Monday, March 30, 2009

வாழ்க சனநாயகம் 5 - தமிழ் புத்தாண்டு

தமிழ்ப் புத்தாண்டை மீண்டும் சித்திரை முதல் தேதி மாற்ற முதல்வர் கருணாநிதி உத்தரவு

தைத் திங்கள் முதல்நாளே தமிழ்ப் புத்தாண்டின் தொடக்க நாள் என்று கடந்த வருடம் அறிவித்த தமிழக அரசு இப்போது மீண்டும் சித்திரை முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடலாம் என்று அறிவித்துள்ளது. இது குறித்து முதல்வர் மு.கருணாநிதி விடுத்துள்ள அறிக்கையில்....

'1921 ஆம் ஆண்டு தமிழ்நாடு சென்னை பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் தமிழர்களுக்கென ஒரு தனித்துவமான “ஆண்டுக் கணக்கு” இருக்கவேண்டும் என எண்ணி, தனித் தமிழ் இயக்கத்தின் திரு. மறைமலை அடிகளார் தலைமையில் தமிழறிவியலாளர்கள், புலவர்கள், சான்றோர்கள் 500 பேர் ஒன்றுகூடி ஆய்வு செய்தனர். அதனடிப்படையில் திருவள்ளுவர் ஆண்டே தமிழர் ஆண்டு எனவும், தை முதலாம் நாளே தமிழரின் புத்தாண்டாக அமைதல் வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. இம்முடிவை 1971 ஆம் ஆண்டு தமிழுக்கும் தமிழனுக்கும் ஏற்றம் தரும் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது. அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு கணிப்பீட்டு முறைமையை அரசு மற்றும் ஊடகங்களும் பயன்படுத்தத் தொடங்கின. இதனை அரசு 2008 இல் முறையாக அறிவித்தது.

ஆன்றோர், சான்றோர், புலவர் னு கேட்க நல்லா வக்கனையாக இருந்துச்சு. மக்களும் ஒத்துக்கிட்டாங்க!

இதன்படி கடந்த தைத் திங்கள் ஒன்றாம் நாள் தமிழ்ப் புத்தாண்டாக உலகமெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான தமிழர்களால் அகம் மகிழ சிறப்புற கொண்டாடப்பட்டது.

உண்மை. கோடிக்கணக்கான தமிழர்கள் சிறப்பாக கொண்டாடினார்களே. பதிவுலகமே பரபரத்துச்சே. பதிவு , மின் வாழ்த்து, சச்சரவுனு கலக்கிட்டாங்கள!

ஆனாலும் பழைமையை மாற்ற விரும்பாத பலரும், 'தொடர்ந்து சித்திரை முதல் திங்களையே தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாட வேண்டும்' என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தார்கள்.

அதே பழமைவாதிகள் அப்பவே எதிர்ப்பு குரல் கொடுத்தார்களே!

பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளையும் கோரிக்கையையும் பரிவுடன் பரிசீலித்த தமிழக அரசு சித்திரை முதல் தேதியையே தமிழ்ப் புத்தாண்டாகக் கொண்டாடுவது என்று முடிவெடுத்துள்ளது.

பெரும்பான்மையா? ஏற்கனவே கோடிக்கணக்கான தமிழர்கள் தைத் திங்களை புத்தாண்டாக கொண்டாடியதாக நீங்களே சொல்லிட்டீங்க, அப்ப மிச்சம் இருப்பதும் சில கோடிகள் தானே, இந்த சில கோடிகளுக்காக அந்த சில பல கோடிகளை முட்டாள்கள் ஆக்கி விட்டீர்களே!

இது குறித்த முறைப்படியான அரசு அறிவிப்பு பொதுத் தேர்தல் முடிவடைந்தவுடன் வெளியிடப்படும். ஆனால் வருகிற சித்திரைத் திருநாளிலேயே கோயில்களில் வழிபாடுகள் முறைப்படி நடப்பதில் தடை இல்லை என்கிறது அரசு செய்திக் குறிப்பு

ஆங்! அப்படி சொல்லுங்க, பொது தேர்தல் வந்தா எல்லாமே பின்வாங்குவீங்க போல.

வச்சா குடுமி அடிச்சா மொட்டை.

அரசு ஆனது ஒரு முடிவு எடுப்பதுக்கு முன்பு எல்லா சாதக பாதகங்களையும் பார்த்து தான் முடிவு எடுக்கனும். இது ஒன்றும் தனிப்பட்ட ஒருவரின் முடிவு அல்லவே. இஷ்டXXXXக்கு மாற்ற.

