Saturday, April 28, 2007

கை கொடுக்கிறேன் தோழி!


மங்கையின் பதிவின் மூலம் பதிவிட்டு இருக்கும் தோழி மீனாட்சி அவர்களுக்கு என் ஆதரவை தெரிவிக்கும் வகையில் இப்பதிவு. மேல் விபரங்களுக்கு மங்கை பதிவை காணவும்.அவர் விருப்பத்தின்ப்படி என் பதிவில் இனி இந்த சிவப்பு ரிப்பன் இருக்கும். விரும்பும் பதிவர்கள் தங்கள் பதிவிலும் இந்த ரிப்பனை இட்டு உங்கள் ஆதரவையும் அவருக்கு தெரிவிக்க வேண்டுகிறேன்.


அனைவரும் கை கொடுப்போம், விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். எயிட்ஸ் இல்லா சமுதாயத்தை படைக்க முயல்வோம்.

Tuesday, April 24, 2007

இந்தியாவின் மொழி இந்தி மட்டும் தானா?

இரு நாட்கள் முன்பு தோழி ஒருவரிடம் இருந்து ஒரு மெயில் வந்தது. அந்த மெயிலின் சாரம்சம் : ஐ.நா.வின் ஆட்சி மொழியில் இந்தி மொழியை இந்தியாவின் சார்பாக தேர்ந்து எடுக்க கூடாது என்பது தான். அதற்காக ஒரு மனுவை தயாரித்து ஐ.நாவின் பொது செயலாளர் பான் கீன் மூன் மற்றும் நம் பிரதமர், ஜனாதிபதி அனுப்பவதாக உள்ளது. அதில் கூறி இருக்கும் விசயம் :

"A language is not just a medium for communication but represents the tradition, culture and history of that linguistic group. With this in mind, we have created this petition opposing the Indian Government’s policy to promote Hindi as another UN language."


இந்தியாவில் 23 மொழிகள் ஆட்சி மொழியாக இருக்கும் போதும், இந்தியை விட பெங்காலி, தமிழ், கன்னடம், தெலுங்கு, மராத்தி போன்ற பழமை வாய்ந்த மொழிகள் இருக்கும் போது, எப்படி இந்தியை மட்டும் மத்திய அரசு பரிந்துரைக்கிறது என்று கேள்வி எழுப்புகிறது.

இந்தியாவில் மொத்தம் இருக்கும் 28 மாநிலங்கள் மற்றும் 7 யூனியன் பிரதேசங்களில் 10 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் மட்டும் தான் இந்தி ஆட்சி மொழியாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 1965 இந்தியை பிற மாநிலங்களில் திணிக்க முயன்ற அந்த நிலைமை இன்று உள்ளது என சாடிகிறது.

இந்தியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்றுக் கொண்டால் இந்தி தான் இந்தியாவின் தேசிய மொழி என்று உலகில் தவறாக புரிந்துக் கொள்ளப்படும். அது நம் இந்திய அரசியமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறுகிறது.


ஐ.நா பொது செயலாளரை இந்தியை இந்தியாவின் மொழியாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் எனக் கேட்குக் கொண்டு இச்செயல் இந்தி பேசும் அரசியல்வாதிகளின் ஒட்டு வங்கி அரசியல் என்று முடிகிறது.

முழுவதும் படிக்க, மனுவில் கையொப்பமிட - இங்கு செல்லவும்.

எனக்கு தெரிந்த சில விசயத்தை கூற விரும்புகிறேன்:

மொத்தம் 192 நாடுகளை உறுப்பினராக கொண்ட ஐ.நாவின் ஆட்சி மொழிகள் ஆறு. அவை ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், சைனிஸ், ரஷ்யன் மற்றும் அரபி. கடைசியாக சேர்க்கப்பட்ட மொழி அரபி. இந்தி மொழியை ஆட்சி மொழியாக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வெகு நாட்களாகவே உள்ளது. ஆறு மொழிகள் ஆட்சி மொழியாக இருந்தாலும், நடைமுறையில் (working Languages) உள்ளவை ஆங்கிலம் மற்றும் பிரஞ்சு மொழிகள் தான். இந்த இரண்டு மொழிகளில் பிரஞ்சு மொழியை செயல்பாட்டு மொழியில் இருந்து தூக்க வேண்டும் என்று ஒரு வாதம் மிக தீவிரமாக உள்ளது. ஸ்பானிஷ் மொழிக்கு ஐ.நா.வில் சரியான இடம் இல்லை என்ற வருத்தமும் அந்த மொழி பேசும் மக்களிடம் உண்டு. அவர்களும் பிரஞ்சு மொழிக்கு எதிராக தான் உள்ளார்கள்.

