Wednesday, June 09, 2010

பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்

கிரிக்கெட் உலகின் தன்நிகர் இல்லா தாதாவாக நினைத்துக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தன்னுடைய திமிர் தனத்தை இந்த வருடம் முதல் ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் மூலம் காட்டி உள்ளது. அதற்கு காரணமாக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நியுசிலாந்து அணியுடனான தொடரை காரணம் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கலந்துக் கொள்ளாது. 

நிரம்பிய கிரிக்கெட் ரசிகர்களும், நிரம்பிய விளம்பரங்களும், கொட்டும் பணமும் பி.சி.சி.ஐ. யை ஒரு தனி அதிகார மையமாக மாற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அரசுக்கே சில காலங்களுக்கு முன்பு இருந்து போக்கு காட்ட வைக்கும் அளவுக்கு வளர்ந்தது தான் ஆச்சரியம். ஐ.பி.எல் - 2 தொடரின் போது இந்திய அரசை பகைத்துக் கொண்டு தென் ஆப்பரிக்காவில் போட்டியை நடத்திக் காட்டியது. வருமானம் குறைவு தான் என்றாலும் நீ சொல்வதற்கு எல்லாம் ஒத்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை என்பதை காட்டவே இப்போட்டி இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்பட்டது. உலக அரங்கில் நமது விளையாட்டு துறைக்கு இது ஒரு அசிங்கமே. ( தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தவிர்க்க சொன்ன அரசின் நடவடிக்கையும் சரி அல்ல என்பது வேறு விசயம். )

அதே போல் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் க்கு அடுத்து மிக பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஆசிய போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது. ஆசிய கோப்பை என்ற பெயரில் ஒரு தொடரில் விளையாட முடியுமாம் ஆனால் இந்தியாவின் சார்பாக ஆசிய போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாதாம். இதில் எந்த லட்சணத்தில் தேசத்திற்காக ஆடுகிறோம் என்று நம் கிரிக்கெட் வீரர்களால் மார்தட்ட முடிகின்றது என்று தெரியவில்லை.

இந்திய ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் கல்மாடி கூறியதை போல் இது போன்ற போட்டிகளில் விளையாடினால் பணம் கிடைக்காது பதக்கம் மட்டும் தான் கிடைக்கும். பணமே பிரதானமாக கருதப்படும் கிரிக்கெட் அணிகளால் இதில் கலந்துக் கொள்வது சந்தேகமே என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்காக விளையாடி என் நாட்டிற்கு சில பதக்கங்களை வென்றுக் கொடுத்தேன் என்பதை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்காக விளையாடி சில கோடிகளை சம்பாதித்து கொண்டேன் என்பது தான் வீரர்களின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டங்களை சேர்க்க வேண்டி கேட்ட போது 20/20 போட்டிகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று பி.சி.சி.ஐ. மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஐ.பி.எல். ஆட்டங்களை எதில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. 1998 ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே கனடாவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர் ஆட முதல் தர வீரர்களை அனுப்பியது.

இந்திய அணி புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளார் நமது மத்திய அமைச்சர் சரத் பவார். விவசாயத் துறையை இந்தியாவில் சீர்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சக வேலைக்கான நேரத்தை விட கிரிக்கெட் பார்க்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக தான் பவார் அதிக நேரம் செலவழிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால் தனக்கு கை வந்த கலையான சப்பை கட்டு கட்டுவதை மிக சரியாக செய்கிறார் பவார். இது போன்ற அமைச்சர்களை கூட்டணிக்காக வைத்துக் கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். 

இதே போல் NADA அமைப்புக்கும் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அந்த அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. 

இதற்கு எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு துறை என்று ஒன்று இருக்குமே அது தான் எதாச்சும் செய்ய வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் யாரும் எந்த ஒரு விளையாட்டு கழகத்திற்கும் / வாரியத்திற்கும் / சங்கத்திற்கும் பொறுப்பு வகிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். விளையாட்டும் அரசியல் ஆனதினால் வந்த விளைவு இது. 

