Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts
Showing posts with label பயணக் கட்டுரை. Show all posts

Tuesday, November 18, 2008

டைரிக் குறிப்பு - 1

தீபாவளிக்கு ஊருக்கு செல்லாம் என்று முடிவு எடுத்த அன்றே டிக்கெட் புக் பண்ணி அடுத்த நாளே கிளம்பினேன். ஊரில் யாருக்கும் முன்கூட்டியே சொல்லாமல் ஒரு இன்ப அதிர்ச்சி அளிக்கலாம் என்று முடிவு எடுத்த காரணத்தால் யாரிடம் தெரிவிக்காமல் நான் இருந்த இடத்தில் இருந்து தலைநகரத்துக்கு பயணமானேன். அன்று இரவு மலேசிய தமிழர் அளித்த விருந்தில் உண்டு மகிழ்ந்து அடுத்த நாள் நண்பர்களை சந்தித்து ஏர்போர்ட் க்கு கிளம்பும் நேரத்தில் வண்டி மக்கர் செய்ய, அதை தள்ளி விட்டு ஸ்டார்ட் செய்கிறேன் பேர்வழி என்று ஒருவனின் கையை நசுக்கி பின் அடுத்த வண்டியில் இருந்து ஒயர் போட்டு ஸ்டார்ட் பண்ணி ஏர்போர்ட்க்கு அரக்க பறக்க சென்று செக்-இன் செய்வதுக்குள் ஒரு வழி ஆகி விட்டது. இந்த கடைசி நேர பரபரப்பை என்று தான் தவிர்க்க போறேனோ?

*****

சார்ஜா விமான நிலையத்தில் உடனடியாக Transit Visa வாங்கி வெளியே செல்லலாம் என்ற எண்ணத்தை தவிடுபொடி ஆக்கினார்கள் அங்கு இருந்த மக்கள். 4 மணி நேரம் ஆகும் என்று கூறி வியாழன் இரவு அதனால் இன்னும் தாமதமாக ஆகும் என்று இழுத்து அடித்து, பிறகு சண்டை பிடித்து விசா வாங்க 11 மணி நேரம் ஆனது.(இதுக்கு எங்க ஊர் தேவலை) அதுக்கு மேல என்னத்த வெளியே போய் வந்து அடுத்த பிளைட் பிடிப்பது. இருந்தாலும் ஒரு நண்பரை மட்டும் சந்தித்து மறுபடியும் சென்னைக்கு பயணம். (Transit Visa சார்ஜாவிற்கு செல்வதற்கு முன்பே வாங்குவது நலம். )
*****

சென்னையில் மழை பொழந்து கட்டுது என்ற அறிவிப்புடன் பிளைட் புறப்பட்டது, என்னடா இது வம்பா இருக்கு என்று சென்னையில் இறங்கினால் மிக மெலிதான தூறல் மட்டும் தான். சென்னை விமான நிலையம் கோயம்பேடு மார்க்கெட் விட மோசமாக இருந்தது அன்று. பெங்களூரில் இருந்து 3 மணிக்கு எல்லாம் வந்து விடுகிறேன் என்ற சொன்ன நண்பன் 7 மணிக்கு தான் வந்தான். சார்ஜாவிலும் சென்னையிலும் தேவுடு காக்கனும் என்று விதி இருந்து இருக்கும் போல. அவன் வந்ததும் அந்த தூறலும் நின்னு போச்சு.
*****

Coffee Day ல காபி குடித்து விட்டு(நான் மட்டும் தான் அவன் ஒரு சிப் போடு நிறுத்திடான், அதுவே 110 ரூபாய்)அப்படியே பொறுமையாக கிளம்பி பாண்டி சென்று அங்கு ஒரு 2, 3 மணி நேரம் செலவழித்து விட்டு மதியம் உணவு சிதம்பரத்தில் சாப்பிடும் போது தான் மொபைலை சார்ஜ் ல போட்டேன். அடுத்த 5 நிமிடத்தில் தந்தையிடன் இருந்து அழைப்பு. அதிர்ச்சி நம்ம கொடுக்கலாம் என்று பார்த்தால் அவர்கள் நமக்கு கொடுக்குறாங்களே என்று எடுத்தால் பாசமோ பாசம் அம்புட்டு பாசத்தை கொட்டிப்புட்டாங்க. சொல்லாம வந்ததுக்கு. இதுக்கு எல்லாம் யார் காரணம் என்று பார்த்தால் நண்பன் என்கிற பெயரில் இருக்குற எதிரி தான். என் மொபைல் எடுக்கல என்பதால் வீட்டிற்கு அடிச்சு இருக்கான். அதை வைத்து அப்படியே மோப்பம் பிடித்து நம்மளையும் பிடித்து விட்டார்கள் வீட்டில்.
*****