இவை அனைத்தையும் கருத்தில் கொண்டால் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக் கொள்வது ஒரு புறம் இருந்தாலும் கண்டிப்பாக Working Language ஆக வராது என் எண்ணம்.

அது போக மேலே குறிபிட்டுள்ள மனுவில் குறிப்பிடப்பட்டு வாதங்கள் எல்லாம் உண்மை மற்றும் ஏற்றுக் கொள்ளகூடியதும் கூட. அதே சமயத்தில், இன்று இந்தி மொழி பேசாதவர்கள் இந்தி மொழியை ஐ.நா.வின் ஆட்சி மொழியாக ஏற்க கூடாது என்று எதிர்கின்றோம், நாளை பல நாடுகளில் பேசப்படும் தமிழை அவ்வாறு ஏற்க கூடாது என்று அவர்களும் எதிர்ப்பார்கள். ஆக இந்தியாவில் இருந்து எந்த மொழியும் ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆகாமல் இருக்கும். ஏன் நம் நாட்டின் ஒரு மொழி ஐ.நா.வின் ஆட்சி மொழி ஆவதை கண்டு பெருமைப்படக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வருவதை தவிர்க்க முடியவில்லை.


மக்களே! உங்கள் கருத்து என்ன?

பின்குறிப்பு : இந்த Petition Online யில் மனு பதிவு செய்வதால் எந்த ஒரு பயனும் இல்லை என்பது என் கருத்து. இது போல பல மனுகளில் கையொப்பம் இட்டவன் என்ற முறையில் சொல்கிறேன். நேரடியாக ஐ.நா.விற்கே இதை அனுப்பலாம்.

Monday, April 23, 2007

முனி - சனியா?

சரணின் ஜெமினி புரொடக்ஷ்ன்ஸ் தயாரிப்பில் ராகவா லாரான்ஸ் இயக்கத்தில் என்ற எதிர்பார்ப்புடன் முனி படத்தை பார்த்தேன். இப்படி எல்லாம் உன்னை எவன் எதிர்பார்க்க சொன்னது என்பது மாதிரி இருந்தது முனி. கொடுத்த வாக்கை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தன் சேரி மக்களின் ஆதரவோடு தண்டபாணியை எம்.எல்.ஏ. ஆக்குகின்றார் ராஜ்கிரண். இவன் மக்களிடம் செல்வாக்கு பெற்று விட்டான் இவனை இப்படியே விட்டால் அடுத்த எலெக்சனில் நம்மையே வென்று விடுவான் என்று கருதி ராஜ்கிரனையும் அவர் மகளையும் கொன்று விடுகிறார். ஊர் மக்களிடமும் ராஜ்கிரன் பணத்தை எடுத்துக் கொண்டு ஒடி விட்டார் என்று கூறி அவர்களை நம்ப வைக்கின்றார். சாயங்காலம் 6 மணிக்கு மேல் இருட்டை கண்டாலே பயப்படும் லாரன்ஸ் உடலில் ராஜ்கிரன் ஆவியாக புகுந்து தண்டபாணி & கோ வை கொன்று மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றி லாரன்ஸ் உடலில் இருந்து வெளியேறுகிறார். நான் ரொம்ப சுலபமா சொல்லிட்டேன், ஆனா கதையை அங்கு அங்கு சுத்தி நம்மள சுத்த வச்சுடுறாங்க.

லாரன்ஸ் முதலில் பயந்தப்பிள்ளையாக நன்றாகவே நடித்து இருக்கிறார். அவரின் வாய்ஸ் மாடுலேஷன் தான் கொஞ்சம் உறுத்தலாக இருந்தது. பின் ராஜ்கிரன் ஆவி அவர் உடம்பில் ஏறியவுடன் ஆவேசமாக நடித்து உள்ளார். வழக்கம் போல ரொம்ப அருமையாகவே டான்ஸ் ஆடி உள்ளார்.