தேவர்மகன் நாசர் வசனம் என் பதிவில் அடிக்கடி குறிப்பிட வேண்டியதா இருக்கு. அந்த வசனம் மீண்டும் ஒரு முறை

"இது என்ன உம்ம மீசை மசுருனு நினைச்சிங்களா நினைச்சா முறுக்க, நினைச்சா மடக்க"

அப்ப முறுக்குனீங்க, இப்ப மடக்கிட்டீங்க. நல்லா இருங்க. வாழ்க சனநாயகம்!

செய்தி : நன்றி - இட்லிவடை

Wednesday, March 25, 2009

கதம்பம்

இரு நாட்களுக்கு முன்பு ஒரு செய்தியை படிக்க நேர்ந்தது. 80 வயதான ஒரு பெண்மணி பாலியல் பலாத்தாரத்துக்கு ஆளானார் என்று. சூடானில் டார்பூரில் அல்-பசர் என்ற இடத்தில் இந்த கொடுமை நடந்து உள்ளது. அந்த கொடுங்செயல் செய்தவன் யாரு என்று இன்னும் கண்டுபிடிக்கவில்லை. உள்நாட்டிலே அகதியாக IDP(Internally Displaced Persons) முகாமில் வாழ்ந்து வருவதே மிக கொடுமையான விசயம், அதில் இது போன்று வன்முறைகளும் நடப்பது மிக மிக கொடுமையான விசயம். வக்கிரத்தின் உச்சம். அந்த மாதிரி ஆட்களை பிடித்து வயிற்றுக்கு கீழே சுடனும்.

போர்க்களங்களில் மட்டும் இல்லை எங்குமே மனிதம் மரித்து தான் போய் உள்ளது.

******

இந்திய பிரிமியர் லீக் (IPL) தென் ஆப்பிரிக்காவில் நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. நமது கிரிக்கெட் வாரியத்துக்கு தான் தான் கிரிக்கெட் உலகின் கடவுள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு. அந்த அளவு புகழும், அதிகாரமும் இருந்ததால் அப்படி ஒரு நினைப்பு. அந்த அளவுக்கு வளர்த்து விட்டது நம் மீடியாவும், ரசிகர்களும் தான். இதை பழம் தின்பது அவர்கள் தானே, அதான் அப்படி. ஐ.சி.சி. கண்களில் விரலை விட்டு ஆட்டியது. ICL க்கு அங்கீகாரம் அளிக்க எவ்வளவு முயற்சி செய்தும் ஏதுவும் நடக்கவில்லை, இவர்களிடம். பணமும், அதிகாரமும் இருந்த திமிரில் என்ன செய்கிறோம் என்றே உணராமல் இந்திய அரசாங்கத்திடமே மல்லு கட்டுகிறது. அதற்கு அரசியல் சாயமும் பூசியது. இது இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நல்லதே இல்லை. காலம் வரும் போது ஆப்படிக்க படுவார்கள் என்பது நிச்சயம். IPL ஆட்டங்கள் இந்தியாவில் நடைபெறாமல் போவதற்கு பாதுகாப்புமின்மை என்ற காரணத்தை எல்லா மீடியாவும் முன் வைத்து கொண்டு இருக்கிறது. சுத்த அபத்தமாக இருக்கிறது. சிதம்பரத்தின் விளக்கம் திருப்தி அளிக்கும் விதமாகவே உள்ளது.

தேர்தல் திருவிழாவில் IPL திருவிழா இங்கு நடந்து இருந்தால் காணாமல் போய் இருக்கும்.

*******

கச்சத்தீவை பிரச்சனையை மறுபடியும் நம்ம அரசியல்வாதிகள் கையில் எடுத்துட்டாங்க. தாரை வார்த்து கொடுத்துட்டீங்க னு ஒரு அறிக்கையும், 10 வருடத்தில் நீ என்ன கிழிச்சுனு, கொடுக்கும் போது கொடுக்க கூடாது என்று போதிய எதிர்ப்பை பதிவு செய்தாச்சு, அப்புறம் என்ன னு ஒரு அறிக்கையுமா.... ஐயா சாமிகளா, போதும்ய்யா உங்க வேஷம் எல்லாம். ஒவ்வொரு தடவை தேர்தல் நேரத்திலும் நாகையில் பிரச்சாரம் செய்யப்படும் முக்கிய விசயங்களில் கச்சத்தீவை மீட்போம் என்ற வாக்குறுதி இருக்கும். கேட்டு கேட்டு புளிச்சு போச்சு. ஈழ பிரச்சனை விட்டு கொஞ்சம் மேலே ஏறி வந்து இருக்கீங்க, தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் கொஞ்சம் மேலே ஏறி கிருஷ்ணா, காவேரி, பாலாறு னு வருவீங்க. நல்ல முன்னேற்றம் தான். தொடருங்க... கேட்டு தொலைக்க தான் நாங்க இருக்கோம்ல.

உங்களால் முடி்ந்தால் அங்க போகும் மீனவர்களை சுட்டு கொல்லாமல், அடித்து துன்புறுத்தாமல் இந்தியாவிடமே திருப்பி ஒப்படைப்பதுக்கு என்ன முயற்சி எடுக்க முடியுமோ அதை செய்ங்க.

*******

போன வாரத்தில் ஒரே ஒரு படம் தான் பார்க்க முடிந்தது. வேலை பொளந்து கட்டிடுச்சு.

When a Stranger Calls (2006) - பள்ளியில் படிக்கும் ஒரு பெண் பேபி ஸிட்டராக (Baby-Sitter) இரவு நேரத்தில் ஒரு வீட்டிற்கு செல்ல, அங்கு அனானி அழைப்பு வருகிறது. அதை வைத்து படத்தை கொண்டு செல்கிறார்கள், தொடர் கொலை செய்யும் ஒரு கொலைக்காரன் அந்த வீட்டின் உள்ளே இருந்தே அந்த பெண்ணை மிரட்டுகிறான் என்று தெரிய வரும் போது பரபரப்பு ஜிவ்வுனு ஏறுது. வெறும் பிண்ணனி இசை மற்றும் ஒளிப்பதிவு(எடிட்டிங்) வைத்து ஒரு சிறந்த ஹாரர் படம் தர முடியும் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த உதாரணம். அந்த படத்தில் இடம் பெற்று உள்ள வீடு அற்புதமாக இருந்தது.

*******

ஈழம் இனப்படுகொலை பிரச்சனை ICC க்கு எடுத்து சென்று உள்ளார்கள். தக்க விபரம் கிடைத்தவுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

நீண்ட இரவுக்கு பின் ஒரு விடியல் இருந்தே தீரும். நம்புவோமாக.

*******

பள்ளி காலத்து தோழியை அதன் பிறகு சந்திக்காமல் பின்னொரு நாள் இணையத்தின் மூலம் சந்தித்து, இப்போ பதிவுலகிலும் பார்க்க மகிழ்ச்சியா இருக்கு. ஆனா கவுஜையா (மட்டுமே) எழுதி தள்ளுறா, வாழ்த்தி வரவேற்கிறேன், அப்படியே நீங்களும் உங்க ஆதரவை கொடுங்க. பதிவு - சுயம் உணர்தல்

வருக! வருக! நல்லாட்சி தருக சீ.. நல்பதிவு இடுக

*******

Monday, March 23, 2009

சிசெல்ஸ் - புகைப்படங்கள்

இந்திய பெருங்கடலில் உள்ள சிசெல்ஸ் தீவுகளின் புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. (படங்களை பெரிதுபடுத்தி காணவும்) பயணக் கட்டுரை விரைவில்.





















Posted by Picasa

Saturday, March 21, 2009

இயன்றவரை இனிய தமிழில்!

மறந்த போன தமிழ்ச்சொற்களை பதிவாக போட சொல்லி வந்த தொடரில் கவிதா என்னையும் எழுத அழைத்து பல வாரங்கள் ஆச்சு. அதை இன்னிக்கு பதிவாக போடலாம் என்று இந்த பதிவு.

எனக்கு எது தமிழ்ச்சொற்கள் எது பிற மொழி சொற்கள் என்பதே சில நேரங்களில் தெரிவது இல்லை. அந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்க்கையில் பிற மொழி சொற்களின் ஆதிக்கம் கொஞ்சம் அதிகமாகவே உள்ளது. அதை களைய யாரும் பெறும் அளவில் முயற்சி எடுக்கவில்லை. அல்லது அந்த முயற்சிகள் பெரும் அளவில் வெற்றி கொடுக்கவில்லை என்று சொல்லாம். ஹல்லோ, பஸ், டீ, காபி, போன், செல்போன், டிரெயின், பிளேன், பைக், கார் இது எல்லாம் தமிழ் சொற்களாக மாறி பல வருடங்கள் ஆச்சு. பதிவுலகிலும், எழுத்துலகிலும் தான் முடிந்த வரை தமிழ் சொற்களாக தேடி எடுத்து உபயோகப்படுத்தி வருகிறோம். அது ஒரு ஆரோக்கியமான விசயம்.

அயல்நாட்டில் வேலைக்கு வந்த பிறகு நண்பர்களுடன் உரையாடும் போது முடிந்த வரை ஆங்கில கலப்பு இல்லாம தமிழ் வார்த்தைகளை கொண்டே உரையாடுவது வழக்கம். நாம் என்ன பேசுகிறோம் என்பதை நம் அருகில் இருப்பவர்கள் ஊகிக்க முடியாது. அதிலும் ஆரம்பத்தில் சில வார்த்தைகளை உபயோகிக்கும் போது நமக்கே சிரிப்பாக வரும், பிறகு அது பழகி விட்டது. உதாரணமாக அண்டை நாடு, துறைத் தலைவன், பெரும் தலை, விடுப்பு, பயணச் சீட்டு, வாகனம், காலை உணவு, மதிய உணவு, விமானம், வடக்கு இந்திய, தொலைப்பேசி, கைப்பேசி, மடிக் கணினி, இணையம், மின் அஞ்சல் னு நிறைய வார்த்தைகள். இதை கேட்கும் போது நமக்கு சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இந்த வார்த்தைகளை எழுதும் போது தான் பெரும் அளவில் உபயோகப்படுத்துகிறோம். பேசும் போது நம்மளை அறியாமலே ஆங்கில வார்த்தைகள் வந்து விழுந்து விடுகிறது. அதை களைய முயல்வோம்.

நம் மொழியை நாம் பேசாமல் வேறு யாரு பேசுவது. அதனால் இயன்ற வரை இனிய தமிழில் பேசுவோம், சில வார்த்தைகள் நம்மளை அறியாமல் வரும் போது அதை மறுமுறை திருத்திக் கொள்ள முயல்வோம். முதல்படியா தொலைபேசியில் யார் அழைத்தாலும் உங்கள் பெயரையோ அல்லது வணக்கம் என்ற வார்த்தையுடனோ பதில் சொல்ல தொடங்குவோம். (நண்பர்களிடத்தில் இருந்து ஆரம்பிப்போம்).


*******

எங்க ஊர் பக்கம் பேசும் தமிழ் தான் எழுத்து தமிழாகவும், சினிமாக்களில் பேசப்படும் தமிழாகவும் உள்ளது என்பது என் கருத்து. அதை சரியா தப்பா னு தெரிந்தவர்கள் கூறலாம். என்னால் வழக்கொழிந்த சொற்கள் என்று ஏதும் தனித்துக் கூற முடியவில்லை. அதனால் நான் பேசுவதை கேட்டு நண்பர்கள் இதற்கு என்ன அர்த்தம் என்ற கேட்ட சில சொற்களை பட்டியலிடுகிறேன்.

பத்தாயம் - நெல் கொட்டி வைக்கும் தொட்டி(பொட்டி)
மராக்கா - அளக்க உதவும் ஒரு பொருள் (படி, கிலோ மாதிரி, எங்க ஊரில் சமையலுக்கு மராக்கா அளவில் தான் அரிசி அளப்பார்கள்)
அப்பாயி- அப்பாவோட அம்மா
அம்மாயி - அம்மாவோட அம்மா
மண்டக் காய்ச்சல் - தலைவலி
மண்டக் கனம் - திமிர், தலைக்கனம்
சவரம் - முகம் மழித்தல்
புறக்கடை - கொல்லை
அட்டி - (அரிசி) மூட்டைகளை அடுக்குவது, ஒன்றின் மீது ஒன்றாக (வரிசை)
வெடைக்குற - கிண்டல் பண்ணற
உசக்க - மாடியில்
அடுப்படி - சமையல் அறை (அடுப்பாங்கரை னு கூட சொல்லுங்க)

பல்லா* - தண்ணீர் எடுக்க உதவும் சிறு குவளை ( பிளாஸ்டிக்)
டவரா* - டீ, காபி தருவார்கள், ஆத்தி குடிக்க வசதியாக இருக்கும்
லோட்டா* - இது தண்ணீர், டீ, காபி குடிக்க உதவும். (ஒரு குடம் சின்ன அளவில் இருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்)

* - இது மூனும் தமிழ் வார்த்தைகளா என்று எனக்கே சந்தேகமாக தான் இருக்கு.

சென்னை வந்த பிறகு இரு வார்த்தைகளை கேட்டால் கோவம் வரும், அது கால் அவர், அரை அவர் என்பதும், அவர் கையில சொல்லிட்டேன் என்பதும். அந்த கோபம் இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கு.

Tuesday, March 17, 2009

கதம்பம்

நடிகர் ஒமக்குச்சி நரசிம்மன் போன வாரத்தில் மரணம் அடைந்தார். அவருடைய குடும்பத்திற்க்கு ஆழ்ந்த அனுதாபவங்கள். சூரியன் படத்தில் கவுண்டருடன் அவர் வரும் பகுதி மிக அருமையாக அமைந்து இருக்கும். அதிலும் நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா என்ற டயலாக் செம பேமஸ். அதே படத்தில் ஜாங்க்கு ஜக்கு னு(தளபதி மியூசிக்) கவுண்டர் முன்னாடி ஒரு ஸ்டெப் போடுவார். அவரை பெரும்பாலும் பல படங்களில் நோயாளியாக தான் காட்டி வந்தார்கள். முதல்வன், ஊரை தெரிஞ்சுக்கிட்டேன் போன்ற படங்களில் அவரின் காமெடி குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டியது. அவர் தலைமுடியை கோதும் ஸ்டைலே தனி தான். அவர் ஆன்மா சாந்தியடைய பிராத்தனைகள்.

*******

தேர்தல் வந்தா தான் எல்லா வேலையும் நடந்து முடியும் போல. நாகையில் அகல ரயில் பாதை போடுவதற்காக நாகையில் இருந்து அனைத்து ரயில்களையும் நிறுத்தி 4, 5 வருடங்கள் ஆச்சு. பிறகு திருவாரூரில் இருந்து பணிகள் முடிவடைந்து ரயில் விட துவங்கியும் பல வருடங்கள் ஆச்சு. ஆனால் நாகை டூ திருவாரூர் க்கு அகல ரயில் பாதை போட்டாங்க போட்டாங்க அம்மாம் வருசமா போட்டாங்க. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு வழியா ரயில் நிலையத்தை திறந்துட்டாங்க. (பிப்ரவரி 28). வேளாங்கண்ணி ரயில் பாதை எந்த தேர்தல் நேரத்தில் முடியுமோ? ஏ.கே.எஸ். இதை ஒரு பெரிய விசயமா தேர்தல் பிரசாரத்தில் பேசுவார்.அதை விட்டால் சொல்லுற அளவுக்கு அண்ணன் என்ன செய்து இருக்கார் என்று அவர் சொன்னால் தான் தெரியும், சேது சமுத்திரம் திட்டத்தை சொல்லுவீங்களாண்ணா?அண்ணன் இந்த தடவை தேறிடுவீங்களா? கஷ்டம் தான்.
*******

இந்த ஐ.சி.சி. பிரச்சனையில் சூடான் தலைநகரத்திலே சில நாட்கள் தங்க வேண்டியதாய் போச்சு. அந்த நேரத்தில் இணையமும் இல்லாத காரணத்தால் மறுபடியும் திரைப்படங்கள் பார்க்க ஆரம்பிச்சாச்சு. கவலைப்படாதீங்க விமர்சனம் எல்லாம் எழுத போற இல்லை. சும்மா போற போக்கில் ஒரு பார்வை அம்புட்டு தான்.

நான் கடவுள் (2009) - பாலா, கலைஞண்டா நீ, நீ தான் கலைஞன். இப்படி ஒரு படம் எடுக்க தமிழில் எந்த இயக்குனருக்கு திறமை இருக்கு அல்லது தைரியம் இருக்கு? கதை, அகோரி, அந்த கன்றாவி எல்லாத்தையும் விடுங்க. கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுப்பு ஒன்னு போதும்ய்யா. அவர்களை எல்லாம் தேர்ந்து எடுத்ததே பெரிய வேலை, அதில் அவர்கள் அவர்களிடம் வேலை வாங்கியது அதை விட சிறப்பு. இதற்கு எந்த அளவுக்கு ஹோம் வொர்க் பண்ணி இருக்கனும் என்பதை நினைக்குமே போதே பாலா மேல் மரியாதை தானாக வருகிறது. Hats off.

வெண்ணிலா கபடி குழு (2009) - இயல்பான படம். வசனங்கள் அருமை. அனைவரும் பொருந்தி நடித்து உள்ளார்கள். கிளைமாக்ஸ் மட்டும் கொஞ்சம் வருத்தம். வேற மாதிரி முடித்து இருக்கலாம். பஸ்சை சைக்கிளால் முந்திய பிறகு ஒட்டுனர் பேசும் வசனம் சூப்பர். போற போக்குல மாநில போட்டிகளில் விளையாட விடுவது மட்டும் கொஞ்சம் ஒவர்.

Freedomland (2006) - Samuel Jackson நடிச்ச படம். நல்ல த்ரில்லர். வெள்ளை இனத்தை சேர்ந்த ஒரு குழந்தை காருடன் சேர்ந்து கடத்தப்பட்டதாக ஒரு பெண் புகார் கூற அந்த குழந்தையை தேடும் பொருட்டு கருப்பு இனத்தவர் வாழும் ஒரு ஏரியாவை முழுக்க தடை செய்து தேடுதல் வேட்டை நடக்குகிறது. ஆனால் அந்த பெண் பொய் கூறுகிறாள், அவள் தான் அந்த குழந்தையை ஏதோ செய்து விட்டாள் என்பது போல் காட்சிகளை நகர்த்தி அதன் நடுவில் Racism தொட்டும் படம் நகர்கிறது. எதிர்பாராத முடிவு. Jackson நடிப்பு அருமை. நேரம் கிடைத்தால் பார்க்கலாம்.

Nip/Tuck (2003) - அமெரிக்க டிவியில் வெளியான ஒரு மருத்துவ டிராமா. மொத்தம் 5 சிடி. (1 சிஸன் - 13 எபிசோட்) ஒவ்வொரு எபிசோட்டும் ஒரு தனி கதை. ஆனால் கதைத் தளம் ஒன்று தான். பிளாஸ்டிக் சர்ஜன்னா இரு மருத்துவர்கள் பற்றிய கதை. இதில் செக்ஸ் கொஞ்சம் அதிகம். ஆனால் நல்ல விறுவிறுப்பான தொடர். இது வரை 5 சிஸன் வந்து உள்ளது. 2011 வரை சிஸன் வரும். பல விருதுகளை இந்த தொடர் பெற்று உள்ளது. நம்மூரில் மெகா தொடர் எடுக்கும் புண்ணியவான்கள் இந்த தொடரை எல்லாம் பார்த்தால் நம் தொடர்களுக்கு விடிவு காலம் கிட்டினாலும் கிட்டும்.

Fahrenheit 9/11 (2004) - செப்டம்பர் 11 தொடர்ந்து ஆப்கான், ஈராக் போர் பற்றியும் அமெரிக்க அதிபர் புஷ் பற்றியும் ஒரு செமையான அலசல் இந்த படம். Michael Moore இயக்கி இருக்கும் இந்த டாக்குமெண்டரி படம் உண்மையான ஜனநாயக நாட்டின் ஒரு குடிமகனுக்கு இருக்கும் உரிமையை(சுகந்திரத்தை) வெளிக்காட்டுகிறது. படத்தில் உள்ள விசயங்கள் ஒரளவு அனைவருக்கும் தெரிந்த விசயம் தான் அதை சில ஆதாரங்களுடன் அவருக்கே உரிய நகைச்சுவை உணர்வுடன் அளித்து உள்ளார். அந்த படத்தை பார்த்து புஷ்யை பற்றி யோசிக்க விடாமல், நம்மால் நம் நாட்டில் இது போல் ஒரு படம் எடுத்த முடியுமா என்ற கேள்வி தான் மேலோங்கி இருந்தது. கருத்து கணிப்பு & நீதிமன்ற தீர்ப்புக்கே எரிப்பு நடவடிக்கையில் இறங்கும் கழக கண்மணிகள் இருக்கும் நாட்டில் அடக்கி வாசிப்பது தான் தேகத்துக்கு நல்லதுனு பட்டது.
*******

போன பதிவை பாத்துட்டு அவங்க கவிதையை(???) என்னோடு பதிவில் போட்டாலே ஆச்சுனு வந்த தொடர் மிரட்டலை தொடர்ந்து இந்த கவிதை இங்கு பதிவிடப்படுகிறது.

லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் இருந்தாலும்
புன்னகையுடன் ரசிப்பது நிலவை தான்
சிரித்து பேச நண்பர்கள் பலர் இருந்தாலும்
மனதில் எண்ணி மகிழ்வது உனை தான்!

இதை எனக்கு அனுப்பிவுடன் நான் கொடுத்த கமெண்ட்,

பின்னி பெடல் எடுத்துட்ட... ஒத்துக்குறேன்.. நீ ஒரு கேடி.. சீ லேடி வாலி என்பதை. (கவிதை எழுத தெரியுமானு கேட்டது ஒரு குத்தமா? )
*******

Wednesday, March 11, 2009

நன்றி நவில்தல்

வழக்கம் போல் இந்த வருடமும் நம் ப்ளாக் நட்புகள் பாச மழையை பொழிந்து இன்ப வெள்ளத்தில் மிதக்க வைத்து விட்டார்கள். அதிலும் போன வருடத்தில் இருந்து அவ்வளவாக எழுதுவது இல்லை. போன வருடம் ஊரில் இருந்ததால் ப்ளாக் மக்கள் ஞாபகம் வச்சு வாழ்த்தினாங்க, இந்த வருடம் அவ்வளவாக கண்டுக்க மாட்டங்க என்று நினைச்சேன். ஆனால் அதை பொய்பித்து காட்டும் விதமாக கலக்கிட்டாங்க.

அதிலும் ஒன்னு இல்ல இரண்டு இல்ல மூணுங்க - பிறந்தநாள் வாழ்த்து பதிவு (ரொம்பவே ஒவரா தான் எனக்கே படுது) ஒருத்துனுக்கு ஒரு வயசு ஏறுது என்பதில் என்ன ஒரு ஆனந்த சந்தோசம் பாருங்க இந்த மக்களுக்கு.

1, சங்கத்து சிங்கம் ராயல் ராம் - கவுஜை நாயகன் என்பதை நிருபித்து உள்ளார் நம்ம ராயலு.

2. பிரவாகம் காயத்ரி - என்னிடம் கேட்டு இருந்தா கூட இப்படி பதில் சொல்லி இருப்பேனோ என்பது சந்தேகம் தான்.

3. என்னமோ போ Raz - ஒவர் நக்கல் ஆகிடுச்சு. அன்புத் தோழி அதனால் மன்னிச்சாச்சு.

உங்க மூவருக்கும் உடனடியாக நன்றி சொல்ல முடியவில்லை. ICC பிரச்சனையால் அன்னிக்கு இணையம் பக்கம் வர முடியல. அதனால் தான் ஒரு போஸ்ட் போட்டு நன்றி நவில்றேன்.

அதிலும் காயத்ரி பதிவுல இருந்த அந்த வீடியோவை பாத்துட்டு உண்மையிலே அசந்துட்டேன். அதை உருவாக்க உதவிய ராம், கானா பிரபா, கே4கே அண்ணாச்சி, காயத்ரி இவங்களுக்கு ஸ்பெஷல் நன்றிகள்.

அது போக ஆர்குட், பேஸ்புக், கைப்பேசி, மின் அஞ்சல், SMS, பின்னூட்டம், (இ)வாழ்த்து அட்டை என பலவழிகளிலும் வாழ்த்திய அம்புட்டு சனத்துக்கும் மிக்க நன்றி. __/\__

இப்போ தனக்கு தானே சொறிந்து கொள்ளும் திட்டத்தின் கீழ் ஒரு அறிவிப்பு (அப்ப மேலே உள்ளது... உச்ச்ச்ச்ச் கண்டுக்கப்பிடாது)

மார்ச் 7 வுடன் இந்த பதிவை ஆரம்பிச்சு 3 வருசம் முடிஞ்சு 4வது வருடம் ஆரம்பம் ஆச்சு. இது வரைக்கும் பெரிசா எழுதிடல. இனிமேலும் பெரிசா ஏதும் எழுதிட போறது இல்ல. ஆனாலும் தொடர்ந்து எழுதுவோம் என்பதை அறிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து ஆதரவு தாரீர்.

என்னோட இம்சைக்கு காரணமாக அமைந்த அந்த மூவரை மீண்டும் ஒரு முறை ஞாபகப்படுத்து விரும்புகிறேன். அறுசுவை பாபு, ப்த்ரி, ரஜினி ராம்கி.

இதற்கு உங்கள் வாழ்த்துக்களும், வசவுகளும் வரவேற்கப்படுகின்றன.

Friday, March 06, 2009

ICC யின் அரெஸ்ட் வாரண்ட்

சூடானில் டார்பூர் என்ற இடத்தில் நடந்த இனப்படுகொலை நம் அனைவரும் அறிந்ததே. 2003ம் ஆண்டில் இருந்து 2008ம் ஆண்டு வரை நீடித்த இந்த பயங்கரத்தின் மூலம் உயிர் இழந்தோர்கள் சுமார் 3 லட்சம் நபர்கள். உள்நாட்டிலே அகதிகள் ஆனோர் 2 மில்லியன் நபர்கள். இது ஐ.நா.வால் அறிவிக்கப்பட்ட புள்ளி விபரம். இந்த எண்ணிக்கையை சூடான் அரசு மறுத்து உள்ளது.

ICC (International Criminal Court) யில் சில வருடங்களுக்கு முன்பு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. சூடான் அரசில் அமைச்சர்களாக இருக்கும் இருவருக்கு முன்பே அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்க பட்டும் உள்ளது. அதை பற்றி முன்பே பதிவு இட்டு உள்ளேன். ஆனால் இதற்கு எல்லாம் முக்கிய காரணமாக சூடான் அதிபர் மீது குற்றம் சாட்டப்பட்ட அவர் மேல் எந்த நேரமும் வாரண்ட் பிறப்பிக்கபடலாம் என்ற நிலை இருந்தது. புலி வருது புலி வருது கதையாக கடந்த 8 மாதங்களாக நடந்த ஆடு புலி ஆட்டத்திற்கு முடிவு கட்டும் விதமாக மார்ச் 4 அன்று மாலை 4 மணி அளவில் சூடான் அதிபர் அல் பஷீர் க்கு எதிராக அரெஸ்ட் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The counts

The warrant of arrest for Omar Al Bashir lists 7 counts on the basis of his individual criminal responsibility (article 25(3)(a)) including:

*
five counts of crimes against humanity: murder – article 7(1)(a); extermination – article 7(1)(b); forcible transfer – article 7(1)(d);
torture – article 7(1)(f); and rape – article 7(1)(g);
*
two counts of war crimes: intentionally directing attacks against a civilian population as such or against individual civilians not taking direct part in hostilities – article 8(2)(e)(i); and pillaging – article 8(2)(e)(v).