அதை தொடர்ந்து பல அழைப்புகள் நண்பர்களிடம், டேய் நான் அழுதுடுவேன் என்ற நிலைமைக்கு கொண்டு வந்துட்டாங்க. 45 நாட்களில் ஊருக்கு மறுபடியும் வருகிறேன் என்ற ஒரே காரணத்தை வைத்து வேலையை விட்டுட்டு வந்துட்டேன் என்ற புரளியும் சேர்ந்து கிளம்பிடுச்சு. இப்ப உலகம் இருக்குற நிலைமையில் அதை எல்லாம் செய்வோமா என்ன என்று சொன்னாலும் கேட்கல...
*****

அப்படியே வெட்டி அரட்டையுடன் பொறுமையாக வண்டி ஒட்டிக் இல்லை நடத்திக் கொண்டே சீர்காழி சாலையில் சென்றோம். "என்னிக்கு தாண்டா அந்த சாலைக்கு விடிவு காலம் கிடைக்கும்" என்ற ரொம்பவே பேசி பார்த்தோம். இப்போதைக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் முடிவாச்சு. தரங்கம்பாடியில் கடற்கரையை ஒட்டி இருக்கும் ஒரு பங்களாவில் டீ குடிக்க சென்றால் வாசலில் இருந்து உள்ளே ஆர்டர் எடுக்கும் வரை 4 பேர் டீ 40ரூபாய் என்பதை பறைசாற்றினார்கள். என்னத்த சொல்ல, வேணுமா காசை முன்னாடியே கொடுத்து விடுகிறோம் என்று சொன்ன பிறகு தான் நம்பின மாதிரி இருந்துச்சு. எங்க தோற்றம் அப்படி இருந்துச்சோ? இருக்கும். நாகை அடைந்து நண்பனை பஸ் ஏத்தி விட்டு வீட்டுக்கு போகும் போது மணி 7.
*****

இரண்டு வருடங்களுக்கு பிறகு தீபாவளிக்கு ஊரில். வழக்கம் போல லேட்டாவே குளித்து (அதிகாலை என்பது எல்லாம் தாத்தாவோடு போச்சு) கோவிலுக்கு சென்று வந்து, சிறப்பு நிகழ்ச்சிகள் கொஞ்சம் கொஞ்சம் பாத்து, இனிப்புகளை பறிமாறிக் கொண்டு, I will call Police போன்ற நச்சல் பிடுங்கல் இல்லாமல் ஏராளமான வெடிகளுடன் மிக சிறப்பாகவே போச்சு. நண்பர்களும் ஒன்று சேர்ந்து எங்கள் வீட்டில் முதலில் வெடித்து பிறகு அவர்கள் வீட்டில் என்று நேரம் மிக வேகமாகவும் மகிழ்வாகவும் ஒடியது. அதிலும் கூடுதலாக எங்கள் தாத்தா காலத்தில் வீட்டில் வேலை செய்த லட்சுமிம்மா, தீபாவளி அன்று வீட்டிற்கு வர அன்று மாலையில் அவர்களையும் கூட்டு கொண்டு அம்மாவுடன் அவர்கள் கூடி இருக்கும் சுனாமி வீடுக்கு சென்று வந்தது மிகுந்த மகிழ்ச்சி. எங்களை விட லட்சுமிம்மாவிற்கு ரொம்பவே மகிழ்ச்சி.
*****

4 வருடங்களுக்கு பிறகு மிகவும் நெருக்கமான பல கல்லூரி நண்பர்களை சந்திக்க முடிந்தது இந்த வருடம். 10 வருடங்களுக்கு பிறகு பள்ளி நண்பர்கள் பலரும் எங்கள் வீட்டில் ஒன்று கூடினோம். பழைய நட்புகளை சந்திப்பதில் இருக்கும் சுகமே தனி சுகம் தான். அரைத்த அதே மாவை மறுபடியும் அரைப்பதில் அப்படி என்ன தான் சுகமே நமக்கு. அதிலும் பாருங்க நம்ம பசங்க எனக்கு ஆப்பு அடிச்சுட்டாங்க. இந்த சந்திப்புடன் சேர்ந்து என்னுடைய நிச்சயதாம்பூலம் என்று சொல்லி வரல என்று சொன்ன நண்பர்களையும் வர வைத்தார்கள். நான் என்னனு சொல்லி சமாளிக்க. தீபாவளிக்கு ஊருக்கு வந்தது ஒரு குற்றமாடா? Every Dog has its own day.
*****

