ஒருவர் உரையாடுவது போன்று ஒரு தோணி புத்தகம் முழுவதும் நிரம்பி உள்ளது. பேச்சு வழக்கிலே எழுதியதிலே ஆசிரியர் வெற்றி பெற்று விட்டார். அதுவும் அந்த உரையாடல் நமக்கு படிக்கும் போது அவர் குரலிலே நம் மனதுக்குள் ஒலிப்பது தனிச்சிறப்பு. நீயா நானா நிகழ்ச்சி நம் மனக்கண்ணில் வந்து போகிறது. அந்த நிகழ்ச்சியில் பேசிய பல பேச்சுகளை இந்த புத்தகத்தில் அச்சு ஏற்றி உள்ளார் என்பது அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தவர்களுக்கு புரியும்.

பொதுவாக தன்னம்பிக்கை தொடர்பான புத்தகங்களை நான் படிப்பது இல்லை. ஏற்கனவே அளவுக்கு அதிகமாக இருப்பதாக ஒரு எண்ணம் தான் அதற்கு காரணம். அதையும் மீறி இந்த புத்தகத்தை வாங்குவதற்கு ஒரே காரணம் தலைப்பும், கோபிநாத்ம் தான். வாங்கி படித்து முடித்த பிறகு இப்புத்தகத்தின் மீது ஒரு மதிப்பு ஏற்பட காரணம் என் எண்ண ஒட்டங்களில் பலவற்றை அப்படியே பிடுங்கி பதிவு செய்தது போல் ஒரு மாயை. கூடவே ஒரு உற்ற நண்பனுடன் பல விசயங்களை கலந்தாலோசித்து பிறகு ஏற்படும் தெளிவு இதில் ஏற்படுகிறது. அந்தளவுக்கு எளிமையாக அன்றாட விசயங்களை தொகுத்து அதற்கு தகுந்த உதாரணங்களை மனவியல் நிபுணர் முதல் ஜனகராஜ் வரைக்கும் எடுத்து கையாண்டு உள்ளார்.

அட!

  • ஒவ்வொரு அத்தியானத்துக்கும் தலைப்பு ஏதும் வைக்காமல் அந்த பகுதியின் மையக்கருத்தை கட்டம் கட்டி போட்டு இருப்பது. அதே போல பல இடங்களில் முக்கிய கருத்தை BOLD பண்ணி இருப்பது.
  • எதிர்கட்சிக்காரன் பார்த்தா என்ன நினைப்பான் - கவுண்டமணி. சீரியஸ் ஆகவே நமது வாழ்க்கையை இப்படித் தான் வைத்து இருக்கிறோம் என்று சொல்கின்றன ஆய்வுகள்.
  • நீங்கள் கவனிக்காமலும் கண்டுக் கொள்ளாமலும் விட்ட விஷயம் மெகாசைஸ் "என்னவோ மாதிரி இருக்குது" ஆக மாறி உறுத்திக் கொண்டே இருக்கிறது.
  • உங்களுக்கு என்று தனிப்பட்ட கருத்துக்களை வைத்துக் கொள்வதில் குறையொன்றுமில்லை. வம்படியாய் எந்தக் சூழலிலும் அதை விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று சொன்னால் உங்களை விட்டு எல்லாரும் போய் விடுவார்கள்.
  • உயிரே போனாலும் என் கொள்கையை விட்டுத் தரமாட்டேன் என்று நீங்கள் சண்டை போட்டால் அதற்குப் பெயர் கொள்கை அல்ல மனோ வியாதி.
  • இந்த உலகமே உங்களுக்கு எதிராக நடக்கிறது என்றால் இந்த ஒட்டு மொத்த உலகத்திற்கு எதிராக நீங்களும் நடந்து கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்.
  • இழந்து போனது குறிந்த நினைவுகளையும், கவலைகளையும் உள்ளங்கைக்குள் வைத்து மூடிக் கொண்டு சிரமப்படுகிறோம். அதை விட்டு விட்டால் வெளியே வந்து விடலாம். ஆனால் விடமாட்டோம். குரங்குக்கு தான் அது தெரியாது. நமக்கும் கூடவா தெரியாது.

அட்ரா சக்கை!

