குறுகிய நாட்களில் மிக அதிகம் மக்களை இனப்படுகொலைக்கு உள்ளாக்கிய நாடு ருவண்டா. 100 நாட்களில் 1 மில்லியன் மக்களை கொன்று குவித்தார்கள். இந்த படுகொலை தொடங்கிய நாள் ஏப்ரல் 7 1994. டூசி யினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட அந்த இனப்படுகொலையின் 15 வது ஆண்டு நினைவு கூறும் நாள் இன்று. அதை நினைவு கூறும் வகையில் ருவண்டாவின் இனப்படுகொலை பற்றி எனக்கு தெரிந்த, பார்த்த, கேள்விப்பட்ட விசயங்களை வைத்து இந்த பதிவு. மேலும் விபரங்களுக்கு இங்கே காணவும்.

ருவண்டா மத்திய ஆப்பிரிக்காவில் இருக்கும் ஒரு சிறிய நாடு. ருவண்டா வின் தலைநகரம் கிகாலி (Kigali). ருவண்டா, ஆயிரம் மலைகளின் ராஜ்ஜியம் என்றும் அழைக்கப்படும் (Land of 1000 Hills). அதன் அண்டை நாடுகள் காங்கோ, உகாண்டா, புருண்டி, தன்சானியா. நான்கு நாடுகளுக்கு நடுவில் அமைந்த நாடு. அதனால் இது வியாபாரத்திற்க்கு மைய சந்தையாக விளங்குகிறது. ருவாண்டாவின் மக்கள் தொகை 9 மில்லியன். ஆப்பிரிக்காவிலே மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள நாடு ருவாண்டா.
கிறிஸ்த்துவர்கள் பெரும்பான்மையாக உள்ளன். அதில் கத்தாலிக்க மக்கள் 55% ஆவர். ருவாண்டாவில் கின்யருவாண்டா (Kinyarwanda), ஆங்கிலம், பிரெஞ்ச் என மூன்று ஆட்சி மொழிகள் உள்ளன. 99% மேல் கின்யருவாண்டா பேசுவார்கள். பெரும்பாலும் ருவண்டா மக்கள் பல மொழிகள் பேசும் வல்லமை பெற்றவர்கள்.
காலணி ஆதிக்கத்திற்க்கு முன்பு ருவாண்டாவில் மன்னராட்சி நடந்து வந்தது. ஆங்காங்கே அமைச்சர்கள் மூலம் கவுன்சில் அமைத்து மன்னர் ஆட்சி புரிந்து வந்தார். ஆரம்ப காலங்களில் ருவண்டாவில் மூன்று விதமாக மக்கள் வகைப்படுத்தப்பட்டனர், அவர்களின் சமூக - பொருளாதார நிலையை வைத்து வகைப்படுத்தப்பட்டனர், இது அவர்கள் இனத்தை குறிக்காது. ஹுடூ (Hutu), டூ்சி (Tutsi), டுவா (Twa).
கால்நடைகளை வைத்து பராமரித்து வந்தவர்கள் டூசி என்ற வகையிலும், விவசாயிகள் ஹுடூ வகையாகவும், வேட்டை மற்றும் மண்பாண்டங்கள் செய்பவர்கள் டுவா வகையாகவும் வாழ்ந்து வந்தார்கள்.
பொருளாதார நிலையை வைத்தே வகைப்படுத்த பட்டதால் அவர்களிடம் இருக்கும் கால்நடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, குறைவை வைத்து அவர்கள் வகையும் மாறுப்படும். Its based on the dynamics of the "Haves and the Have not". அந்த காலக்கட்டத்தில் அவர்கள் இடையே மாற்று திருமணங்கள், ஒரே கலாச்சாரம் என அமைதியாகயும் ஒற்றுமையாகவுமே வாழ்ந்து வந்தார்கள். ஹுடூ ஸ் பெரும்பான்மையாக இருந்தனர்.