ராஜ்கிரன், வழக்கம் போல் தொடைக்கு மேல் ஏத்தி கட்டிய லுங்கி, களைந்த தலைமுடி, முறுக்கிய மீசை, சிவந்த கண்கள், கொஞ்சம் ஒவர் ஆக்டிங், பாசத்தின் பிறப்பிடம், கூறு கட்டி அட்டிக்கும் சாப்பாடு என்று கனசச்சிதமாக அவர் பாத்திரத்தை செய்து உள்ளார்.


வேதிகா, ஹீரோயின் ஜோ சாயல்ல இருக்காங்க, நல்லாவே இருக்காங்க பார்க்க, பாட்டுக்கு டான்ஸ் நல்லா ஆடுறாங்க. நடிக்க தெரியுமா அப்படினு யாரு கேட்க கூடாது. அதை பற்றி நமக்கு என்ன கவலை.

இவர்கள் போக வினுசக்கரவத்தி, கோவை சரளா கொடுத்த பாத்திரத்தை சரியா செய்து இருக்காங்க. அதுவும் சரளாவின் அய்யய என்ற அடிக்கடி கூறுவது ரசிக்கும் படி உள்ளது. தண்டபாணி தான் வில்லன், அண்ணாத்த வர வர ஒரே மாதிரி நடிக்குறீங்க. போர் அடிக்க வைக்குறீங்க. இது போக இரு மந்திரவாதிகள் ஒருவர் நாசர், இன்னொருவர் ராகுல். ரொம்ப படுத்தவில்லை நம்மை.

இந்த காலத்தில் பேய் கதையா என்பதை ஒதுக்கி விட்டு பார்த்தால், இந்த படத்தை ஒரு நல்ல திரில்லராகவோ இல்லை முழு நீள காமெடியாகவோ எடுத்து இருக்கலாம். இரண்டையும் கலக்கி தரலாம் என்று நினைத்து சொதப்பி இருக்காங்க. நடிகராக, டான்ஸ்ராக இந்த படத்தில் ஜொலித்த லாரான்ஸ் இயக்கத்தில் சிறிதே கோட்டை விட்டு விட்டார். காமெடியராக வரும் வடிவேலு ஜெராக்ஸ் சிரிப்புக்கு பிறகு கோபத்தை வர வைக்கிறார். ஒரு நடிகரின் ஜெராக்ஸ் நாடக மேடைக்கு உதவும், வெள்ளித்திரைக்கு உதவாது என்பதை புரிந்துக் கொள்ள ஏனோ நம் கோடம்பாக்கம் நினைக்க தவறுகிறது.
அது போக தேர்தலில் ஜெயிக்கும் தண்டபாணி தொகுதிக்கு வேண்டிய நலத்திட்டங்களை நிறைவேற்ற பணம் தருகிறேன், வந்து வாங்கிக் கொள் என சொல்ல, ராஜ்கிரணும் அதை வாங்க சைக்கிளில் தனியாக போக,யோவ் என்னய்யா நக்கல் அடிக்குறீங்க. படம் பாக்குறவன் எல்லாம் முட்டாள் என்று முடிவு பண்ணி தான் நீங்க படமே எடுப்பீங்களா?

இசை பரத்வாஜ், மிகுந்த ஏமாற்றம். வரேண்டா முனி அப்படிங்குர ஒரு குத்து பாட்டு கொஞ்சம் பரவாயில்லை. மற்ற பாடலகள் எல்லாம் மனதில் நிற்க ரொம்பவே சிரம்மாக இருக்கு.ஒளிப்பதிவு சற்றே ஆறுதல் தருகிறது.

எந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் இல்லாமல் பார்த்தால் ஒரளவு ரசிக்கலாம். மொத்ததில் முனி சனி அல்ல

அடுத்த திரைப்பட விமர்சனம் - இலக்கணம்

Tuesday, April 17, 2007

ஆர்பாட்டம்!

மக்கா, உங்க எல்லாருக்கும் தெரியும் நம்ம வருத்தப்படாத வாலிபர்கள் சங்கம் வரும் ஏப்ரல் 26 தேதியுடன் ஒரு வருடத்தை நிறைவு செய்கின்றது. இந்த ஒரு வருடமும் உங்களை மகிழ்வித்து முக்கியமாக நாங்க மகிழ்ந்தது தான் எங்களின் வெற்றியாக கருதுகின்றோம். உங்களால் ஏற்பட்ட இந்த வெற்றியில் நீங்களும் பங்கேற்க வேண்டும் என்ற எண்ணம் வந்த காரணத்தால் சில விசயங்களை செய்து உள்ளோம். அதைக் குறித்து அறிவிப்பு தான் இந்த பதிவு.

சங்கத்தின் முதலாம் ஆண்டு ஆர்பாட்டத்தை பற்றிய சங்கப்பதிவு இது.

சிரித்து, சிரிக்க வைத்து கொண்டு இருந்த நாங்கள் மற்றவர்களை சிந்திக்க வைக்க, உலகமே அச்சத்துடன் பார்த்துக் கொண்டு இருக்கு விசயத்தில் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த முதலாம் ஆண்டு நிறைவை "Global Warming Awarness" ஆக அறிவித்து உள்ளோம். சங்கத்துக்காக அதை குறித்த ஒரு தெளிவான பார்வை நம்ம விக்கி பசங்க பதிவில்.

சங்கத்தை பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கின்றார்கள் என்ற ஒரு "ஆப்பு"ரைசல் சுடர் கிளம்பி உள்ளது. அந்த சுடரை சோழ பேரசரர் மருத்துவர் ராமனாதன் தொடங்கி வைத்து உள்ளார். அதை காண இங்கு செல்லவும். அந்த சுடரை நம் இலவச கொத்தனார் தொடருவார். நம் பதிவுலகை அந்த சுடர் வெற்றிக்கரமாக சுற்றி உங்கள் அனைவரையும் தொட்டு வரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

சரி, பய புள்ளைங்க சிந்திக்க ஒரு மேட்டரு போட்டீங்க, உங்களுக்கு ஆப்புரைசல்னு சொல்லி ஒரு மேட்டரு போட்டீங்க, எங்களுக்கு ஏதும் இல்லையா என்ற கேள்வி வந்துட கூடாது பாருங்க, அதுக்காக இன்னொரு மேட்டரும் வச்சு இருக்கோம். அதுவும் 1000 பொற்காசுகள்(INR) மதிப்பு உள்ள புத்தகங்கள் பரிசாக தரும் போட்டி. இந்த போட்டியில் கலந்துக்கு பெரிசா ஒன்னும் தேவையில்லங்க, சிரிக்க வைக்கனும் அம்புட்டு தான். என்ன தான் நாங்க காமெடி பண்ணினாலும் போட்டினு வந்துட்டா சில விதிமுறைகள் இருக்கனும்ல. அந்த விதிமுறைகள்

1) கட்டாயமாக தமிழில்தான் இருக்கனும்னு சொல்ல மாட்டோம், புரியற மாதிரி இருந்தால் சரி.

2) தனிமனித, சமய, மதம் தாக்குதல் இருக்கக்கூடாது.

3) வ.வா சங்கத்தை களமாக கொண்டு எழுதியிருந்தால் முன்னுரிமை

4) எப்பிடியாவது சிரிக்க வைக்கனும்.

5) சங்கம் பாணி காமெடி தவிர்த்து சங்கத்துக்கானப் புது பாணி காமெடி உருவாக்கும் விதத்தில் உங்கள் பதிவுகள் அமைதல் நலம்.

6)பின்னூட்டம் மூலமாக இடுகையை அறியப்படுத்துங்கள். பதிவரின் பெயரில் மட்டுமே அறியப்படுத்த வேண்டும். Anonymous மூலம் இடுகையை தெரிவித்தல் கூடாது.

7) ஒருவர் எத்தனை இடுகை வேண்டுமானாலும் அனுப்பலாம். எப்பொழுது எழுதியிருந்தாலும் பரவாயில்லை.(காலத்துக்கு அப்பாற்பட்டது நகைச்சுவை. ஷிஹி)

கடைசி தேதி:-

21-04-2007 11.59 PM IST


அம்புட்டு பேரும் கலந்துக்குறீங்க, நீங்களும் சிரித்து எல்லாரையும் சிரிக்க வைக்குறீங்க.... சிரிச்சு சிரிச்சு நம்ம கண்ணுல இருந்து வர தண்ணீர வச்சு இந்த வருட கோடைக்கால தண்ணீர் பிரச்சனையை சமாளிக்குற அளவுக்கு சிரிக்க வைக்கனும் சொல்லிப்புட்டேன்.

இது வரை வந்த பதிவுகள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது.

வாழ்த்துக்கள்! அடிச்சு பட்டய கிளப்புங்க....

Monday, April 16, 2007

அழகோ அழகுகள்!!!

என் பார்வையில் அழகை பற்றி எழுத சொல்லி வல்லியம்மாவும், வெட்டியும் அழைத்து உள்ளார்கள். நம்ம ஜியும் கூப்பிட்டதா பேச்சு. அழகை பற்றி முதல் பதிவு போட்டவுடன் எது அழகு என்று யோசித்ததில் நாம் என்றும் சூச்ச்....சூ என்றும் சொல்லும் கவுஜு எனக்கே வந்துச்சுனா பாத்துக்கோங்களேன். நான் அழகை பற்றி பேச ஆரம்பித்தால் ஆர்பரிக்கும் கடல் அலையில் ஆரம்பித்து ஸ்டெபியின் குதிரை வாலை பிடித்து நேதாஜியின் பேச்சு வரைக்கும் போகும். அதனால் நம்ம கொத்துஸ் கொடுத்த ஆறு அழகையையே நானும் என் பார்வையில் கூற முற்படுகிறேன்.

1, முகம்

எல்லா முகமும் ஒரு வகையில் அழகு தான். சில முகங்களை வாழ்வில் மீண்டும் சந்திக்க மாட்டோமா என்ற ஏக்கம் எனக்கு உண்டு. அதில் கன்னுக்குட்டியும் உண்டு கன்னியரும் உண்டு. நான் என்றும் ரசிக்கும் சில முகங்கள்.

எம்.எஸ். - நிறைவாழ்வு என்று சொல்வதை தவிர வேறு என்ன சொல்வது. இவரின் "குறை ஒன்றும் இல்லை" பாடலை கேட்டாலே இவர்களின் சாந்தமான முகம் தான் முதலில் நினைவுக்கு வரும்.

சுபாஷ் - நேதாஜியை பெரும்பாலும் ராணுவ உடையில் பார்த்து தான் நமக்கு பழக்கம். அந்த உடையில் அவர் படத்தை காணும் போதே ஒரு மிடுக்கு தெரியும். அவரின் மிடுக்கையே மிஞ்ச வைத்து என்னை ரசிக்க வைத்த முகம் இந்த முகம்.

இது போக பல முகங்கள் - ரமணர், குழந்தை கிருஷ்ணர், அரவிந்தர்/மதர், தெரசா, நாகை அழகியார் என்று பட்டியல் நீண்டுக் கொண்டே போகும்.

2, இடம்

பிடித்த இடம், ரசித்த இடம் என ஏகப்பட்ட இடங்கள் இருந்தாலும் என்றும் மனதிற்கு அழகான இடம் என்றால் நாகையில் இருக்கும் என் பழைய வீடு மற்றும் புது வீடும் தான். பல விதமான அனுபவங்களை தந்த இடங்கள் அவை. வீட்டை விட்டு பார்த்தால் நாகை கடற்கரை - யாரும் அற்ற இரவில் தனிமையில் யோசிப்பது அல்லது உற்ற தோழர்களுடன் அமர்ந்து உப்புக் காற்று முகத்தில் அறைய நடிகை ஜோவில் ஆரம்பித்து மைக்கெல் ஜோர்டன் வரை பேசுவது இருக்கே.... ஆஹா.... அது போக நாகை புதிய பஸ் நிறுத்தம் - பல வகையான மனிதர்களை காணலாம், நெல்லுக்கடை மாரியம்மன் கோவில், குல தெய்வ கோவில், கல்லூரி கட்டை சுவர், பள்ளி கூடைப்பந்து மைதானம், பாண்டி கடற்கரை, நைல் நதி - உகாண்டா, ஹைத்தியில் என் அறை பால்கனி என இதற்குக்கும் ஒரு பெரிய பட்டியல் நீளுகிறது.