8 comments:

ILA(@)இளா said...

விளம்பரத்தாலதான் கிரிக்கெட் ஆளப்படுகிறதுங்கிறது இப்போவாவது மக்கள் புரிஞ்சிகிட்டும்

வித்யா said...

நேற்றோ அதற்கு முந்தின நாளோதான் யுவராஜ் சிங்கை ஏதோ ஒரு வட இந்திய சேனல் கிழித்துக்கொண்டிருந்தது. ஆடினால் இவர்கள் ஓவராய் ஆடுவது, ஆடவில்லையென்றால் அதைவிட மோசமாய் ஆடுவது. மீடியாக்கும் இந்த ஆட்டத்தில் பெரும் பங்கு இருக்கிறது:(

Azhagan said...

Think about another point too--- BCCI has been avoiding the ANTI DOPING policy(saying they cannot reveal the players location for security reasons!!, as if only Indian cricketers are terror targets!!). Without accepting that(WADA requirement), they cannot play in Asian games.

Anonymous said...

வலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்

எட்வின் said...

ஒரு பார்வையில் அயோக்கியத்தனம் தான்... மறுபார்வையில் அப்படியில்லை என கருதுகிறேன். இது தொடர்பாக நான் எழுதியதையும் படியுங்கள் http://thamizhanedwin.blogspot.com/2010/06/blog-post_07.html

நாகை சிவா said...

@ இளா & வித்யா!

மிக்க சரி!

நாகை சிவா said...

@ அழகன்

நீங்கள் கூறுவதை முற்றிலும் மறுப்பதற்கு இல்லை. !

நாகை சிவா said...

//2007 ஆம் வருடத்திலேயே ஆசிய விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் இடம்பெறும் என ஆசிய ஒலிம்பிக் சங்கம் முடிவு செய்திருக்கிறது. அப்போதே மறுத்திருக்கலாம். ஆனால் போட்டிகள் துவங்க சில மாதங்கள் இருக்கின்ற நிலையில் இப்போது மறுத்திருப்பது அழகல்லவே.//

எட்வின், நீங்களே பதிலை சொல்லி வீட்டீர்கள். ஆசிய போட்டிகளில் கிரிக்கெட் இடம் பெறும் வேண்டும் என முயற்சி எடுத்ததே ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தானே. அதில் பெரியண்ணன் இந்தியா தானே. உலக கோப்பை வெல்வது தான் கனவு, லட்சியம் என்றால் எதற்கு இந்த முயற்சி. முயற்சி வெற்றி அடைந்த பிறகு எதற்கு இந்த பின் வாங்கல். என் இஷ்டப்படி தான் நடப்பேன் என்பதற்காகவா?

அதும் இல்லாமல் நீங்கள் கூறுவதை போல கிரிக்கெட் டை கால்பந்துடன் எல்லாம் ஒப்பிட முடியாது, மொத்தமே உலகில் உள்ள அதிகபட்சமாக 20 நாடுகள் தான் கிரிக்கெட் அணி என்பதை வைத்து இருக்கும். ஒரு விளையாட்டு அனைவரையும் சென்று அடைய வேண்டும் என விரும்பினால் இது போன்ற ஆசிய போட்டிகள், காமன்வெல்த் போட்டிகளில் நடத்தப்பட்டால் தான் அதில் பங்கேற்கும் நாடுகளும் தங்களுக்கு ஒரு அணி வேண்டும் என்று சிந்திக்க தொடங்குவார்கள். இந்த முயற்சி வெற்றி பெற்றால் மட்டுமே ஒலிம்பக்ஸ் சில் கிரிக்கெட் இடம் பெறுவதை பற்றி யோசிக்க முடியும்.

10 அணிகளே போதும் இதற்கு மேல் வேறு யாரும் வளர்ந்து வந்தால் நாட்டாமை பண்ண முடியாது என நினைக்கிறதோ பி.சி.சி.ஐ.

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி!