Friday, June 11, 2010

என்னமோ போ !

நீ எப்பொழுதுமே
கொஞ்சி கொஞ்சி
தான் பேசுவாய்யோ?
அல்லது நீ
பேசுவதே எனக்கு
கொஞ்சவது போல்
இருக்கிறதா?

*******

இன்செண்ட் காபியை போல்
இன்செண்ட் சிரிப்பும்
இன்செண்ட் அழுகையையும்
காதலியிடமும் / மனைவியிடமும்
மட்டுமே சாத்தியம்.

*******

உன்னுடன் கதைக்க போகும்
சில நிமிடங்களுக்காக
மொழியின் உட்கூறு வரை
சென்று வார்த்தைகளை
யோசித்து சேமித்து
வைக்கின்றேன் - ஆனால்
உன்னுடன் கதைக்க தொடங்கிய
சில நொடித் துளிகளிலே
மொழிகள் மறந்து - மெளனமே
மொழியாக மாறும்
மர்மம் என்னவோ?

*******

Thursday, June 10, 2010

வாழ்க சனநாயகம் - 9

35 ஆயிரம் பேர் உயிர் இழக்கவும், 5 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பல விதமான பாதிப்புகளுக்கு ஆள்படவும் காரணமாக இருந்த போபால் விஷ வாயு சம்பவத்தின் நீதிமன்ற தீர்ப்பு வெளியாகி உள்ளது.

"எட்டு குற்றவாளிகள் மீதான குற்றங்கள் ஐ.பி.சி. 304(2), 336, 337 மற்றும் 338 பிரிவுகளின் கீழ் உறுதி செய்யப்பட்டு, அனைவருக்கும் இரண்டு வருடம் சிறை தண்டனையும் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு ஐந்து லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த சில நிமிடங்களில் பெயில் மனுவை அளித்த குற்றவாளிகளுக்கு ஜம்மென்று ஜாமீனும் கிடைத்தது. 'பெரும் சேதம் விளைவிக்கக்கூடிய வகையில் கவனக் குறைவாக செயல்பட்டது' என்பதுதான் குற்றவாளிகள் மீதான தண்டனைக்கான சாராம்சம்!

இந்திய உயிர்களின் பாதுகாப்பை துச்சமாக மதித்து, அமெரிக்காவில் இதே போன்ற தங்களின் தொழிற்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், இத்தனை ஆயிரம் குடும்பங்களின் எதிர்காலத்தில் விஷத்தைப் பாய்ச்சிய வாரன் ஆண்டர்சன் பற்றி தீர்ப்பில் எதுவுமே இல்லை!" - ஜு.வி

இங்கு நீதி, மலிவு விலையில் கிடைக்கும் என போர்ட் வைக்காத குறை தான் ! - வாழ்க சனநாயகம்!


Wednesday, June 09, 2010

பி.சி.சி.ஐ. யின் அயோக்கித்தனம்

கிரிக்கெட் உலகின் தன்நிகர் இல்லா தாதாவாக நினைத்துக் கொண்டு இருக்கும் இந்திய கிரிக்கெட் வாரியம் மீண்டும் தன்னுடைய திமிர் தனத்தை இந்த வருடம் முதல் ஆசிய போட்டிகளில் அறிமுகப்படுத்தப்படும் கிரிக்கெட் போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாது என்பதன் மூலம் காட்டி உள்ளது. அதற்கு காரணமாக ஏற்கனவே ஒப்புக் கொண்ட நியுசிலாந்து அணியுடனான தொடரை காரணம் காட்டுகிறது. பெண்கள் கிரிக்கெட் அணியும் கலந்துக் கொள்ளாது. 

நிரம்பிய கிரிக்கெட் ரசிகர்களும், நிரம்பிய விளம்பரங்களும், கொட்டும் பணமும் பி.சி.சி.ஐ. யை ஒரு தனி அதிகார மையமாக மாற்றியதில் எந்த ஆச்சரியமும் இல்லை. ஆனால் இந்திய அரசுக்கே சில காலங்களுக்கு முன்பு இருந்து போக்கு காட்ட வைக்கும் அளவுக்கு வளர்ந்தது தான் ஆச்சரியம். ஐ.பி.எல் - 2 தொடரின் போது இந்திய அரசை பகைத்துக் கொண்டு தென் ஆப்பரிக்காவில் போட்டியை நடத்திக் காட்டியது. வருமானம் குறைவு தான் என்றாலும் நீ சொல்வதற்கு எல்லாம் ஒத்து போகும் ஆட்கள் நாங்கள் இல்லை என்பதை காட்டவே இப்போட்டி இந்தியாவிற்கு வெளியில் நடத்தப்பட்டது. உலக அரங்கில் நமது விளையாட்டு துறைக்கு இது ஒரு அசிங்கமே. ( தேர்தலை முன்னிட்டு கிரிக்கெட் போட்டியை தவிர்க்க சொன்ன அரசின் நடவடிக்கையும் சரி அல்ல என்பது வேறு விசயம். )

அதே போல் உலக அளவில் இந்தியாவிற்கு ஒலிம்பிக்ஸ், காமன்வெல்த் கேம்ஸ் க்கு அடுத்து மிக பெரிய விளையாட்டு போட்டியாக கருதப்படும் ஆசிய போட்டியில் கலந்துக் கொள்ள முடியாது என தெரிவித்து உள்ளது. ஆசிய கோப்பை என்ற பெயரில் ஒரு தொடரில் விளையாட முடியுமாம் ஆனால் இந்தியாவின் சார்பாக ஆசிய போட்டிகளில் கலந்துக் கொள்ள முடியாதாம். இதில் எந்த லட்சணத்தில் தேசத்திற்காக ஆடுகிறோம் என்று நம் கிரிக்கெட் வீரர்களால் மார்தட்ட முடிகின்றது என்று தெரியவில்லை.

இந்திய ஒலிம்பிக்ஸ் சங்க தலைவர் கல்மாடி கூறியதை போல் இது போன்ற போட்டிகளில் விளையாடினால் பணம் கிடைக்காது பதக்கம் மட்டும் தான் கிடைக்கும். பணமே பிரதானமாக கருதப்படும் கிரிக்கெட் அணிகளால் இதில் கலந்துக் கொள்வது சந்தேகமே என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவிற்காக விளையாடி என் நாட்டிற்கு சில பதக்கங்களை வென்றுக் கொடுத்தேன் என்பதை விட இந்திய கிரிக்கெட் வாரியத்திற்காக விளையாடி சில கோடிகளை சம்பாதித்து கொண்டேன் என்பது தான் வீரர்களின் நிலைப்பாடு.

டில்லியில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிகளில் கிரிக்கெட் ஆட்டங்களை சேர்க்க வேண்டி கேட்ட போது 20/20 போட்டிகளை ஊக்குவிப்பதாக இல்லை என்று பி.சி.சி.ஐ. மறுத்ததும் குறிப்பிடத்தக்கது. அப்படியானால் ஐ.பி.எல். ஆட்டங்களை எதில் சேர்த்துக் கொள்வது என்று தெரியவில்லை. 1998 ம் ஆண்டு மலேசியாவில் நடந்த காமன்வெல்த் போட்டிக்கு இரண்டாம் தர அணியை அனுப்பியதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அதே கனடாவில் கிரிக்கெட்டை பிரபலபடுத்த பாகிஸ்தானுடன் ஒரு நாள் தொடர் ஆட முதல் தர வீரர்களை அனுப்பியது.

இந்திய அணி புறக்கணிப்பை நியாயப்படுத்தி உள்ளார் நமது மத்திய அமைச்சர் சரத் பவார். விவசாயத் துறையை இந்தியாவில் சீர்படுத்த முடியவில்லை. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியவில்லை. அமைச்சக வேலைக்கான நேரத்தை விட கிரிக்கெட் பார்க்கவும், அதன் மூலம் கிடைக்கும் வருவாய்க்காக தான் பவார் அதிக நேரம் செலவழிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. அதனால் தனக்கு கை வந்த கலையான சப்பை கட்டு கட்டுவதை மிக சரியாக செய்கிறார் பவார். இது போன்ற அமைச்சர்களை கூட்டணிக்காக வைத்துக் கொண்டு இருக்கும் மன்மோகன் சிங் அரசை தான் குற்றம் சாட்ட வேண்டும். 