3. நிகழ்வு

அக்காவின் திருமணம், அக்கா பையன் வரவு சொல்லாம். இதில் அக்கா பையன் பிறக்கும் போது நான் பாண்டியில் இருந்தேன், மருத்துவமனையில் சேர்த்து விட்டார்கள் என்று செய்திக் கேட்டவுடன் புறப்பட தயார் ஆனேன். டெலிவரிக்கு குறிப்பிட்ட நேரம் குறைவாக இருந்ததால் திட்டத்தை கைவிட்டுட்டு கடற்கரை சென்று 5 நிமிடத்திற்கு ஒரு முறை தந்தைக்கும், தம்பிக்கு மாற்றி போன் அடித்த போது ஏற்பட்ட ஒரு பரபரப்பு, குழந்தை பிறந்த செய்தி கேட்ட பிறகு பெற்ற மகிழ்ச்சி. சரி காலையில் ஊருக்கு போகலாம் என்று நினைத்து படுத்து தூக்கம் வராமல் நடுராத்திரியில் ஊருக்கு கிளம்பி 4 மணிக்கு மருத்துவமனைக்கு போக வேண்டும், உள்ள விட மாட்டாங்கடா சொன்ன தந்தையுடன் ஒரு ஜாலி சண்டை போட்டு ஐந்து மணிக்கு நம்ம மாப்ஸ்ச பார்த்த நேரம் இருக்கு பாருங்க, அதாங்க அழகு. அது போக அன்று எனக்கு பிறந்த நாள், எனக்கு வாழ்த்து சொன்ன அனைவருக்கும் இந்த செய்தியை சொல்லி இரட்டை மகிழ்ச்சி வேற.

4, குறும்பு

என்ன பாத்தா குறும்பு செய்றவன் மாதிரியாங்க இருக்கு. நான் ரொம்பவே அப்பாவிங்க. கல்லூரியில் படிக்கும்(???) போது என்.ஐ.ஐ.டி. க்கும் போய் கிட்டு இருந்தோம். அங்கு நமக்கு கிளாஸ் எடுக்கும் ஒரு மேடம் ரொம்பவே தோஸ்த், ஒரு 3,4 வயசு தான் வித்தியாசம். நம்ம கெட்ட பழக்கம் என்னான நம்ம நெருங்கிய தோஸ்துங்க பேக்கை நொண்டுவது. அது ஏன்னென்றால் ஆரம்பித்துல் இருந்து கோ-எட் படிச்சாச்சா, அப்படியே பழகி போச்சு. (அந்த பழக்கம் இப்ப இல்லனு சொன்னா நம்பனும்). பெரும்பாலும் சாக்லெட் கிடைக்கும், ஒரு நாள் அவரின் அழகிய புகைப்படம் நம்ம கையில் கிடைத்தது. ஒரு நாள் அவங்கிட்ட போய் மேடம், நான் ஒரு பொண்ண லவ் பண்ணுறேன், அவ இல்லாம் என் வாழ்க்கையே இல்லைனு சொல்லி இத்தனை நாள் நாம் பார்த்த நோட் பண்ணி வச்சு இருந்த அத்தனை சினிமா டயலாக்கையும் சொல்லி அவங்களை நம்ப வைத்தேன். அவங்களும் நம்பி உனக்கு என்ன உதவி வேணுமானலும் சொல்லு செய்ய நான் தயார், அது போக அப்ப அப்ப அட்வைஸ் வேற. போட்டோ காட்டுனு பல முறை கேட்டும் பார்த்தா பொறாமை படுவீங்கனு கையில் வைத்துக் கொண்டே போக்கு காட்டிக்கிட்டு வந்தேன். ஒரு நாள் அவங்க கிட்ட போய் மேடம் அந்த பொண்ண தூக்கலாம் முடிவு பண்ணிட்டேன், என்ன சொல்லுறீங்க கேட்டேன், அவங்க வீட்டுல என்ன சொல்லுவாங்க அவங்க கேட்க, அவங்க அப்பா, அம்மா, தம்பி அத்தனை பேரையும் சமாளிக்க நான் ரெடி, அந்த பொண்ணு மட்டும் ஒகே சொன்னா போதும் சொல்ல, அதுக்கு நான் பண்ணனும் சொல்லு கேட்க, ஒகே சொல்லுங்க னு சொன்னேன். ஒன்னும் புரியலனு அவங்க விழிக்க, நான் ரொம்ப சீரியஸா போட்டோவ காட்டினா விழந்து விழந்து இல்ல குனிஞ்சு குனிஞ்சு சிரிக்குறாங்க. அவங்களை கூப்பிட வந்த தம்பிக்கிட்ட சொல்ல அவனும் சிரிக்குறான், டேய், இது சீரியஸ்டா, டேய் இது சீரியஸ்டா கவுண்டமணி மாதிரி எல்லாம் சவுண்டு விட்டேன், ஆனா காமெடி ஆனது தான் மிச்சம். சச்சின் கதையை எல்லாம் சொல்லியும் கூட வேலைக்கு ஆகல. சில வருடங்கள் கழித்து அவர் திருமணம் பத்திரிக்கை கொடுக்கும் போது கூட கேட்டேன், ஹும் வேலைக்கு ஆகல.