போர் குற்றங்கள், மனித உரிமை மீறல் ஆகிய இரு பிரிவின் கீழ் சூடான் அதிபருக்கு ஏதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீதான இனப்படுகொலை புகாருக்கு போதிய ஆதாரம் இல்லை என தள்ளுப்படி செய்யப்பட்டு உள்ளது. முதன் முறையாக ஒரு நாட்டின் அதிபர் பதவியில் இருக்கும் ஒருவருக்கு அரெஸ்ட் வாரண்ட் பிறப்பித்தன் மூலம் இது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்து உள்ளது. மனித உரிமையை மீறுபவர்களுக்கும், போர் மரபுகளை மீறுபவர்களுக்கும் கண்டிப்பாக இது ஒரு எச்சரிக்கையாக அமையும் என்பது என் கருத்து.

இந்த அறிவிப்பை அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் வரவேற்று உள்ளது. அரபு மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் எதிர்த்து உள்ளனர். சூடானிலும் டார்பூர், சவுத் சூடானில் இதற்கு ஆதரவு குரல் அதிகமாகவும், நார்த் சூடானில் எதிர்ப்பு குரல் அதிகமாகவும் உள்ளது. இந்த
அறிவிப்பு வெளி வந்த அன்றே இதை கருத்தில் கொள்ள முடியாது என்று சூடான் அரசு அறிவித்து விட்டது. அன்று மாலை 4 மணி அளவில் சூடான் தலைநகரம் கண்டன ஆர்பாட்டங்கள் ஊர்வலங்கள் என நடந்தது. சுமார் 10,000 நபர்கள் கலந்துக் கொண்டார்கள். இந்த கண்டன ஆர்பாட்டங்கள் நாடு தளுவிய அளவில் செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விளைவாக சூடானில் நடந்து வரும் அமைதி மற்றும் மனித உரிமை பணிகளுக்கு மிகுந்த பிரச்சனைகளும் தடங்கல்களும் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருந்த போதிலும் சூடான் அரசு ஐ.நா. பணியாளர்களுக்கு எல்லா வகையிலும் தொடர்ந்து ஒத்துழைப்பும், பாதுகாப்பும் அளிக்கும் என்று உறுதி அளித்து உள்ளது. எந்த அளவில் அமல்படுத்துகிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் காண வேண்டும்.

கடந்த இரு நாட்களாக எந்த ஒரு அசம்பாவிதமும் எங்கும் நடக்க வில்லை. தலைநகரத்தில் ஆங்காங்கே சில கண்டன ஆர்பாட்டங்கள் மட்டுமே. இன்று ஐ.நா. அலுவலகத்துக்கு எதிரில் சிறிய அளவில் ஆர்பாட்டம் நடந்தது. சாலைகளில் போக்குவரத்து குறைந்த அளவிலே உள்ளது.

இந்த வாரண்ட் மூலம் சூடானில் நடந்து வரும் பணிகளுக்கு பங்கம் வரும் என்பதை நிரூபிக்கும் வகையில் டார்பூரில் இருந்து 10 என்.ஜி.ஒ. அமைப்புகளை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு சூடான் அரசு அறிவித்து உள்ளது. அந்த 10 அமைப்புகளும் கிட்டதட்ட எட்டு சகவீத அமைதி மற்றும் வளர்ச்சி பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள்.

சூடான் மக்களின் நிலையை இன்னும் சரிவர புரிந்து கொள்ள முடியவில்லை. பெரும் அளவில் எதிர்ப்பு கிளம்பினால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு தான் மேலும் சிக்கலாக வந்து அமையும். ஐ.நா. இருக்கும் வரை அவர்கள் தப்பிக்கலாம். ஐ.நா.விற்கு எதிராக சூடான் அரசு தன் நிலையை அமைத்து கொள்வதின் மூலம் மேலும் சிக்கலாக தான் முடியும் என்பதை அறிந்தே உள்ளது. இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு பெரிதாக எந்த சிக்கலும் வந்து விட போவது இல்லை. கூடவே ஆப்பிரிக்கன் யூனியனும் சூடானுக்கு ஆதரவான நிலையை தான் எடுத்து உள்ளது. சீனா மற்றும் இந்தியாவின் மறைமுக ஆதரவும் எண்ணெய் வளங்களுக்காக சூடானுக்கு என்றும் உண்டு.

இந்த அரெஸ்ட் வாரண்ட் மூலம் சூடான் அதிபருக்கு ஏற்பட்டு இருக்கும் சாதக பாதகங்களை இன்னொரு பதிவில் பார்க்கலாம்.