இதே போல் NADA அமைப்புக்கும் ஒத்துழைப்பு அளிப்பது இல்லை என்று அந்த அமைப்பும் குற்றம் சாட்டி உள்ளது. 

இதற்கு எல்லாம் மத்திய அரசின் விளையாட்டு துறை என்று ஒன்று இருக்குமே அது தான் எதாச்சும் செய்ய வேண்டும். முதலில் அரசியல்வாதிகள் யாரும் எந்த ஒரு விளையாட்டு கழகத்திற்கும் / வாரியத்திற்கும் / சங்கத்திற்கும் பொறுப்பு வகிக்க கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும். விளையாட்டும் அரசியல் ஆனதினால் வந்த விளைவு இது. 

Thursday, June 03, 2010

ஆட்டம் தொடங்கியாச்சு - The Game is ON !

"கடுமையான" வேலைகளுக்கு நடுவில் பதிவுகள் படிக்கலாம் என்றால் பதிவரசியல், அரசவை கோமாளி என இம்சைகள் படுத்த, சினிமாவுக்கு போகலாம் என்றால் சுறா, சிங்கம், பெண் சிங்கம் என சுனாமியாய் சுழட்டி அடிக்க, கழுதை கிரிக்கெட்டாவது பாக்கலாம் என்றால் இந்திய கிரிக்கெட் அணியின் தொடர் சொதப்பல் ஆட்டத்தால் நொந்து நொடுல்ஸ் ஆகி, அந்து அவல் ஆகி இருக்கும் எனதருமை பதிவலக பெருமக்களே! அதை எல்லாம் சிறிது விட்டு தள்ளிட்டு மற்ற விளையாட்டுகளில் உங்கள் கவனத்தை திருப்புங்கள். பரபரப்பு, விறுவிறுப்பு, உற்சாகம், மகிழ்ச்சி, ஆரவாரம், உணர்ச்சி பிழம்பு, அழுகை என எதற்கும் பஞ்சம் இல்லாத சூட்டை கிளம்பும் ஆட்டங்களை ரசித்து மகிழுங்கள். இந்த மாதத்தில் (ஜுன்) பிரெஞ்ச் ஒபன் மற்றும் NBA போட்டிகள் தற்பொழுது நடைப்பெற்றுக் கொண்டு உள்ளது. விரைவில் கால்பந்து உலக கோப்பையும் தொடங்க உள்ளது.

NBA - The Finals (கூடைப்பந்து)

அமெரிக்காவில் மிக பிரலமான கூடைப்பந்து அணிகளுக்கு இடையே வருடத்துக்கு ஒரு முறை (கிட்டதட்ட வருடம் முழுவதுமே) நடைபெறும் NBA போட்டிகளின் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது. (இன்னும் சில மணித்துளிகளில்) 30 அணிகளில், 1000 த்துக்கும் அதிகமான ஆட்டங்களில் பல சுற்றுகளில் விளையாடி இன்று கூடைப்பந்தில் முடிச்சூடா சக்கரவத்திகளாக திகழும் பாஸ்டன் செல்டீக்ஸ் (Boston Celtics) அணியும் லாஸ் ஏஞ்சல்ஸ் லேக்கர்ஸ் (Los Angeles Lakers)இறுதி போட்டியில் மோத தயாராக உள்ளார்கள்.


இது வரை நடைபெற்ற 64 இறுதி ஆட்டங்களில் பாஸ்டன் 20 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 30 முறையும் தகுதி பெற்று உள்ளனர். இதில் பாஸ்டன் 17 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 15 முறை சாம்பியன் பட்டங்களை வென்று உள்ளனர். இவ்விரு அணிகளும் இது வரை 11 முறை இறுதி ஆட்டங்களில் மோதி உள்ளனர். அதில் பாஸ்டன் 9 முறையும் லாஸ் ஏஞ்சல்ஸ் 2 முறையும் வென்று உள்ளனர். கடைசியாக 2008 ம் ஆண்டு நடந்த இறுதி போட்டியில் பாஸ்டன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அதே சமயம் கடந்த வருட சாம்பியன்ஸ் (நடப்பு) லாஸ் ஏஞ்சல்ஸ் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


2008 ம் ஆண்டு விட்டதை இந்த வருடம் சரி கட்ட வேண்டும் என்றும் கோப்பையை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியோடு லாஸ் ஏஞ்சல்ஸ்ம், மீண்டும் 2008 யில் நடந்ததை நடத்திக் காட்ட பாஸ்டனும் சிலிர்ப்புடன் உள்ளது.