5, பரிசு

இந்த மேட்டருல நான் கொஞ்சம் குறும்பு பண்ணுவேன்ங்க. காமெடியான வாழ்த்து அட்டை வாங்குவது, வித்தியாசமான பரிசு வாங்கி தருவது, இல்ல நண்பனை கடைக்கு பரிசு வாங்கி தரேன் என்று கூப்பிட்டு போய் மச்சி எது வேணுமானும் வாங்கிகோ பட்ஜெட் 10 ரூபாய் என்பது, நானே உனக்கு ஒரு மிக பெரிய பரிசு இதை விட வேற என்ன வேணும் என்பது, வாழ்த்து அட்டை வழங்கும் போது ரொம்பவே யோசித்து, பெறுபவர்கள் ரசித்து பார்க்கும்படி வாங்குவேன். நம்ம பசங்க எல்லாம் கிப்ட் இல்ல கார்ட் வாங்க நம்மள தான் கூப்பிடுவாங்கனா பாத்துக்கோங்களேன். குடுக்கின்ற பரிசு ஏதாக வேண்டுமானலும் இருக்கலாம் ஆனால் பரிசு அவர்கள் மனதை தொடுவது மாதிரி குறைந்தப்பட்சம் ஒரு புன்சிரிப்பை வர வைக்கும் மாதிரி இருக்க வேண்டும். அது போன்று நான் கொடுத்த பரிசும் அனேகம், பெற்ற பரிசும் அனேகம். இரண்டு வருடங்களுக்கு மேலாக நான் தினமும் பார்க்கும் பரிசு இது, ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அழகா தெரியும் பரிசு.

6, இல்லாத அழகு

தனி மனித ஒழுக்கம். இது நம் மக்கள் கிட்ட ரொம்பவே வளரனும் என்பது என் விருப்பம்.(நான் உட்பட). இது எந்த விசயத்தில் வேண்டுமானுலும் இருக்கலாம். ஏதாவது ஒரு விசயத்தில் நான் இனிமேல் ஒழுக்கமாக நடந்து கொள்வேன், எக்காரணம் கொண்டும் மீற மாட்டேன் என்ற உறுதியுடன் ஒரு காரியத்தில் ஒழுக்கமாக இருக்க ஆரம்பித்தால் சில நாள் கழித்து அது பழகி விடும். கண்டிப்பாக மீற மாட்டோம், பிறகு வேற ஒரு விசயத்தை எடுத்துக் கொள்ளலாம். உ.தா. ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் எடுப்பது, சிக்னலை மதிப்பது, அடுத்தவர்களுக்கு மரியாதை குடுப்பது(முக்கியமாக பெற்றோர்க்கு), தவறாமல் ஒட்டு போடுவது, குப்பையை குப்பை தொட்டியில் கொட்டுவது, வருமான வரி கட்டுவது, பெற்ற கடனை திரும்ப செலுத்துவது, அடுத்தவர்களின் நம்பிக்கையை புண்படுத்தாமல் இருப்பது, சமுதாய வேறுபாடு பார்க்காமல் இருப்பது, மொபைல் போனை தியேட்டர், கோவில், மீட்டிங், மருத்துவமனையில் நிறுத்தி / சைல்ண்டில் போடுவது போன்று எவையாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஏதாவது செய்யனும். செய்தாகவே வேண்டும் என் சமுதாயம் நம் சமுதாயம் உயர்வடைய.நான் அழைக்கும் அழகான மூவர்

1, மருத்துவத்துறையின் விடிவெள்ளி சின்னய்யா டாக்டா இராமனாதன்
2, அஞ்சாநெஞ்சன் டாலர் செல்வன்
3, கொள்ளை சுனாமி லக்கிலுக்
தேவ் அழைத்து உள்ளார், அதனால்
4,கொலைவெறி படை தலைவர் செந்தழல் ரவி

Friday, April 13, 2007

தமிழே என் அழகே!!!


தமிழே!
என் அழகே!
செம்மொழியே
என் தாய்மொழியே
இப்புவியின்
என் முகவரியே


உன்னை
காதலிக்கிறேன்
தொழுகிறேன்
என்றுமே
வணங்குகிறேன்


எம் மக்கள் யாவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

வாழ்க! வளர்க!