நான் போய் இருந்த நேரம் தீபாவளி நேரம் என்பதால் மின் வெட்டு இல்லை. ஆற்காட்டார் வாழ்க. இது இப்படியே தொடருமா????????? இப்பொழுது 2 மணி நேரம் மின் வெட்டு என்று வீட்டில் சொன்னார்கள்.
*****

போன தடவை போலவே இந்த தடவையும் பல இடங்களில் போராட்டம். போன தடவை மின் வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலைகள். இந்த தடவை இலங்கை பிரச்சனை. பெரிதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்த வில்லை என்னுள். நாகையில் இலங்கை ராணுவத்தால் மீனவர்கள் கொல்லப்படும் போது எல்லாம் இது போன்ற போராட்டத்தை பார்த்தே வளர்ந்த காரணத்தால் இருக்கலாம். முடிவு தான் இது வரை கிடைக்கவில்லை. அரசியல் செய்பவர்களுக்கு இது அடிக்கடி கை கொடுக்கும் விசயம். இந்த தடவை ராஜினமா என்று எல்லாம் பேசி ஒரு வேலை செய்துடுவாங்களோ னு நான் கூட கொஞ்சம் நம்பிட்டேன். சே.. எவ்வளவு பெரிய மடத்தனம். நான் திருந்தவே மாட்டேன். நல்லா இருங்கடா.
*****

காந்தியை பற்றி ஏதாவது ஒரு விமர்சனத்தை வைத்தால் எப்படி நம் தேசப்பத்தியை குறி வைப்பார்களோ அதற்கு சற்றும் குறைவில்லாமல் விடுதலை புலிகளை பற்றி ஒரு வார்த்தை தவறாக கூறினாலே தமிழன விரோதி என்ற பட்டம் கிடைக்கிறது. இது நல்லதுக்கு இல்ல சாமிகளா.
*****

தமிழனுக்கு இந்த தடவை தொலைக்காட்சி மூலம் சரியான கொண்டாட்டம் தான். சினிமா கலைஞர்களின் இலங்கை பிரச்சனை போராட்டம், ரஜினியின் ரசிகர்கள் சந்திப்புனு நல்லா போகுதுடா பொழுது. இந்த தடவை தான் ரஜினி தெளிவா பேசினா மாதிரி எனக்கு பட்டது ஆனா அதுக்கு உல்டாவா தான் மத்தவங்க சொன்னாங்க. அப்பால ஒபாமா. அமெரிக்காவில் கூட இந்த அளவுக்கு மீடியாவில் அலசி இருப்பார்களா என்று தெரியவில்லை. இங்கு அலசி பிழிந்து காய போட்டு விட்டார்கள். மீடியாவுக்கு நல்ல கொண்டாட்டம் தான்.
*****

கத்திப்பாரா மேம்பாலத்தை பாத்து அப்பாடா ஒரு வழியா முடிச்சிங்களேனு தோன்றியது. மீனம்பாக்கம், பாடி மேம்பாலமும் விரைவில் முடியும் என்ற நம்பிக்கை வந்து இருக்கு. பின்ன அடுத்த வருசம் தேர்தல் வருதுல. என்னத்துக்கு தான் திட்ட கால அளவு எல்லாம் வைக்குறாங்களோ, எல்லாத்துக்கு இனிமேல் 5 வருசம் என்று பொதுவாக வைத்து விடலாம். நம்ம அலுவலகத்திலும் இருக்காங்களே 1 வாரத்தில் செய்யனும், 1 மாதத்தில் செய்யனும் உயிர எடுக்குறாங்க. முடிக்காம அவனுங்களுக்கு விளக்கம் சொல்லுறதுக்கு பதில் சோறு தண்ணி இல்லாம வேலை முடிச்சிடலாம். ஹும்ம்ம் அதுக்கு எல்லாம் "பாலு" யோகம் வேணும்.
*****