Lakers பலம் Kobe Bryant யின் ஒன் மேன் ஷோ தான். எந்த விதமான இக்கட்டான சூழ்நிலையிலும் எவ்விதமான தடுப்புகளையும் உடைத்து கவுன்ட் பண்ணுவதில் தற்காலத்தில் இவருக்கு நிகர் இவரு தான். 3 பாயிண்ட் போடுவதில் வல்லவரான Fisher மற்றும் ஏதிராளியை தடுப்பதில் சிறந்தவரான Ron Artest போன்றவர்களுடன் Odom & Gasol ம் அணிக்கு பலம் சேர்க்கிறார்கள். கூடவே இந்த சீசனில் இவர்களின் தடுப்பு ஆட்டத்தின் தரம் அதிகரித்து உள்ளது. இவர்களின் பலவீனம் பெரும்பாலும் Kobe Bryant யே நம்பி இருப்பது. பெயிண்ட் க்கு வெளியில் இருந்து பாயிண்ட்கள் அதிகம் எடுக்காமல் இருப்பது என்பதையும் கூறலாம்.

Celtics பலம் அவர்களின் முன் வரிசை வீரர்கள் தான். Garnett, Pierce, Allen, Rondo என பட்டையை கிளப்பும் தரமான வீரர்கள். அதிலும் இந்த சீசனில் Rondo வின் ஆட்டத்தில் அனல் பறக்குகிறது. இவர்களின் பலமே தடுப்பு ஆட்டம் மற்றும் அனைவருமே ஸ்கோர் செய்வதுமே. அதிலும் & அபாயகரமானவர்கள். பலவீனம் என்றால் பெஞ்ச் ஆட்டக்காரர்கள் யாரும் பெரிதாக இதுவரை ஸ்கோர் பண்ணவில்லை.

கடந்த முறை (2008) யில் தடுப்பு ஆட்டங்களில் மூலமும், பெயிண்ட் ஏரியாவிற்குள் நுழைய விடாமலும் Kobe Bryant க்கு அவர் சக வீரர்களிடம் இருந்து உதவி கிடைக்க விடாமல் தடுத்துமே Celtics சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்கள். இந்த வருடமும் கண்டிப்பாக அதே பாணி ஆட்டத்தை தான் விளையாடுவார்கள். ஆனால் இந்த முறை Fisher & Artest சில பாயிண்ட்கள் எடுத்து Kobe Bryant க்கு உதவி செய்தால் ஆட்டத்தின் போக்கே மாறும்.

மொத்தத்தில் பாஸ்டன் அணிக்கு வாய்ப்பு பிரகாசமாக தெரிந்தாலும், எதையும் சாதித்துக் காட்டும் லாஸ் ஏஞ்சல்ஸ் அவ்வளவு சுலபமாக கோப்பையை விட்டுத் தர மாட்டார்கள். இந்த முறை எப்படியும் 7 ஆட்டங்களும் (Best of 7) நடைபெறும் என்று நினைக்கிறேன். Celtics யின் ஆட்ட யுத்தியும், Garnett டின் காட்டுமிராண்டித்தன ஆட்டமும் என்னை கவர்ந்தாலும் Kobe Bryant க்காக லாஸ் ஏஞ்சல்ஸ் Lakers வெற்றி பெற வேண்டும் என எதிர்பாக்குகிறேன்.

ஏது எப்படி இருந்தாலும் வேகம், விவேகம், விறுவிறுப்பு க்கு எந்த விதமான பஞ்சமும் கண்டிப்பாக இருக்காது. அதுக்கு நான் கியாரண்டி. தவற விடாமல் கண்டுக் களியுங்கள்.

THE GAME IS ON !

Image Courtesy : NBA.com