1894 ஆண்டு ருவண்டா ஜெர்மன் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. அந்த காலக்கட்டத்தில் பெரிதாக எந்த ஒரு மாற்றமும் இல்லை. உள்நாட்டில் நடக்கும் கலவரங்களை அடக்கவே ஜெர்மனியர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. முதலாம் உலக போரில் ஏற்பட்ட தோல்வியை தொடர்ந்து உலக நாடுகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டின் படி ருவண்டா பெல்ஜியத்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது. இதன் நடுவே ஒரே கடவுள் என்று இருந்த ருவாண்டாவில் காலணி ஆதிக்கத்தை தொடர்ந்து கிறிஸ்துவம், இஸ்லாம் போன்ற மதங்கள் ஐரோப்பின் வழியாக உள்ளே நுழைந்தது. பெல்ஜியத்தின் ஆதிக்கத்திற்க்கு முன்பு வரை மன்னருக்கு போதிய அதிகாரம் இல்லாத போதிலும் மரியாதை இருந்தது. பெல்ஜியர்கள் வந்த பிறகு அதுவும் இல்லாமல் போயிற்று.
அதிகாரத்தை கையில் எடுத்த பெல்ஜியர்கள் பிரித்து ஆளும் சூழ்ச்சியை கையாண்டார்கள். பொருளாதார வசதி படைத்த டூசி னரை உயர்ந்தவர்களாகவும், ஹுடூஸ், நடுநிலை டூசி னரை மற்றும் பிற மக்களையும் தாழ்ந்தவர்களாக வகைப்படுத்தினார்கள். எவ்வாறு பிரித்தார்கள் என்றால் 10 கால்நடைகளுக்கு மேல் வைத்தது இருந்தவர்கள் உயர்ந்த டூசினர், மற்றவர்கள் எல்லாம் தாழ்ந்தவர்கள் என்ற வகையில். கூடவே அதிகாரத்தில் இருந்த ஹுடூஸ் மக்களை அதிகாரத்தை விட்டு அகற்றினார்கள். இதன் மூலம் ஹுடூஸ் மக்கள் பெரும் கோபம் அடைந்தனர். ஆயுதம் ஏந்தி போராடவும் பார்த்தார்கள். ஆனால் பெல்ஜியர்கள் மேல் இருந்த பயத்தால் அதை பெரும் அளவு போராட்டமாக மாறவில்லை.
உயர் டூசினரை கொண்டு வரிகள் வசூலிப்பதையும், தங்களின் கொள்கைகளை பரப்பவும் செய்தார்கள். 1935 ஆம் ஆண்டு முதல் தேசிய அடையாள அட்டையில் அவர்கள் எந்த வகையை சார்ந்தவர்கள் என்பது அச்சிடப்பட்டது. இது தான் 1994 ல் நடந்த மிக பெரிய இனப் படுகொலைக்கு ஆரம்ப வேராக அமைந்தது.
இதை தொடர்ந்து கத்தோலிக்க ஆலயங்களிலும், பள்ளிகளிலும் டூசி யினருக்கும் ஹூடு வினருக்கும் இடையான வேற்றுமைகளை விதைக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் தனி தனியாக பள்ளிகள் தொடங்கப்பட்டன. 1940 களில் ஆரம்பித்த இதற்கு நல்ல அறுவடை கிடைக்க தொடங்கியது. 40களின் மத்தியில் பலர் கத்தோலிக்காக மாற தொடங்கினார்கள். 1950 களில் அதிகாரத்தில் டூசி யினருக்கு காட்டப்படும் சலுகையும், ஹுடூஸ் மறுக்கப்படும் உரிமையையும் ஐ.நா கண்டிக்க தொடங்கியது. அதே நேரத்தில் 1954ல் டூசி யினர் தங்களுக்கு சுகந்திரம் வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்ப தொடங்கினார்கள். இதை தொடர்ந்து மறைமுகமாக பெல்ஜியர்களும், மத தலைவர்களும் ஹுடூ யினரை டூசி யினருக்கு ஏதிராக துவேஷத்தை உண்டாக்கினார்கள். அதை தொடந்து 1957ல் ஹுடூ வினர் ஒரு அமைப்பினை(PARMEHUTU) தோற்றுவித்து பின்பு அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். அதே போல் 1959ல் டூசி யினர் ஒரு அமைப்பினை(UNAR) தோற்றுவித்து அவர்களும் அதை ஆயுதம் தாங்கிய படையாக மாற்றினர். இரு தரப்பினருக்கும் மோதல்கள் வலுக்க தொடங்கின.
