இரு நாட்கள் முன்பு தோழி ஒருவரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலின் சாரம்சம் : ஐ.நா.வின் ஆட்சி மொழியில் இந்தி மொழியை இந்தியாவின் சார்பாக தேர்ந்து எடுக்க கூடாது என்பது தான். அதற்காக ஒரு மனுவை தயாரித்து ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீன் மூன் மற்றும் நம் பிரதமர், ஜனாதிபதி அனுப்பவதாக உள்ளது. அதில் கூறி இருக்கும் விசயம் :
"A language is not just a medium for communication but represents the tradition, culture and history of that linguistic group. With this in mind, we have created this petition opposing the Indian Government’s policy to promote Hindi as another UN language."
இந்தியாவில் 23 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் போதும், இந்தியை விட பெங்காலி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி போன்ற பழமை வாய்ந்த மொழிகள் இருக்கும் போது, எப்படி இந்தியை மட்டும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது. இந்தியாவில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் இந்தி ஆட்சி மொழியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1965 இந்தியை பிற மாநிலங்களில் திணிக்க முயன்ற அந்த நிலைமை இன்று உள்ளது என சாடிகிறது.
இந்தியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று உலகில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அது நம் இந்திய அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறுகிறது. ஐ.நா பொது செயலாளரை இந்தியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்குக் கொண்டு இச்செயல் இந்தி பேசும் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கி அரசியல் என்று முடிகிறது. முழுவதும் படிக்க, மனுவில் கையொப்பமிட - இங்கு செல்லவும்.எனக்கு தெரிந்த சில விசயத்தை கூற விரும்புகிறேன்: மொத்தம் 192 நாடுகளை உறுப்பினராக கொண்ட
ஐ.நாவின் ஆட்சி மொழிகள் ஆறு. அவை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், சைனிஸ், ரஷ்யன் மற்றும் அரபி. கடைசியாக சேர்க்கப்பட்ட மொழி அரபி. இந்தி மொழியை ஆட்சி மொழியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாகவே உள்ளது. ஆறு மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தாலும், நடைமுறையில் (working Languages) உள்ளவை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகள் தான். இந்த இரண்டு மொழிகளில் பிரஞ்சு மொழியை செயல்பாட்டு மொழியில் இருந்து தூக்க வேண்டும் என்று ஒரு வாதம் மிக தீவிரமாக உள்ளது. ஸ்பானிஷ் மொழிக்கு ஐ.நா.வில் சரியான இடம் இல்லை என்ற வருத்தமும் அந்த மொழி பேசும் மக்களிடம் உண்டு. அவர்களும் பிரஞ்சு மொழிக்கு எதிராக தான் உள்ளார்கள்.
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்வது ஒரு புறம் இருந்தாலும் கண்டிப்பாக Working Language ஆக வராது என் எண்ணம். அது போக மேலே குறிபிட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டு வாதங்கள் எல்லாம் உண்மை மற்றும் ஏற்றுக் கொள்ளகூடியதும் கூட. அதே சமயத்தில், இன்று இந்தி மொழி பேசாதவர்கள் இந்தி மொழியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்க கூடாது என்று எதிர்கின்றோம், நாளை பல நாடுகளில் பேசப்படும் தமிழை அவ்வாறு ஏற்க கூடாது என்று அவர்களும் எதிர்ப்பார்கள். ஆக இந்தியாவில் இருந்து எந்த மொழியும் ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆகாமல் இருக்கும். ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.
மக்களே! உங்கள் கருத்து என்ன?
பின்குறிப்பு : இந்த Petition Online யில் மனு பதிவு செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பது என் கருத்து. இது போல பல மனுகளில் கையொப்பம் இட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். நேரடியாக ஐ.நா.விற்கே இதை அனுப்பலாம்.