மாயவரத்துக்கு இரு முறை பயணம், காரைக்காலுக்கு இரு முறை பயணம், திருவாரூர், வேளாங்கண்ணி க்கு ஒரு முறை பயணம், நண்பர்களுடன் கப்பலுக்கு
ஒரு பயணம்(கடல் பயணம் என்றுமே இனிமை தான்) என்று நாகையில் இருந்த நாட்கள் மிக வேகமாகவே சென்றது. ஊருக்கு செல்லும் தேதி நெருங்க பாண்டியில் ஒரு நாள் இருந்து வங்கியில் ஒரு கையெழுத்து வாங்கி கொடுத்து சென்னைக்கு பயணம். (அந்த ஒத்த கையெத்த எத்தன நாளா போட்டானுங்க) இங்கு இருக்கும் மக்கள் கொடுத்த லிஸ்டில் இருப்பதை வாங்கவே ஒரு நாள் ஒடியது. அதிலும் Debonair புக் எல்லாம் ரொம்பவே ஒவர். என்ன பண்ண. அடுத்த நாள் சில நண்பர்களை சந்தித்து விட்டு சென்னையில் விண்ணப்பித்து இருந்த விசாவிற்கான ரசீதை பெற்றுக் கொண்டு சார்ஜாவிற்கு பயணம். சென்னையில் அருளின் அருள் மட்டும் கிடைக்கவே இல்லை.
*****

சார்ஜாவில் விசாவை 10 நிமிடத்தில் பெற்றுக் கொண்டு 2 மணி நேரத்தில் அக்கா வீட்டை அடைந்து விட்டேன். மாப்பிள்ளையுடன் ஒரு நாள் செலவழித்து சூடானுக்கு அடுத்த நாள் அதிகாலையில் வந்து ஒரு நாள் ஒய்வு எடுத்து பணியிடத்திற்கும் திரும்பியாச்சு. அடுத்த நாளே நம்ம தல கேட்டான் பாருங்க ஒரு கேள்வி. அடுத்து எப்ப ஊருக்கு போகலாம் என்று இருக்க என்று சொல்லு அதுக்கு தகுந்த மாதிரி நான் என் விடுப்பை மாத்திக்குறேன் என்று. ரொம்ப நல்லவனுங்களா இருக்கானுங்க........
*****

(அக்டோபர் 23 - நவம்பர் 9)

Tuesday, June 19, 2007

உகாண்டா ஒரு பார்வை

உகாண்டா கிழக்கு ஆப்பிக்கா நாடுகளில் ஒன்று, முற்றிலும் நிலப்பரப்பால் கவரப்பட்ட குடியரசு நாடு.(Landlocked Republic). அந்நாட்டில் கிட்டதட்ட 20% நிலம் நீரால் சூழப்பட்டுள்ளது. அதனை சுற்றி இருக்கும் நாடுகள் கென்யா, சூடான், காங்கோ, தன்ஜானியா, ரூவாண்டா ஆகியவையாகும்.

1890 முன்பு வரை உகாண்டா நான்கு அரசு ராஜ்ஜியங்களாலும், பல குறு நில மன்னர்களாலும் ஆளப்பட்ட நாடு. 1890 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் அடிமைப்படுத்தப்பட்டது. 1962 ஆம் ஆண்டு சுகந்திரம் அடைந்தது.

ஆங்கிலம் மற்றும் லுகாண்டா(Luganda) மொழிகள் அந்நாட்டின் ஆட்சி மொழிகள் ஆகும். அனைவருக்கும் ஒரளவுக்கு ஆங்கிலம் தெரிந்து இருக்கிறது. விளம்பர பலகைகள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் எழுதப்பட்டுள்ளது.
1970 ஆம் ஆண்டு வரை உகாண்டா, ஆப்பிரிக்க நாடுகளில் மிக அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்த நாடுகளில் ஒன்று ஆகும். கிட்டதட்ட வருடத்திற்கு 150,000 பயணிகள் பயணம் செய்து உள்ளார்கள். ஆனால் 1997 ஆம் ஆண்டில், பல வருடங்களாக நடைப்பெற்ற உள்நாட்டு பிரச்சனை காரணமாகவும், பிறகு கிட்டதட்ட 12 வருடங்கள் உள்நாட்டில் வளர்ச்சி பணிகள் செய்தும் வெறும் 4000 நபர்கள் வருடத்திறகு வந்து சென்ற சுற்றுலா பயணிகள் ஆவார்கள். இந்த தொய்வை சரிப்படுத்து பல இடங்களில் தனியார் நிறுவனங்களை உள்ளே அனுமதித்தும், பாதுகாப்புகளை பலப்படுத்தியும் சுற்றுலாவை வளர்க்க அந்நாடு பெருமுயற்சி எடுத்து அதில் ஒரளவு வெற்றியும் அடைந்து வருகிறார்கள்.

உகாண்டாவில் வாகனங்கள் அனைத்தும் நம் நாட்டை போலவே இடது பக்கத்தில் தான் செல்கின்றது.