  • சிரிப்பு வந்தால் சிரியுங்கள்! நாளைக்கு அழுகை வந்தால் அழுது கொள்ளலாம். கொஞ்சமாக சிரித்து கொஞ்சமாக அழுவதை விட... நிறைய சிரித்து நிறைய அழுங்களேன்
  • உங்கள் மனம் ஒரு தொட்டி. அதை குப்புறக் கவிழ்த்து வையுங்கள்... இல்லை என்றால் குப்பையை வைத்துக் கொண்டு வருபவர்கள் அதில் கொட்டி விட்டுப் போவார்கள். உங்கள் மனத் தொட்டியில் மேலும் மேலும் குப்பை கொட்டுபவர்.. உங்கள் நண்பராக இருக்க முடியாது.
  • முழு இட்லியை முழுங்க நினைத்தால் விக்கல் தான் வரும். அதை பிட்டு பகுதி பகுதியாக சாப்பிடுங்கள். அது தான் எளிது.
  • என்னமோ போடா... பின்றடா - ஜனகராஜ்
  • உங்களை இயக்க தான் கொள்கைகள் முடக்க அல்ல.
  • Nothing Interesting... Then make it interesting. வாழ்க்கை போரடிச்சா.. அதை சுவாரஸ்யமானதாக ஆக்கிக் கொள்ளுங்கள்.
  • வேலையாளாக இருப்பது . லாபம் வந்தால் நமக்கு. நட்டம் வந்தால் அவனுக்கு. இதிலிருந்து வெளியே வர வேண்டியது நமக்காக மட்டுமல்லாமல் நம் நாட்டுக்காவும் தான்.

உறுத்தல்!

  • தலைப்பு - எதிர்மறையான தலைப்பு தான் என்னை புத்தகத்தை புரட்டி பார்த்து வாங்க வைத்தது என்ற போதிலும் இவ்வளவு பாசிட்டிவான தகவல்களை புத்தகம் முழுவதும் கொடுத்து விட்டு தலைப்பை இது போல வைத்தது 13 ரீலில் கண்டதையும் காட்டி விட்டு 14 ரீலில் புத்தி சொல்லுவது போல் எடுக்கப்படும் தமிழ் சினிமாவை தான் ஞாபகப்படுத்துகிறது. புத்தகமும் வியாபாரம் தானே, அதனால் இருக்கலாம்
  • புத்தக்கத்தில் இருக்கும் புகைப்படங்கள். வண்ணத்தில் கொடுத்து இருக்கலாம் அல்லது குறைந்தபட்டம் புகைப்படத்தின் தரத்தை அதிகப்படுத்தி இருக்கலாம்.

மொத்ததில் முன்னுரையில் என்ன சொல்லி இருந்தாரோ அதில் இருந்து சிறிது கூட மாறாமல் புத்தகத்தை முடித்து உள்ளார். புதுசாக ஏதும் அதில் இல்லை. ஆனால் நம்மை புதுபித்து கொள்ள உதவும். நம்பி வாங்கி படிக்கலாம். மற்றவர்களையும் வாங்க சொல்லாம்.

Friday, January 23, 2009

வீரவணக்கம் !

ஒரு நாட்டின் சுகந்திரம் என்பது
போராடி, இரத்தம் சிந்தி, உயிர் தியாகம்
செய்து கைப்பற்ற வேண்டியதே தவிர,
கெஞ்சியும் கேட்டும் பெறுவதல்ல
பேரம் பேசிப் பெறுவதும் அல்ல

- நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ்



இந்த தேசம் இருக்கும் வரை உனை
நினைத்து சில சுவாசங்கள் இருக்கும்

ஜெய்ஹிந்த்!

Wednesday, January 14, 2009

பொங்கலோ பொங்கல் 2009

















Sunday, December 28, 2008

மும்பை தாக்குதலை தொடர்ந்து...

அவந்திகாவின் தொடர் அழைப்பை ஏற்று இந்த பதிவு. ஏற்கனவே இரண்டு மூன்று பதிவுகளில் இதை பற்றி பேசிய காரணத்தினால் இந்த விசயத்தை பற்றி மேற்க்கொண்டு ஏதும் எழுத வேண்டாம் என்ற எண்ணத்தில் தான் இருந்தேன். இருந்த போதிலும் ஒரு இளைய உள்ளத்திற்கு தேசத்தின் மீது இருக்கும் மதிப்பும் மரியாதையும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் என் கருத்துக்களை பதிவு செய்கிறேன். Better Late than Never என்ற அளவுகோளின் படி.