1959 ல் டூசி படையினர் ஹுடூஸ் அரசியல் தலைவர் ஒருவரை அடித்து விட, அவர் இறந்து விட்டார் என்ற எழுந்த வதந்தியால் பல்லாயிரகணக்கான டூசி யினர் கொல்லப்பட்டனர். ருவண்டாவில் நடந்த முதல் பெரிய படுகொலை இது தான். இது பெல்ஜியர்களின் தூண்டுதலினால் தான் நடந்தது என்று டூசியினர் குற்றம் சாட்டினர். பல்லாயிரகணக்கான டூசியினர் பக்கத்து நாடுகளில் தஞ்சம் புகுந்தனர்.
1960 ல் பெல்ஜினர்கள் உள்ளாட்சி தேர்தல் நடத்த சம்மதித்து தேர்தல் நடத்தினார்கள். பெரும்பான்யான மக்களாக ஹூடூ ஸ் இருந்ததால் அனைத்திலுமே ஹூடூ யினரே வெற்றி பெற்றனர். இது வரை அதிகாரத்தில் இருந்த டூசி யினர் வெளியற நேர்ந்தது. அதிகாரத்தை பகிர்ந்து அளிக்கும் திட்டமும் தோல்வி அடைந்தது. அதை தொடர்ந்து வன்முறைகள் வெடிக்க ஆரம்பித்தது. ஐ.நா.வின் வலியுறுத்தலை தொடர்ந்து நாடுகளை பிரித்து சுகந்திரம் அளிப்பது என்று முடிவு எடுத்து 1961ல் அதற்கான ஆயுத்தங்கள் செய்யப்பட்டன.
1961 ல் தேர்தல் நடத்தப்பட்டு பெல்ஜியர்கள் ஆதரவுடன் ஹுடூஸ் குடியரசு ஆட்சியை அமைத்தது. பெல்ஜியர்கள் டூசி யினரின் அதிகாரத்தில் இருந்து விலக்க வேண்டும் என்பதுக்காக ஹுடூஸ் க்கு உதவி செய்தது. 1959 ல் டூசி யினரால் தாக்கப்பட்ட அரசியல் தலைவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்றார். அதுவே சோதனையாக வந்து அமைந்தது டூசி யினருக்கு. பதவியேற்றவுடன் அந்த தாக்குதலை நினைவு கூர்ந்து டூசியினர் என்றுமே ஆபத்தானவர்கள் மற்றும் கொல்லப்பட வேண்டியவர்கள் என சூளுரைத்தார். அதை தொடர்ந்து 1961, 1962ல் டூசி கொரில்லா படையினர் பக்கத்து நாடுகளில் இருந்து போர் புரிந்தனர். ஹுடூ ஸ்ம் பதில் தாக்குதலில் இறங்க அதிலும் பல்லாயிரகணக்கானோர் பலியாகினர்.
1962 ஜூலை 1 ஆம் தேதி ருவண்டா மற்றும் புருண்டி நாடுகளுக்கு சுகந்திரம் கிடைத்தது. ருவண்டாவில் ஹுடூ ஸ் நாட்டின் முழு அதிகாரத்தையும் கைப்பற்றியதோடு ஒரே கட்சி நாடாக மாறியது. ஹூடூ யினருக்காக PARMEHUTU வை தோற்றுவித்த Gregoire Kayibanda சுகந்திர நாட்டின் முதல் ஜனாதிபதியாக பதவியேற்றார்.
- தொடரும்