உகாண்டாவில் 1000 வகைகளுக்கும் மேலான பறவை வகைகள் உள்ளன, அது மட்டும் இல்லாமல் 1000 வகைகளுக்கு மேற்ப்பட்ட வண்ணத்துப்பூச்சிகளுக்கு இந்த நாடு தான் தாய்நாடு. மலை வாழ் கொரில்லாக்கள், அரிய வகை குரங்குகள் எல்லாம் மிக அதிகமாக காணப்படும் நாடுகளில் இதுவும் ஒன்று. இது போக கூட்ட கூட்டமாக சிங்கம், சிறுத்தை, யானை, ஒட்டகசிவிங்கி இன்னும் பல பல விலங்குகள் உள்ள நாடு. ஆப்பிரிக்க நாடுகளில் வேறு எங்கும் காண முடியாத பல உயிரனங்கள் காண கிடைக்கும் அற்புத நாடு இது.

ஆப்பரிக்க நாடுகளிலே மிக பெரிதான நல்ல நீர் ஏரியான விக்டோரியா ஏரி(Fresh Water Lake) இங்கு உள்ளது. மேலும் இது சரியாக இக்குவேட்ர்(Equator) மேல் அமைந்து உள்ளது. சில படகோட்டிகள் உங்களுக்கும் மிக சரியான இடத்தை காட்டுவார்கள். ஜி.பி.எஸ்.(GPS) இருந்தால் சரி பார்த்து கொள்ளலாம்.

விக்டோரியா ஏரியின் சில பகுதிகளில் நீர் யானைகளை காண முடியும். ஒரே நேரத்தில் 60 கிலோ புல்லை உட்கொள்ளும் திறமை வாய்ந்தது நீர் யானை என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான்.

"சர்ச்சில்" அவர்களால் ஆப்பிரிக்காவின் முத்து(Pearl of Africa) என்ற அடைமொழியால் அழைக்க பெற்ற நாடு உகாண்டா.

இங்கு வாழும் மக்களில் மூன்றில் இரண்டு சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் கிறிஸ்துவ மதத்தை சார்ந்தவர்கள். ரோ.க - 33 %, போரோ - 33 %, 16 % மூஸ்லிம் மீதம் உள்ள 18 % பிற மதத்தவர்கள் அல்லது சொந்த நம்பிக்கை உடையவர்கள்(Indigenous Beliefs).(புள்ளி விபரங்கள் சிறிது முன் பின் இருக்கலாம்). உலகில் ஏழே இடங்களில் இருக்கும் பஹாய் சமய வழிப்பாடு தளங்களில் ஒன்று உகாண்டாவின் தலைநகரம் கம்பாலாவில் அமைந்து உள்ளது.

உகாண்டாவின் முக்கிய உணவு என்று பார்த்தால் மெதுவான ஸ்கரட்ச்யில் பீன்ஸ் மற்றும் மாமிசம் வைத்து தருவார்கள். பெரும்பாலும் மாட்டு கறி, ஆட்டுக்கறி(Goat) மற்றும் மட்டன்(Sheep). பல வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளும் இங்கு கிடைக்கும். எல்லா இடத்திலும் பியர் கிடைக்கும். அனைவரும் விரும்பி குடிப்பது பியர் தான். POMBE என்று வாழைக்காயை வைத்து செய்யப்படும் பியரும், WARAGI என்று மில்லட்(Millet) கொண்டு செய்யப்படும் சாராயமும் இந்த நாட்டின் பாரம்பரிய பானம் ஆகும்.இது போக அனைத்து வகையான வெளிநாட்டு பானங்களும் கிடைக்கும்.

உகாண்டாவின் கரண்ஸி உகாண்டா ஸெலிங் ஆகும் (Uganda Shilling - USH). அமெரிக்க டாலர்கள் எல்லா இடத்திலும் ஏற்றுக் கொள்ளப்படும், பல இடங்களில் யூரோ மற்றும் பவுண்டும் வாங்கப்படும். ஆனால் அந்நாட்டு பணமாக மாற்றி வைத்துக் கொள்வது நல்லது. நான் போய் இருந்த போது ஒரு டாலருக்கு 1650 உ.ஸெலிங் தந்தார்கள். விமான நிலையத்திலே மாற்றிக் கொளவது நல்லது. மற்ற இடங்களில் குறைந்த அளவே தருகின்றார்கள். 2000 ஆண்டிற்கு முன் உள்ள டாலர்களுக்கு 1400 ஸெலிங் தான் தருகின்றார்கள். அதனால் சற்று கவனமாக இருப்பது நலம்.