அவந்திகா கொடுத்த தலைப்பை புலம்பலாக மாற்றிய பெருமை முத்துலெட்சுமியை சாரும். அதை தொடர்ந்து எல்லாமே புலம்பல் பதிவாக அமைந்து விட்டது(நான் பார்த்த வரை)ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் புலம்பலாக மாறி இருக்கலாம் என்று எண்ணுகிறேன். அவந்திகா தன்னுடைய பதிவில் regarding the incompetency and selfishness of our politicians என்ற வாதத்தை பதிவு செய்து உள்ளார். இதில் சுயநலம் என்ற பதத்திற்கு கண்டிப்பாக மாற்றுக் கருத்து கிடையாது. ஒட்டு பொறுக்கி அரசியல் நடத்தும் நம் அரசியல்வாதிகளிடம் சுயநலம் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. திறமையின்மை என்ற வாதத்தோடு தான் ஒத்து போகவில்லை. சிவராஜ் பாட்டில், ப்ரதீபா பாட்டில் போன்ற சில அல்லகைகளை தவிர்த்து பார்த்தால் மிக சிறந்த அதிகாரிகள் துணையுடன் கூடிய அறிவுசார்ந்த அரசியல் தலைவர்கள் அநேனகம் நம் நாட்டில். ஆனால் அரசாங்கத்தை வழி நடத்தி செல்ல வேண்டியதை தவிர்த்து மற்ற எல்லா வேலைகளையும் மிக சரியாக செய்து கொண்டு இருப்பது தான் நம்முடைய துர்பாக்கியம்.

மும்பை தாக்குதலை தொடர்ந்து நம் அரசு மேற்கொண்ட சில நடவடிக்கைகளை கண்டிப்பாக பாராட்டி ஆக வேண்டும். குறிப்பாக வெளியுறத்துறை, இந்த பிரச்சனையை மிக அழகாகவும் அழுத்தமாகவும் உலக நாடுகளின் கவனத்திற்கு கொண்டு சென்ற விதம் மிக நேர்த்தி. பாகிஸ்தானை கை காட்டியதோடு நம் வாதத்திற்கு வலு சேர்க்கும் விதமாக மற்ற நாடுகளை குரல் கொடுக்க வைத்தது. ஐ.நா. சபையிலும் சரியான வாதங்களை எடுத்து வைத்ததோடு இல்லாமல் பகிரங்கமாகவே பாக் மீது குற்றம் சாட்டியது. அதை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை கொடுக்கும் விதமாக அந்நாட்டின் ஒரு அமைப்பை எந்த ஒரு கேள்விகளும் இன்றி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மூலம் தடை செய்ய வைத்தது. இதை எல்லாம் கண்டு உண்மையாகவே பாகிஸ்தான் பயந்து தான் போனது, என்ன செய்வது என்று முழிக்க வேண்டிய கட்டாயம் பாக். அரசிற்கு. எங்களை ஒரேடியாக குற்றவாளி கூண்டில் ஏற்றாதீர்கள் இது நியாயம் இல்லை. இந்த பிரச்சனையை ஐ.நா. தலையீட்டு விசாரிக்க வேண்டும் என்ற பாக். கதறலை ஐ.நா. கண்டுக் கொள்ளவில்லை. எத்தனை முறை கேள்வி எழுப்பியும் இதில் தலையீட எண்ணம் இல்லை என்ற ஒற்ற பதில் தான் கிடைத்தது.

உலக அளவில் இது போன்ற நடவடிக்கைகளை மேற்க்கொண்ட அதே நேரத்தில் எல்லையில் தன் படைகளை குவித்தும் பாக். வான் வெளியில் தாக்குதல் விமானங்களை பறக்க விட்டும் அந்த நாட்டிற்கு மிக கடுமையான எச்சரிக்கை செய்தியை அனுப்பியும் உள்ளது. போர் தொடுக்காமல் ஏன் இந்த பம்மாத்து வேலை என்ற கேள்வி எழுலாம். இந்த பம்மாத்து வேலை தான் மிக சிறந்த ராஜத்தந்திரம் என்பது என் எண்ணம். இதற்கு தகுந்த பலன் தான் சர்தாரியின் தற்சமய பேச்சுகள் எல்லாம். இறங்கி வர வேண்டிய கால கட்டாயம் பாக்.னுக்கு பத்ரியின் இந்த பதிவை படியுங்கள், சில விபரங்கள் புரியலாம். இது போன்ற செயல்களை அமெரிக்கா ரசிக்கவில்லை என்பது வேறு விசயம். இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்த அதே நேரத்தில் பாக். ஆப்கானில் இருந்து படைகளை வாபஸ் பெற்று இந்திய எல்லையில் குவிக்கும் காரணத்தால் நேட்டோ படைகளுக்கு பெறும் இழப்பு ஏற்படும் என்ற பயத்தின் வெளிப்பாடு தான் அது.

இந்தியா இத்தோடு நிறுத்தி விட கூடாது. இந்தியாவில் நடந்த தாக்குதலுக்கு பாக் ராணுவம் மற்றும் ஐ.எஸ்.ஐ யின் பங்கு எந்த அளவுக்கு உள்ளது என்பதற்கு போதிய ஆதாரங்களை உலக அரங்கில் எடுத்து வைக்க வேண்டும். மீண்டும் இது போன்ற தாக்குதல் ஏதும் இந்தியா மீது நடந்தால் குறிப்பிட்ட இலக்குகளை குறி வைத்து நாம் போர் கொடுக்கலாம். அதற்கு உலக நாடுகளின் ஆதரவும் நமக்கு இருக்கும்.ஏற்கனவே பாக் னுக்கு உள்நாட்டில் பல உள்நாட்டு பிரச்சனைகள், பல குண்டுவெடிப்புகள் இதில் இது போன்ற உலக நாடுகளின் கண்டிப்பும் தொடர்ந்தால் இரு நாடுகளுக்குமே விமோசனம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

இதில் குறிப்பிட்ட சொல்ல வேண்டிய மற்றொரு விசயம் இஸ்ரேலை சிறிது தூரத்திலே நிறுத்தி வைத்தது. இஸ்ரேல் இந்த விவகாரத்தில் எல்லா விதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளது என்று தெரிவித்தும் நாம் மறுத்து விட்டோம். இதுவும் சரியான நடவடிக்கை தான். இஸ்ரேலை ஒரு குறிப்பிட்ட அளவோடு நிறுத்தி வைப்பது தான் நல்லது. அவர்கள் என்றுமே முழுக்க நம்பக் கூடிய நண்பர்கள் கிடையாது.

உலக அளவில் சரியான நடவடிக்கைகளை எடுத்த இந்தியா உள்துறை அளவில் இன்னும் சரியான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இன்னும் தீவிரமான மற்றும் அதிரடி நடவடிக்கைகள் தேவை. இது போன்ற பயங்கரவாதம் செயல்களுக்கு கண்டிப்பாக உள்நாட்டு மக்களின் உதவி இல்லாமல் ஏதுவுமே செய்ய முடியாது. அந்த உதவிகளை தடுக்க என்ன என்ன நடவடிக்கைகளை தேவையோ அத்தனையையும் எந்த ஒரு மதக் குறிக்கீடும் இல்லாமல் உடனே செயல்படுத்த வேண்டும். இது போன்று அசம்பாவிதங்கள் நடக்க நேர்ந்தால் அதை சந்திக்கும் அளவுக்கு நம் காவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உபகரணங்கள் உயர்ந்த தரத்தில், நவீன தொழில்நுட்பத்தோடு தருவித்து தர வேண்டும். தேச நலனை ஒன்றை மட்டும் கருத்தில் கொண்டால் மற்ற விவகாரங்களுக்கு செவி அளிக்க தேவை இருக்காது. அதை விட்டு ஒட்டு போயிடும், கூட்டணி போயிடும், ஆட்சி போயிடும் னு பாத்த பழைய குருடி கதவை திருடி கதை தான்.

நம் மக்களும் நிறைய மாற வேண்டியது உள்ளது. அதை பட்டியலிட நேரமில்லை. சுருங்க கூறனும் என்றால் தனி மனித ஒழுக்கம், எவன் செத்தா என்ன என் பொழுப்பு நடந்தால் சரி என்ற எண்ணத்தை தவிர்த்து தேசம் ன்னா என்ன? ஒரு குடிமகனின் கடமை என்ன? தேச நலன் என்றால் என்ன? போன்றவற்றை நினைவில் கொண்டு நினைவில் இல்லா விட்டால் மீண்டும் பழைய சமூக அறிவியல் புத்தகத்தை புரட்டி பாத்தோ கூகிள் ஆண்டவரை துணைக்கு அழைத்தோ தெரிந்துக் கொள்ளவது நலம். அவன் செய்யல, இவன் செய்யல எனக்கு மட்டும் தான் இது எல்லாம் பொருந்துமா போன்ற விதாண்டவாத கேள்விகளை தவிர்த்து நாம் நம் கடமையை ஒழுங்கா செய்வோம், அடுத்தவன் தானா செய்வான் அல்லது அவனையும் செய்ய வைக்க என்ன வழி என்பதை பற்றி யோசிக்கலாம், ஆனா முதலில் நாம் தொடங்க வேண்டும்.

இந்த தொடரை கைப்புள்ள தொடர்ந்தால் மகிழ்வேன்.